நெஞ்சுக்கு நீதி
மாவீரன் கே. வி. கே. சாமி · 75 / 391
மாவீரன் கே. வி. கே. சாமி அண்ணாவின் பேருரையுடன் 1949 செப்டம்பர் 17-ம் நாள் சென்னையில் தி.மு.கழகத்தின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. என்றாலும், அக்டோபர் 17-ம் நாள் தான் தமிழ் நாடெங்கும் கழக அமைப்புகளின் தொடக்க விழாப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த நாளில் கோயில்பட்டியிலும். தூத்துக்குடியிலும் நடைபெற்ற கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். தூத்துக்குடியென்றதும் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் நினைவு நெஞ்சில் நிழலாடுகின்றது அல்லவா?
அவருக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்துள்ள மன நிறைவு இப்போது ஓரளவு ஏற்படுகின்றது. அவரைப் போலவே கழக மாவீரன் கே. வி.கே. சாமியின் நினைவும் நெஞ்சில் பொங்கியெழும். தொண்டாற்றுவதற்கென்றே பிறந்த தோழன் அவன். கட்சியினால் தனக்கு என்ன இலாபம் என்று கணக்குப் பார்க்காமல், தன்னால் கட்சிக்கு என்ன இலாபம் என்று கணக்கிட்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அரிமா நெஞ்சினன் அவன். எந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கும் தொண்டர்களே காரணமாயிருக்கிறார்கள்.
அவர்களைக் கருவேப்பிலையாக்கி விடக்கூடிய தலைவர்களும் சில இயக்கங்களில் உண்டு. அந்தத் தலைவர்கள் (ஆமாம் தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று கருதிக் கொள்பவர்கள்) தொண்டர்களைத் தங்களுக்கு அடிமைகள் என்று கருதிக் கொண்டு நடப்பதை நான் கண்ணாரக் கண்டுமிருக்கிறேன். 1937-ல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது எனக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி போன்ற தலைவர்களிடத்தில் அதிகத் தொடர்பு இருந்தது.
இந்தி எதிர்ப்பில் மிகுந்த அக்கறை காட்டிய ஒரு பிரமுகர், திருவாரூருக்குப் பேச வருகிறார் என்று ஊரெல்லாம் ஒரே விளம்பரம். அவரது சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாகக் கூடுவர். அண்ணா கட்சிக்கு வருமுன்பே தனது சொல்வன்மையால் மக்களை வசீகரித்தவர் அவர். அவர், மாலையிலே கூட்டத்தில் பேசுகிறார். பிற்பகலிலேயே வந்து விட்டார். அவரைக் காண வேண்டுமென்று நானும் சில தொண்டர்களும் சென்றோம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு அவர் மேல் ஒரு வெறுப்புத்தான் ஏற்பட்டது.
காரணம், அவ்வளவு ஆடம்பரமாக அவர் காட்சியளித்தார். கழுத்தில் தங்கச் சங்கிலி. கையில் தங்க முலாம் பூசிய கடிகாரம். ஆடம்பரமான நடையுடை பாவனைகள். இவர், தொண்டுள்ளம் கொண்டவரல்ல என்ற முடிவுக்கு அப்போதே வந்து விட்டேன். அவரும் விரைவில் கட்சியை விட்டுப்போய் விட்டார். எளிமையும், இனிய சுபாவமும் பண்பும் கொண்ட தலைமைதான் ஓர் இயக்கத்திற்குத் தேவை என்ற உணர்வு எனக்கு அப்போதே ஏற்பட்டது. அந்த எண்ணத்தை நிறைவு செய்த அண்ணாதான் எனக்கு அரசியல் தலைவர் ஆனார்.
தொண்டர்களிடம் அவர் காட்டிய கனிவுதான் அவரை உயர்த்தியது. தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. கூட்டத்திற்குச் செல்கிற ஒரு சில பேச்சாளர்கள் தொண்டர்களைத் தங்கள் ஏவலாளராக மதித்து நடத்துவதையும் நான் திராவிடர் கழகத்தில் இருந்தபோதே பொறுத்துக்கொண்டதில்லை. ஏதோ வானத்தில் இருந்து குதித்த அதிமேதாவிகளைப் போலத் தங்களை கருதிக்கொண்டு தொண்டர்களின் உள்ளங்களைப் புண்படுத்து.கிறவர்களைப் பெரியாரும் ஆதரித்ததில்லை; அண்ணாவும் ஆதரித்ததில்லை.
அந்த மோதவிகளின் எரிச்சலையும், "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல் எறும்பு போலப் பணியாற்றிக் கழகத்தை வளர்த்த கண்மணிகளில் முதன்மையானவர் தோழர் கே.வி.கே. சாமி. அரிவாளுக்கும், கட்டாரிகளுக்கும் மத்தியில் அரசியல் களம் அமைத்து அண்ணாவின் வழியில் அறப் போர் புரிந்த அன்புத்தொண்டர் அவர். பொதுக்கூட்டமா? மாநாடா? போராட்டமா? சிறைபுகுவேலையா? எதுவாயினும் புன்னகை பூத்த முகத்துடன் ஈடுபடும் இணையற்ற வீரனை, எப்படியும் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று கயவர்கள் சிலர் திட்டம் நீட்டினார்கள்.
கே. வி. கே. சாமியைச் சந்திக்கும் போதெல்லாம் அண்ணா அவர்கள் எச்சரிக்கை செய்வார்கள், "இரவில் எங்கும் தனியாகப் போகாதே! எப்போது பத்துப் பேருடன் இரு" என்று. ஆனால், ஒரு நாள் தூத்துக்குடியில் சதிகாரர்களின் திட்டம் வெற்றி பெற்று விட்டது. கழக அலுவலகத்தில் நண்பர்களுடன் உரையாடிவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாவீரன் சாமியை, எதிரிகள், சூழ்ந்து கொண்டனர். இருட்டில் எந்தப் பக்கம் போவது என்று அறியாமல் அந்தத் தியாகச் செம்மல் திகைத்து நின்றுவிட்டார்.
உடலெங்கும் கத்திகளும், கட்டாரிகளும் பாய்ந்தன. இரத்த வெள்ளத்தில் வீரர் வீழ்ந்தார். பிணமானார். அவர் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. தூத்துக்குடிக்கு எத்தனையோ வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. ஆனால் அந்த வெற்றிகளைக் கண்டு மகிழ, விதை போட்ட விவசாயி இல்லை. விரைவில் திருமணமென்று விழிகள் விரிய அவர் என்னிடம் சொல்லித் திங்கள் ஒன்று கூட முடியவில்லை. அதற்குள் அவரைப் பிணமாக்கிப் போட்டனர் பொறாமைக்காரர்கள்.
அந்தச் சிங்கம் நிகர் தமிழன் கொலையுண்டபோது என் நெஞ்சுவடித்த கண்ணீர்த் துளிகளை ஒரு காவியமாக்கினேன். அந்தச் சிறு கற்பனை முத்தாரத்தை என் தோழன் - தொண்டர் தலைவர்-சாமியின் இணையடிகளில் சூட்டி வணங்கினேன். அதுதான் இது: "சோலையிலே தென்றலிலே இன்பம், பின்னர்- சொந்த நாட்டைக் காப்பாற்றசுழற்றுவேன் வாளை என்று முழங்குகின்ற காளை! மொட்டவிழாப் பருவ மலராயிருக்கும் போதே சுட்டெரிப்பேன் பகையை என்று சுடர் முகந்தூக்கி நின்ற குத்துவிளக்கு!
அவன் கட்டவிழா மேனிதனைக் கரந்தொட்டுத் தழுவியாடக் காத்திருந்தாள் பூவையெனும் பாவை! தொழிலாளக் குலத்துக்கோர் முத்தென்பார் அவனை எழிற்சத்து மிகும் கனியென்பார்; பனி நனைந்த மலரென்பார் அவளை! இருவருமே ஒருவராய் ஆவதெப்போது? "உருவிய வாளைச் சற்று உறையிலே போடுமே அத்தான்!"
என்று முரசு உறுமுகின்ற களம் நோக்கி வாள் தூக்கிப் பாய்கின்ற காதலனைத் தடுத்து நின்றாள். "விடுதலைக்குத் தாவுகின்ற என்னை உன்றன் காதலுக்குக் காவு கொடுக்க எண்ணாதே பெண்ணே! கெடுதலைக்கு ஆளாக்கிக் கீழோரால் சீழ் என்றுஇகழப்பட்ட என்றன் செந்தமிழர் திரு நாட்டை வாழ்விக்க எழுந்திருக் கும் அணிவகுப்பில் நிற்பேன். மணிமாடம்- கனிப்பேச்சு-வேண்டேன்" என்றான். "முற்றிலுமே வெறுத்தீரோ?"
என்றாள். "பற்றில்லை உன் மீது என்று உரைக்க மாட்டேன். பாம்புப் புற்றில்லை. தென் தமிழர் தோட்டத்தில் என்னும் நிலை வரும் வரையில்- சுற்றிட முடியாதபடி காதல் படிப்பு" என்றான்! அவள் துடித்து நின்றாள். "இருவருமே போர்க்களத்தில் இணைந்து நிற்போம். அணைந்து விட்டாலும் அப்படியே ஆகட்டும் இருவருக்கும். இதற்கென்ன பதில் அத்தான்?"
"இஃதோர்முறை காதலர்கள் கடைப்பிடிப்பதுண்டு! ஆயின் எனக்கது சரிப்பட்டு வராது தங்கம்! களம் புகுந்து வருகின்ற பகையைச் சாடுகின்ற நேரம் என் உளம் புகுந்த நேரிழையாளுக்கு ஏது நேர்ந்ததோ என ஒரு கணம் தயங்கும்; அதற்குள் என் படை மயங்கும். வேண்டாமடி பெண்ணே! விடை கொடடி என் கண்ணே!"
"மணத்திற்குத்தான் இசைய மறுக்கின்றீர்; மங்கையென்னை உண்பதற்குப் போட்டு வைத்த இலை போலப் பூப் படுக்கை உண்டே அங்கு வாரீர்!" "பால் சோறு பானையிலே இருக்கட்டும்; பசியுண்டு இப்போது என்றாலும் உன்னைப் பாழாக்கிப் போக மாட்டேன்! அட்டியின்றி விடை தருவாய், அன்னமே!"
"மாம்பழக் கன்னத்தின் அழைப்புக்கும் தடையுண்டா?" "தடையுண்டு; படை கொண்டு செல்கின்ற நான் பிணமாகி விட்டாலும், உனக்கு மணமாகித் தீர வேண்டும். என் அன்பே! உன்னை எச்சில்படுத்தி விட்டால் எனக்கென்ன லாபம்? உனக்குத்தான் பெரு நஷ்டம்!" "முடியாது! ஒரு முத்தம்...!"
"வேண்டாம்...! திரும்பிய பின் மொத்தமாக!" "அழவிட்டுப் போகாதீர்கள் அத்தான்..." "காலமெல்லாம் மகிழ்ந்திருப்போம்! கவலை விடு!" "நீங்கள் கள வெற்றி பெற்றவுடன், நான் காதல் வெற்றி பெற்றதாய் மகிழ்வதற்கு இசைவு தாரும்;" "அசைவொன்றில் ஆயிரம் வண்ணங்கள் காட்டுகின்ற அழகு மயிலே! பசையற்ற தென் புலத்தார் திசை கெட்டு வாடுவதை மாற்றிய பின், நாம் மாலை மாற்றிக் கொள்வதில் தடையில்லை. அறிவாய்!"
"வெற்றி பெற்று விரைவில் வாரீர், கத்துக்கடல் விளைகின்ற முத்தெடுத்து மாலை தொடுத்து வைக்கிறேன்! என்றன் தென்பாண்டித் தேவா! நீர் திரும்பும் வரை இங்கே நிற்கின்றேன். இல்லையேல் இக்கடற்கரையே எனக்கமைந்த கல்லறையாம்!" "சிப்பியிலே விளையாத சிரிப்பு முத்துக் காட்டிடுவாய்; என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழின் நலம் பாடித் திரும்புகிறேன்" எனப் பிரிந்தான்-கடற்கரையின் வெண் மணலில் காரிகையைத் தனியே விடுத்து...
அழகு சிப்பிகளால் முத்தளித்து; ஆடும் அலைகளால் உப்பளித்து உயர்வளிக்கும் பெருங்கடல் நீர்வாய். கொப்பளிப்பதற்குப் பயனில்லை என்பதற்காக வெறுப்பாருண்டோ? அஃதே போல் நாட்டிற்கு உழைக்கின்ற உத்தமனாம் பெரு வீரன் தன்னை உடனே தழுவிடவில்லையென்று வெறுக்கவில்லை அந்த வேல்விழியாள். விடை பெற்றுப் போன சிங்கம், தலைவனைக் கண்டு பேசி, நிலைதனை அறிந்து தேர்ந்து, நீதிக்குத் தொடுக்கும் யுத்த தளபதியாக நின்றிருந்தான், பெருஞ்சேனை முகப்பதனில்!
நாடளிக்கும் குணக்கேடர்களைக் கூடியெதிர்ப்பதற்குக் கூவுகிறான, நல்வீரன், தெருவெல்லாம் பாசறைகள்; தென்பாண்டி மண்டலத்தில் மாடி வீடு அமையாத பகுதியில்லை. போருக்கு நாள் பார்க்க வேண்டியதுதான் பாக்கி. தோளுக்கு நிகரானவனில்லை வேலில்லை எனச் சொல்லித்தொகை தொகையாய்க் குவித்து விட்டார். தொல்புவியில் முதன் முதலாய்த் தோன்றி நின்ற தமிழ்க் குலத்தார். தென் புலத்தார் எழுந்துவிட்ட சேதி கேட்டுத் திக்கெல்லாம் திகைப்புக் காட்டும் இன எழுச்சிப் பெற்ற வெள்ளம்- இளைஞரது பட்டாளம், பாட்டாளிப் படை வரிசை இத்தனையும் அணி வகுப்பில் சேர்ந்துகொண்டு "நாள் குறிப்பீர்" என ஓலை விடுத்தான் தலைமைத் தளபதிக்கு.
தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து செயலாற்றுதலே குறள் வகுக்கும் இலக்கணமெனக் கொண்டிருக்கும் தலைவனவன். "விரைவில் போர் துவங்கும், பொறுத்திருங்கள்" எனப் பதில் இறுத்தான். படை கொண்டு செல்வதற்கு இன்னும் சில நாட்களே எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான்... அதற்குள் கொடும் விந்தையொன்று உருவாகும் என யார் கண்டார்?... பாசறைக்குப் பக்கத்தே படை நடத்தும் விதம் பற்றித் தனிமையிலே நின்று யோசனைக்கு அடிமையானான்.
அப்போது ஆறேழு நரிக் குணத்தார் அவன் மீது பாய்வதற்கு ஓடி வந்தார். "ஓதிய மிலார்களே! ஒன்றுக்கும் பயனற்ற பிறவிகளே! என்ன வேண்டும்?" எனக் கேட்டான். "உன் உயிர் வேண்டும்" எனச் சொன்னார். உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற நாய், நரிகள். கழுகுக்கும், பருந்துக்கும் இவ்வுடலைக் கொடுப்பதற்கே களம் செல்ல இருக்கிறேன். அதற்குள்ளே உமக்கு 'முடை' என்றால் எடுத்துச் செல்வீர். ஆயின் ஒன்று; என்னொருவன் உயிர் பறித்தல் மட்டுந்தான் உம்மாலே ஆவதன்றி நான் வளர்த்த உணர்ச்சிகளை-உண்மை வீரர்களை-அழித்துப் போடல் ஆகாதென அறிவீர்" என்றான்.
தமிழ் கேட்கும் செவியில்லாப் பாம்பு மனிதர் 'பட பட' எனச் சுற்றிக் கொண்டார். படை. வீரன் அங்கங்களை ஆலமரத்து விழுது போல் அறுத்தெறிந்தார். வாள் தடுக்க எழுந்த கரத்தினிலே விரல்களெல்லாம் 'பொல பொல' வென உதிர்ந்தன தரையில். மலை பிளக்க வெடி வைத்தது போல் மாவீரன் மண்டையைப் பிளப்பதற்கும் துணிந்து விட்டான். தலை நொறுங்கித் தரையில் சாய்ந்தான். அத்தை மகள் முத்த மிடத்துடித்த இதழில் அரிவாள் வீச்சு... மலர் முகம் புதைத்திருக்க அவன் தேர்ந்தெடுத்த மணி மார்பில் உதிர வெள்ளம்.
ஓடி விட்டார் உயிர் எடுக்க வந்த கொடியோர், உத்தமனும் கடைசி மூச்சை நாட்டுக்கே அளித்து விட்டுத் துயில் நீங்காத் தொட்டிலில் படுத்துக் கொண்டான். சித்திரம் சிதைந்தது எனக் கேள்வியுற்றாள்: முத்து மாலைகட்டிக் கொண்டு கடல் அலையின் ஓரம் நின்ற கட்டழகி. மாலைதனை அறுத்து விட்டார் மாபாவிகள். சேனைதனை நடத்திச் செல்லும் சிங்கம் - அங்கம் அறுபட்டுத் துரோகிகளால் துடித்து வீழ்ந்த காட்சி - அம்மவோ! "கேட்பதற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனோ?"
"வெண் மணலில் நின்றிருப்பாய் பெண்ணே! விரைந்து வந்து மணந்திடுவேன் உன்னை" எனச் சொன்ன வாய் மூடிற்றாமே? கம்பீர நடை போடும் கால்கள் சோர்ந்து விட்டனவோ? கனல் பொழியும் கண்களிலே எனை மணக்கும் போது குளிர் பொழியும் எனச் சொல்லி வாழ்ந்தேனே, என் நறுந்தேனே! உன்னைச் சாவுச் சகதியில் ஊற்றி விட்டார்களாமே சண்டாளப் பிறவிகள்! இனி எனக்கேன் வாழ்வு?"
என்றாள். முத்து மாலையைக் கடலில் வீசி எறிந்தாள். அதைத் தொடர்ந்து தானும் அத்தானை நினைத்தவாறு ஆழ்கடலின் அடியிற் சென்றாள். இப்படித் தொண்டர்களுக்கும், தொண்டுள்ளம் படைத்த தலைவர்களுக்கும் காவியம் இயற்றுவதென்றால் தடைபடாக் கற்பனை யோட்டம் தன்னாலே பெருகுகிறதல்லவா? சாமி போன்ற 'சாமானியர்கள்' வடித்த கண்ணீரும் செந்நீரும் தான் இந்தக் கழகம் என்ற நினைப்பைக் கொண்டவர்கள் தான் கழகத்தின் எதிர்காலத்தை மேலும் வலிவுள்ளதாக ஆக்க முடியும் என்பது என் அசையாத நம்பிக்கை.
வாய்ச் சொல் வீரர்கள்; எரிச்சல் கக்கிகள்; மேனா மினுக்கிகள்; எந்த இயக்கத்தையும் வளர்த்திட இயலாதவர்கள் மட்டுமல்ல, இந்த இயக்கத் தொண்டர்களின் பாதையிலும் நெருஞ்சி முட்களாக இருப்பார்கள். இந்த உண்மையினை இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே!
