நெஞ்சுக்கு நீதி
சீனத்துக் கவிஞர் மூவர் · 74 / 391
சீனத்துக் கவிஞர் மூவர் சீ ன நாட்டில் 'லிபோ' என்ற கவிஞன், தனது பத்தாம் வயதிலேயே கற்பனை குலுங்கும் எழுச்சிக் கவிதைகள் பாடத் தொடங்கினான். நீண்ட பல நாட்கள் அவன் மேற்கொண்ட மலைவாசத்தின் காரணமாக உடலில் ஒரு பொலிவும், வலிவும் வாய்க்கப் பெற்றான். அவன் கவிதையிலும். அழகிலும் கன்னியர் பலர் மயங்கினர். காதல் மது தட்டாமல் கிடைத்தது. அவனுக்கு அது மட்டுமல்ல; ஒரு கிண்ணம் மது அருந்த அவன் பல மைல் தூரம் நடந்துகூடச் செல்வானாம்; இவனுடைய காலத்தில் இருந்த 'தூபு' என்ற மற்றொரு கவிஞன் "லிபோவுக்கு ஒரு ஜாடி நிறைய மதுவைக் கொடுத்து விட்டால் நூறு கவிதைகள் உடனே பாடுவான்" என்று குறிப்பிட்டான்.
கவிதையை விற்று மதுவை வாங்குபவன் 'லிபோ' என்று புகழப்பட்டான். லிபோவுக்குத் திருமணம் நடைபெற்றது. கிடைத்த பணத்தை, அவன் மதுவுக்கே செலவிட்டுக் குடும்பத்தை வறுமையில் தள்ளினான். சில ஆண்டுகள் அவனோடு பொறுமையோடிருந்து வாழ்க்கை நடத்திய மனைவி, மக்கள் அவனை விட்டுப் பிரிந்து விட்டனர். அந்த வறுமைக் கொடுமையிலும் கவிதை பிறக்கிறது அவன் நெஞ்சில்; மதுநாறும் அவன் உதடுகள், மது பிதற்றும் கவிதைகளை அள்ளி இரைக்கின்றன மனைவியை நினைத்து அழுகின்றான்.
'அழகே உருவானவளே, என்னுடன் நீ இருந்தபோது இல்லம் நிறைய மலர்களைப் பரப்பி வைத்தேன். நீ, என்னை விட்டுப் போய் விட்டாய். சூன்யமான கட்டில் மட்டும் கிடக்கிறது. மெத்தை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது." இப்படிப் புலம்பிய கவிஞன் லிபோ, சில நாட்கள் சிறை புகுந்தான்; சில காலம் நாடோடி வாழ்க்கை நடத்தினான். சில காலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தான். அவன் இயற்றிய கவிதைகளைப் பலரும் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அவனோ? ஒரு நாள் போதை தலைக்கேறிய நிலையில் ஆற்றோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். மது வெறி, ரத்த நாளங்களை உசுப்பி விட்டுக்கொண்டிருக்கிறது. நரம்புகள் முறுக்கேறி நிற்கின்றன. ஆற்றோரத்தில் கவிஞன் கம்பீரமாக நடக்கிறான். குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சிந்து பாடியவாறு ஓடுகிற ஆற்றின் நீரை அந்தக் கவிஞன் கூர்ந்து கவனிக்கின்றான். வானத்து முழு நிலவின் வட்ட வடிவம் ஆற்றில் தெரிகிறது. "எவ்வளவோ தொலைவில் இருந்து எத்தனையோ முறை உன்னைப் பாடியிருக்கிறேன்.
இப்போது அருகிலேயே வந்து விட்டாயா? உன்னை அணைத்துக் கொள்கிறேன் பார்!" என்று கவிஞன் ஆற்றில் குதிக்கிறான். "கவிதை உலகில் திகழும் பல்லாயிரக்கணக்கான குன்றுகளுக்கு மேற்பட்ட மலைச் சிகரம்"- என்று புகழப்பட்ட 'லிபோ' என்ற அந்தக் கவிப் பெருமகன் ஆற்றோடு போய்விட்டான். அவனைப் போலவே 'தூபூ' என்ற கவிஞனும், மது, மங்கையின் மடியில், கவிதை மாலைகளைத் தொடுத்தான். இவனை ஆதரித்து வளர்த்துக் கவிதைகளை இயற்றச் செய்த இராணுவப் பிரபு ஒருவர், திடீரெனக் காலமாகி விடவே, மனைவி, மக்களுடன் 'தூபூ' ஊர் ஊராகத் திரிந்தான்.
பசியால் அலைந்தான். கடைசியில் ஒரு நண்பன். அவனுக்குப் பசியாறச் சோறு போட்டு ஒரு கவிதைப் பாடச் சொன்னான். விருந்துண்ட கவிஞன் தன் கற்பனை வளமெல்லாம் கூட்டிக் கவிதையொன்றைப் பாட நிமிர்ந்து உட்கார்ந்தான், அப்படியே மயங்கி விழுந்தான். மாண்டான். தன் வாழ்வை அழித்துக் கொள்ளும் சமுதாய் விரோதப் பழக்கங்கள் இருந்தால்தான் கலைமணம் கமழும் என்றும், கற்பனைகள் உருவாகும் என்றும், ஏழ்மையில்தான் கவிதைகள் பொங்கிடும் என்றும் வாதாடுகிறவர்களுக்கு இந்த இரண்டு கவிஞர்களும் உதாரண புருஷர்களாக விளங்குவார்கள் என்றாலும், அதே சீன நாட்டில் வாழ்ந்த 'போசூயி' என்ற கவிஞனுக்குக் கிடைத்த புகழ், சாதாரணமானதல்ல.
ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையைக். கவிஞன் 'போசூயி' அமைத்துக் கொண்டான். இராணுவ இலாகாவின் தளபதியாகக் கூட இருந்தான். அரசு அலுவல்களுக்கிடையே கவிதைகள் எழுதிடத் தனியாக நேரம் ஒதுக்கிக் கொண்டான். நாள்தோறும் நண்பர்கள் பலர் சூழ அவன் இருப்பான். எனினும் அடிக்கடி, அவன் தனிமையை ஏற்படுத்திக் கொண்டு நாலாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறான். மேலான பதவியில் அவன் இருந்த போதிலும் மிகச் சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களிடம் தான் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டுவான்.
அவர்களுடைய அன்பும், மரியாதையும் அவனுக்குப் பெருவாரியாகக் கிட்டின. அவனுடைய கவிதைகள் பரவாத இடமில்லை. வீட்டுச் சுவர்கள் எல்லாம் 'போசூயி'யின் கவிதைகளைத் தாங்கி நின்றன. மதுப் பழக்கம்; அதனால் மன எழுச்சி; வறுமைத் தொல்லை; அதனால் உணர்ச்சி . வெள்ளம்; கவலைகள்; கஷ்டங்கள்; அதனால் கற்பனையூற்றுக்கள்- என்ற தவறான இலக்கணத்தைக் கவிஞன் 'போசூயி' அறைகூவல் விட்டு வென்று காட்டினான். கலைவாணர் வாழ்வையும் மூன்று சீனக் கவிஞர்களின் வாழ்வையும் சுருங்கிய அளவில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
கலைவாணரின் கலை உணர்வு அவர் வளமுடன் வாழ்ந்த போதும் கொடி கட்டிப் பறந்தது. வறுமையுடன் போராடிய போதும் அந்தக் கொடி கீழே இறங்கவில்லை; பட்டொளி வீசிப் பறந்து கொண்டுதான் இருந்தது. இந்த மேதைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை நான் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பதற்காக எழுதிக் காட்டவில்லை. மற்றவர்கள் தெரிந்து கொண்டு அதனால் திருந்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே எழுதிக் காட்டுகிறேன். புராணக் கதையில், சிதம்பரம் கோயிலுக்குச் செல்ல வேண்டு மென்று நந்தன் என்ற தாழ்த்தப்பட்ட தோழன் போராடுகிறான் கலைவாணர், நந்தனைக் கிந்தனாக மாற்றிக் கதை நடத்தினார்.
கிந்தன் ஆண்டவன் கோயிலுக்குப் போக வாதாடவில்லை. அறிவுக்கோயிலுக்குப் போக வாதாடுகிறான். அந்தக் கதையின் மூலம் சாதி மத வேறுபாடுகளைச் சாடினார் கலைவாணர். அந்தக் கதாகாலட்சேபத்தைத் தெவிட்டாமல் கேட்டுச் சுவைப்பார் அண்ணா; எங்களிடம் அடிக்கடி சொல்லிச் சொல்லி ரசிப்பார். அந்தக் கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பேச்சுத்தான் அண்ணாவின் கடைசிப் பேச்சு. அதற்குப் பிறகு இருபது நாட்கள் கூட அண்ணா உயிரோடு இருக்கவில்லை.
காலையில் ஒன்பது மணிக்குச் சிலை திறப்பு விழா. நான் அண்ணாவின் படுக்கையருகில் உட்கார்ந்திருக்கிறேன். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அண்ணா எழுகிறார். நோயின் வேதனை தாங்க முடியவில்லை என்றாலும் முகத்தில் ஒரு சிரிப்பு, "நேரமாகி விட்டதே! விழாவுக்குப் புறப்படலாமா?"
என்று கேட்கிறார். "வேண்டாம் அண்ணா; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான் போய் விழாவை முடித்து விட்டு வருகிறேன்" என்கிறேன் நான். "இல்லை கருணாநிதி, நான் முதலில் சிறிது நேரம் பேசி விட்டுக் காஞ்சீபுரம் போய்ப் பொங்கல் கொண்டாடப் போகிறேன். பிறகு நீ பேசலாம். வா, போகலாம்" என்கிறார் அண்ணன். அண்ணியார் அருகே வந்து, என்னைப் போலவே அண்ணாவைத் தடுக்கிறார்கள். "என்ன நிகழ்ச்சி என்று உனக்குத் தெரியுமா?
என். எஸ் கிருஷ்ணன் சிலை திறப்பு விழா. அதற்குப் போகாமல் இருக்க முடியுமா?" என்று சற்றுக் கடுமையாக அண்ணியாருக்குப் பதில் சொல்கிறார். பிறகு அந்த அறையில் பேச்சில்லை. தூங்கும்போது அணிந்திருந்த ஆடைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு அண்ணா புறப்படுகிறார். விழா நடக்குமிடம். "அண்ணா வாழ்க" என்ற முழக்கம். தன் நோயின் சங்கடத்தைக் காட்டிக் கொள்ளாமல் அண்ணா மேடைக்கு நடக்கிறார். வரவேற்புரை ஆற்றிய ஜெமினி எஸ், எஸ்.
வாசன் அவர்கள், "பெரியவர்களின் சிலையைத் திறக்க இப்போதுதான் நல்ல வேளை ஏற்பட்டிருக்கிறது, நாட்டில்" என்று கூறுகிறார். அதற்கு அண்ணா சொன்ன பதில் என்ன? "வாசன் அவர்கள் நல்ல வேளை என்று குறிப்பிட்டார்கள். அது வேறு ஒன்றுமில்லை. அவரது நண்பர்களாகிய நாங்கள் ஆள்வதற்கு வந்திருக்கிற இந்த வேளையைத்தான் அவ்விதம் குறிப்பிடுகிறார்கள்."
அண்ணாவுக்கு அந்த நோயிலும் இந்த அற்புதப் பேச்சு மறையவில்லை. பேச்சுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பெருமகன் அல்லவா அண்ணா!
