உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வானத்து மத்தாப்பு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வானத்து மத்தாப்பு · 73 / 391

வானத்து மத்தாப்பு ம் ஆண்டு முதன் முதலில் பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் ஈடுபட்டபோது கழகத்தின் வெற்றிக்காகக் கலைவாணர் பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் அப்போது குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டேன். என்னுடைய தேர்தல் பிரசாரத்திற்குக் கலைவாணரை ஒரு முறைதான் அழைத்தேன். அவரே தானாக மூன்று முறை வந்தார். தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொடுத்தார். வாரி வாரி வழங்கிய அந்தக் கலையுலக வள்ளல் தன்னுடைய கடைசிக் காலத்தில் வறுமையால் கொட்டப்பட்டாரெனினும் வாட்டம் அடைந்தாரில்லை.

அந்த நிலைமையையும் சிரித்தே சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் அவரது வள்ளல் தன்மை குறையவில்லை. சேலம் உணவு விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்தபோது ஓர் ஏழை நடிகன் தன்னுடைய திருமணச் செலவிற்குப் பணம் கேட்கக் கலைவாணரிடம் வந்தான். அவனைத் தான் தங்கியிருந்த அறைக்கு வெளியே நிற்கச் சொல்லி விட்டுக் கை கழுவுவதற்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதுபோல் அங்குள்ள வெள்ளிக் கூஜாவை அறைக்கு வெளியே எடுத்து வந்து, அதனை அந்த நடிகனிடம் கொடுத்து இதை வைத்துக் கொள்" இப்போது என்னால் கொடுக்க முடிந்தது இவ்வளவுதான்" என்று கண் கலங்கக் கூறி அந்த நடிகனை அனுப்பி வைத்தாராம்.

மதுரம் அம்மையாருக்குத் தெரியாமல் கூஜாவைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்க வேண்டுமென்பதற்காக அவர் அப்படிச் செய்தாரென்றாலும், அதனைத் தெரிந்து கொண்ட அம்மையார், புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டார்களாம். அப்போது சேலத்தில் தங்கியிருந்த சமயத்தில்தான் ஓர் ஊராட்சி மன்றத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்தைக் கலைவாணர் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி.

அங்கிருந்து சென்னை திரும்பியதும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரற்ற உடலைத்தான் நான் திரும்பப் பெற முடிந்தது அண்ணாவினுடைய கடைசிப் பொது நிகழ்ச்சி கலைவாணர் சிலையைச் சென்னையில் திறந்து வைத்ததுதான். அரசியல் தலைவனுக்கும், கலையுலகத் தலைவனுக்கும் இடையே இப்படிப்பட்ட தொடர்பு இருந்திருக்கிறது கலைவாணர் மறைந்த காலத்திலிருந்து அவருக்குச் சிலை வைக்க வேண்டும் என்ற முயற்சி பல முறை தோன்றி அது அரும்பிலேயே கருகி விட்டிருக்கிறது.

ஆனால் அந்த முயற்சியில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட ஊக்கத்திற்கு, மறைந்த பெரியவர் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசனும், நண்பர் ஏ.எல்.சீனிவாசனும் உற்றதுணையாக இருந்தார்கள். தமிழகம் கலைவாணருக்குக் காட்டுகின்ற மரியாதையின் அறிகுறிதான் சென்னை வாணிமகால் மண்டபத்திற்கு எதிரே அமைத்திருக்கிற சிலை. என் வாழ்க்கை ஏட்டில் அண்ணா என்ற அந்தப் புனிதமான எழுத்துக்கள் ஆங்காங்கு ஒளிவிட்டுக் கொண்டிருப்பது போல், கலைவாணர் என்ற வார்த்தையும் சுழன்று வந்து கொண்டிருக்கும்.

அவரது வாழ்வின் கடைசி அத்தியாயம் சோகம் நிரம்பியது. அந்தச் சோகத்திலும் அவரது புன்னகை மாறவில்லை என்பது உண்மைதான். சிரிப்பது உடலுக்கு நல்லது என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அவர் தன்னுடைய உடலுக்கு நல்லது அல்லாத ஒன்றைத் தனக்கு விருப்பமில்லாமலே நாடிச் சென்றார். அது அவரை அடிமையாக்கிக் கொண்டது. அவர் விரைவில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பினார். அவர் விருப்பம் ஈடேறியது. மெல்ல மெல்ல அவர் தன் உயிரைப் போக்கிக் கொண்டார்.

யார் மீதும் அவருக்கு வருத்தமில்லை. எந்த மனமாச்சரியமும் அவருக்கு ஏறபட்டதில்லை. பயங்கர அதிர்ச்சிகள் எதுவும் அவரைத் தாக்கியதில்லை. வறுமை. அது, கடைசி காலத்தில் அவரைப் பிடித்துக் கொண்டது. அதுவே அவரைக் கொன்றும் விட்டது. இதனை நான் இவ்வளவு வெளிப்படையாக எழுதுவதறகுக் காரணம், கலையுலகில் புகழேணி நோக்கிப் போகின்றவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; கலைவாணர் வாழ்வை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகத்தான்.

"வானத்தில் ஒளி சிந்தும் மத்தாப்பு வாணங்கள் கீழே விழுந்ததும் கரிக்கட்டையாகி விடுகின்றன. இதுதான் கலைஞர்களின் வாழ்வுமாகும்" என்று அண்ணா அடிக்கடி கூறுவார். ஒரு திருமண விழாவில் அண்ணா அவர்களுக்கு முன்னால் பேசிய ஒரு நடிக நண்பர், மணமக்கள் எப்படியெல்லாம் ஒழுக்கத்தோடும், சிக்கனத்தோடும் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினார். அடித்துப் பேசிய அண்ணா சொன்னார்: "என் நடிக நண்பர் சொன்னது போல் வாழுங்கள்.

ஆனால் அவர் செய்வது போல் வாழாதீர்கள்." கலைவாணர் தனக்கு ஏற்பட்ட விரக்திக்கு அமைதி தேடினார். அந்த அமைதி அவருக்கு நீண்ட அமைதியைக் கொடுத்தது. அவரது சடலத்தைக் காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவரது வீட்டுச் சுவர்கள் எல்லாம் இடிந்து வீழ்ந்தன; அவ்வளவு கட்டுக் கடங்காத கூட்டம். பூ விரித்த வண்டியிலே அவர் சடலம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்ட நான் அந்தக் காட்சியைக் கவிதை வரிகள் ஆக்கினேன்: பனிப்பார்வை-கனிப்பேச்சு-தனித்திறமை இனிப்போடு எழிற்காட்சி வருகின்ற இசைப் புலவன்!

அழைக்கின்ற போதெல்லாம் மக்கட் பணிபுரிய... வருகின்ற நற்றொண்டன் : சிரிப்பு... தழைக்கின்ற செந்தமிழன்! மழைக் கரத்தால் மாநாடு காக்கின்ற வள்ளல்! உழைக்கின்ற ஒருபேறே-பெரும்பேறு எனக்கொண்ட தமிழேறு! கலையுலகில் தனிவேந்தன்... அலைகடலாம் அவன் உள்ளம் நிலைகுலைய நமைவிடுத்து நீங்காத துயில் கொண்ட கொடுமை என்னே! "சிரிப்பொன்றே மனித வாழ்வுக்கு மருந்து...அதைச் சிந்தனைத் தேனில் குழைத்து நாள்தோறும் அருந்து... நான் உள்ளவரை குறையாது அவ் விருந்து!"

என மொழிந்து வாழ்ந்திட்டான்...அந்தோ, எரி நெருப்பில் வீழ்ந்திட்டான்! ஏழைகளைச் சிரிக்க வைத்தான்... கோழைகளை நிமிர வைத்தான்... எமையெல்லாம் கதறவைத்து இறப்புலகு ஏகிவிட்டான்! படக்கலையில் அறிவுமணங் கமழச் செய்து-நாட்டின் வலக்கரமாய் அமைந்திருந்த 'நல்லதம்பி!'

முடக்கலாம் பெருநிதியை எனக்கிளம்பும் மூளி எண்ணம் முளைமுறிந்து போகும் வண்ணம் 'பணம்' தந்த பாவாணன் விதவைதனை 'மணமக'ளாய் ஆக்கிவைத்துக் காதற் பறவைகளைப் புதுவானம் மேவவிட்ட கர்மவீரன்! கல்லடிக்கும் கயவர்தம் சொல்லடிக்கும் மத்தியிலே கூறிவந்த கொள்கைகளை வல்லடி வம்பர்களும் பல் இளிக்கும் விருதத்தினிலே வில்லடிப் பாட்டாலே விளக்கிவந்த வித்தகனாம்! ஆடுகின்ற கோயிலுக்குப் போகின்றான் பழையநந்தன் அறிவு தேடுகின்ற ஆலயத்தை நாடுகின்றான் புதிய 'கிந்தன்' ஓடுகின்றார் உனைக்கண்டு ஒதியமிலார் உள்ளத்தார்- என மகிழ்ந்தோம்; இன்றோ, உனை இழந்து உளம் நெகிழ்ந்தோம்!

இதழ்க்கடையில் புன்னகையைத் தேக்கிக் கொண்டு மலர்க் கண்ணால் வரவேற்புக் கூறுகின்ற காட்சி எங்கே? கிளிச்சிறகின் நிறம்போல இலையெடுத்துப் புதுக் கிளிஞ்சல் சுண்ணாம்பும் பாக்கும் சேர்த்துக் குதப்புகின்ற கோலச் செவ்வாய் காட்டுகின்ற குறுஞ்சிரிப்பு முகந்தான் எங்கே? புனலிலே மிதக்கட்டும் தமிழர் என்றே தணலாகிப் போனாயோ-கலைத் தலைவா? வார்முரசம் ஆர்க்கின்ற விடுதலை நாள்- வானொலி நிலையத்தார் உனையழைத்துப் பாடச் சொன்னார்!

பெருநாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களில் பெரியார் ஈ வே. ரா. ஒருவரன்றோ. உரிமை வேண்டும் அவர் பெயரை உச்சரிக்க-எனக்கேட்டுப் பெருமை மிகு போராட்டம் கண்டாய்! தருணமதில் வெற்றி கண்டாய்: தன்மானச் சீயமன்றோ கலைவாணர்-என வாழ்த்தும் தமிழ்நாட்டுச் சேனை கண்டாய்! தங்கம் நிகர் குணத்தினனே! தமிழ்க்குலத்தின் விடி விளக்கே அங்கதமெலாம் பதைக்க விட்டு அனல்தேடி ஏன் மறைந்தாய்? நீரோடை நிலங்கிழிக்கும் நெடியபெருந் தமிழ்நாட்டில் சீரோடு வாழ்ந்திருந்த கலையரசே!

நீ, வேரோடு சாய்ந்துவிழப் புயல்வீசும் என உணர்ந்தால் கோடானு கோடிகரம் அப்புயலைத் தடுத்திருக்கும்! "எதிர்ப்புகளை இளநகைப்பால் இடறிவிட்டு இன்பத் திராவிடத்தின் விடுதலைக்குத் தலைமை ஏற்ற என் தலைவன் அண்ணாவின் அருகிருப்பேன்" என உரைத்து எழுந்திட்டாய்! அதற்குள் சாவின் மடிதனிலே விழுந்திட்டாய்! என்னுயிரே! இன்னமுதே! என்ன நினைத்(து) உயிர்விட்டாய்? "பொன்மலையைக் குவித்திட்டேன்; இன்று புழுதிமலை அடிவாரத்தில் கிடக்கின்றேன்" எனச் சொல்லிப் புகழ்மலையின் உச்சிக்குப் போனாயோ?

புது மணியே! புகழ் முத்தே! பொதுவுடைமை முளைக்கின்ற 'ருசியா'வில் கலைப் பயணம் நடத்துதற்குச் சென்றாயே : அதுபோல எண்ணமிட்டோ பெரும்பயணம் மேற்கொண்டாய்? எம்மீது பெரும் பழியைச் சுமத்திவிட்டு? கலையே-கற்பனையே! அழகே-அறிவே! அன்பே-அறமே! யாருண்டு இனிமேலே உன்போல் நல்லோன்! நீயுண்டு! நின்புகழுண்டு-என்றென்றும் தமிழர் நெஞ்சில்! எப்படியோ கலையுலகில் எனக்குப் பெருந்துணையாக இருந்த கலைவாணர் போய்விட்டார். கலைஞர்கள், கவிஞர்கள், கற்பனையாளர்கள் இப்படித்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளாமல், எப்படியும் வாழலாம் என்று வாதிடுகிற வாஞ்சையுள்ள என் நண்பர்களுக்குச் சீன நாட்டு இலக்கியக் கலை மேதைகள் சிலரை அறிமுகப்படுத்த வேண்டியது, என்னுடைய நீங்காத கடமையாகிறது.