உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பண்டார உருவில்...
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பண்டார உருவில்... · 72 / 391

பண்டார உருவில்... கா ர் விபத்தில் கண்ணில் அடிபட்டு, மருத்துவர்கள் எச்சரித்திருந்தும் கேளாமல், தொடர்ந்து 'மணி மகுடம்' என்ற நாடகத்தை எஸ். எஸ் ஆர். குழுவுக்காக எழுதிக் கொண்டிருந்த போது, தாங்க முடியாத கண் வலி ஏற்பட்டு, சென்னைக் கண் மருத்துவ மனையில் நான் சேர்க்கப்பட்டேன். பெங்களூரில் இருந்த கலைவாணர் இந்தச் செய்தியைப் பெங்களூரில் உள்ள பத்திரிகைகளில் பார்த்து விட்டு, அங்கே தனக்கு இருந்த இரண்டு, மூன்று நாள் நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்துச் செய்து விட்டுச் சென்னைக்கு ஓடோடி வந்தார்.

ஆறுமாத காலம் நான் கண் மருத்துவ மனையில் இருந்தேன். காலையிலும், மாலையிலும் அவரும் மதுரம் அம்மையாரும் மருத்துவ மனைக்கு வந்து என்னோடு ஒரு மணி நேரம் இருந்து ஆறுதல் கூறிவிட்டுத்தான் திரும்புவார்கள். 'மணி மகுடம்' நூறாவது நாடக விழாவின் போது டாக்டர் மு. வரதராசனார் தலைமை வகித்தார். அந்த விழாவில் கலந்து கொள்ளுவதாக இருந்த கலைவாணருக்கு உடல் நலமில்லை. தான் பேச வேண்டியதை எழுதியனுப்பியிருந்தார். அதில் இன்றைக்கு நினைத்தாலும் நான் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் வீட்டு மாடியில் நான் தனியாக அமர்ந்து 'மணமகள்' படத்திற்குத் திரைக்கதை-வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுகிற வேகத்தில் எழுதப்பட்ட தாள்களை ஒழுங்காக அடுக்கி வைக்காமல், அவை காற்றிலே பறந்து மாடி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. நான் அவைகளைக் கவனிக்காமல் எழுதிக்கொண்டேயிருக்கிறேன். திடீரென இரைந்து கிடந்த தாள்கள் என் முன்னால் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதனை அடுக்கி வைத்தது யார் என்று திரும்பிப் பார்க்கிறேன்.

என் பின்னால் கலைவாணர் புன்னகை பூத்தவாறு நிற்கிறார்."என்ன நீங்களா?" என்று கேட்கிறேன். "ஆமாம், கம்பன் எழுதிய போது இப்படித்தான் சோழ மன்னன் பின்னால் இருந்து அடப்பக்காரன் போல் தாம்பூலம் கொடுத்தான்" என்று கூறுகிறார் கலைவாணர். "நீங்கள் சோழ மன்னனாக இருக்கலாம்; ஆனால் நான் கம்பன் அல்ல" என்று பதில் அளித்தவாறு அவரைத் தழுவிக்கொள்கிறேன் நான்.

இந்த நிகழ்ச்சியை 'மணி மகுடம்' நூறாவது நாடக விழாவில் கலைவாணர் அப்படியே குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதை மேடையில் நடிகமணி நாராயணசாமி அவர்கள் படித்தபோது என்னுடைய உள்ளம் எத்தகைய உணர்ச்சி அலைகளுக்கு ஆளானதோ, அதே நிலைதான் அதனை நினைத்து இப்போது எழுதும் போதும் எனக்கு ஏற்படுகிறது அரசியலில் முழுக்க முழுக்க அவர் தன்னை ஒரு கட்சிக்கு உரியவராக ஆக்கிக் கொள்ளாவிட்டாலும், பெரியாரிடத்திலும் அண்ணாவிடத்திலும் என்னைப் போன்ற சிலரிடத்திலும் தனி அன்பு செலுத்தி வந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜீவானந்தம், அவருக்குச் சகோதரரைப்போல் இருந்தார். ஒரு முறை நான் வழக்கம் போல் கலைவாணர் வீட்டிற்குப் போயிருந்த போது என்னை அவர், "மாடிக்கு வாருங்கள், தனியாகப் பேசுவோம்" என்று அழைத்துக் கொண்டு போனார்.

மாடியில் ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. "ஏன் பகற்காலத்தில் ஜன்னல்களை மூடிவிட்டு, வெளிச்சத்திற்காக விளக்குகளைப் போட்டிருகிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே நான் அவருடன் சென்றேன். "காமெடியன் வீடு அல்லவா எல்லாம் காமெடியாகத்தான் இருக்கும்!"

என்று சிரித்துக் கொண்டே அவர் பதில் சொன்னார். மாடிக்குப் போனதும் என்னைப் பார்த்து, "உங்களுக்கு ஒரு பண்டாரத்தை அறிமுகப்படுத்தப் போகிறேன். பார்த்தால் பண்டாரம் போல் தெரியும். ஆனால் பெரிய மாயாவி!" என்று குறிப்பிட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு மஞ்சள் திரை புதிதாகத் தொங்கிக் கொண்டிருந்தது. "பண்டாரம் எங்கே?"

என்று கேட்டேன் "பாருங்கள், இப்போது வருவார்" என்றுகூறிக்கொண்டே கலைவாணர் கைகளைத் தட்டினார். மஞ்சள் திரையை விலக்கிக் கொண்டு ஓர் உருவம் நாங்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தது. நல்ல கட்டான உடல். மழுமழு வென்றிருக்கும் மொட்டைத் தலை. இடையிலே காவியாடை. தோளிலே ஒரு காவித் துண்டு. கழுத்தில் ருத்திராட்ச மாலை. நெற்றி நிறைய விபூதி. "இவர்தான் அந்தப் பண்டாரம்" என்று கலைவாணர் அவரை எனக்கு அறிமுகப் படுத்தினார்.

நான் பண்டாரத்தைப் பார்த்து, "சாமிக்கு எந்த ஊர்?" என்று கேட்டேன். பண்டாரம் பதில் சொல்லவில்லை. உடனே கலைவாணர். "சாமிக்குக் காது கேட்காது. நான் சொல்கிறேன். சாமி ரஷ்யாவிலிருந்து வருகிறது" என்று கூறினார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'ரஷ்யா நாஸ்திகப் பூமியாயிற்றே. அங்கே இப்படிப் பட்டை தீட்டிக் கொட்டை கட்டிக்கொண்ட பண்டாரங்கள் ஏது?'

என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். கலைவாணர் பண்டாரத்தைப் பார்த்து, "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று சற்று உரத்த குரலில் கேட்டார். பண்டாரம் தலையாட்டினார். "அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு அரசாங்கத்தால் தேடப்பட்டு வருகிற கம்யூனிஸ்ட்டுகள் 'அண்டர் கிரவுண்ட்' வாழ்க்கை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட 'கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர்தான் இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறார். அவர்தான் இவர் இவரை யார் என்று கண்டுபிடியுங்கள்.

பார்க்கலாம்" என்று கலைவாணர் எனக்கு அறைகூவல் விட்டார். என்னால் உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. பண்டாரத்தை உற்றுப் பார்த்தேன். பிறகு புரிந்து கொண்டேன். அடர்த்தியான மீசையுடன் அடலேறு (பால் முழங்கிடும் ஜீவானந்தம்தான் அந்தக் கோலத்தில் இங்கேயிருக்கிறார் என்பதை! சுமார் மூன்று மாதங்களுக்கு ஜீவானந்தம் கலைவாணர் வீட்டு மாடியிலேயே காவியுடைப் பண்டாரமாக வாழ்ந்து வந்தார். ஜீவானந்தத்தின் மீது கலைவாணர் வைத்திருந்த பற்றைக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது..