உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கலைவாணரின் பெருந்தன்மை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கலைவாணரின் பெருந்தன்மை · 71 / 391

கலைவாணரின் பெருந்தன்மை கலைவாணர். கண்களைக் கேலியாகச் சிமிட்டிக் கொண்டே என்னை மறுபடியும் பார்த்து, "நான்கு பூஜ்யங்கள் போட்டிருக்கிறேன். அதற்குச் சம்மதமா என்று கேட்கிறேன். 'ஆமாம்' என்கிறீர்கள். நான் நம்பலாமா?" என்று கேட்டார். "ஒத்துக் கொண்டுதானே ஆமாம் என்கிறேன்" என்று பதில் சொன்னேன்.

"சீட்டைக் கொடுங்கள்" என்று வாங்கிக் கொண்டார். "இதில் 'ஒன்று' எங்கே. போடுவது? முன்னாலா? பின்னாலா?" என்று கேட்டார். "எங்கு வேண்டுமானாலும் போடுங்கள்" என்றேன். அவர் நான்கு பூஜ்யங்களையும் கடந்து, கடைசியாக ஒன்று என்று எழுதினார். அதாவது. 00001 ஏன்று எழுதப் பட்ட சீட்டை என்னிடம் கொடுத்தார். சிரித்துக் கொண்டே, "சரிதானா?"

என்றார். நான், "சரிதான்" என்று கூறியவாறு அவர் கொடுத்த சிறிய சதுரமான சீட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டினேன். அப்படி மாற்றிய போது 1 முதலிலும், நான்கு பூஜ்யங்கள் அதனைத் தொடர்ந்தும் (10,000. என்று) காட்சியளித்தது. அதைப் பார்த்துவிட்டுக் கலைவாணர், "ஆகா, என்னையே ஏமாற்றிவிட்டீர்களே!"

ஏன்று வயிறு குலுங்கச் சிரித்தார். இப்படி நகைச்சுவையுடனே எங்கள் கலையுலகத் தொடர்பு ஆரம்பமானது. அந்தக் கலைவாணர் இன்றில்லாவிட்டாலும், அவர் கலையுலகத்தில் பதித்துவிட்டுச் சென்ற முத்திரைகள் என்றென்றும் அழியாதவைகளாகும். அவர் சாகும் வரையில் என்னுடைய உற்ற நண்பராக விளங்கினார், என் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னையாக்கிக் கொண்டார். சேல்த்தில்இருந்த என்னைச் சென்னைக்குக் குடிவந்து விட வேண்டுமென்று அடிக்கடி அவர் வற்புறுத்தியதின் விளைவாக நான் சென்னையில், குடியேறினேன்.

நாள் தோறும் காலையிலோ மாலையிலோ. என்னைச் சந்திக்கா விட்டால் அவருக்கு நிம்மதியே இருக்காது. அவரும், கலையுலக நண்பர்களும் நானும் எத்தனையோ நாட்கள் சென்னைக் கடற்கரையின் மணற்பரப்பில் ஆயிரம் ஆயிரம் கதைகளைப் பேசிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம். கலையுலகம் கண்டெடுத்த நல்முத்து அவர்; உழைப்பால் உயர்ந்த உத்தமர். கலையுலகத்திற்குக் குளிர் தருவாக அவர் இருந்தார். ஏழை எளியவர்களின் பக்கம் அவாது கொடைக்கரம் நீண்டு கொண்டேயிருந்தது.

வறுமைச் சகதியில் அமிழ்ந்து வேதனைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அழுது கொண்டு இருந்த மனிதனையும் அவர் சிரிக்க வைத்தார். அந்தச் சிரிப்பு வெறும் சிரிப்பாக இல்லாமல், விதவிதமான கருத்துக்களை, எண்ண வளங்களை உருவாக்கக் கூடியதாயிருந்தது. ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடக்கமாகத் தன்னுடைய வாழ்க்கையை அவர் அமைத்துக் கொண்டார். பிறரின் துன்பங்களைத் தனக்குற்ற துன்பம் போல் கருதிக் கொண்டார். அறிஞர் அண்ணாவின்பால் அவருக்கு இருந்த பற்றும், பாசமும் எழுதிட ஏடு அடங்காது.

அவர் இல்லாமல் படங்கள் வெற்றியடைவது இயலாத ஒன்றாகயிருந்தது. சரித்திரப் படங்கள் ஆயினும், புரட்சிப் படைப்புக்கள் ஆயினும் கலைவாணரும் அவரது வாழ்க்கைத் துணைவியார் மதுரம் அம்மையாரும் அந்தப் படங்களில் சில காட்சிகளிலாவது தோன்றினால்தான் படம் வெற்றி பெறும். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துச் சொல்லத் தவறியதில்லை. நகைச்சுவை நடிப்பென்றால் வாயைப் பிளப்பது, வயிற்றில் அடித்துக் கொள்வது, தலைகீழாக நடப்பது, தடதடவென உருளுவது.

என்பதுதான் என்று இருந்த காலத்தை மாற்றி, அரிய கருத்துக்களால் மக்களைச் சிரிக்க வைத்துச் சிந்திக்க வைப்பது என்ற புதிய முறையைப் புகுத்திய தனிப் பெருமை கலைவாணருக்கே சொந்தமாகும், அவர் பெற்று வந்த புகழ் கண்டு மனம் பொறாத சில பேர்கள் அவரைப் பற்றியும், அவரது கலையுலக நண்பர் எம். கே. தியாகராச பாகவதர் அவர்களைப் பற்றியும் தாறுமாறாகப் பேசவும், எழுதவும் 'முற்பட்டார்கள். அதற்குச் சில மஞ்சள் பத்திரிகை ஆசிரியர்களின் உதவியையும் பெற்றார்கள்.

தன்னைத் தாக்குவது பற்றியோ, தனது புகழுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது பற்றியோ, பத்திரிகைகளில் எழுதுவது பற்றியோ கலைவாணர் கவலைப்படவில்லை. அந்த எதிர்ப்புக்களைச் சிரித்துச் சிரித்துச் சமாளித்துக் கொண்டார். ஈனத்தனமாக எதிர்ப்புக்கள் வரும்போதும், மறைமுகமான தாக்குதல்கள் வரும்போதும் அண்ணா காட்டிய மௌனமும், கலைவாணர் காட்டிய சிரிப்பும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாதவைகளாகும். அத்தகைய எதிர்ப்புக்கள் என்னை நோக்கி வருகிற நேரத்தில் நான் அண்ணாவையும் கலைவாணரையும்தான் எண்ணிக் கொள்கிறேன்.

ஒரு கொலை வழக்கில் கலைவாணரும், எம். கே. தியாகராச பாகவதரும் சம்பந்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள். அப்போது பாகவதர் கண் கலங்கினார். கலைவாணர் சிரித்துக் கொண்டே சிறை புகுந்தார். அந்தக் கலையுலக மாமணிகளின் விடுதலைக்காகப் பெரியாரும், அண்ணாவும் பெரும் பாடுபட்டார்கள். தமிழகமே அவர்கள் இருவரது விடுதலைக்காகக் குரல் ஒலித்தது. இறுதியில் வழக்கறிஞர் ஏத்திராஜ். அவர்களின் வாதத் திறமையோடு நீதி வென்றது. கலைவாணரும், பாகவதரும் இரண்டு ஆண்டு காலச் சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவந்தார்கள்.

தன் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களையும், கழக நண்பர்களையும் கடைசியாகக் கண் மூடும் வரையில் மறக்கவே இல்லை. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறளின் உண்மைப் பொருளுணர்ந்து நடந்து காட்டிய அந்தப் பெருமகன் எனக்குச் சிறு இடர் வந்தாலும் அது தனக்கு வந்தது போல் துடிதுடிப்பார். ஒரு நாள் எனக்குக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டுச் சென்னையில் தியாகராயநகரில் குடியிருந்த என்னைப் பார்ப்பதற்காக வந்தார்.

அவருடன் கலையுலக நண்பர்கள் சிலரும் வந்தார்கள். எப்பொழுதாவது நாங்கள் பொழுது போக்கிற்காகச் சீட்டு விளையாடுவது உண்டு. சோர்ந்து படுத்திருந்த என்னைப் பார்த்துக் கலைவாணர், கொஞ்ச நேரம் சீட்டு விளையாடலாம் என்று அழைத்தார். நான் மறுத்தேன். "அப்போதுதான் உடம்பு சுகமாகும்; எழுந்து உட்காருங்கள்" என்று என்னை எழுப்பி உட்கார வைத்தார்.

வந்தவர்கள் தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு சீட்டு விளையாட ஆயத்தமாய் இருந்தார்கள். நானோ நூறு ரூபாய் வைத்துக் கொண்டு சீட்டு விளையாட ஆயத்தமானேன். பணம் குறைவாகத் தான் இருக்கிறது என்று கலைவாணரிடம் சொன்னேன். "பரவாயில்லை. வேண்டுமானால் நான் தருகிறேன்" என்று தைரியப்படுத்தினார்.

அன்று சீட்டாட்ட முடிவில் கலைவாணர் உட்பட அனைவரும் என்னிடத்தில் தோற்றுவிட்டார்கள். ஐயாயிரம் ரூபாய் எனக்கு இலாபம்! கலைவாணர் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டுப் போனார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதில் என்னை உட்கார வைத்துக் கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். ஒரு நாள் நானும், கலைவாணரும் அந்தக் காரில், கலைவாணர் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் செல்லமுத்துவும் கலைவாணர் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

நான் கலைவாணருடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தேன். என் காரில் பெட்ரோல் இல்லை என்று டிரைவர் செல்லமுத்துவிடம் சொல்லியிருக்கிறார். உடனே செல்லமுத்து அங்குள்ள முக்கியமான மானேஜரிடம் என் காருக்கு ஒரு காலன் பெட்ரோல் போடக் கேட்டிருக்கிறார். அவர் பெட்ரோலுக்காக ஒரு கூப்பனைச் செல்லமுத்துவிடம் கொடுத்து விட்டு, "இனிமேல் இப்படி எல்லாம் கலைவாணர் வீட்டுப் பணத்தை அழிக்காதே" என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தி என் காதிற்கு வரவில்லை. மறுநாள் அதே மானேஜர், முதல் நாள் என் காருக்கு ஒரு காலன் பெட்ரோல் போட்ட செய்தியைக் கலைவாணரிடம் கூறியதோடு, தான் செல்லமுத்துவிடம் கண்டிப்பாகச் சொன்ன விஷயத்தையும் விவரித்திருக்கிறார். கலைவாணர் 'மணமகள்' படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. மானேஜர் இதைச் சொன்னதும், கலைவாணர் படப்பிடிப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார். மானேஜருக்கு ஒரே திருப்திதான்.

கலைவாணர் குடும்பத்திற்கு எவ்வளவு காப்பாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டதாக அவருக்கோர் எண்ணம். ஆனால் வெளியே வந்த கலைவாணர் காரில் ஏறி நேராக என் வீட்டிற்கு "மணமகள்" ஆசிரியர் வேடத்துடனேயே வந்திருக்கிறார். நான் வீட்டிலில்லை. என் அம்மா இருந்திருக்கிறார்கள். அவர்களிடத்தில் கலைவாணர், ஓர் ஆயிரம் பெட்ரோல் கூப்பன்களைக் கொடுத்து, "இதை வைத்துக் கொண்டு தம்பி வந்ததும் வேண்டிய அளவு பெட்ரோல் போட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாளே அந்த மானேஜர் வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். வீட்டிற்கு வந்த நான் என் அன்னை கொடுத்த பெட்ரோல் கூப்பன்களை எடுத்துக் கொண்டு போய்க் கலைவாணரிடம் கொடுத்து விட்டு, "தேவையானால் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, அவரையும் வேலை நீக்கம் செய்யப்பட்ட மானேஜரையும் சமாதானப்படுத்த முயன்றேன் கலைவாணர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு, நடந்துவிட்ட விஷயத்திற்கு வருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அந்தப் பெரும் உள்ளத்தைக் கலையுலகத்தில் அவரைப் போல் யார்தான் பெற முடியும்?