நெஞ்சுக்கு நீதி
சேலத்தில் குடும்பம் · 70 / 391
சேலத்தில் குடும்பம் சே லத்தில் எங்கள் குடும்ப வாழ்க்கை தொடங்கியது. சேலம் கோட்டையில் உள்ள ஒரு தெருவில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம். என்னுடைய 'மந்திரி குமாரி' நாடகத்தைப் படமாக எடுக்க வேண்டுமென்ற விருப்பத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் திரு.டி.ஆர். சுந்தரம் வெளியிட்டார். நானும் ஒப்புதல் அளித்து அதற்கான திரைக்கதையையும், உரையாடல்கள் அனைத்தையும் படத்திற்கேற்றவாறு எழுதி முடித்தேன்.
அப்பொழுதுதான் அவர்கள் வெளியிட்ட 'மாயாவதி' என்ற ஒரு படம் பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக 'மந்திரி குமாரி' படத்தைச் சிறந்த முறையில் எடுக்கத் திரு டி. ஆர். சுந்தரம் முடிவு செய்தார். படத்திற்கான ஆரம்ப விழாவிற்குத் தேதி குறிக்கத் தொடங்கினார்கள். நல்லநாள் பார்க்க ஓர் ஆரூடக்காரர் அழைத்து வரப்பட்டார். அவரை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
நான் அவரிடத்தில், "மந்திரி குமாரி" பட ஆரம்ப விழாவிற்கு நாள் பார்க்க வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். "ஆமாம்" என்று மிக்க மகிழ்ச்சியோடு, ஆனந்தம் பொங்க அவர் பதில் அளித்தார். "மாயாவதி" படத்திற்கும் நீங்கள் தானே நாள் பார்த்தீர்கள்?"
என்று நான் கேட்டதற்கு, அசடு வழிய, "ஆமாம்" என்றார். திறமை வாய்ந்த இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் முழுப் பொறுப்பிலும், திரு.டி. ஆர். சுந்தரம் அவர்களின் மேற்பார்வையிலும் வெளியான 'மந்திரி குமாரி' படம் தமிழ் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. சனாதனிகளின் எதிர்ப்பும், எதிர்க்கட்சிக்காரர்களின் மேடைத் தாக்குதலும் அந்தப் படத்தின் காரணமாக நிரம்ப ஏற்பட்டன. "கொள்ளை அடிப்பது சிறந்த கலை" என்று அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான கொள்ளைக்காரப் பார்த்திபன் கூறுவதாக ஒரு கட்டம்.
அது ஒரு பாத்திரத்தின் கொள்கை என்பதை மறந்து விட்டுக் கதாசிரியராகிய என் கொள்கையும் அதுதான் என்று கற்பனை செய்து, "இப்படி ஒரு கொள்கையை நாட்டிற்குச் சொல்லலாமா?" என்றெல்லாம் எதிர்க்கட்சி அரசியல் மேடைகளில் வேகமாக விமரிசிக்கப்பட்டது. இந்தக்கொள்கையைச் சொல்கிற கொள்ளைக்காரப் பார்த்திபன் கதையின் முடிவில் அழிவிற்கு ஆளாகிறான். கொடியவனின் முடிவை நான் எப்படிச் சித்தரித்திருந்தேன் என்பதைப் பற்றிக்கூட எண்ணிப் பாராமல் என்னையும் நான் சார்ந்த கட்சியையும் தூற்றுவதற்கு 'மந்திரி குமாரி' கதையை மாற்றார் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
எதிர்ப்புகள் அதிகமாக அதிகமாகப் படம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஒவ்வொரு ஊரிலும் நீண்ட நாட்கள் நடை பெற்றுப் பெரும் புகழைப் பெற்றது. சேலத்திற்கு வந்திருந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் ஒரு தியேட்டரில் 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் என்னை வந்து சந்தித்து வாழ்த்தினார். தான் எடுக்கவிருக்கும் 'மணமகள்' படத்திற்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
நான் ஒப்புக் கொண்டேன். எனக்கும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கும் கலையுலகில் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்த இந்தச் சந்திப்புக் காரணமாக இருந்தது. சேலத்தில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு என்னை அழைத்து கொண்டு காரில் புறப்பட்டார். என்னுடன் உடுமலை நாராயன் கவிராயரும், அவரது மாணவர் செல்லமுத்துவும் இருந்தார்கள். "மணமகள்" வசனம் எழுத எவ்வளவு பணம் வேண்டும்?"
என்று கலைவாணர் என்னைக் கேட்டார். "எனக்குத் தெரியாது?" என்று பதில் சொன்னேன். என்னைச் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினார். நான் கடைசிவரையில் பணம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இறுதியாக அவர் ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி அதைச் சுருட்டி மடக்கி என் கையிலே கொடுத்தார். நான் அதை பிரித்துப் பார்க்காமலேயே கையில் வைத்துக்கொண்டிருந்தேன். "பிரித்துப் பாருங்கள்" என்று என்னைப் பிடிவாதப் படுத்தினார் துண்டுத்தாளைப் பிரித்துப் பார்த்தேன்.
அதில் நாலு பூஜ்யங்கள் எழுதப்பட்டிருந்தன! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது 'என்ன, நாலு. பூஜ்யங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறாரே?'' என்று சற்றுத் திகைத்தேன். அவர் என்னைப் பார்த்து களங்கமற்ற புன்னகை புரிந்து கொண்டிருந்தார். நான் அதில் ஏதோ நகைச்சுவை இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டு, "சரி, சம்மதம்" என்று கூறினேன்.
அவர் விழிகளை அகலமாக ஆககிக் கொண்டு, "அப்படியா, சம்மதமா?" என்று ஆவலோடு கேட்டார், நான் மறுபடியும், "ஆமாம், சம்மதம் தான்!" என்று சொன்னேன்.
