நெஞ்சுக்கு நீதி
மறக்க முடியாத பயணம் · 69 / 391
மறக்க முடியாத பயணம் பொ ழுது விடிந்தது. சேலம் ரயிலுக்குப் புறப்பட இருவரும் ஆயத்தம் ஆனோம். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்றோம். என்னிடமிருந்த மணிபர்சைக் கண்ணதாசனிடம் கொடுத்துச் சேலத்திற்கு இரண்டு டிக்கெட் எடுத்து வரச் சொன்னேன். டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வந்த கண்ணதாசன் மணிபர்சை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பர்ஸ் காலியாக இருந்தது. "என்னய்யா? பர்ஸ் காலியாக இருக்கிறதே?"
என்று கேட்டேன். "இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு உமது பணம் சரியாக இருந்தது" என்று அவர் பதில் சொன்னார். "ஐயையோ! உம்மை யார் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கச் சொன்னது? மூன்றாம் வகுப்புப் போதாதா?" என்று நான் சலித்துக் கொண்டேன். "என்னிடம் இரண்டு அணா இருக்கிறது, பயப்படாதீர்" என்று ஆறுதல் சொன்னார்.
காலையில் நாங்கள் சிற்றுண்டிகூட அருந்தவில்லை. பகல் எல்லாம் பயணம் செய்து இரவு சேலம் போய்ச் சேர வேண்டும். இரண்டு அணாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பயணம் செய்வதோ இரண்டாம் வகுப்பு! பையோ காலி! எங்களை ஏற்றிக் கொண்ட வண்டி சேலத்தை நோக்கிப் புறப்பட்டது. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அறுபது வயது உடைய ஒரு பெரியவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் எங்களிடம் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டார்.
அவர் சேலத்திற்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையில் உள்ள ஒரு பழைய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவராம். அவருடைய தோற்றத்தில் முதுமை இருந்தாலும் பேச்சில் மிடுக்கும், பெருந்தன்மையும் காணப்பட்டன. நாங்கள் யார் என்பதை அவர் தெரிந்து கொண்டார். எங்களோடு அரசியல் பேசுவது, அவருக்கு மிகுந்த விருப்பமாய் இருந்தது. நீதிக் கட்சி தோன்றிய தோன்றிய காரணத்தையும், வளர்ந்த விதத்தையும் அவர் மிகுந்த உணர்ச்சியோடும், உருக்கத்தோடும் விவரித்தார்.
வயதான பாட்டிகள் தங்கள் இளமைக் காலத்தில் கணவரோடு உற்சாகமாக வாழ்ந்ததை எல்லாம் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்கிற நேரத்தில், அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படுகிற இனந் தெரியாத உற்சாகம் அந்தப் பழைய ஜமீன்தாரின் அரசியல் பேச்சில் வெளிப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிக்க இனிக்க எங்களிடம் பேசிக்கொண்டே அவர் தன்னிடமுள்ள ஆப்பிள் பழங்களை அறுத்து அறுத்துச் சாப்பிட்டுக் கொண்டே வந்தார். ஒரு துண்டை எங்களிடம் நீட்டி, 'சாப்பிடுகிறீர்களா?'
என்று மாத்திரம் கேட்கவில்லை. எங்களுக்கோ பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. "என்ன இரண்டாம் வகுப்புப் பயணம் வேண்டி இருக்கிறது, சாப்பிடக் கூட முடியாமல்? இந்த இரண்டாம் வகுப்பே ஒழிந்தாலும் பரவாயில்லை" என்று நான் கவிஞரைக் கடிந்து கொண் டேன் (இப்போது இரண்டாம் வகுப்பை ஒழித்து விட்டார்கள்!)
"ஆப்பிள் ரொம்பப் பெரிதாக இருக்கிறதே! இது என்ன காஷ்மீர் ஆப்பிளா?" என்று கண்ணதாசன் அவரிடத்திலே கேட்டார். "ஆமாம். நான் வேறு எந்த ஆப்பிளும் சாப்பிடுவதில்லை" என்று கூறிக் கொண்டே ஜமீன்தார் தன் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இப்படிக் கேட்டாலாவது ஒரு பழத்தை எடுத்து நீட்ட மாட்டாரா என்பது என் நண்பருடைய ஆசை. அந்த ஆசையிலும் மண் விழுந்து விட்டது. வண்டி ஜோலார்பேட்டை வந்து சேர்ந்தது. அங்குதான் பிரயாணிகள் பிற்பகல் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். ஜமீன்தாருக்கு வண்டிக்குள்ளேயே சாப்பாடு வந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஜமீன்தார் எங்களைப் பார்த்து, "என்ன, உங்களுக்குச் சாப்பாடு வரவில்லையா?"
என்று கேட்டார். நான் சமாளித்துக்கொண்டு, "இல்லை, நாங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வரப் போகிறோம்" என்று கூறிக்கொண்டே, கண்ணதாசனை அழைத்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினேன். இருவரும் சிறிது நேரம் அங்கும் இங்குமாக உலவினோம். உலவினால் பசி ஓடிவிடுமா என்ன? மேலும் அதிகமாகியது. சரி, திரும்பப் போனால் சாப்பிட்ட முகத்தோடு ஜமீன்தாருக்கு நேராகக் காட்சி தர வேண்டுமே! அதற்கு என்ன செய்யலாம்? நானும் கண்ணதாசனும் யோசித்தோம்.
அதற்கு உடனடியாக நான் விடையளித்தேன். காரணம் எனக்கு இதற்கு முன்பு ஒரு முறை இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நான் திராவிடர் கழகத்திலிருந்தபோது, தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் மாலை ஐந்து மணிக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதை முடித்துவிட்டு ஏழு மைல் சென்று குடவாசலில் பஸ் ஏறிக் கும்பகோணம் சென்று ரயிலைப் பிடித்துச் சீர்காழியில் நடைபெறும் ஒரு நாடகத்திற்குத் தலைமை வகிக்கச் செல்ல வேண்டும்.
திருவாஞ்சியம் கூட்டம் முடிந்ததும் என்னைக் கொண்டுபோய்க் குடவாசலில் ஒரு டாக்சியில் விட்டு விடுவதாகக் கூட்டம் நடத்தியவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தை நடத்தியவர்கள் மெல்ல நழுவி விட்டார்கள். நான் நடந்தே இரவு ஒன்பது மணிக்குக் குடவாசலை அடைந்தேன். நான் ஏறவேண்டிய பஸ் அப்போதுதான் போய்விட்டது என்று சொன்னார்கள். அடுத்த பஸ் ஏறிக் குடந்தைக்குச் சென்றேன். நான் பிடிக்க வேண்டிய ரயில் ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் புறப்பட்டுப் போயிற்று என்று அறிந்தேன்.
என்னை வரவேற்பதற்காக, சீர்காழி ரயிலடியில் மாணவத் தோழர்கள் ஏராளமாகக் காத்திருந்தார்களாம். ஆனால் நானோ குடந்தைத் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். சீர்காழி போய்ச் சேர்ந்திருந்தால், திரும்ப ஊருக்குச் செல்ல விழா முடிந்ததும் மாணவர்கள் வழிச் செலவுப் பணம் கொடுத்திருப்பார்கள். நான், குடந்தையிலேயே சிக்கிக் கொண்டதால், காலையில் திருவாரூருக்குத் திரும்புவதற்கான பஸ் கட்டணத்திற்குத் தான் என்னிடம் பணம் இருந்தது குடந்தை நாகேசுவரன் கோவில் சந்நிதியில் உறவினர் ஒருவர் இருக்கிறார் என்ற ஞாபகம் வந்தது.
அந்த வீட்டிற்குச் சென்றேன். திண்ணையில் இருந்தவாறே உள்ளேயிருந்த உறவினரைப் பார்த்து, "என்ன சௌக்கியமா?" என்று கேட்டேன். அவர் உள்ளேயிருந்தவாறே என்னை, "வாங்க: வாங்க!" என்று வரவேற்று, "சாப்பிட்டு விட்டீர்களா?" என்று கேட்டுக் கொண்டே, "இங்கே நம் வீட்டில் பத்தியச் சாப்பாடுதான்" என்று நிலைமையைத் தெளிவாக விளக்கினார்.
நான் ஓர் அசட்டுப் புன்னகையோடு, நான் பக்கத்துத் தெரு ஓட்டலில் போய்ச் சாப்பிட்டு விட்டு வருகிறேன். தூங்குவதற்குத் திண்ணையில் ஒரு பாய் மாத்திரம் எடுத்துப் போட்டு வையுங்கள்" என்று கூறி விட்டு அருகில் உள்ள காந்திப் பூங்காவின் பக்கம் சென்றேன்.
ஓட்டலில் நுழைந்து சாப்பிட்டால் காலையில் பஸ்ஸில் ஊருக்குத் திரும்புவதற்குக் காசில்லாமல் போய்விடும். ஆகவே சாப்பிட்டதுபோல் நடிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டேன். உறவினரிடத்தில் விட்டுக் கொடுக்கக்கூடாதல்லவா? அதனால் அங்கேயுள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில் வெற்றிலை வாங்கிப் போட்டுக்கொண்டு, வாய் சிவக்கச் சிவக்க, உறவினர் வீட்டுக்கு வந்தேன். அவர் எனக்காகத் திண்ணையில் காத்துக் கொண்டிருந்தார்.
நான் சென்றதும் சிறிது நேரம் ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் படுக்கச் சென்றுவிட்டார். நான் திண்ணையில் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தேன். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து முதல் பஸ்ஸைப் பிடித்துத் திருவாரூருக்குச் செல்லக் கிளம்பினேன். பஸ்ஸில் உட்கார்ந்த பிறகு திருவாரூருக்கு நான் தர வேண்டிய பஸ் கட்டணம் குறைவாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது. அப்போது எனக்குத் தெரிந்த ஒருவர் திருவாரூர் செல்ல பஸ் ஏறினார்.
அவர் டிக்கெட்டுக்கான பணத்தைச் சில்லறையாக எடுத்தார். நான் என் கையில் இருந்த சில்லறைக் காசுகளை அவருடைய கையிலே போட்டு, "எனக்கும் ஒரு டிக்கெட் எடுங்கள்" என்று சொன்னேன். நல்ல வேளையாக அவர் எண்ணிப் பார்க்காமல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் கண்டக்டரிடம் கொடுத்து எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்கிவிட்டார். இந்த நிகழ்ச்சிதான் எனக்கு ஜோலார்பேட்டை சந்திப்பில் ஞாபகத்திற்கு வந்தது. நான் உடனே கண்ணதாசனிடம் சொன்னேன்: "இருவரும் ஆளுக்கொரு வெற்றிலை பீடா வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிட்டவர்கள் போல, வாய் சிவக்க ஜமீன்தார் எதிரிலே செல்லலாம்" என்று.
எங்களிடம் அதற்குக் காசு இருந்தது. இருவரும் வெற்றிலைப் பாக்குக் குழையக் குழைய இரண்டாம் வகுப்புப் வகுப்புப் பெட்டிக்குள் சென்றோம். ஜமீன்தார் ஏப்பம் விட்டவாறு, "என்ன சாப்பிட்டாயிற்றா?" என்று கேட்டார் "ஓ, பிரமாதமான சாப்பாடு!" என்றவாறு நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஜமீன்தார், "கொஞ்சம் பெட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள். சற்று வெளியில் போய் வருகிறேன்" என்று கூறி விட்டுக் கீழே இறங்கிச் சென்றார்.
நொடித்துப் போன ஜமீன்தார் என்ற காரணத்தினால் அவரைச் சுற்றி யாரும் ஆள் அம்புகள் இல்லை. அவர் கீழே இறங்கிச் சென்ற பிறகு நானும் கண்ணதாசனும் அவர் கூடையில் வைத்துப் போன பழங்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். கண்ணதாசன் என்னிடம் மெதுவாக, "ஏனையா, ஜமீன்தாரிடம் ஓர் ஐந்து ரூபாய் பணம் கேட்டால் என்ன?"
என்று ஆரம்பித்தார். நான் உடனே சொன்னேன் "பேசாமல் இரும்; பணம் கேட்டு அவமானப்படவேண்டாம்" என்று. சிறிது நேரத்திற்கெல்லாம் ஜமீன்தார் வந்துவிட்டார். வண்டியும் புறப்பட்டது. கண்ணதாசன் உதடுகள் ஏதோ ஒரு பாட்டை முணு- முணுத்துக் கொண்டிருந்தன. நான கூர்ந்து கவனித்தேன். "ஐயா, சிறுவன்; ஏழை என்மேல் மனம் இரங்காதா?"
என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு எப்பொழுதுமே பசி ஒரு பிரச்னையல்ல: அதற்குத் தன்னைப் பழக்கிக் கொள்ளாத என் நண்பர்தான் மிகவும் வாடிவிட்டார். மாலையில் ஜமீன்தாருக்குக் காப்பி வருகிறது. சுவைத்து அருந்துகிறார், "நீங்கள் காப்பி சாப்பிடவில்லை?"
என்று எங்களை வேறு கேட்கிறார். "எங்களுக்குக் காப்பியே பிடிக்காது" என்று பதில் சொல்கிறோம். பச்சைப் பொய்தான், என்ன செய்வது? "ஆகா, இந்தக் காலத்து இளைஞர்கள் காப்பி கூடச் சாப்பிடுவது இல்லையா?" என்று வியப்போடு எங்களைப் பாராட்டுகிறார். எங்கள் உள்ளத்தின் துடிப்பு அவருக்கு எப்படித் தெரியும்? இரவு எட்டு மணிக்கு மேல் எங்களைச் சுமந்து வந்த வண்டி சேலத்தை அடைந்தது. இரயிலடியில் அப்போதுதான் திருவாரூரிலிருந்து வந்திறங்கிய என் அன்னையும், மனைவியும், மாறனும், எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் எங்களுடைய முதல் கேள்வி, "சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்பதுதான். அவர்கள் கொண்டு வந்த கட்டுச் சோற்று மூட்டையை இரயிலடியிலேயே அவிழ்த்து அங்கே உட்கார்ந்தவாறே நாங்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கிய கதையை அம்மாவிடம் சொல்லி, எல்லாருமாகச் சேர்ந்து சிரித்தோம்.
