நெஞ்சுக்கு நீதி
கனிவு வென்றது! · 68 / 391
கனிவு வென்றது! செ ன்னை, பவளக்காரத்தெருவில் வேதனையோடு கூடி இருந்த முன்னணி வீரர்களோடு நானும் அமர்ந்து நடவடிக்கைகளில் கலந்து கொண்டேன். திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கனல் கக்கினார்கள் என்பதை நேரில் கண்டு உணர்ச்சிப் பிழம்பானேன். பூகம்பமும், சூறாவளியும், எரிமலையும் ஒன்றை ஒன்று போட்டிக்கு அழைப்பது போல உணர்ச்சி பீரிட்டுக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில், இளந்தென்றல் காற்று போல வீசிய அறிஞர் அண்ணாவின் உருக்கம் மிக்க பேச்சு அனைவரையும் ஆட்கொண்ட விதம் கண்டு அயர்ந்து போனேன்.
கடுமையான வார்த்தைகள்- கண்டன முழக்கங்கள்- கனல் கக்கும் எதிர்ப்புகள்- காய்ச்சிய இரும்பில் அடிப்பது போன்ற சூடான வார்த்தைகள் - இவைகளிடையே -கனிவு -கண்ணீர் இவை வெற்றிக் கொடி நாட்டிய வியப்பு நிகழ்ச்சியைக் கணக் காண என் விழிகள் அகன்றன. இதயம் விரிந்தது. விடியற்காலத்து மலரில் தேங்கி இருக்கும் பனித் துளி போன்ற கனிந்த சொல்லெடுத்துக் கொதித்தவர்கள் உள்ளங்களுக்கெல்லாம் ஆறுதல் வழங்கினார் அண்ணா. அந்த விவாதத்தில் அவரே வென்றார் ஆம்!
-அன்பும் -அறிவும் -ஆற்றலும் வென்றன! "கருணாநிதி, உன்னைப் பிரசாரக் குழு உறுப்பினராக ஆக்கி இருக்கிறேன்" என்று அண்ணா அவர்கள் சொன்னது, இப்போதும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மாலையிலே, மழை நடுவே, சென்னை ராபின்சன் பூங்காவிலே முன்னேற்றக் கழகத்தின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்தது. "சில விஷயங்கள் பேச வேண்டும். என்னுடன் வா" என்று அண்ணா என்னை அழைத்தார்.
என்னுடன் இருந்த கண்ணதாசன் தனக்குத் தூக்கம் வருகிறது என்றும், தான் போய் லாட்ஜில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டார். நானும் அவரும் சென்னையில் உள்ள விருதுநகர் நாடார் லாட்ஜில்தான் தங்கியிருந்தோம். "நீர் போய் அங்கே படுத்திரும். நான் அண்ணாவுடனும், மற்றவர்களுடனும் பேசி விட்டு லாட்ஜீக்கு வருகிறேன்" என்று அவரிடம் கூறிவிட்டு அண்ணாவுடன் போய்விட்டேன்.
தேவராச முதலியார் என்ற அண்ணா அவர்களுடைய பழைய நண்பர் ஒருவரின் வீட்டுக் கூடம்தான் அண்ணாவும், கழகத்தின் ழுக்கியஸ்தர்களும் அமர்ந்து உரையாடும் இடமாகும். ஒரு கிழிந்த சேபா; இரண்டு உடைந்த நாற்காலிகள்; ஓட்டை விழுந்த இரண்டு பாய்கள்; அழுக்கேறிய நான்கைந்து தலையணைகள். அங்குதான் அண்ணாவின் ராஜரீகம் நடக்கும். காராபூந்தி, பகோடா, சிங்கிள் டீ-இதுதான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு நடைபெறும் விருந்து.
அதனை அண்ணா அவர்கள் சுவைத்துச் சாப்பிடும் அழகே அழகு! இரவு இரண்டு மணி வரையில், ஏன் விடியற்காலை ஐந்து மணிவரையில்கூட அங்கே விஷயாலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவது உண்டு. நாள்தோறும் நடைபெறுவதும் உண்டு. ராபின்சன் பூங்காக் கூட்டம் முடிந்த பின்னர் அண்ணாவும், மற்ற கழகத்தினரும், நானும் இந்தக் கூட்டத்தில் இரவு இரண்டு மணிவரையில் உரையாடல் நிகழ்த்தினோம். அதற்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டு விருதுநகர் லாட்ஜுக்குப் புறப்பட்டேன்.
காலையில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ஏழு மணிக்கு ரயில் ஏறி இரவு சேலம் போய்ச் சேரவேண்டும். அந்த நினைவோடு லாட்ஜுககு வந்தேன். நானும் கண்ணதாசனும் தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன். நீண்ட நேரம் வரை கதவு திறக்கப்படவே இல்லை! பக்கத்து அறைக்காரர்கள கதவைத் திறந்துகொண்டு வந்து என்னைப் பார்த்து, "தூங்கும் போது தொல்லை கொடுக்காதே" என்று கண்டித்துவிட்டுச் சென்றார்கள்.
கடைசியில் ஒரு வழியாகத் தூக்கம் கலைந்து கண்ணதாசன் கதவைத் திறந்தார். நான் உள்ளே நுழைந்தேன். அதற்குள் அவர் தன்னுடைய கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டு குறட்டைவிட ஆரம்பித்தார்! நான் பக்கத்திலே உள்ள கட்டிலில் படுக்க முனைந்தேன். அந்தக் கட்டிலில் இரண்டு தட்டுகள் இருந்தன. காலையில் நாங்கள் சிற்றுண்டி அருந்திவிட்டுப் படுக்கை மீதே போட்டு விட்டுப்போன தட்டுகள் அவை. அவைகளை அப்புறப்படுத்த விரும்பினேன்.
ஒரு தட்டை எடுத்தேன். கையில் ஏதோ வழவழவென்று நெளிந்தது. தட்டுக்கடியில் இருந்தது சிறிய ஒரு கரு நாகப்பாம்பு! தட்டுக்குக் கீழே அந்தப் பாம்பு சுற்றிக்கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. "ஐயோ!" என்று அலறிக் கையில் எடுத்த தட்டைக் கீழே போட்டு விட்டேன், பாம்புப் படுக்கையில் நெளிந்தது! என் கூச்சலைக் கேட்டுக் கண்ணதாசன் எழுந்தார். கதவைத்திறந்து கொண்டு இருவரும் கத்தினோம். லாட்ஜ் காவலாளிகள் கம்புடன் ஓடி வந்தனர்.
ஒரு வழியாகப் பாம்பை அடித்து முடித்தனர். மிகப் பயங்கரமான பாம்பு என்று அவர்கள் வர்ணித்தார்கள். கடித்தால் உடனடியாகச் சாவைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றும் குறிப்பிட்டார்கள். அதோடு விடக் கூடாதா? இது குட்டிப் பாம்பு; இன்னும் சில குட்டிப் பாம்புகள் இங்கே இருக்கலாம் என்று கூறிவிட்டுச் செத்த பாம்பைத் தூக்கிக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள். அதற்குப் பிறகு அந்த அறைக்குள் இருக்கவே எனக்குப் பயமாக இருந்தது.
கண்ணதாசன் தன் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் மெதுவாகக் கண்ணதாசனைக் கூப்பிட்டு, "ஐயா, நான் படுக்கையில் பாம்பைப் பார்த்து விட்டதால் அந்தப் படுக்கையில் படுக்க எனக்குப் பயமாக இருக்கிறது அதனால் நான் உமது படுக்கையில் படுத்துக் கொள்கிறேன். நீர் என் படுக்கையில் படுத்துக் கொள்ளும்" என்று சொன்னேன்.
உடனே அவர், "என்னய்யா, பயந்தாங்கொள்ளியாக இருக்கிறீர். பாம்பைக் கண்டால் இவ்வளவு பயமா? பேசாமல் உம் படுக்கைலேயே படுத்துக் கொள்ளும்" என்று பதில் சொன்னார்! "நீர்தான் வீரராயிற்றே, இதில் படுத்துக் கொள்ளுமே" என்று நான் சொன்னேன். அதற்குப் பதில் அவருடைய குறட்டைச் சத்தம்தான்; வேறு வழி இல்லாமல் விளக்கைப் போட்டுக் கொண்டே அங்கு இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்தேன்.
