நெஞ்சுக்கு நீதி
நண்பர் கண்ணதாசன் · 67 / 391
நண்பர் கண்ணதாசன் தி ருவாரூரில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் பொழுது போக்குவதே கஷ்டமாக இருந்தது. 'முரசொலி' வாரப் பத்திரிகையையும் வாரந்தோறும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எழுதுவதும் கூட்டங்களுக்குப் போவதும் எனக்கு ஆறுதல் தரும் வழிகளாக இருந்தன. அப்பொழுது என்னுடைய நண்பர் கவி கா. மு. ஷெரீப் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் பாட்டு எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் ஒரு நாள் என்னைப் பார்க்கத் திருவாரூர் வந்திருந்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் (மறைந்த) திரு டி. ஆர். சுந்தரம் அவர்கள் என்னுடைய எழுத்துக்களை விரும்புவதாகவும், என்னைக் கொண்டு படங்களுக்கு வசனம் எழுத வேண்டும் என்று கூறியதாகவும் குறிப்பிட்டு என்னுடைய சம்மதத்தைக் கேட்டார். நான் அதுபற்றி யோசிப்பதற்கு முன்பே நண்பர் ஷெரீப் அவர்களே அதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று உரிமையோடு வற்புறுத்தினார்.
சேலத்திற்குப் புறப்பட்டேன். மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் 1949 - ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளனாக அமர்ந்தேன். கட்சிப் பணிகளில் தடையில்லாமல் ஈடுபடவும், கூட்டங்களுக்குச். செல்ல எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனும் அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டேன். அங்கே ஷெரீபுடன் மருதகாசி என்ற நண்பரும் பாட்டு எழுதிக்கொண்டிருந்தார். அந்தப் பட நிலையத்திற்கு ஒத்திகைக் கூடம் என்ற ஒரு தனி இடம் உண்டு.
அங்கே சில கதாசிரியர்களும், பாடல் ஆசிரியர்களும், இசைத் துறையினரும், நடிகர்களும் தங்கியிருந்தனர். நான் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். ஒத்திகைக் கூடத்தில்தான் கதை பற்றிய விவாதங்கள், பாட்டமைத்தல், இசையமைப்பு இவை யாவும் நடைபெறும், மாடர்ன் தியேட்டர்ஸில் திரு எம். சி. சக்ரபாணியும் நிரந்தர நடிகர் போல இருந்தார். அவரும் கா.மு ஷெரீபும் ஒரு நாள் அங்கே எனக்கு ஒரு நண்பரை அறிமுகப்படுத்தினார்கள். வளர்ந்த உருவம்; நெற்றி முழுவதும் திருநீற்றுப் பூச்சு; 'இவரும் இங்கே பாட்டெழுதுகிறார்' என்று என்னிடத்தில் கூறி- னார்கள்.
அவரைப் பார்த்தவுடனேயே அவருடைய முகத்தில், 'இவர் எதைப்பற்றியுமே கவலைப்படாதவர்' என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை நான் புரிந்து கொண்டேன். மற்றவர்களை அவர் தாக்குவதும், மற்றவர்களால் அவர் தாக்கப்படுவதும் அவரைப் பொறுத்தவரையில் ஒரு வேடிக்கையான காரியமாகக் கருதுகிறார் என்பதைச் சில வினாடிகளில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த நண்பர் தான் இன்று மிகுந்த கவித்திறன் பெற்றவராக விளங்கும் கவியரசு கண்ணதாசன்.
அந்த ஒத்திகைக் கூடத்தில் அவரைக் கிண்டல் செய்யாதவர்களே இல்லை. அவற்றில் சில காரசாரமாய் இருக்கும். கர்ண கடூரமாகவும் இருக்கும். சிலர் மீது அவர் எரிந்து விழுவார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அப்படி எரிந்து விழுந்தவர்களின் தோளிலே கை போட்டுக் கொண்டு உலவிக் கொண்டிருப்பார். அந்த நண்பர் சில வாரங்களில் முழுக்க முழுக்க என்னுடைய கட்சிக்காரராக ஆகி விட்டார். சேலத்தில் முதல் மாதம் அவரைச் சந்தித்துவிட்டு வெளியூர் சென்றவர்கள் அடுத்த மாதம் வந்து பார்க்கும்போது அவர் தன்னுடைய கொள்கைகளை எல்லாம் மாற்றிக் கொண்டு முன்னேற்றக் கழகத்தை நோக்கி அடி எடுத்து வைத்து விட்டதை உணர்ந்து வியப்படைந்தார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கழகத்தின் கொள்கைகள் அவரைக் கவர்ந்ததைவிட, எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு என்னும் உறவு அவரை அதிகமாகக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு வேளை அந்தக் காரணத்தினால்தானோ என்னவோ அவரிடத்தில் கொள்கைப் பிடிப்புக் குறைவாகப் போய்விட்டது. சேலத்திலிருந்து பொள்ளாச்சிக் கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். கோவைவழியாக என்னுடைய பயணம் ஏற்பாடாகி இருந்தது. நண்பர் கண்ணதாசனும் கோவையில் இருந்து என்னுடன் கலந்து கொண்டு பொள்ளாச்சி வருவதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அவ்வாறே கோவையில் என்னைச் சந்தித்தார்: நெற்றி நிறையத் திருநீறு பூசிக் கொண்டிருந்த அவர் சில நாட்களாக அதனைப் பூசுவதை விட்டிருந்தார். ஆனால் நான் கோவையில் பார்க்கும்போது நெற்றியின் நடுவே ஒரு குங்குமப் பொட்டு இருந்தது. அதன் கீழே ஒரு விரல் விபூதியும் பூசப்பட்டு இருந்தது. "என்ன?"
என்று வேடிக்கையாகக் கேட்டேன். ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார். இருவரும் பேருந்து வண்டியில் ஏறிப் பொள்ளாச்சிக்குப் பயணமானோம். பயணத்தின் பொழுது, பேருந்து வண்டியிலேயே மீண்டும் என் பகுத்தறிவுப் பிரசாரம் தொடங்கிற்று அவரும் என்னுடன் வாதம் செய்துகொண்டே வந்தார். பொள்ளாச்சி- யில் போய் இறங்கினோம். என்னுடன் வந்து கொண்டிருந்த அவர் கொஞ்சம் பின் தங்கினார். திரும்பிப் பார்த்தேன். என்னருகே வந்து கொண்டிருந்தார்.
நெற்றியைக் கவனித்தேன். விபூதியும் இல்லை; குங்குமமும் இல்லை. வெறும் நெற்றிதான் இருந்தது! (இப்போது மீண்டும் அணிந்து கொள்வதைச் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன்.) பொள்ளாச்சிக் கூட்டத்தில் தானும் பேச வேண்டும் என்றார். கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பேசலாம் என்று நான் தடுத்துப்பார்த்தேன். அவரோ பேசத் துடித்தார். சரியென்று ஒப்புக்கொண்டேன். 'அன்பினும் ஆர்வம் உடைமை' என்பதுபோல அன்பிலிருந்து பிறந்த அவரது ஆர்வத்தை அதிக நேரம் என்னால் தடுக்க முடியவில்லை.
அவருடைய பேச்சின் முதல் வாசகமே, "வட்டிக்கு வட்டி வாங்கும் செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்" என்பது ஆகும். ஓர் ஐந்து நிமிட நேரம் பேசி முடித்தார். கழக முத்திரை அழுத்தமாகக் குத்தப்பட்டு விட்டதாக அவர் உணர்ந்தார். நானும் மகிழ்ந்தேன். பிறகு இருவரும் சேலத்தில் இருந்தவாறு கழகக் கூட்டங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டோம். இதற்கிடையிலேதான் - அவர் கழகத்தில் முழுமையாகச் சேருவதற்கு முன்புதான் - சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியது.
நானும் அவரும் சென்னையில் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் அன்று சென்னைக்குச் சென்றிருந்தோம். அதற்கு மறுநாள் திருவாரூரிலிருந்து என் தாயும், மனைவியும் சேலத்திற்குக் குடிவருவதற்கு ஏற்பாடுகள் ஆகியிருந்தன. சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மறுநாளே சேலம் திரும்பி, அம்மாவையும் மளைவியையும் சேலத்தில் சந்திக்க வேண்டும். வாடகைக்குப் பார்த்து இருந்த வீட்டில் குடி போக வேண்டும் என்ற திட்டத்துடன் என் சென்னைப் பயணத்தை நான் ஏற்பாடு செய்திருந்தேன்.
