நெஞ்சுக்கு நீதி
எழுத்துரிமை, பேச்சுரிமை · 66 / 391
எழுத்துரிமை, பேச்சுரிமை அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'ஆரிய மாயை' என்ற நூலுக்கு 1950-ல் அரசு தடை விதித்தது. 1943-ல் எழுதப்பட்டுப் பல பதிப்புகள் வெளிவந்து, பல்லோராலும் படிக்கப்பட்ட அந்த நூலை, ஏழு ஆண்டு காலம் கழித்து அரசு தடை செய்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த நூலை எழுதிய அண்ணா அவர்களையும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிடப் பண்ணை உரிமையாளரையும் அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. அண்ணா அவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதே நாளில் "பெரியார் பொன் மொழிகள்" என்ற ஒரு நூலை வெளியிட்டதற்காகப் பெரியார் அவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அண்ணாவும், பெரியாரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரை விட்டுப் பிரிந்து, புதுக் கழகம் கண்ட பிறகு, அவர்கள் இருவரும் ஒரே சிறைச் சாலையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதைத் தமிழகம் எண்ணி எண்ணி வியப்படைந்தது. அந்தச் சிறை அனுபவத்தைப் பற்றி அண்ணா அவர்கள் எழுதியதை இப்போது படித்தாலும் நம் கண்களில் நீர் துளிர்க்கத்தான் செய்கிறது.
'ஆரியமாயை' என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச்சிறை. 'பொன் மொழிகள்' தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை. "திருச்சிக் கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டும் என்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள். தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்து விட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலேயே நிற்கச் செய்து வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம்.
போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்! எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.
"பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்: பலர் வருவார்கள். இங்கு சிறிது நேரம், அங்கு சிறிது நேரம்: இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள். நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமா என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும் பொழுது நான் வெளியே மரத்தடியில்; அவர் வெளியே வர முயல்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன். இப்படிப் பத்து நாட்கள். "நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள்.
முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஒரு ருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு, வேலைகள் செய்து வந்த 'கைதி' என் அறைக்குள் நுழைந்து, 'ஐயா தரச் சொன்னார்' என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகளைக் கொடுத்தார். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது. "மறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையையும் கேள். தம்பி! எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சிறையின் உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, வெளியே தெரிந்து விட்டிருக்கிறது.
எனவே, எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கி விட்டிருந்தனர். நமது தி.மு.கழகத்தார் வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு நேரத்தை மறந்து விட்டனர். எனவே சிறைக் கதவு திறக்கப்பட்டு, எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார் தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடிவந்தார்.
"இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்" என்று போட்டோ எடுத்து விட்டார்; ஆனால் அது வெளியிடப்படவில்லை. வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன். "கவனித்தாயா தம்பி!"
எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை! "திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அமைப்புக்குப் பெரியதோர் ஆபத்து இந்தப் பத்து நாட்கள்" என்று நண்பர் ஒருவர் கூறினார் உண்மைதான். நான் அவ்வளவு சுலபத்தில் மனதைக் கரைய விட்டு விடுபவன்தான். ஆனால், பத்து நாட்கள் அவருடன் பேசி, மீண்டும் பழைய நட்பைப் பெறுவதற்கான வாய்ப்பு என்னைத் தட்டித் தட்டி அழைத்த போதும் நான் அந்த எண்ணத்திற்கு இடம் கொடுக்காதிருந்தேன். காரணம், கொடியவன் என்பதல்ல; நான் அமைப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டதால், நான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அந்த அமைப்பை உருக் குலைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்ற நேர்மையான எண்ணத்தினால்தான்."
இப்படிக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு விடுதலை பெற்ற அண்ணா அவர்களை, சென்னை மாநகரம் கோலாகலமாக வரவேற்றது. 1950 - அக்டோபர் 23-ல் சென்னையில் கூடிய கழகத் தலைமைச் செயற்குழு எழுத்துரிமை, பேச்சுரிமையை நிலை நாட்டும்பொருட்டு அரசினரின் அடக்குமுறையை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்தது. அந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ராஜாஜிக்கு தி.
மு. கழகம் கருப்புக்கொடி காட்டியது. அப்போது ராஜாஜி அவர்கள் வந்த பாதையில் கருப்புக் கொடி காட்டச் சென்ற பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் போன்றவர்கள் தடியடிக்கு உள்ளாயினர். குன்றத்தூரில் கழகக் கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி திரு என். வி. நடராசன் பேசினார். போலீசார் அவரைக் கைது செய்தனர். கூட்டத்தில் பயங்கரமாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. மாங்காடு தோழர் குட்டி என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து விழுந்தார்.
குன்றத்தூர் வெறியாட்டத்தை நாடு முழுவதும் கண்டித்தது. திருச்சி மாவட்டம் நாரணமங்கலத்திலும், சென்னையிலும் பேச்சுரிமையை நிலை நாட்டத் தடையுத்தரவு மீறப் பட்டுக் கழகத் தோழர்கள் பலர் கைதாயினர். இப்படிப் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 17 - ம் நாளில் சென்னையிலே தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் ஓராண்டு காலத்திற்குள், தான் ஈடுபட்ட அறப் போராட்டங்கள் வாயிலாகத் தமிழக மக்களின் உள்ளத்தில் நிலையான இடத்தைப் பிடித்துக்கொள்ளத் தலைப்பட்டது.
சென்னையில் கழகம் தொடங்கிய முதல் நாள் அன்று நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது சேலத்தில் திரைபடத் தொழிலில் ஈடுபட்டு இருந்த நான் சென்னைக்குக் கழகத் தொடக்கத்திற்காக வந்ததும் மீண்டும் சேலம் திரும்பிச் சென்றதும், சுவை மிக்க சம்பவங்களாகும். ஆமாம்; நான் சேலத்துக்கு எப்படி வந்து சேர்ந்தேன்?
