உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணா அசைந்து கொடுக்கவில்லை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணா அசைந்து கொடுக்கவில்லை · 65 / 391

அண்ணா அசைந்து கொடுக்கவில்லை தி ருச்சியில் கூடிய திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திருமண ஏற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளும் சீர்மானம் ஒன்று நிறைவேறியது. தீர்மானம் நிறைவேறும் அதே சமயத்தில் பெரியார் - மணியம்மை திருமணம் நடந்துவிட்ட தந்தியும் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் கொதிப்படைந்திருந்த நேரத்தில், அண்ணா அவர்கள் எச்சரிக்கையாக ஓர் அறிக்கை விடுத்தார்கள். அதில், 'இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதை அவசரமும் ஆத்திரமுமின்றித் தூண்டி விடுவோர், தூபம் இடுவோர், சிண்டு முடிந்து விடுவோர், கண்டதைக் கிளறிப் பார்ப்போர், சந்தி சிரிக்க வைப்போர் என்போருக்கு இரையாகாமல் யோசித்துத் தீர்மானிக்கவேண்டும்.

இதை விளக்கிப் பொதுக் கூட்டங்கள் போடுவதோ, கண்டன நோட்டீசுகள், மறுப்புக்கள் வெளியிடுவதோ நிலைமையைத் தெளிவுபடுத்தாது. பிரச்சினை தனிப்பட்ட மாற்சரியம், குரோதம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு நடத்தும் விளையாட்டல்ல. பல ஆண்டு காலமாக இருந்து வரும் பந்தம், பாசம் ஆகியவை. இந்த ஒரு வேண்டுகோளை அவர் மதிக்கக்கூடப் பயன் படவில்லை என்ற நெஞ்சு நோகும் நிலையில் உள்ளவர்கள் இனிக் கொள்கைக்கு முரண்பாடின்றி எப்படிப் பணிபுரிவது, எத்தகைய பணி புரிவது, என்ற சிக்கலில் தள்ளப்பட்டிருக்கும் பிரச்சினையாகும்.

ஆகவேதான் அமைதியாகச் சிந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நானே அவசரமாகக் காரியம் செய்து விட்டேன் என்று சிலரால் எண்ணப்படுகிறேன் என்றால் இந்தப் பிரச்சினையில் திடீர் முடிவுகள் செய்வது எவ்வளவு தீமை தரக்கூடியது என்பதைத் தோழர்கள் சிந்திக்கவேண்டும்' என்று அண்ணா அவர்கள் அவருக்கே உரிய பெருந்தன்மையோடு கழகத் தோழர்களையெல்லாம் வேண்டிக் கொண்டார்.

பெரியாரின் திருமணத்தையொட்டிப் பெரியாரையே திராவிடர் கழகத்திலிருந்து விலக்கிவிட வேண்டுமென்று எழுந்த கடுமையான குரலை அண்ணா அவசரப்பட்டு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பெரியார் எடுத்த முடிவினால் மனம் புண்ணடைந்த கழகத் தோழர்கள் திராவிடர் கழகப் பணியிலிருந்து விலகி நிற்பதாக ஒருவருக்குப் பின் ஒருவராக அறிவிக்கத் தொடங்கினர். அப்படிப் பட்டவர்களுடைய பட்டியலை அறிஞர் அண்ணா தனது 'திராவிட நாடு' இதழில் வெளியிட்டு, அந்தப் பட்டியலுக்கான தலைப்பைக் 'கண்ணீர்த் துளிகள்' என்று குறிப்பிட்டார்.

அதனையே பெரியார் அவர்கள் கேலியாக எடுத்துக்கொண்டு அவரது முடிவை எதிர்த்தவர்களையெல்லாம், 'கண்ணீர்த் துளிகள்' என்று கண்டிக்கத் தொடங்கினார். பெரியாரின் போக்குப் பிடிக்காத அனைவரும் கூடிப் பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து விலக்குவது தான் முறையாகும் என்று வலியுறுத்தினர். 1949-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ம் நாள் சென்னை, பவளக்காரத் தெருவில், குடந்தைப் பெரியவர் திரு.கே.கே. நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களின் கூட்டம் நடைபெறும் என்றும், எதிர்கால வேலைத் திட்டம் பற்றி அதில் முடிவு செய்யப்படும் என்றும் அண்ணா ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு, தோழர் டி.எம்.பார்த்தசாரதி அவர்களின் மேற்பார்வையில் 'மாலை மணி' என்ற நாளேடு தொடங்கப்பட்டது. பவளக்காரத் தெரு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரை விலக்கி வைத்துக் கழகத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினார். ஆனால், அண்ணா அவர்கள் கூட்டத்தில் தனக்குரிய அறிவாற்றலோடு ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், கழகத்தைக் கைப்பற்றுவதும், புதிய தலைமையின் கீழ் நமது பணியை நடத்துவதும் சாத்தியமான காரியமேயாகும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். போதிய வலிவும், தேவையான வசதியும், மறுக்க முடியாத நியாயமும் நம்மிடமிருக்கின்றன. எனினும் நாம் இவ்வழி செல்வது நாட்டிலே நாசம் நர்த்தனம் செய்வதும், பாசத்திற்கும் பழமைக்கும் நம்மையறியாமல் இடம் தேடிக் கொடுத்திடவும், நாம் ஆளாகிவிடுவோமா என்று அஞ்சுகிறேன். கனி பறிக்க மரம் ஏறும்போது, கருநாகம் காலைச் சுற்றிக் கொள்வதைப்போலப் பெரியாரிடமிருந்து கழகத்தை மீட்கும் காரியத்தில் நாம் ஈடுபடும் சமயமாகப் பார்த்து அதைச் சாதகமாக ஆக்கிக்கொண்டு பாசிசமும், பழைமையும் மக்களைப் பிடித்தாட்ட முற்படக்கூடும்.

கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு யாரும், எவரும் கட்டுப்பட வேண்டிய முறைகள் உண்டு. நாம் அறிந்துள்ள பெரியார் இந்த முறைகளுக்குக் கட்டுப்படவோ இதனை ஏற்கவோ தயாராயில்லை. நாம் ஒரு புறம் திராவிடர் கழகம் என்ற 'லேபி'ளுடனும் அவர் மற்றொரு புறம் அதே 'லேபி'ளுடனும் உலாவுவதும்- இருசாராருக்கும் இடையில் மோதவிட விரும்பும் சந்தர்ப்பவாதிகள் ஆட்டம் ஆடுவதற்கும் - இந்தச் சூழ்நிலையை சாதமாக ஆக்கிக்கொண்டு நாட்டை நாசம் ஆக்குவதற்குமான காரியம்தான் நடைபெறும்.

கழகத்தின் 'லேபிள்' அல்ல முக்கியம். கொள்கைகள்-வேலைத் திட்டம் இவைகளே முக்கியம். ஒரு தனி நபர்கூட 'லேபிள்' தன்னிடம் இருப்பதாக எப்போதும் கூறிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது; இலட்சியமும் உருப்பெறாது. அந்தக் கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வலிவும் நம்மிடம் இருக்கின்றன. ஏராளமான அளவில் வளரக்கூடிய விதத்தில் கொள்கைகளைப் பாப்பி, இலட்சியத்தை வெற்றிகரமாக ஆக்க நாம் தனித்திருந்து அவருடைய தலைமையை மட்டுமல்ல, 'லேபி'ளையே நீக்கிவிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் பணியாற்றி வருவதுதான் நல்ல வழி என்பது என் கருத்து.

நமக்குள்ள ஆதரவின் அளவையோ. தரத்தையோ குறைத்து மதிப்பிட்டு நான் அந்த முடிவிற்கு வருகிறேன் என்று எண்ண வேண்டாம். அந்த ஆதரவு பெரியாரின் தலைமையோ, அவருடன் உள்ள 'லேபி'ளோ இல்லாமலேயே நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களைப் பரப்பி சமுதாயத்தைச் சீராக்குவது என்ற ஆசையாலும், நம்பிக்கையாலும் இந்த முடிவினை நான் உங்களுடைய கருத்துக்கு வைக்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைக் கூட்டத்தினர் ஏற்றுக்கொண்டார்கள். பொதுக் குழு என்றும், அமைப்புக் குழு என்றும், சட்டதிட்டக் குழு என்றும், நிதிக் குழு என்றும் பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன. அதை அறிவிக்க அன்று மாலை சென்னை, ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரும் மழைக்கிடையே அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில் விரிவுரையாற்றினார்கள்.

முன்னேற்றக் கழகம் தோன்றவேண்டிய அவசியங்களை எடுத்துரைத்த அண்ணா, தன்னுடைய பேச்சின் இறுதியில், "முக்கியமாக, முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்காரின் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப் படையாக அமையவேண்டும். அதில் பங்கு கொள்ள அனைவரும் வாரீர்! பெரியார் அவர்களே! நீங்கள் அளித்த பயிற்சியும் பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்துச் சிறைச்சாலை செல்லத்தான் இந்த வேண்டுகோள் விடுக்கிறேன், துவக்க நாளாகிய இன்றே!"

என்று குறிப்பிட்டார் முன்னேற்றக் கழகம் துவக்கி வைக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் தமிழ்நாடு எங்கணும் 700-க்கு மேற்பட்ட கிளைக் கழகங்கள் உருவாயின. 50,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கழகத்தில் சேர்ந்தார்கள். 1950-ம் ஆண்டு, மே திங்கள் 2-ம் நாள் காங்கிரஸ் அமைச்சர் மாதவ மேனன் 1 முதல் 6-ம் படிவம் வரையில் இந்தி கட்டாயப் பாடமென்று ஓர் உத்தரவினை வெளியிட்டார். தமிழகம் அதனை எதிர்த்து ஒரு மகத்தான புரட்சிக்குத் தயாராயிற்று.

தி. மு. கழகம் அறப்போரில் ஈடுபட்டது. 1918 முதல் பல கட்டங்களில் தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு முற்பட்ட இந்தி, இந்தக் கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரெதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் திணறியது. சிறைச்சாலைகள் திறக்கப்பட்டன. தடியடிகளைத் தாங்கிக் கொண்டனர் தோழர்கள் கட்டாய இந்தியை எதிர்த்து, அண்ணா பேரணி ஒன்றினைத் திரட்டத் தொடங்கினார். எதிர்ப்பின் சக்தியைத் தாங்க முடியாமல் இரண்டே மாதத்தில் கல்வி அமைச்சர் மாதவமேனன், 'இந்தி கட்டாயப் பாடமில்லை, விருப்பப் பாடம்தான்' என்று மறு உத்தரவு பிறப்பித்தார்.

இது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றியாகும். கட்டாய இந்தி ஒழிந்ததைப் பெரும் களிப்பு நாளாக முன்னேற்றக் கழகம் கொண்டாடியது. இதற்கிடையே அண்ணா அவர்களின் 'திராவிட நாடு' பத்திரிகை மீது ஜாமீன் வழக்கு நடைபெற்றது. மூவாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டுமென்று சர்க்கார் அறிவித்ததை யொட்டி, அந்த வழக்குத் தொடரப் பெற்றது. ஜாமீன் தொகையை அண்ணா அவர்கள் முதலில் கட்டிவிட்டார். அதற்கான பணத்தை நாடெங்கணும் உள்ள கழகத் தோழர்கள் நிதியாக வசூலித்து அனுப்பினார்கள்.

வழக்கின் முடிவு அண்ணாவிற்குச் சாதகமாக அமைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜமன்னார், சந்திரா ரெட்டி இருவரும் அரசாங்கத்தின் ஆணையைத் தள்ளுபடி செய்ததோடு, அண்ணா ஏற்கெனவே கட்டியிருந்த மூவாயிரம் ரூபாய் ஜாமீன் தொகையை அவருக்கே திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்ப்பளித்தனர். திருப்பித் தரப்பட்ட அந்தத் தொகையை, முதலில் அதை நன்கொடையாக அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பி விட்டார் அண்ணா.

அதைத் தொடர்ந்து அண்ணாவும் பெரியாரும் ஒரே இடத்தில் தங்கியிருக்க நேரும் என்று தமிழகம் எதிர்பார்க்கவில்லை!