உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பெரியார் - மணியம்மை திருமணம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பெரியார் - மணியம்மை திருமணம் · 64 / 391

பெரியார் - மணியம்மை திருமணம் ஈரோடு மாநாட்டில் பிரச்சார நாடகங்கள் நடைபெற்றன. அவைகளில் ஒன்று எம்.ஆர். ராதாவின் நாடகம். மற்றொன்று நான் எழுதி நடிக்கும் 'தூக்குமேடை' நாடகம். அந்த நாடகத்தில் நடிக்கத் திருவாரூரிலிருந்து இசைக் குழுவினர் உட்பட் நாங்கள் இருபது பேர் ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. மாநாட்டின் பொறுப்புகளைப் பெரியார் அவர்களே நேரடியாகக் கவனித்துக் கொண்டிருந்ததால் எங்கள் இருபது பேரின் போக்குவரத்துச் செலவுக்காக எண்பது ரூபாய் அனுப்பி வைத்திருந்தார்.

அந்தப் பணம் போதாமையால் நாங்களே கொஞ்சம் பணம் போட்டுக்கொண்டு ஈரோடு போய்ச் சேர்ந்தோம். மாநாடு முடிந்த பிறகு நானும் நாடகத்தின் நண்பர்களும் ஊருக்குத் திரும்ப வேண்டும். வழிச் செலவிற்குப் பணம் வேண்டும். பெரியாரை அணுகினால்தான் பணம் கிடைக்கும். மாநாடு முடிந்ததும் அவனவன் பணத்துக்கு வருவான் என்று பெரியார் அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தார். பிறகு ஒருவாறு பெரியாரைச் சந்தித்து விஷயத்தை விளக்கினேன்.

ஒரு நாடகத்திற்கு அவ்வளவு செலவா என்று மேலும் ஐம்பது ரூபாய் கொடுத்தார். மீண்டும் நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் கைப்பணம் போட்டுக்கொண்டு திருவாரூரைச் சேர்ந்தோம். பெரியார் அவர்களின் சிக்கனத்திற்கு இது மற்றும் ஓர் எடுத்துக் காட்டு. ஈரோடு மாநாடு முடிந்ததையொட்டி அழகிரியை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டுமென்ற ஆசையுடன் அண்ணா அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். சென்னைக்கு அவரை அழைத்து வந்து மருத்துவர்களின் யோசனையைக் கேட்டார்கள்.

தாம்பரம் எலும்புருக்கி நோய் மருத்துவ மனையில் அழகிரி சேர்க்கப்பட்டார். தன்னை யார் கூட்டங்களுக்கு அழைத்தாலும், அழகிரியின் சிகிச்சைக்காக நூறு ரூபாய்க்குக் குறையாமல் அழகிரி குடும்பத்திற்கு நிதி அனுப்பி விட்டு, அந்த ரசீதைத் தனக்கு அனுப்பி வைத்தால்தான் கூட்டங்களுக்கு ஒப்புக்கொள்வதாக அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கு ஏற்ப, பல தோழர்கள் அழகிரியின் குடும்ப நிதிக்குத் தகுந்த தொகை அனுப்பினர்; ஆனாலும் தாம்பரம் மருத்துவ மனை அழகிரியைக் கைவிட்டது.

ஊருக்குத் திரும்பச் செல்ல வேண்டுமென்பதைத் தவிர வேறுவழியில்லை. அண்ணா அவர்கள் அழகிரியை வழியனுப்பி வைக்கப் புகை வண்டி நிலையம் வந்தார். படுத்த படுக்கையாக இருந்த அழகிரி இரயிலில் ஏற்றப்பட்டார். அண்ணாவைப் பார்த்ததும் அழகிரியின் தண்கள் குளமாயின. பக்கத்திலே நின்ற நண்பர் மதியழகனை அழகிரி பார்த்து, "அண்ணாவிடம் சொல்; நண்பர்கள் யார், விரோதிகள் யார் என்பதை அழகிரி புரிந்துகொண்டான் என்பதை அண்ணாவிடம் சொல்" என்று கதறினார்.

காரணம், அவர் நோயில் விழுவதற்கு முன்பு வரையில் அண்ணாவை நண்பர்களிடமும், மேடையிலும் தாக்கிப் பேசுவது அவரது வழக்கம். எப்படியோ அண்ணா அவர்களிடம் அழகிரி அப்படியொரு பகை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அழகிரி தன்னைப்பற்றி எதிர்ப்பாகவும், ஏளனமாகவும் பேசுகிறார் என்று அண்ணா அவர்கள் கேள்விப்பட்டபோதெல்லாம் புன்னகை புரிவாரே தவிர, ஆத்திரப்பட்டதோ, பதில் அளித்ததோ இல்லை. கட்சிக்குள் இருந்து கொண்டே தன்னைப்பற்றிக் கடுமையான விமரிசனம் செய்தவர் என்பதையும் எண்ணிப் பாராமல் அவர் நோயில் விழுந்தார் என்றதும் ஓடோடி வந்து உதவி செய்த அண்ணாவின் பெருந்தன்மையை எண்ணித்தான் அழகிரி அவ்வாறு கதறியழுதார்.

அண்ணா அவர்கள் தன்னிடம் மிச்சமிருந்த செங்கற்பட்டு மாவட்டச் சுயமரியாதை மாநாட்டு நிதி ரூபாய் ஆயிரத்தை அழகிரி கையில் கொடுத்தார். படுத்தவாறே அதனை அழகிரி வாங்கிக் கொண்டார். புகை வண்டி புறப்பட்டது. அண்ணா கண்களைத் துடைத்துக்கொண்டு இரயில் நிலையத்திலிருந்து திரும்பினார். தஞ்சை வந்து சேர்ந்த அழகிரி பல நாட்கள் படுக்கையாகவே இருந்து 1949-ம் ஆண்டு மார்ச் திங்கள் 28-ம் நாள் இயற்கை எய்தினார். அவர் இயற்கை.

எய்திய செய்தியைத் திருவாரூரில் இருந்த நான் கேட்டுத் திடுக்கிட்டேன். அப்பொழுது எனக்குக் கடுமையான காய்ச்சல். செய்தியைக் கேள்விப்பட்டதும் காய்ச்சல் எங்கேயோ பறந்து போய் விட்டது. தஞ்சை நோக்கி ஓடினேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ மாவீரன் அழகிரி இறுதிப் பயணத்தை நடத்தினார். அழகிரி புதைக்கப்பட்ட இடத்தில்-தஞ்சையில் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அவர் மறைந்த சில நாட்களுக்கெல்லாம் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அதில் நானும், பேராசிரியர் அன்பழகன் அவர்களும், தோழர் ஜனார்த்தனம் அவர்களும் கலந்து கொண்டோம். அந்த மாநாட்டில் அழகிரியின் படத்தை நான் திறந்து வைத்தேன். அழகிரியைப் பற்றி நான் பேசும போது அவரது கடைசிக் காலத்தில் சரிவரக் கவனிக்காமல் கைவிடப்பட்டு விட்டார் என்பதைச் சற்று வருத்தத்துடன் நான் குறிப்பிட்டேன். அழகிரியின்மீது நான் கொண்டிருந்த வற்றாத பாசத்தால் என்னுன்ளத்தில் ஏற்பட்ட வேதனைகளை ஒளிவு மறைவின்றி அந்த மாநாட்டில் நான் கொட்டி விட்டேன்.

பேராசிரியர் அன்பழகன் அவர்களும் அந்த மாநாட்டில் சற்றுக் கடுமையான கருத்துக்களை எடுத்துச் சொன்னார். அப்பொழுது மாவூர் சர்மா என்பவரது தோட்டத்தில் மாணவர்கள் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த பெரியார் அவர்கள், தஞ்சை மாநாட்டில் நாங்கள் பேசியதைக் கேள்விப்பட்டு, அன்பழகனையும், என்னையும் யாரும் இனிமேல் கூட்டத்திற்கு அழைக்கக்கூடாது என ஓர் அறிக்கை தயாரித்து, அண்ணா தூண்டிவிட்டுத்தான் அன்பழகனும், கருணாநிதியும் தஞ்சை மாநாட்டில் தன்னை எதிர்த்துப் பேசினார்கள் என்று விளக்கமும் தந்து, அதனை 'விடுதலை'யில் உடனடியாகப் பிரசுரிக்க உத்தரவிட்டு, அந்த அறிக்கையை திரு என்.வி.

நடராசன் அவர்களிடம் கொடுத்து அவரைச் சென்னைக்கு அனுப்பினார். திரு என்.வி. நடராசன் எவ்வளவோ வாதாடியும் பெரியார் ஏற்கவில்லை. பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். இதற்கிடையில் அண்ணா அவர்களின் பெருமுயற்சியோடு நாங்களெல்லாம் அயராது பாடுபட்டு, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை போன்றவர்களின் உறுதுணையோடு கலைவாணர் என்.எஸ்.

கிருஷ்ணன் அவர்களைக் கொண்டு அழகிரியின் குடும்ப நிதிக்காகத் தஞ்சையில் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கிடைத்த தொகையுடன் கலைவாணர் அவர்கள் கொடுத்த ரூபாய் இரண்டாயிரத்தையும் சேர்த்து மொத்தமாக ஆறாயிரம் ரூபாய் நிதி தரப்பட்டது. அப்போது ஆறாயிரம் ரூபாய் என்பது பெருந்தொகை! இதற்கிடையில் அதே ஆண்டு மே மாதம் 14-ம் நாள் அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள் திருவண்ணா மலை சென்றார்.

அங்கு பெரியாரும் ராஜாஜியும் தனியாக நீண்ட நேரம் பேசினார்கள். அந்தப் பேச்சு தமிழ் நாட்டில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. காரணம், ராஜாஜி ஒரு முனை; பெரியார் ஒரு முனை என்ற அளவிற்குப் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுகிறார்கள் என்பதும், அதுவும் பெரியார் அவர்கள் திருவண்ணாமலைக்கே சென்று நீண்ட நேரம் உரையாடுகிறார் என்பதும் பரபரப்பிற்குரியனவாகும்.

அந்தப் பேச்சின் விவரத்தைக் கட்சித் தோழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபற்றிய ஒரு சிறு குறிப்புக்கூடப் பெரியார் அவர்களால் வெளியிடப்படவில்லை. இந்தச் சமயம் கோவையில் முத்தமிழ் மாநாடு ஒன்று நடை பெற்றது. அந்த மாநாட்டில் விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு பெரும் பங்கேற்றார். அதில் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும். கலந்து கொண்டார்கள். என்றாலும், ஒருவரோடொருவர் அதிகம் பேசிக் கொள்ளாத அளவிற்கு மனக்கசப்பு வளர்ந்திருந்த நேரம் அது.

பெரியாருக்கு முன்பு பேசிய அண்ணா அவர்கள், திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் பேசியது என்ன என்பதை அறிய நாடு ஆவலாக இருக்கிறது. அதனை இந்த மாநாட்டில் பெரியார் விளக்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் பெரியார் அவர்கள் அது முற்றிலும் தன் சொந்த விஷயம் என்றும், மாநாட்டில் வெளியிட முடியாதென்றும் கனல் கக்கப் பதில் சொன்னார். தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தனக்கொரு வாரிசு ஏற்படுத்திக்கொள்வது பற்றி ராஜாஜியுடன் பேசியதாகக் குறிப்பிட்டார்.

அடுத்து அவர் வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், "எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்ந்து மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ, பயப்படுவது உறுதியற்ற தன்மையாகும்" என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், 'சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக' என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் இரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருளாகும். அந்த ஏற்பாட்டைத் தடுக்க, குடந்தை கே.கே. நீலமேகம், என்.வி.என்., எஸ். குருசாமி ஆகியோர் பெரியாரைச் சந்திப்பதற்கு ஏற்காட்டில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் பெரியார் மறுத்து விட்டார்.

பின்னர் சென்னையில் மாவட்டப் பிரதிநிதிகளுடைய கூட்டம் கூடி அண்ணாவின் அறிவுரையின் படி காஞ்சி மணிமொழியார், டி.எம். பார்த்தசாரதி, கண்ணபிரான், சி.வி. இராசன் ஆகியோர் கொண்ட ஒரு தூதுக் குழு ஏற்காடு சென்றது அவர்களுடைய பணிவன்பான வேண்டுகோளையும் பெரியார் மறுத்து, திருமணம் நடந்தே தீரும் என்று குறிப்பிட்டார். சுயமரியாதை இயக்கத் தலைவரான பெரியாரின் இந்தப் போக்கு கழகத் தோழர்கள் அனைவரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தோழர்கள் பதைத்தனர். திராவிடர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் திருமண ஏற்பாட்டைக் கண்டித்துப் பெரியாருக்குக் கடிதங்கள் எழுதினர். கழகத்தின் முன்னணி வீரர்கள் அனைவரும் அண்ணாவைச் சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்தனர். அண்ணா செய்வதறியாது திகைத்தார். அனைத்தையும் மீறி 1949-ம் ஆண்டு சூலைத் திங்கள் 9-ம் நாள் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த விஷயம் தெரியாமல் இது குறித்து விவாதிக்க திராவிடர் கழக நிர்வாகக் குழு, சூலை 10-ம் நாள் காலையில் திருச்சியில் கூடியது: 46 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 32 பேர் வருகை தந்தனர்.