நெஞ்சுக்கு நீதி
என் திருமணத்துக்கு நானே தலைமை தாங்கினேன்! · 63 / 391
என் திருமணத்துக்கு நானே தலைமை தாங்கினேன்! என் இரண்டாவது திருமணத்திற்காக எங்கெல்லாமோ பெண் தேடினார்கள். வசதிகள், வாய்ப்புக்கள், சொத்துக்கள், நகை நட்டுக்கள் இவைகளுடன் பெண் பார்த்துப் பார்த்து என் வீட்டார் இறுதியாக இரண்டொரு இடங்களைத் தேர்ந்தெடுத்து என் முடிவினைக் கேட்டார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டுப் பெண் வேண்டியதில்லை என்ற என் கருத்தை அவர்களுக்கு வெளியிட்டுக் காரணத்தையும் கூறினேன்.
என் போன்ற நிலையில் உள்ளவர்கள் இப்போதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காரணங்கள்தாம் அவைகள்! வீட்டுக்கு வருகிறவள், தான் உயர்ந்த இடத்திலிருந்து சாதாரண இடத்திற்கு வந்திருக்கிறோம் என்ற மனக்குறையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. நம் வீட்டுப் பெருமையை வைத்துத்தான் நம் கணவன் வாழவேண்டும் என்ற அகம்பாவம் அவளையுமறியாமல் அவள் உள்ளத்தில் எழுந்துவிடக் கூடாது. தன்னை மணந்து கொண்டானா அல்லது தன் வீட்டுப் பணத்தை மணந்து கொண்டானா என்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.
பணம் படைத்த பெருமையில் கணவனை அலட்சியப்படுத்தினாலும் பரவாயில்லை. மாமியார், நாத்தனார் முதலியவர்களைத் தூசுக்குச் சமானமாக எண்ணி விடக் கூடாது. எந்நேரமும் தன் குடும்பப் பெருமையை நினைத்துக் கொண்டு, புகுந்த வீட்டை என்றைக்கோ போய்ப் பார்த்துவிட்டு வருகிற சுற்றுலா இடம் போல ஆக்கிவிட்டுப் பிறந்த வீட்டிலேயே வாழ்வைக் கழிக்கத் துணிந்து விடக்கூடாது. கணவன், கட்சி வேலையைத் தவிர, எந்த வேலையும் செய்து குடும்பப் பொறுப்பைப் பார்க்காமல் இருக்கிறானே என்ற அலட்சியம் தோன்றி விடக்கூடாது.
தாயில்லாக் குழந்தையொன்றைத் தன் தலையில் பாரமாகக் கட்டிவிட்டார்களே என்ற வேதனையும் வெறுப்பும் உருவாகி விடக்கூடாது. இவ்வளவையும் நான் எண்ணிப் பார்த்து நடுத்தரமான குடும்பத்தில் எனக்குப் பெண் பார்த்தால் போதும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டேன். தஞ்சை மாவட்டத்திலே பூந்தோட்டம் என்ற கிராமத்திற்கருகேயுள்ள திருமாகாளம் என்ற சிற்றூரில் கோவிந்தசாமி அவர்களின் மகள் தயாளுவை என் வீட்டார் எனக்கு மணமகளாக நிச்சயித்தனர்.
தயாளுவின் அண்ணன் தட்சிணாமூர்த்தி கழகக் கொள்கைகளில் தீவிரப்பற்றுக் கொண்டவர். கழகப் போராட்டங்களில் சிறை சென்றவர். பெண்ணை நான் நேரில் பார்க்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டேன். புகைப்படம் இருந்தால் வாங்கி வாருங்கள் என்று கூறியிருந்தேன். அந்த வீட்டில் பெண்ணின் புகைப்படம் எதுவுமே எடுக்கவில்லையாம். என் சகோதரிகள் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து, எங்கள் வீட்டில் மாட்டியிருந்த 'காலண்டர்' படங்கள் நாலைந்தைக் காட்டி அவைகளில் ஒவ்வொரு சாயலைக் குறிப்பிட்டு, 'பெண்ணின் உயரம் இந்தப் படம் போல இருக்கும்' 'பெண்ணின் நெற்றி இந்தப் படம் போல இருக்கும்'; 'பெண்ணின் மூக்கு இந்தப் படம் போல இருக்கும்' என்றெல்லாம் விளக்கம் தந்தார்கள்.
திருமணத்திற்கு நாள் குறிப்பிடப்பட்டு விட்டது. 1948-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள்! அப்போதெல்லாம் அந்த நாள்தான் அண்ணா பிறந்த நாள் என்று யாருக்கும் தெரியாது. அன்றுதான் இந்தியை எதிர்த்து நாடெங்கும் உள்ள பள்ளிகளின் முன்னே ஒரு நாள் அடையாள மறியல் நடைபெறவேண்டும் என்று பெரியார் அவர்கள் அறிக்கை விட்டிருந்தார். என் திருமணத்திற்கு நாள் குறித்து அழைப்பிதழ்கள் எல்லாம் அச்சான பிறகுதான் பெரியாரின் அறிக்கை வந்தது.
என் திருமணச் செலவுக்காக நான் எழுதிய 'தூக்குமேடை' நாடகத்தை அண்ணா அவர்கள் தலைமையில் திருச்சியில் நடத்தினேன். நானே நடித்தேன். யாரிடமும் சென்று நாடகத்திற்காக நன்கொடை வசூலிக்கவில்லை. நாடகத்தில் மிச்சப்பட்ட தொகை எண்ணூறு ரூபாய்! அதிகமாகக் கொண்டு வருவேன் என்று எதிர்பார்த்திருந்த வீட்டார் ஏமாற்றமடைந்தனர். அத்துடன் சிறிது கடன் வாங்கிப் போட்டுத் திருமணக் காரியங்களை நடத்தத் தொடங்கினர். முதல் நாள் இரவு பெண் வீட்டார் திருவாரூருக்கு வந்து விட்டனர்.
என் வீட்டு வாயிலிலேயே பந்தலிட்டுத் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செயயப்பட்டன. காலையில் மணப்பந்தலுக்கு மணமகளை அழைத்து வர மேள தாளங்கள் சென்றன. உள்ளூர் உறவினர், நண்பர்கள் பந்தலில் குழுமியிருந்தனர். ஊப்பெருந்தனக்காரர்கள் சிலரும் அன்றையத் திருமணத்திற்கு வந்திருந்தது எனக்கு வியப்பை அளித்தது. நான் பந்தல் முகப்பில் நின்றுகொண்டு வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது உயர்நிலைப் பள்ளியில் அடையாள மறியல் செய்வதற்காக இந்தி எதிர்ப்பு ஊர்வலம் என் வீட்டு வழியாக வந்தது.
உணர்ச்சி மயமான முழக்கங்கள்! என் உள்ளத்தில் ஏதோ ஓர் எழுச்சி! அந்த ஊர்வலத்தோடு சேர்ந்துகொண்டு புறப்பட்டு விட்டேன். "பெரியார் வாழ்க!" "தமிழ் வாழ்க!" "இந்தி வீழ்க!" இந்த ஒலியில், திருமணப் பந்தலில் முழங்கிய இசை ஒலி எடுபடவில்லை. என் வீட்டிலிருந்து நான்கு பர்லாங் தொலைவில் உள்ள உயர் நிலைப் பள்ளிக்கு ஊர்வலம் சென்றது. நானும் அத்துடன் சென்று விட்டேன். மண வீட்டில் 'மாப்பிள்ளை எங்கே?'
என்ற கூச்சல்! தவிப்பு! மணப்பெண் எனக்காக, மணவறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தாள். நல்ல வேளை, முதல் நாளே அப்படிக் காத்திருந்து பழக்கப் பட்டு விட்ட காரணத்தினால், இப்போது நான் எவ்வளவு நேரங்கழித்து - எவ்வளவு நாள் கழித்து - வீட்டுக்கு வந்தாலும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டாள். பெண் வீட்டார் முணுமுணுப்புத் தாங்காமல், என் நண்பர்களும், உறவினர் சிலரும் என்னை ஊரெல்லாம் தேடியலைந்திருக்கிறார்கள்.
கடைசியில், மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அதற்குள் மறியல் முடிந்து நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தோம். அன்று ஒரு வேடிக்கை என்ன வென்றால், அடையாள மறியல் நடந்த பல ஊர்களில் தோழர்கள். கைது செய்யப்பட்டனர். சில ஊர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை; அதில் திருவாரூரும் ஒன்று! கைது செய்திருந்தால், மாப்பிள்ளை 'மாமியார்' வீட்டுக்குப் போயிருப்பார்; மணவறைக்குப் போயிருக்க முடியாது.
உறவினர், நண்பர்கள் உறுமலுடன் மண மேடைக்குப் போய்ச் சேர்ந்தேன். திருமணத்திற்குத் தலைமை வகிப்பது யார் என்ற பிரச்னை எழுந்து விட்டது. இரண்டு சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் கூறப்பட்டு ஒவ்வொரு தரப்பிலும் பத்துப் பேர் வாதாடினார்கள். திடீரென நான் ஒலிபெருக்கியின் முன்னால் பேச ஆரம்பித்தேன்: "பெரியோர்களே! நண்பர்களே! இந்தி எதிர்ப்பு அடையாள மறியலின் காரணமாக இந்த மணவிழாவுக்குத் தலைமை வகிக்க அண்ணா அவர்கள் வர இயல்வில்லை.
இப்போது யார் தலைமை வகிப்பது என்பது பிரச்சினையாகி விட்டது. சங்க இலக்கியங்களில் காதல் தலைவன் - காதல் தலைவி என்றுதான் பார்த்திருக்கிறோம். ஆகவே இந்த மணவிழாவுக்கு நானும் என் மனைவியும்தான் தலைவனும், தலைவியும்! "இப்போது நாங்கள் மாலை மாற்றிக் கொள்கிறோம்" என்று கூறிவிட்டுத் திருமணத்தை முடித்துக்கொண்டேன்.
பிறகு நானே தலைமை உரையாற்றிவிட்டு, விழாவுக்கு வந்திருந்த நண்பர்கள், டி. கே. சீனிவாசன், கவி கா.மு.ஷெரீப் ஆகியோரையும் மற்றவர்களையும் வாழ்த்துக் கூறச் சொன்னேன். இப்படி ஒரு விதமாக என் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும், இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தொடர்ந்து என் கவனம் சென்றது. அந்த ஆண்டு சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் கட்டாய இந்தியை எதிர்த்து ஓர் எழுச்சி மிக்க கூட்டம் நடைபெற்றது.
1940-ம் ஆண்டு அளவில் மறைந்த இந்திக்கு, மீண்டும் தமிழ்நாட்டில் உயிருட்டக் காங்கிரஸ் அரசு முயன்றது. அந்த முயற்சியைக் கிள்ளி எறியத்தான் தமிழ்த் தலைவர்களின் பேரணி அமைந்தது. தமிழ்த் தென்றல் திரு.வி.க., பெரியார். அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மறைமலை அடிகள் ஆகியோர் இந்தியை எதிர்த்துத் தமிழகம் திரண்டெழும் விதத்தில் வீர உரையாற்றினர். 1947-ஆகஸ்டு 15-ம் நாளினைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற பெரியார் கருத்துக்கு எதிர்க் கருத்து வழங்கிய காரணத்தால், அண்ணா அவர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புக்கூட மெல்ல மெல்ல மாறத்தக்க அளவுக்கு இருவரும் இந்தி எதிர்ப்புப் போரில் ஒன்றுபட்டுப் பணியாற்றத் தொடங்கினர்.
இந்தி எதிர்ப்பு வீரர்கள் மீது குடந்தை மாநகரில் அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தெருக்களில் குருதி ஆறு பெருக்கெடுத்தது. மீண்டும் சிறைச்சாலை, சித்திரவதை, இந்தியை எதிர்த்துக் கழகத்தினர் பெறுகிற பரிசாக ஆயிற்று! 1948-அக்டோபர் 23, 24-ஆகிய நாட்களில் இந்தியை எதிர்த்துத் திராவிடர் கழகத் தனி மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் தலைமை வகித்தார்கள். பெரியார், அண்ணா ஒரே மேடையில்.
அண்ணா மாநாட்டுக்குத் தலைவராக! அய்யா, மாநாடு நடத்துபவராக! அப்போதுதான் பெரியார் சொன்னார்: "பெட்டிச் சாவியை அண்ணா கையில் கொடுத்து விட்டேன்" என்று. ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கூடிய அந்த ஈரோடு மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் ஆற்றிய பேருரைகள் மட்டுமின்றி, திரு. வி. க. ஆற்றிய உரையும் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. "நான் பழைய காங்கிரஸ்வாதி. பெரியாரும் காங்கிரசில் இருந்தவர்தான். நாங்கள் இருவரும் அரும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ்தான் இன்று சிலரது சுயநலக் கோட்டையாகக் காட்சி தருகிறது.
காங்கிரசில் உண்மை உழைப்பாளிக்கு இடமில்லை. அது கள்வர் குகைக்குச் சமம். தூயவர் காந்தியார் கண்ட காங்கிரசையோ, நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றிய காங்கிரசையோ நான் அழிக்க முனையவில்லை. பாசிசப் பாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் காங்கிரசையே நான் அழிக்க விரும்புகிறேன்."
இதுபோலக் கர்ச்சனை செய்தார் தமிழ்ப் பெரியார் திரு. வி. கல்யாணசுந்தரனார் அம்மாநாட்டில்! காஞ்சீபுரத்தில் திரு. வி.க. தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியார் ஈரோட்டில் நடத்திய மாநாட்டில் திரு. வி.க. காங்கிரசைப் பற்றி இப்படிக் கருத்தறிவித்தார். ஈரோட்டு மாநாட்டில் நெஞ்சுருக்கும் பேச்சொன்றும் கேட்டேன். அதுதான் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் இறுதிப் பேச்சு: "தோழர்களே!
இந்த மாநாட்டுக்குப் பிறகு சிறை செல்ல நேரிடும். எனவே, அவ்வகையில் இது கடைசி மாநாடு என்றெல்லாம் பத்திரிகையிலே பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் உடல் நிலையைக் கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு என் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளவே இன்று வந்தேன். என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. நோயினால் படுத்த படுக்கையாக இருந்து வந்தேன்.
இனி, என் உடல் தேறும் வரை நான் இயக்கப் பணியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறேன். இது எனக்கு மிகவு வேதனையைத் தருகிறது" என்று கூறினார். ஆம்! அழகிரிக்கு அதுவே கடைசி மாநாடாயிற்று. அதன் பின் நோயில் விழுந்தவர் எழவேயில்லை.
