உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம் · 62 / 391

காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம் பத்மாவை இழந்த நானும் என் குடும்பத்தாரும் அழுது கொண்டிருந்த அந்த 1948-ம் ஆண்டில்தான் உலகமே அழத்தக்க வண்ணம் உத்தமர் காந்தியாரைக் கோட்சேயெனும் கொடியவன் சுட்டுக் கொன்று விட்டான். இந்தியச் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட காந்தியடிகளார். சுதந்திரம் பெற்ற மக்கள் அந்தச் சுதந்திரத்தை எவ்வாறு துய்த்திட வேண்டுமென்று நேரிடையாக அறிவுரை கூறுவதற்கு வாய்ப்பற்றுப் போயிற்று.

வழக்கம்போல் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காந்தியடிகளைக் கொடியவன் குறி பார்த்துச் சுட்டான். எந்த இதயத்தை இந்திய மக்களுக்காக ஒதுக்கி வைத்து இருந்தாரோ அதில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அதே இடத்தில் சாய்ந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் உயிர் அமைதியாகப் பிரிந்தது. மாலையில் வானொலிகள் மூலம் இந்தத் திடுக்கிடும் செய்தியைக் கேட்ட உலக மக்கள் தேம்பித் தேம்பி அழுதனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உண்மையான நட்பில்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்து கொண்டேன்.

ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விடுவதில்லை. முகஸ்துதியாகப் பேசியோ சுயமதிப்பிற்காகப் பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக் கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கு விரோதமானது. இந்து- முஸ்லிம் ஒற்றுமை. விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேருமென்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது' என்பதாகக் காந்தியடிகள் தமது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் குறிப்பிட்டது உண்மையாகவே ஆகிவிட்டது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து அவர் எத்தனையோ போராட்டங்களை நடத்தினார். உண்ணாவிரதங்கள் இருந்து மரணத்தின் முகப்பு வரை சென்று மீண்டு வந்தார். வெள்ளையனின் துப்பாக்கி, பீரங்கி முனைகளுக்கு நேராக நின்று அவர் விடுதலைக் கொடியைக் கம்பீரமாக உயர்த்திய போதும் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடவில்லை. எத்தனையோ துணிவான அறப்போர்களில் அவர் ஈடுபட்ட போதெல்லாம் அவர் உயிரைப் பிரிக்க யாரும் எண்ணியதில்லை.

அன்னிய ஆதிபத்தியத்திலிருந்து நாடு விடுதலை பெற்று அவர் விரும்பிய சுதந்திரம் கிட்டிய பிறகு, அவர் கொல்லப்பட்டார். யாரால்? அன்னியராலா? அல்ல! இந்துக்களிடமும் முஸ்லிம் களிடமும் ஒற்றுமையை உருவாக்கச் சுதந்திரத்திற்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், சில மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்திய மண்ணிலே பிறந்த ஒருவன், அந்தப் புனிதமான. உயிரைப் பறித்துக் கொண்டான். தவறு, தவறு. அந்தப் புனிதமான உயிரை யாரும் பறிக்கமுடியாது.

அது இந்தியாவில் உள்ள பல கோடி உயிர்களோடு ஒன்றிவிட்ட உயிராகும். ஆண்டுதோறும் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவை நாடெங்கும் கொண்டாடுகிறோம். அவர் போதித்த அன்பு வழி, அறவழி, அமைதி வழி அனைத்தையும், பழைய தலைமுறையினர் புதிய தலைமுறையினருக்கு எடுத்து விளக்குகிறார்கள். கட்சிச் சார்பற்று அனைத்து மக்களும் காந்தியடிகளின் விழா சிறப்புற அமைய ஊக்கம் காட்டுகின்றனர். இந்தியா விடுதலை பெற்ற, ஒன்றைத் தவிர, காந்தியடிகளின் கொள்கை, குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டனவா என்றால் இல்லையென்றுதான் பதில் கிடைக்கும்.

காந்தியடிகளின் எல்லாக் கொள்கைகளும் அனைவருக்கும் உடன்பாடு உள்ளவைதானா என்ற கேள்விக்கு வேறுபாடான விடைகளைத்தான் பெற்றிட முடியும். ஆதாரக் கல்வி, கருத்தடை போன்றவைகளில் காந்தியடிகள் சொன்ன கருத்துக்களைப் பற்றி-காந்தியடிகள் இப்போது உயிரோடிருந்தால்-ஒரு வேளை அவைகளை அவரே கூட மறுத்து இருக்கக் கூடும். தீண்டாமை ஒழிப்பு, பெரிய வட்டாரங்களில் பேசப்படுகிற மேனாமினுக்கிப் பேச்சாக இருக்கிறதே தவிர, அதனைச் செயல்படுத்தத் தீவிர எண்ணங்கள் உருவாகவில்லை.

மனிதன் மலமெடுப்பதா என்று மனமுருகக் கேட்டார் மகாத்மா காந்தி. இன்றும் அந்த நிலையில்மாற்றமில்லை. அந்தக் கொடுமை தொடர்கிறது. காங்கிரசைப் பற்றிய தம் முதல் அனுபவம் இதுதான் என்று கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு பற்றிக் காந்தியடிகளே கூறுவது கவனிக்க தக்கது! 'காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளேயே தீண்டாமை இருந்து வருகிறது என்றால், இவர்கள் யாருக்குப் பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ அந்த மக்களிடம் தீண்டாமை இன்னும் எவ்வளவு மோசமாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

என்பதாக அவர் மனம் நொந்து குறிப்பிடுகிறார் தமது வாழ்க்கை வரலாற்றில். காந்தியடிகள் பட்ட வேதனை இன்று மெள்ள மெள்ள மறைந்து வருகிறதென்றாலும் அறவே மறைந்திட வழி காணப்படவில்லை சனாதனக் கருத்துக் கொண்டவர்கள், சாதி வெறிபிடித்தவர்கள் இன்று எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கிறார்கள். அந்தப் பழங்கருத்துக்கள் சாடப்பட வேண்டுமானால் காந்தியடிகளின் போதனைகளை ஒரு மணி நேரம் விளக்கவுரையாற்றிக் கைதட்டல்களைப் பெறுவதால் மட்டும் வெற்றி காணமுடியாது.

பேசுபவர்கள் செயல்படுபவர்களாக இருக்கவேண்டும். காந்தியடிகள் செயலுக்கும் பேச்சுக்கும் நல்ல தொடர்பு வைத்திருந்தார். அதனை அவர் புகழ் பாடுபவர்கள் பின்பற்றிட வேண்டும். அவரது விழாக் கொண்டாடும் இந்த நேரத்திலாவது வெறும் நிகழ்ச்சிகள், வண்ண வண்ண அலங்காரங்கள், வாண வேடிக்கைகள், கண்காட்சிகள், வேள்விகள், பஜனைகள், பிரார்த்தனைகள் என்ற அளவில் மட்டும் அமையாமல் நாட்டிற்குத் தேவையான அவரது பொதுவான தத்துவங்களைச் செயல்படுத்துகிற சூழ்நிலையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியடிகளின் வாழ்க்கைச் சரித்திரம் - அதன் ஒவ்வோர் ஏட்டிலும் உள்ள அவரது தியாகப் பொள்வரிகள் - இவைகளை உள்ளடக்கி ஒரு மகத்தான கண்காட்சியைப் புகை வண்டியில் அமைத்து அதனை ராமேசுவரம் தீவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகிற முயற்சியினை மேற்கொண்டிருந்தார்கள். அதனைத் தொடங்கி வைக்கும் பணியினை எனக்கு அளித்தபோது, அந்தக் கண்காட்சிப் புகை வண்டியைப் பார்த்தேன். காந்தியடிகள் மூன்றாவது வகுப்பு வண்டியைப்பற்றி எழுதியதும், பேசியதும் என் நினைவிற்கு வந்தன.

'மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் இப்பொழுது எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றனவோ அவ்வளவு அசுத்தமாகவே அப்பொழுதும் இருந்தன. கக்கூசுகளும் இப்போதிருப்பதைப் போலவே அப்பொழுதும் அசுத்தமாக இகுந்தன. இப்பொழுது ஏதோ கொஞ்சம் அபிவிருத்தி இருக்கக்கூடும். ஆனால் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கு அளிக்கப்படும் வசதிக்கும் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்கு அளிக்கப்படும் வசதிக்கும் உள்ள வித்தியாசம், இவ்விரு வகுப்புகளின் கட்டணங்களுக்கு உள்ள வித்தியாசத்திற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாததாக இருக்கிறது.

மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் ஆடுகளாகவே நடத்தப் படுகின்றனர். அவர்களுக்குள்ள வசதிகளும் ஆடுகளுக்கு உள்ள வசதி- கள்தான்! ஐரோப்பாவில் நான் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்து வந்தேன். முதல் வகுப்புப் பிரயாணம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஒரே ஒரு தடவை மாத்திரம் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தேன். ஆனால் முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இங்கே இருப்பதைப் போன்ற பேதத்தை நான் அங்கே காணவில்லை.

தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் அநேகமாக நீக்ரோக்களே. 'ஆயினும் இங்கே இருப்பதை விட, அங்கே மூன்றாம் வகுப்பு வசதிகள் நன்றாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் மூன்றாம் வகுப்பு வண்டிகளில், பிரயாணிகள் தூங்குவதற்குரிய இட வசதியும் மெத்தை தைத்த ஆசனங்களும் உண்டு. கூட்டம் அதிகமாகி, இட நெருக்கடி ஏற்பட்டு விடாதபடியும் பார்த்துக் கொள்ளப் படுகிறது. ஆனால் இங்கேயோ மூன்றாம் வகுப்பு வண்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகப் பிரயாணம் செய்வதே வழக்கமாக இருந்து வருகிறது.

'மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் சௌகரியத்தைக் கவனிப்பதில் ரெயில்வே அதிகாரிகளுக்கு இருந்து வரும் அசிரத்தை ஒரு புறம். மற்றொரு புறம் பிரயாணிகளின் ஆபாசமான யோசனையில்லாத பழக்கங்கள். இந்த இரண்டும் சேர்ந்து சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒருவருக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதை ஒரு சோதனையாக்கி விடுகின்றன. கூட இருக்கும் பிரயாணிகளின் சௌகரியம், சுகம் ஆகியவைகளைக் குறித்துக் கொஞ்சமேனும் கவனிக்காமல் வண்டிக்குள்ளேயே கண்டபடியெல்லாம் சுருட்டுப் பிடிப்பது, வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டு வண்டி முழுவதையும் எச்சில் ஆக்கி விடுவது, கூச்சல் போட்டுப் பேசுவது, கத்துவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை பிரயாணிகளிடம் பொதுவாக இருக்கும் பழக்கங்களாகும்.

1902-ல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். 1915 முதல் 1919 வரையில் இடைவிடாமல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். இந்த இரு தடவைகளிலும் மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் எந்த விதமான வித்தியாசத்தையும் நான். காணவில்லை'-இவ்வாறு காந்தியடிகள் எழுதினார். ஆனால் இன்று கூட மூன்றாவது வகுப்பு (இப்போது இரண்டாம் வகுப்பு) ரயில்வே பெட்டிகளில் அடையாள பூர்வமான சில மாற்றங்கள் தென்படுகின்றனவேயல்லாமல், பொதுவான முன்னேற்றமில்லை.

மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் நிலையில்தான் இன்றைய இந்தியாவில் பலகோடி மக்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ ரயில் வண்டிகளில் இருக்கும் வாய்ப்பு வசதிகள்தான் அவர்களுக்கு வாழ்க்கையிலே இருக்கின்றன. சொல்லப்போனால் இரயிலை விடக்குறை- வான வசதிகள்தான் அவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கிறது. இரயிலிலாவது ஒரு பொதுக் கக்கூசு இருக்கிறது. அது கூட இல்லாமல் எத்தனையோ கிராமங்களில் மக்கள் அவதிப்படுகிறார்கள். எத்தனையோ நகர்ப்புறங்களில் சாலையோரங்களில் அவர்கள் துன்பப்படுகிறார்கள்.

இரயிலில் இருக்கும் விளக்கு வசதி, காற்றோட்ட மான ஜன்னல் வசதி இவைகள் கூட இல்லாமல் குடிசைகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் கோடானு கோடி. அவர்கள் அல்லல் அகற்றப் பாடுபட்ட அடிகளாரின் வாழ்வை 1948-ல் ஒருவன் முடித்து விட்டான். இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பாமர மக்களுக்குத் தொண்டாற்றக் கனவு கண்ட காந்தியடிகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் இன்றையத் தமிழக அரசு முனைந்து கிராமங்கள்தோறும் மின்வசதி, குடிநீர் வடிகால் வசதி, இலவசக் கல்வித்திட்டம், சாலைப் போக்குவரத்து வசதி, உணவு உற்பத்திப் பெருக்கம், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றி வருகிறது.

காந்தியடிகள் மறைந்த அந்த 1948-ம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலில் எத்தனையோ மாற்றங்களுக்கு விதை தூவிய ஆண்டாக அமைந்தது. தாயற்ற குழந்தைக்கு ஒரு தாய் வேண்டுமென்று சொல்லி எனக்கு இரண்டாந்தாரம் திருமணத்திற்கும் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்தனர்.