உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/போய் வருகிறேன் என்றாள் என் பத்மா
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

போய் வருகிறேன் என்றாள் என் பத்மா · 61 / 391

போய் வருகிறேன் என்றாள் என் பத்மா என் மனைவி பத்மாவின் கலங்கிய விழிகள் என்னைக் கண்டுபிடித்து விட்டன. காய்ச்சல் களைப்பிலும், பிரசவ வேதனை வலியிலும், ஏதோ இனந் தெரியாத சோகத்திலும் மூழ்கியிருந்த அவள் என்னைப் பார்த்துத் தழுதழுத்த குரலில், "போய் வருகிறேன்" என்றாள். அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டது மருத்துவ மனைக்குத்தானா? இல்லை! இல்லை! 'ஆ!ஊ!'

என்ற நோயாளிகளின் அலறலும், அம்மா! அய்யோ! என்ற கூச்சலும், டாக்டர்கள், நர்சுகளின் நடமாட்டங்களும் நிறைந்த அமைதியற்ற மருத்துவ மனைக்குச் செல்ல அவள் என்னிடம் விடை பெற்றுக்கொள்ளவில்லை. அமைதி நிறைந்த ஓர் இடத்துக்கு அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டுதான் அப்படிக் கண்ணீர் விட்டிருக்கிறாள் தான் தைரியமாக இல்லாவிட்டாலும் நோய் நொடி விஷயங்களில் மற்றவர்களுக்குத் தைரியம் கூறும் என் தாயாரின் முகமும் சரியாக இல்லை.

மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பத்மாவுக்கு மறுநாளே குழந்தை பிறந்தது. இப்போது என்னைவிட உருவத்தில் ஒரு பங்கு அதிகப் பெரியவனாக இருக்கும் முத்து, சின்னஞ்சிறு பிஞ்சாக, பத்மாவின் அருகில் படுத்திருந்தான். தன் அரவணைப்பில் உள்ள குழந்தையையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தவாறு பத்மா புன்னகை புரிந்தாள். அதுதான் அவளது கடைசிப் புன்னகை என்று எனக்கு அப்போது தெரியாது. இரண்டு நாள் தொடர்ந்தாற்போல் கூட்டங்களுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய என்னிடம், பத்மாவுக்கு விடாமல் காய்ச்சல் அடிக்கிறது என்ற செய்தி கூறப்பட்டது.

மருத்துவ மனைக்கு ஓடினேன். அவளால் சரியாகப் பேசமுடியவில்லை. டாக்டர்களிடம் கேட்டேன். அவர்கள் பத்மாவின் ரத்தத்தை எடுத்து கிண்டிக்குச் சோதனைக்காக அனுப்பியிருப்பதாகவும் அந்த முடிவு வந்தால்தான் காய்ச்சலுக்கான காரணம் தெரியுமென்றும் சொன்னார்கள். உடனடியாகக் கிண்டிக்குச் சென்று சோதனை முடிவைத் தெரிந்து வரும் வசதி ஏது எங்களிடம்? அதற்குள் என் பத்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. நான் மருத்துவமனைத் தாழ்வாரத்திலேயே இரவு பகல் எந்நேரமும் காத்திருந்தேன்.

இறுதியாக டாக்டர்கள், "இனிமேல் இங்கிருந்து பயனில்லை. வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய்விடுங்கள்!" என்று கூறிவிட்டார்கள். சென்னைக்கோ, திருச்சிக்கோ அவளை அழைத்துச் சென்று கடைசி வரையில் பார்த்து விடலாம் என்ற வசதி வாய்ப்பு எதுவுமற்ற நிலையில் வீட்டுக்கு அவளை அழைத்து வந்தோம். வீட்டுக்கு வந்ததும் அவள், என் தாயாரை அருகே அழைத்து, "ஏன் அத்தை, என்னை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டீர்கள்? நான் பிழைக்க மாட்டேனா?"

என்று அழுத்தந் திருத்தமாகக் கேட்டாள். "அதெல்லாம் இல்லையடி என் கண்ணே! உனக்கு ஒரு குறையும் இல்லை!" என்று பத்மாவுக்குத் தைரியம் சொல்லிவிட்டு, என் அன்னை மறைவாகப் போய்த் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள். "என் பிள்ளைக்கு மாமா பெயரை வையுங்கள்", என்று மரணப் படுக்கையில் இருந்தவாறு அவள் கட்டளை பிறப்பித்தாள். கண்களைக் குளமாக்கிக்கொண்டு, அருகே நிற்கும் என்னைத் தனது இளைத்த கரங்களால் பற்றிக்கொண்டு, "கவலைப்படாதீர்கள்; எனக்கு ஒன்றும் இல்லை.

இன்னும் பத்து நாளில் சரியாகிவிடும்" என்று அடிக்கடி ஆறுதல் கூறினாள். நானும் அவளும் சிங்காநல்லூரில் நடத்திய வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக என் மனக் கண்ணில் சுழலத் தொடங்கின- ஒரு நாள் அவளிடம் கோபித்துக் கொண்டு சிங்காநல்லூரில் இருந்து கோவை செல்வதற்காகப் பஸ் நிலையத்துக்குப் போய்க் காத்திருந்தேன். மாலை மணி ஆறுக்கு மேல் இருக்கும். பஸ் எதுவும் வரவில்லை, பலருடன் நானும் கியூவில் நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது, "கொஞ்சம் வாங்களேன்", என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன்.தலையில் முக்காடிட்டுக்கொண்டு கையில் ஒரு குவளைக் காப்பியுடன் பத்மா நின்றுகொண்டிருந்தாள். வீட்டுக்கும் பஸ் நிலையத்துக்கும் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும். நான் கோபத்தில் காபி சாப்பிடாமல் சென்றதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளைப் பார்த்ததும் கோபமெல்லாம் பறந்தோடியது. கியூவிலிருந்து விலகி வந்து அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

பெண் உள்ளம் எவ்வளவு பொறுமையுடையது. ஆண் நெஞ்சம் எவ்வளவு கடுமையானது என்பதை அன்று உணர்ந்தேன். அந்த நிகழ்ச்சி என் இதயத்தில் எவ்வளவோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அதற்குப் பிறகு நான் அவளிடம் கோபம் கொண்டதே கிடையாது. அந்தப் பொறுமையின் கருவூலம்தான் என்னைப் பார்த்து பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு கடைசி மூச்சு விடப் போகிற, நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பாலைக்கலியில் கோடையின் வெப்பம் தாங்காமல் அலைந்து கொண்டிருந்தனவாம் இரண்டு மான்கள்!

ஆண் ஒன்று-பெண் ஒன்று தான் வருந்தினாலும் பரவாயில்லை என்று வெய்யிலிலே நின்றுகொண்டு தன்னுடைய நிழலில் தனது பெண் மானைப் படுக்க வைத்து! இளைப்பாறச் செய்ததாம் ஆண்மான்! இதனை : "இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன் நிழலைக் கொடுத் தளிக்கும் கலை" என்று புலவர் பாடுகிறார்.

மான்கூடத் தன் மனைவிக்கு நிழலாக இருந்திருக்கிறது. ஆனால் நானோ கொடுமையான வறுமையிலும், கடுமையான நோயிலும் என் மனைவிக்கு நிழலாக இருந்திட முடியவில்லை! அவள் என் மருமகன்களைத் தன் பிள்ளைகளாகவே பாவித்து அன்பொழுக நடத்தி வந்தாள். மாறனை 'மூத்த தம்பி' என்றும், அமிர்தத்தை 'நடுத் தம்பி' என்றும், செல்வத்தை 'சின்னோண்டு தம்பி, என்றும் செல்லமாக அழைப்பாள்.

"எல்லாரும் என் பக்கம் வாருங்கள்" என்றாள். என் அன்னை! குழந்தை முத்துவுடன் அவள் அருகே நின்றார்கள். மற்றவர்கள் அவளைச் சூழ்ந்து நின்றோம். அவளது சகோதரிகளும், சகோதரர்களும், வந்திருந்தார்கள். அவள் பேசத் தொடங்கினாள். மருமகன்களை எப்படிப் படிக்க வைக்க வேண்டும்-மகனை எப்படிக் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் - குடும்பம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒரே அறிவுரைதான்! பேச்சின் முடிவில் பிரக்ஞை இழந்தாள், மூச்சு மாத்திரம் இழுத்துக் கொண்டிருந்தது.

கிண்டிக்குச் சோதனைக்காக அனுப்பிய ரத்தப் பரிசோதனை. முடிவும் இருபது நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது. "குதிரை வேக க்ஷயரோகக் காய்ச்சல்" என்பதுதான் அந்த முடிவாகும். இந்த நிலையில் புதுக்கோட்டையிலிருந்து கட்சி நண்பர் அருணாசலம் என்பவர் திருவாரூர் வந்து சேர்ந்தார். எதற்காகத் தெரியுமா? புதுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன்; அதற்கு அழைப்பதற்காக! அவரை இட்டுச் சென்று மனைவியின் நிலைமையைக் காட்டினேன்.

மூச்சு மட்டுமே இழையோடியவாறு நினைவிழந்து கிடந்த என் பத்மாவைப் பார்த்து அவரும் கோவெனக் கதறியழுதார். பிறகு வாயிற்புறம் வந்ததும் என்னிடம், "எப்படியாவது புதுக்கோட்டை கூட்டத்திற்கு வந்தால் நல்லது!" என்று வலியுறுத்தினார். என் மனத்தில் பெரும் போராட்டம்! அந்தக் கடைசி நேரத்திலாவது நான் என் மனைவிக்கு நிழலாக இருந்திருக்கக் கூடாதா? கல் நெஞ்சமா? கடமை உணர்வா? எது வென்றது? எனக்கே தெரியவில்லை. நண்பர் அருணாசலத்தின் வார்த்தையைத் தட்டாமல் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டேன்.

இரவு கூட்டம் முடிந்தது. உடனே என்னை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற கருணை உள்ளம் அவர்களுக்கு! மனைவியை இந்நிலையில் விட்டு விட்டு வந்து விட்டோமே என்ற அவசரம் எனக்கு! ஒரு லாரி கிடைத்தது. லாரியில் ஏறித் திருவாரூர் வந்து சேர்ந்தேன், மறுநாள் இரவு. வீட்டு வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. வீட்டை நெருங்கினேன். அழுகுரல் பலமாக இருந்தது. அப்போதுதான் என் அருமை பத்மா, கடைசியாகக் கண்களை மூடியிருக்கிறாள். இனித் திறந்து பார்க்க மாட்டாள்.

அப்போது என்னைத் தேடினாளோ, அல்லது இரக்கமற்றவன் எங்கேயோ போகட்டுமென்று முணுமுணுத்தாளோ - அதெல்லாம் தெரியாது! அருகே சென்று பார்த்தேன். வாழ்க்கைப் போரை இளமையிலேயே முடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். மூன்று வருட இல்லற வாழ்வு; அதற்குள் அவளுக்கு அது கசந்து போயிற்று போலும்! என் கண்ணீர்த் துளிகள் அவள் சலனமற்ற முகத்தில் விழுந்து உருண்டன. மெதுவாக அவள் முகத்தின் பக்கம் குனிந்தேன்.

பக்கத்தில் ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடையவளின் நெற்றியில் முத்தமிட்டேன். அவளுக்குத் தர ஒன்றுதான் என்னிடமிருந்தது. அவள் தன் அத்தியாயத்தைத் தனது இருபதாம் வயதிலேயே என் வாழ்க்கைப் புத்தகத்தில் முடித்துக்கொண்டு போய் விட்டாள்.