நெஞ்சுக்கு நீதி
சங்கிலியை விற்றுக் கடனை அடைத்தேன் · 60 / 391
சங்கிலியை விற்றுக் கடனை அடைத்தேன் ஓர் எழுத்தாளன் தான் எழுதுவதற்குப் பெறுகிற பணத்தை விட அதற்குக் கிடைக்கிற விளம்பரத்தையும், புகழையும் தான் அதிகமாக விரும்புவான். அந்த நிலை எனக்கு விதி விலக்கல்ல. உள்ளம் குமுறியது. மறுநாள் பட அதிபரிடத்திலே சென்று, "திரையில் என் பெயர் ஏன் போடப்படவில்லை?"
என்று கேட்டேன். "கொஞ்சம் பொறு, உனக்கு விளம்பரம் கிடைத்த பிறகு போடுகிறேன்" என்று அவர் சொன்னார். அந்தப் பதில் எனக்கு வேடிக்கையாக இருந்தது. என் விழிகளைக் குளமாக்கிற்று. உடனே வீட்டைக் காலி செய்து விட்டுத் துணைவியுடன் திருவாரூர் திரும்ப முடிவு கட்டினேன். நான் கோவையிலிருந்து செல்வதைக் கட்சி நண்பர்கள் யாரும் விரும்பவில்லை. காரணம் நான் அங்கிருந்தபோது நாள்தோறும் கூட்டங்கள், கழக நண்பர்களின் திருமண விழாப் பேச்சுக்கள் என்ற அளவில் கட்சிப் பணியாற்றி வந்தேன்.
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களிடம் அப்போது மாணவர் விடுதிக் காவலராகப் (Warden) பணியாற்றி வந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் நானும் ஐந்து மைல், ஆறு மைல் தூரம் நடந்து சென்றே கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். ஒரு முறை கோவையிலிருந்து குனியமுத்தூர் திருமணம் ஒன்றிற்குச் செல்ல வாகன வசதியில்லை. கடலையை வாங்கிக் கொறித்துக் கொண்டே நாங்கள் அந்த ஊருக்கு நடந்தே சென்று திரும்பி வந்தோம். இன்று கோவை சிதம்பரம் பூங்காவில் கூட்டமென்றால் அந்த மைதானமே கொள்ளாத அளவிற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்.
அன்றோ காந்தி சதுக்கம் என்கின்ற சின்னஞ்சிறு வெளியில்தான் கூட்டம் நடைபெறும். ஆயிரம் பேர் கூடுவார்கள். அதுவே எங்களுக்கு ஐந்து லட்சமாகத் தெரியும். கட்சியின் வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும்போது எவ்வளவு பெருமிதம் ஏற்படுகிறது! கட்சி நண்பர்களுக்கு எப்படியோ சமாதானம் சொல்லி விட்டு நான் திருவாருர் திரும்பி விட்டேன். ஒரு பெரிய திரைப்பட நிறுவனத்தாரிடம் கோபித்துக்கொண்டு திரும்புகிறோமே என்ற கவலையோ, அவர்களுடைய வெறுப்பிற்கு ஆளாகிறோமே என்கிற சஞ்சலமோ இல்லாமல் இனி என்ன செய்வது என்பதைப் பற்றி நினையாமல், திருவாரூர் சென்றேன்.
படத்திற்கு எழுதுவது நின்று பத்திரிகைகளுக்கு எழுதுவது, நாடகங்கள் எழுதுவது என்ற அளவில் என் பணி நடைபெற்றது. அப்போது திருவாரூரில் தேவி நாடக சபையார் முகாமிட்டிருந்தனர். அவர்கள் புகழ் பெற்ற நவாப் ராசமாணிக்கம் நாடகக் கம்பெனி யிலிருந்து பிரிந்து வந்த சக்தி நாடக சபையிலிருந்து பிரிந்தவர்கள். அவர்கள் என்னிடம் ஒரு நாடகம் கேட்டனர், குண்டலகேசியை அடிப்படையாக வைத்து, இலக்கியச் செறிவு சிறிதும் குறையாமல் 'மந்திரி குமாரி' என்ற நாடகத்தை எழுதினேன்.
அது திருவாரூரில் அரங்கேற்றப்பட்டது. அடுத்து அந்த நாடகம் குடந்தையில் நடைபெற்றது. மிக வெற்றிகரமாகக் குடந்தை மாநகரில் நடந்த அந்த நாடகம் மக்களால் விரும்பப்பட்டது. அதனுடைய வெள்ளி விழாவிற்கு என்னை அழைத்திருந்தார்கள். பாராட்டுவதற்குப் பல பெரியவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். விழாவில் கலந்து கொள்ள நானும், என் மனைவி பத்மாவும் சென்றிருந்தோம். அப்போது அவள் கருவுற்றிருந்தாள். ஆம், என் மூத்த மகன் முத்து அவள் வயிற்றில் அமைதியாக இருந்தான்.
நாடகம் முடிவுற்றது. பலரும் பாராட்டுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் பேச வேண்டுமென்று கூறினார்கள். நான் ஒப்புக் கொண்டிருந்தேன். என் அருகே என் மனைவி உட்கார்ந்திருந்தாள். கும்பகோணத்தில் ஒரு வெற்றிலை பீடா விற்கப்படுவது உண்டு. அதில் சுண்ணாம்பை மொத்தமாக வைத்து விடுவார்கள். பிரித்துப் பார்த்துத் தேவையான அளவை வெற்றிலையில் தடவிப் போட்டுக் கொள்ள வேண்டும். என்னிடம் ஒரு பீடாவைக் கொடுத்ததும் எனக்கு அந்தச் சூட்சுமம் புரியாமல் அப்படியே வாயில் போட்டுக் கொண்டேன்.
உள்ளேயிருந்த மொத்த சுண்ணாம்பும் என் வாயை வேக வைத்து விட்டது. நாவிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டேயிருந்தது. நாக்குத் தடித்துவிட்டது. வாயை மூட முடிய வில்லை. பிறகு நான் எப்படிப் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேச முடியும்? என் நன்றியுரை இல்லாமலேயே பாராட்டு விழா முடிந்தது. துண்டுத் தாளாக வெளியிட்டுக் கொண்டிருந்த 'முரசொலி'யை வார் இதழாகத் திருவாரூரிலிருந்து வெளியிடலாம் என்று திட்டமிட்டேன்.
வீட்டிலிருந்த நகை நட்டுக்களை அடகு வைத்து வாரப் பத்திரிகை தொடங்கினேன். திருவாரூரில் திரு கருணை ஜமால் அவர்களை உரிமையாளராகக் கொண்ட கருணாநிதி அச்சகத்தில் 'முரசொலி' அச்சடிக்கப்பட்டது. பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதில் வரும் எழுத்துக்களை வியக்காதாரில்லை. வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன. ஆனால் விற்பனையாளரிடமிருந்து பணம்தான் வந்து சேரவில்லை. வாரந்தோறும் பத்திரிகை வெளியிடுவது என்பது ஓர் அறுவைச் சிகிச்சைப் பிரசவமாகவே இருந்தது.
அச்சக உரிமையாளர் ஒரு வாரம், இரண்டு வாரம் கடனைப் பொறுத்துக் கொண்டார். மூன்றாவது வாரம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? அவர் நிலை அப்படி? மனைவி போட்டிருந்த தாலிச் சங்கிலியைத் தாலிக் கயிறாக மாற்றிவிட்டு, அந்த சங்கிலியை விற்று இரண்டு வாரக் கடனை அடைத்து, மூன்றாவது வாரப் பத்திரிகையை 'டெலிவரி' எடுத்தேன். விசயபுரம் என்ற பகுதியில் அச்சகத்தில் அச்சடிக்கப்படுகிற பிரதிகளைத் திருவாரூர் அலுவலகத்திற்குக் கொண்டு வர ஆள் வைக்கவோ வண்டிவைக்கவோ என்னிடம் வசதிகள் இருந்ததில்லை.
இரவோடு இரவாக அவைகளை நானும் பத்திரிகை மானேஜர் கனகசுந்தரமும் தலையில் தூக்கிக்கொண்டு வருவோம், ஆற்றைக் கடக்க அப்போது ஒரு மூங்கில் பாலம் இருந்தது. அந்தப் பாலத்தின் வழியாகப் பத்திரிகைகளைத் தூக்கிக்கொண்டு அலுவலகம் வருவோம். நாங்கள் இருவரும் இரவெல்லாம் உட்கார்ந்து விற்பனையாளர்களுக்கும். சந்தாதாரர்களுக்கும் ஒட்டி அனுப்புவோம். இப்படி எத்தனை நாளைக்கு ஒரு பத்திரிகையை நடத்த முடியும்? பத்திரிகை வாழ்வதா, சாவதா என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையிலும் ஒரு பெரும் போராட்டம் ஆரம்பித்து விட்டது.
அதுதான் என் மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய போராடடம். இந்தப் போராட்டங்களுக்கு முன்பு நான் எதிர்பாராத அரசியல் போராட்டம் வேறு. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. லாலா லஜபதிராயும் லோகமான்ய பாலகங்காதர திலகரும், காந்தியடிகளும், பண்டித நேருவும், வல்லபாய் படேலும், சுபாஷ் சந்திர போசும், பெரியாரும், திரு.வி.க.வும், வ.உ.சிதம்பரனாரும், பாரதியும் இலட்சோப லட்சம் புடம்போட்ட தியாகிகளும், எழுப்பிய விடுதலைக் கனலுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட்டது.
வெள்ளையன் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்தான். பாகிஸ்தானுக்குக் குரலெழுப்பிய ஜின்னாவிற்கும் வெற்றி கிடைத்தது. இந்தியா விடுதலை பெற்ற நாளைப் பெரியார் துக்க நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அறிக்கை விட்டார். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள், 'அது துக்க நாளல்ல; ஆகஸ்ட் 15 இன்ப நாள்' என்று அறிக்கை விடுத்தார்.
"உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான நிகழ்ச்சியை நமது கொள்கையை மட்டும் அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பது சரியாகாது. ஆகஸ்ட் 15-ம் நாள் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக் கண்டத்தின்மீது இருந்து வந்த பழிச் சொல்லை, இழிவை நீக்கும் நாள், அது திராவிடருக்குத் திருநாள்" என்று அண்ணா ஆணித்தரமாகக் கூறினார் ஆகஸ்ட் 15-பற்றிய பெரியாரின் கருத்தை வரிக்கு வரி மறுத்தார்.
இதனால் திராவிடர் கழகத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போதுதான் தூத்துக்குடியில் கழக மாநில மாநாடு மிகப் பெரிய அளவில் ஏற்பாடாயிற்று. இந்த மாநாட்டிற்கு அண்ணா வரவில்லை! பெரியார், அண்ணா மனக்கசப்பு மேலும் மேலும் வளரலாயிற்று. பெரும் தலைவர்கள் இருவரின் இடையே ஏற்பட்ட கசப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நல்லவர்கள் சிலரும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். கட்சிக்கென ஒரு துரும்பை எடுத்துப் போடாதவர்களும், அந்தக் கசப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தாங்கள் வளரலாம் என்று மனப்பால் குடித்தனர்.
அண்ணாவைக் கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். தூத்துக்குடி மாநாட்டில் அண்ணாவின் படத்தைக்கூட ஆத்திரப்பட்ட சில அவசரக்காரர்கள் கொளுத்தினர். இந்தச் செய்திகளை எல்லாம் கேள்விப்பட்ட அண்ணா புன்னகை புரிந்தார். பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே பாலம் அமைக்கப் படவேண்டுமென்ற கருத்தில் 'முரசொலி' வார இதழில் 'கடைசி நாட்கள்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன்.
பெரியாரையும் அண்ணாவையும் ஒன்று சேர்க்கும் முயற்சிக்கு இடையூறாக நிற்கின்ற சந்தர்ப்பவாதிகளைப் பற்றி எல்லாம் அதில் நான் விமரிசித்திருந்தேன். அந்தக் கட்டுரைக்குத் திராவிடர் கழகத்தில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 'முரசொலி' இதழைப் பல இடங்களில் கொளுத்தினர். பயமுறுத்தல் கடிதங்கள் பல வந்தன. அடுத்த இதழை அச்சேற்ற முடியாதபடி திராவிடர் கழகத்தினர் எனக்கு இடையூறு விளைவித்தனர். இந்தக் கட்சிப் போராட்டத்தின் இடையேதான் என் மனைவியின் உயிரை மீட்கும் போராட்டத்தில் நான் ஈடுபட வேண்டியவனானேன்.
பிள்ளைப் பேற்றிற்காக என் மனைவியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல, வீட்டார் முற்பட்டார்கள். பத்மாவுக்கு இரண்டு நாட்களாகவே சிறிதளவு காய்ச்சல் இருந்தது. அதனால் அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். மருத்துவ மனைக்கு அவளை அழைத்துச் செல்ல வாசலில் குதிரை வண்டி தயாராக நின்றது. எங்கள் குல தெய்வமாக வீட்டில் வழிபட்டு வந்த பெரிய தாயாரின் செல்லப் பெட்டியிடம் குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபடச் செய்து மெதுவாக அழைத்துக் கொண்டு தெருப் பக்கம் வந்தார்கள்.
ஏனோ தெரியவில்லை. அவள் கண்களில் இருந்து பொல பெலவென்று நீர் கொட்டியது. நான் அவளைக் கவலையோடு கவனித்துக்கொண்டு நிற்பதை அவள் பார்த்து விட்டாள்.
