நெஞ்சுக்கு நீதி
அசல் நரிகளிடமிருந்து தப்பினேன்! · 59 / 391
அசல் நரிகளிடமிருந்து தப்பினேன்! என்னுடைய கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாமலிருந்தால் 'ராஜகுமாரி' என்ற திரைப் படத்துக்கு வசனம் எழுத ஒத்துக்கொள்வதாகக் கூறி அதற்குத் திரு. ஏ. எஸ். ஏ. சாமி அவர்களும் ஒப்புதல் அளித்த பிறகு வசனம் எழுதத் தொடங்கினேன். அந்தப் படத்தில்தான் புரட்சி நடிகர் எம். ஜி.ஆர். முதல் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கதர் உடையும் கழுத்தில் துளசி மணிமாலையும் துலங்கிடக் காட்சியளிக்கும் காந்தி பக்தரான எம் ஜி.ஆர்.
அவர்களுடன் எனக்குத் தொடர்பும் நட்பும் தோன்றிய காலம் அதுதான். அண்ணாவின் நூல்களை அவருக்கு நான் கொடுப்பேன். காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவைகளின் முடிவு, பிறகு அவர்கழக அணியில் இருந்ததுதான்! கோவைக்கு அடுத்த சிங்கா நல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். திருவாரூரில் இருந்த என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை; ஆபத்தாக இருக்கிறது என்று நானும் பத்மாவும் திருவாருருக்கு விரைந்தோம்.
தந்தை சாவோடு போராடிக் கொண்டிருந்தார். பெரிய அளவில் வைத்திய உதவிகளைச் செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. உள்ளூர் மருத்துவம்தான். வேறு வழியில்லை. ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் தந்தை மரண வேதனையை அனுபவித்தார். அவர் அருகிலேயே நானும் என் தாயும் உட்கார்ந்திருந்தோம். எத்தனையோ நினைவுகள்! என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடி வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய என் தந்தையின் கண்களில் நீர் துளிர்த்தவாறு இருந்தது.
அவரால் அதிகம் பேச முடியவில்லை. "அடுத்த கதை எழுதி முடித்து விட்டாயா?" என்று ஈனசுரத்தில் கேட்டார். "இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறத" என்றேன். "நான் என் கதையை முடிக்கப் போகிறேன்" என்று சொன்னார். சாவுப் பிடியிலும் அவரது இயல்பான இலக்கியச் செழுமை அழிந்து விடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்புதான் நான் எழுதி வெளி வந்திருந்த 'ராஜகுமாரி' படத்தைக் காண அவர் விரும்பினார். அவருக்கோ கண் ஒளி சரியில்லை. ஆயினும் ப்டத்தைப் பார்க்கா விட்டாலும் வசனங்களைக் கேட்கவாவது வருகிறேன் என்று திருவாரூர் தியேட்டரில் வந்து படத்தைப் பார்த்துவிட்டு,, அல்ல-அல்ல-கேட்டு விட்டு வந்தார்.
நான் எழுத்தாளனாக வேண்டும் என்பதில் அவ்வளவு ஆசை அவருக்கு. அந்த ஆசைகள் அலைமோதும் உள்ளத்தோடு அவர் மலையென மரணப் படுக்கையில் சாய்ந்து கிடந்த காட்சியை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இயற்கை தன் வேலையைச் செய்யத் துடித்துக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் அவர் அருகில் அமர்ந்திருந்தபோது திடீரென அவர் உடல் நிலை மிகக் கவலைக் கிடமாயிற்று. நான் மருத்துவரை அழைத்து வர ஓடினேன். மருத்துவர் வடிவேலு என்பவர் மருத்துவ மாநாடு ஒன்றினைத் தலைமை வகித்து நடத்திக் கொண்டிருந்தார்.
நான் போய் மாநாடு நடைபெறும் அரங்கில் அமர்ந்தேன். என்னைப் பார்த்ததும் தலைமை வகித்துக் கொண்டிருந்த வடிவேலு என்னை மாநாட்டில் பேசுமாறு பணித்தார். ஒரு கணம் தந்தையை மறந்தேன். அம் மாநாட்டில் பேசத் தொடங்கினேன். நான் வந்த வேலையை மருத்துவர் வடிவேலுவிடம் சொல்லவில்லை. பேசிக் கொண்டே யிருந்தேன். நண்பன் தென்னன் உள்ளே ஓடோடி வந்தான். மாநாட்டுத் தலைவர் காதில் ஏதோ சொன்னான். தலைவர் என் கையில் ஒரு சீட்டை எழுதிக் கொடுத்தார்.
என் தந்தை காலமாகி விட்டார் என்ற செய்திதான் அந்தச் சீட்டில் இருந்தது. பேச்சை முடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தேன். என்னை அணைத்தும் மகிழ்ந்தும் -அன்பொழுகப் பேசியும் - கண்டித்தும். கனிவு காட்டியும் வளர்த்த என் தந்தை நீண்ட துயில் கொண்டு விட்டார். தன் கணவரிடத்தில் உயிரையே வைத்திருந்த என் தாயின் தாலியை ஏன்தான் பிரித்துக் கொண்டாரோ தெரியவில்லை. எப்படியோ எங்கள் குடும்பத்து ஆலமரம் சாய்ந்து விட்டது.
நாங்கள் ஆலையிலிட்ட கரும்பானோம். "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்" என்று வள்ளுவர் பாடினார். தன் மகனை அவையில் முதன்மையானவனாக ஆக்க முயல்வது தான் தந்தை செய்திட வேண்டிய கடமையாகும் என்பது இதற்குப் பொருள். அந்த முயற்சியில் என் தந்தை ஈடுபட்டது உண்மை. அதன் விளைவினை-வெற்றிக் கனியினை அவர் கண்டிடவில்லை. ஆனால் அவரது தொடக்க முயற்சி என்னை மனிதனாக்கியது என்பதனை எண்ணுந்தோறும் என் கண்கள் அருவிகளாகின்றன.
மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையுடன் திருவள்ளுவர் தனது அறிவுரையை நிறுத்திக் கொள்ளவில்லை. அந்தத் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய உதவி என்ன என்பதையும் வரையறுத்துக் காட்டியிருக்கிறார். மகன் தந்தைக்குச் செய்யவேண்டிய உதவி என்ன? தள்ளாத காலத்தில் அவரைத் தன்னோடு வைத்துக் கொண்டு தான் பெறும் ஊதியத்தில் பாதுகாப்பதா? அல்ல! அல்ல! அது மட்டுமல்ல. ஆடம்பரமான மாளிகையில் தந்தையை அமர வைத்து அகமகிழ்வு கொள்வதா?
அல்ல! அல்ல! தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமை வேறு ஒன்றிருக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் குறள் எழுதியவர். மகனின் பெருமை கண்டு உலகத்தார் நேரடியாக அந்த மகனைப் பாராட்டாமல், இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று வியப்படையுமாறு செய்வது தான் மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமை பாகும். இதற்குக் குறள்: "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும்சொல்" என்பதாகும்: இந்தக் குறளில் முழுப் பொருளையும் நிறைவு செய்து விட்டேனோ?
இல்லையெனில் நிறைவு செய்வதுதான் காலமெல்லாம் எனக்காகக் கவலைப்பட்ட என் தந்தைக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறாகும். தந்தையின் ஈமக் கடன்களை முடித்துவிட்டு நானும் துணைவி பத்மாவும் மீண்டும் கோவை சிங்காநல்லூருக்குச் சென்றோம். சிங்காநல்லூரில் நாங்கள் இருந்த வீடு இரயிலடியிலிருந்து இரண்டு கல் தொலைவிற்கு மேல் இருக்கும். இரவு 12 மணிக்கு இரயிலடியில் இறங்கினோம். நின்று கொண்டிருந்த இரண்டு குதிரை வண்டிகளை, முந்திக் கொண்டவர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்.
வேறு வண்டி எதுவும் இல்லை. திகைத்து நின்றோம். பிறகு பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தே செல்வது என்று தீர்மானித்தோம். இரயில் நிலையத்துக்கும் சிங்காநல்லூர் நகருக்கும் இடையே உள்ள பாதை பயங்கரமானது. அடிக்கடி வழிப்பறிகள் நடக்கும். அரசியல் எதிர்ப்புக்கள் அந்தப் பாதையில் பல தடவை கொலையில் முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆபத்தான பாதையில் நள்ளிரவில் நானும் என் மனைவியும் ஒருவருக்கொருவர் துணையாக நடந்து கொண்டிருந்தோம்.
என் மனைவி தலையில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கையில் பைகளையும் கூஜாவையும் தூக்கிக் கொண்டாள். நான் படுக்கையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களை கையில் எடுத்துக் கொண்டேன். அந்தக் காட்சி இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. நான் வறுமையோடும், வாழ்க்கை வசதியற்ற தன்மையோடும் கஷ்டப்பட்ட நாளில் எல்லாம் என் மனைவி பத்மா இன்முகத்தோடு அவைகளில் பங்கு கொண்டாள். என்னோடு சேர்ந்து வாழ்க்கைப் போராட்டத்தைச் சமாளித்தாள்.
சிதம்பரத்தில் வசதிமிகுந்த குடும்பத்தில் பிறந்து, பெரிய வீட்டில் வளர்ந்து, என்னுடன் குருவிக்கூடு போன்ற சிறு அறையில் அவள் வாழ்க்கை நடத்த முகமலர்ச்சியோடு ஈடுபட்டதை எப்படித்தான் நான் மறக்க முடியும்? அந்த குருவிக்கூட்டு வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது. இன்பத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படுகிற மகிழ்ச்சியை விடத் துன்பத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் உள்ளத்திற்கு எவ்வளவோ ஆறுதல் கடுமையான உணவு நெருக்கடி இருந்த காலம் அது.
பையைத்தூக்கிக் கொண்டு ரேஷன் கடைகளுக்குத்தான் செல்ல வேண்டும். புழுத்துப் போன அரிசிதான் கிடைக்கும். கொஞ்சம் நல்ல அரிசி வாங்குவது என்றால் பக்கத்தில் உள்ள கோவைக்குச் செல்ல வேண்டும். அன்றாடம் அரிசி வாங்கிக் கொண்டு வந்து தருகிற பொறுப்பை நண்பர் எஸ். ஏ. ராசமாணிக்கம் ஏற்றுக் கொண்டார். அவர் அப்போது கோவையில் எனக்குக் கிடைத்த கட்சி நண்பர். அவர் அரிசி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால்தான் அன்றைக்குச் சாப்பாடு.
இல்லையேல் சிற்றுண்டிச் சாலையில் எடுப்புச் சாப்பாடுதான். சிங்கா நல்லூரிலிருந்து கோவைக்குச் செல்ல பஸ்கள் உண்டு என்றாலும் இடம் கிடைப்பது அரிது. குதிரை வண்டியில்தான் செல்ல வேண்டும். ஒரு வண்டியில் ஆளுக்கு இவ்வளவு கட்டணம் என்று பேசிக் கொண்டு பல பேர்கள் ஏறிக்கொள்வதுண்டு. அப்படித்தான் நாங்கள் கோவைக்குச் செல்வோம். ஒரு நாள் மனைவி பத்மாவிற்குக் கடுமையான காய்ச்சல். ஏன் தெரியுமா? மாவு அரைப்பதற்காக அரிசி மூட்டையை அவளே தலையில் தூக்கிக்கொண்டு இரண்டு பர்லாங் தொலைவிலுள்ள மில்லுக்குப் போய் வந்ததை நான் பார்த்துவிட்டேன்.
"யாராவது ஆட்களிடம் கொடுத்தனுப்பக்கூடாதா?" என்று ஆத்திரத்தோடு கேட்டேன். அதற்காகும் செலவை அவள் கணக்கிட்டுச் சொன்னாள். இருந்தாலும் அவள் அப்படிச் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. அடித்துவிட்டேன். அதன் விளைவுதான் காய்ச்சல். அன்று எனக்கு ஸ்டுடியோவில் ஒரு கதை விவாதம், முடிவதற்கு இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. வீட்டிற்கு வரவேண்டும். ஸ்டுடியோவிலிருந்து ஒரு கார் மூலம் என்னை அனுப்ப திரு ஏ.எஸ்.எ. சாமி முயற்சி செய்தார்.
ஆனால் டிரைவர்கள் யாரும் இல்லை. ஸ்டுடியோவிலேயே படுத்துவிட்டுக் காலையில் போகலாம் என்று சொன்னார். காய்ச்சலோடு மனைவியை வீட்டிலே விட்டு விட்டு நான் எப்படி ஸ்டுடியோவில் தூங்க முடியும்? போய்த்தான் தீரவேண்டுமென்று புறப்பட்டேன். நல்ல இருட்டு. மழைத் தூறல் வேறு! அந்த இரண்டொரு மைல்களை நடந்தே கடக்க எண்ணி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அதற்கு முதல் நாள்தான் நான் செல்லும் வழியில் ஒரு பயங்கரமான அரசியல் கொலை நடைபெற்றது.
ஒரு மைல் தூரம் நடந்திருப்பேன். இருமருங்கிலும் உள்ளப் புதர்க் காடுகளிலிருந்து ஐந்து, ஆறு நரிகள் ஒன்றாக வந்து சாலை நடுவே உட்கார்ந்து கொண்டன. எனக்குப் பின்னால் திரும்பி ஓடவும் முடியவில்லை; முன்னால் அடியெடுத்து வைக்க வும் முடியவில்லை! நரிகளிடம் சிக்கிக் கொண்டால் அவைகள் ஆளைச் சூழ்ந்து கொள்ளும் என்பதும் மண்ணை வாரி இறைத்து மனிதனை வீழ்த்தி விடும் என்பதும் வீழ்ந்த மனிதனை அவைகள் என்ன செய்யும் என்பதும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு கணம் என்னை மறந்து நின்றேன். திடீரென ஓர் இராணுவ லாரி எதிரே வந்தது. அதன் பேரிரைச்சலிலும் விளக்கொளியிலும் நரிகள் மிரண்டு ஓடிப் புதருக்குள் புகுந்து கொண்டன. நான் அங்கெடுத்த ஓட்டம் சிங்காநல்லூரில் வீடு போய்த்தான் நின்றேன். மாலையில் என் கையால் அடிபட்ட மனைவி, வாசல் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு அந்தக் காரிருளில் என் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். உடம்பெல்லாம் நெருப்பாகக் கொதித்தது அவளுக்கு.
எனக்கு வீடு வாடகைக்கு அளித்த நண்பர் அண்ணாசாமியின் உதவியைக் கோரி மருத்துவ உதவி பெற்று மனைவியின் உயிரை அப்போது காப்பாற்றினேன். அந்தக் குருவிக் கூட்டினுள்ளே உட்கார்ந்து கொண்டு நான் எழுதிக் குவித்தவைகள் ஏராளம். 'அபிமன்யு' என்கிற புராணப் படத்திற்குப் புதுமையான வசனங்களை எழுதுகின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படம் வெளிவந்தபோது என் மனைவியையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, திரையரங்கிற்குச் சென்றேன்.
ஆனால் அந்தப் படத்தில் நான் எழுத்துப்- பணியாற்றிய செய்தி திரையில் விளம்பரப்படுத்தப்படவே இல்லை!
