நெஞ்சுக்கு நீதி
குளிப்பது ஒரு குற்றமா? · 58 / 391
குளிப்பது ஒரு குற்றமா? கலகக் கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்ட நானும் அண்ணன் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களும் திசைக்கொருவராகப் பிரிக்கப்பட்டோம். அவர் எங்கு போனார் என்று எனக்குத் தெரியாது. என்னைக் கூட்டத்தினர் அடித்துத் துரத்திக்கொண்டே வந்தார்கள். நான் அடி வாங்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். மாநாட்டிற்கு வந்திருந்த திருவாரூர் ராசகோபால் என்மீது விழுந்த அடிகள் பலவற்றைத் தாங்கிக் கொண்டார்.
நல்ல வலிவான உடல் அவருக்கு. அதற்குப் பிறகு அவரையும் விட்டு நான் பிரிக்கப்பட்டேன். புதுச்சேரியில் அப்போது அடிக்கடி கலவரங்கள் நடைபெறுவது உண்டு. அங்கு நடைபெறும் ஒவ்வொரு-தேர்தலிலும்-அது சாதாரண நகராட்சித் தேர்தலாக இருந்தாலும்கூட ஐந்தாறு கொலைகள் விழுவது வழக்கம். ரிவால்வர் சண்டைகள் நடைபெறுவதும் உண்டு. இப்படிக் கலவரங்களைக் கண்டு கண்டு பழக்கப்பட்டவர்கள் புதுச்சேரிப் பொது மக்கள். தெருவில் கூச்சலென்றால் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
நான் அடித்துத் துரத்தப்பட்டு என் பின்னால், எதிரிகள் கூட்டமாக ஓடிவரும்போது அப்படித்தான் ஒவ்வொரு வீட்டாரும் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். இடையே சந்து பொந்து இல்லாத நீண்ட பெருஞ்சாலை யொன்றில் நான் ஓடிக் கொண்டேயிருக்கிறேன். எதிரிகள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். என் சட்டையில் மாட்டப்பட்டுள்ள 'பெரியார் பேட்ஜை'ப் பறிப்பதற்காக ஒருவன் சட்டையைக் கிழித்தான். நான் அந்த பேட்ஜை இறுகக் கையால் பற்றியவாறு ஓடிக் கொண்டேயிருந்தேன்.
அந்த நீண்ட தெருவில் ஒரேயொரு வீட்டில் மாத்திரம் கதவு திறந்திருந்தது. வாயிற்புறத்தில் இரண்டொரு பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள். நான் வீட்டிற்குள்ளே நுழைந்தேன். வீட்டிற்குள்ளே நுழைந்த என்னை அந்தப் பெண்கள் தடுக்கவில்லை. திண்ணையில் இருந்தவாறு எந்தவிதச் சலனமும் இன்றி இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் சென்ற நான் தொடர்ந்து வந்த கூட்டத்தினர் என்னைப் பிடித்துவிடாமலிருக்கக் கதவைச் சாத்தினேன்.
அதற்குள் கூட்டத்தினர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். நான் கதவிடுக்கின் மறைவில் நின்று கொண்டு அந்த வீட்டை ஒரு முறை பார்த்தேன். தாழ்வாரத்திலும் கூடத்திலும் மதுப் புட்டிகள் இறைந்து கிடந்தன. காலி செய்யப்பட்ட புட்டிகளும், காலி செய்யப்படாத புட்டிகளும் ஏராளமாக இருந்தன. அந்த வீடுதான்-கலகக்காரர்கள் சதித் திட்டம் தீட்டிய இடம் என்பதைப் பிறகு புரிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தவர்கள் கதவின் மறைவில் இருந்த என் தலைமயிரைப் பிடித்திழுத்துத் தெருப்புறத்தில் தள்ளினார்கள்.
'க்யூ' வரிசையில் நிற்பது போல நின்று கொண்டிருந்த கலகக்காரர்கள் ஆளுக்கொரு அடி என்னை அடித்தார்கள். நான் மயக்கமுற்றேன். சுருண்டு விழுந்தேன். நான் இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடை ஓரத்தில் தூக்கியெறிந்துவிட்டுப் போய் விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நான் கண் விழித்துப் பார்த்தேன். எங்கேயோ வீட்டுத் தாழ்வாரத்தில் நான் படுக்க வைக்கப்பட்டிருந்தேன். முதிர்ந்த ஒரு தாயும் ஒரு சிறுமியும் ஓர் இளைஞனும் என் அருகே இருந்தார்கள்.
நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தாய் சொன்ன வார்த்தை என் நெஞ்சில் அப்படியே பதிந்து விட்டது. "ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே?" என்பதுதான் அந்தத் தாயின் வாயிலிருந்து வந்த கனிவு மிக்கவாசகம். நீண்ட நாள் வரை தேடிக் கொண்டிருந்தேன்; புதுவையில் எனக்கு உயிரளித்த அந்த நல்லவர்கள் யாரென்று. அதற்குப் பிறகு நான் அவர்களை இரண்டொரு முறைச் சந்தித்தேன் தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்த குடும்பத்தினர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
இதற்கிடையில் காலையில் கலைக்கப்பட்ட கழக மாநாடு மீண்டும் மாலையில் கூட்டப்பட்டு அழகிரிசாமி அந்த மாநாட்டில் கலந்து கொண் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன வாசகம்தான், "காலையில் சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்-நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப் பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்" என்பதாகும். என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள்.
பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப்போயினர். விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து அவர்களிடம் போய்ச் சேரப் புறப்பட்டேன். மீண்டும் என்னைத் தெருவில் கண்டால் கலகக்காரர்கள் உயிரைப் பறித்துவிடக் கூடுமென்று அஞ்சிய எனக்கு உதவி செய்த வீட்டார் என்னை மாறுவேடத்தில் போகுமாறு வலியுறுத்தினர். அவர்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, முஸ்லீம் வேடத்தில் என்னை அனுப்பி வைக்கத் திட்டமிட்டனர்.
கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் இவைகளுடன் ரிக்ஷா ஏறி தலைவர்கள் இருக்குமிடம் சென்றேன். பெரியார் கண்ணுறங்காமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டு, "சுகமாக இருக்கிறாயா?"
என தழுதழுத்த குரலில் கேட்டார். அதற்குப் பிறகு அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். "என்னுடன் வா, போகலாம்" என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெரியாரின் ஈரோட்டுக் 'குடியரசு' அலுவலகத்தில் துணையாசிரியனாகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் இனிய நண்பர் கருணானந்தம், ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடியரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது.
திருவாரூர் சென்று வீட்டாரிடம் விடை பெற்று கருணானந்தத்தையும் வழித்துணையாக அழைத்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டேன். அன்று என்னுடன் முதன் முதலாகப் பிரயாணம் செய்தவர் தொடர்ந்து பல ஆண்டு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். "குடியரசு துணை ஆசிரியனாக இரு!"
என்று பெரியார் பணித்ததோடு மட்டுமல்லாமல் அந்த இதழில் என்னைக் கட்டுரைகள் எழுத அனுமதித்து, அதனைப் படித்து மகிழ்ந்தார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம், அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகிவிடும். இதரச் செலவுகள் ஐந்து 'ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவிக்கு- பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாருரூக்கு மணியார்டர் செய்து வந்தேன்.
எப்படியோ பிள்ளை சம்பாதிக்கிறான் என்று என்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் உற்ற சகோதரிகளுக்கும் பெருமகிழ்ச்சிதான். கருணானந்தம், தவமணி, ஜனார்த்தனம் மூவரும் பெரியாரின் பழக்க வழக்கங்களில் மிகவும் ஒட்டிப் போனவர்கள். என்னால் அது முடியவில்லை. நாள்தோறும் அதுவும் காலையில் நான் குளித்து விடுவேன். தூய்மையான உடை அணிவேன். இது அந்த நண்பர்களால் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதெல்லாம் பெரியாருக்கு விரோதமாகச் செய்கிற காரியங்கள் என்றுகூட அந்த நண்பரீகள் என்னை அடிக்கடி பயமுறுத்தினார்கள்.
ஒரு நாள் பெரியார் என்னைக் கேட்டேவிட்டார். "என்ன, குளிக்கிறாயா நீ? பிறகு எப்படி வேலை செய்வது?" என்பது தான் அவர் கேள்வி. "குளிப்பதும் ஒரு வேலைதான். அதைக் காலையில் முதல் வேலையாகச் செய்துவிட்டுப் பிற மற்ற வேலைகளையும் நான் கவனிக்கிறேன் அய்யா!"
என்று பெரியாரிடம் சொன்னேன். அவருக்கு என்மீது ஏற்கெனவே ஏற்பட்டிருந்த தனிப்பட்ட அன்பினால் என் பதிலைப் பொறுத்துக் கொண்டார். காலை எட்டு மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து-அன்று வருகிற தபால்களை அவர் பார்த்து அது பற்றிய விளக்கங்ளை அறிவித்து-அதனைச் செயல்படுத்துகிற வழிவகைகளை நாங்கள் தொடங்கிவிட வேண்டும். பிறகு அலுவலக வேலை. மாலையில் பெரியார் அலுவலகம் வருவார். அது வரையில் விழித்துக் கொண்டு, வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர் ஜனார்த்தனம் அப்போது தான் தூங்கிக் கொண்டிருப்பார்.
"இவன் எப்போதுமே தூங்குகிறானா?" என்பது பெரியாரின் ஆத்திரமான கேள்வியாக இருக்கும். 'குடியரசு' க்கான தலையங்கத்தை எழுதிவிட்டு-அதனை எங்களிடம் படித்துக் காட்டிவிட்டுப் பெரியார் அலுவலகத்தை விட்டுப் புறப்படுவார். 'குடியரசு'க்குக் கரிவரதசாமி என்பவர் பெயரளவில் ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு வாரக் 'குடியரசு' தலையங்கத்தையும் படித்து முடித்துப் பெருமூச்சுவிட்ட பிறகுதான் அவருக்கு நிம்மதி. ஏனென்றால் பெரியார் ஏதாவது சட்ட விரோதமாகத் தலையங்கம் எழுதியிருந்தால் தன் தலைக்கல்லவா ஆபத்து என்ற பயம் அவருக்கு!
'குடியரசு' இதழில் நான் எழுதிய "அண்ணாமலைக்கு அரோகரா!" என்ற கட்டுரையைப் பெரியார் பெரிதும் பாராட்டினார். திருவண்ணாமலை தீபத்தைப் பற்றிய கட்டுரையாகும் அது. அதற்குப் பிறகு பெரியாரைக் கவர்ந்த மற்றொரு கட்டுரை "தீட்டாயிடுத்து!" என்ற துணைத் தலையங்கமாகும். திருவையாற்றில் தியாகப் பிரம்ம உற்சவம் நடக்கும் பொழுது ஒரு தமிழ்ப் பாடகர் - தமிழ்ப் பாட்டு ஒன்றைப் பாடிவிட்டார் என்பதற்காக, அடுத்துப் பாட வந்த ஒரு பாடகர் மேடை தீட்டாகி விட்டது என்று சொல்லி, பிராயச்சித்தம் செய்து, அதன் பிறகே பாடினார் என்று வந்த செய்தியையொட்டி நான் எழுதிய துணைத் தலையங்கமாகும் அது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழுக்கிருந்த பரிதாபகரமான நிலையை இந்த நிகழ்ச்சி குறிக்கும். ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு, சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத் தெரிந்து கொண்ட பிறகே அவர் தூங்கக் கிளம்புவார்.
ஓராண்டுக் காலம் 'குடியரசு' அலுவலகத்தில் பணியாற்றிப் பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. திரைப்படத்திற்கு வசனம் எழுதவேண்டுமென்ற அழைப்புத்தான் அது. அழைப்பை அனுப்பியவர் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களாவார். என்னுடைய நண்பர் முத்துகிருஷ்ணன் என்பாரின் துணையுடன் கோவை சென்று, திரு சாமியிடம் விவரங்களை அறிந்தேன். கோவை ஜூபிடர் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட 'ராஜகுமாரி' என்ற படத்திற்கு நான் வசனம் எழுதவேண்டும்.
என்று கூறப்பட்டது. பெரியாரிடம் தெரிவித்தேன். அவரும், "போய் வா!" என்று விடை கொடுத்தார்.
