உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கம்புகள்! குண்டாந்தடிகள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கம்புகள்! குண்டாந்தடிகள்! · 57 / 391

கம்புகள்! குண்டாந்தடிகள்! வா ழ்க்கை வரலாற்றின் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, இன்றைய மனோநிலை-அமைதியற்றது! ஆழ்கடலின் கொந்தளிப்பும் எரிமலையினின்று ஓங்கிச் சிதறிடும் கனற்குழம்பும் என் நெஞ்சத்து வேதனைக்கு ஈடாகச் சொல்லப்படும் உதாரணங்கள் ஆகமாட்டா! நண்பர்கள் மாலைகளை அணிவிக்கிறார்கள். நல்லாட்சி நடத்துகிறேன் என்று பாராட்டுக் குவிக்கிறார்கள். அவர்களோடு கை குலுக்குகிறேன். மகிழ்கிறேன்.

அளவளாவுகிறேன். ஆனால் இந்த என் செயல்கள் அத்தனையிலும் எனக்கே முழு மன நிறைவு இல்லை. நீட்டிய கையைக் குலுக்காவிட்டால் வருந்துவார்களே என்ற பயம்! சூட்டிடும் மாலையை வாங்காவிட்டால் அவ்வளவு மமதையா?' என எண்ணிடுவரே என்ற அச்சம்! மகிழ்வுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால், 'ஏதோ வெளியில் சொல்ல முடியாத நோய் போலும்!'

எனச் செய்தி பரப்பிடுவார்களே என்ற கவலை. இப்படியொரு வேதனையான, வேடிக்கை வாழ்வு. பார்வைக்கு என்னவோ பதவி-புகழ்-பாராட்டு. பட்டு மெத்தை தைத்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு மெத்தைக்குள்ளிருந்து ஊசிகளை உடலெல்லாம் குத்தச் செய்துவிட்டு, எதிரே இருக்கும் மக்கள் கூட்டம் 'ஆகா! இவர் இந்திரனல்லவா? சந்திரனல்லவா?'

என்று புகழ்ந்து கொண்டிருந்தால் - ஊருக்குப் பயந்து ஊசிக் குத்துக்களை வாங்கிக் கொண்டு உதிரத்தோடு ஒப்புக்குச் சிரிக்கும் மனிதனைப் போல் நான் இன்று சிரிக்கிறேன்; மகிழ்கிறேன். இதுவே நான் பதவியால் பெறும் பயன்! இந்த ஊசி முனைக் குத்துக்களைத் தாங்க முடியாத நான் ஈட்டி முனைக் குத்துக்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. அதுதான் 1966-ம் ஆண்டு முடிய ஏறத்தாழ முப்பதாண்டு எதிர்க்கட்சி வாழ்வு!

ஈட்டிகள் என் நெஞ்சைக் குறி பார்த்திருக்கின்றன. கற்கள் என் தலையைப் பதம் பார்த்திருக்கின்றன. கம்புகளும், கழிகளும், குண்டாந்தடிகளும் என் மேனியைச் சுவைத்திருக்கின்றன. சாவு என்னை நெருங்கி நெருங்கி எத்தனையோ முறை விலகியிருக்கிறது! சிலரிடத்திலே நெருங்கியதற்காக அல்ல! விலகியதற்காக! ஆனால் அந்தக் கொடிய நிகழ்ச்சிகளை நான் சந்தித்தபோதெல்லாம் பூரிப்பு அடைந்திருக்கிறேன். மனப் புண் அடைந்தது கிடையாது. போர்க்களத்தில் பாய்ந்து வரும் வாளுக்குத் தலை கொடுக்கத் தயாராயிருப்பான் வீரன்!

ஆனால் அவனையே அவன் தோட்டத்தில் நிறைந்து கிடக்கும் நெருஞ்சி முள் மீது படுத்து உருளச் சொன்னால் தாங்கிக் கொள்வானா? என் தலைக்கு வந்த ஆபத்துக்களில் மிகப் பெரிய வரிசையில் ஒன்று தான் புதுச்சேரி ஆபத்து! விழுப்புரத்தில் கழகப் பிரச்சார நாடகங்களை முடித்துக் கொண்ட நாங்கள் அங்கிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். அரவிந்தர் வாழ்ந்த மண்-அடிமைத் தளையொடிக்கும் அருமைக் கவிகள் இயற்றிய பாரதியார் உலவிய பூமி-அஞ்சா நெஞ்சும் ஆற்றல் மிகு சொல் வளமும் கொண்ட தன்மானக் கவிஞன் பாரதிதாசன் ஏடெடுத்து எழுதி, மாநிலம் - அங்கே எமது நாடக மன்றத்துப் பணியினைத் தொடங்கினோம்.

இந்தியா, ஆங்கிலேயர் பிடியிலும், புதுவை-காரைப் பகுதிகள் பிரெஞ்சுக்காரர் பிடியிலும் இருந்த காலம் அது. புதுவையின் எழிலுறு வீதிகளில் பிரெஞ்சு நாட்டு ஆடவரும் பெண்டிரும் வண்ணக் கோலம் காட்டி உலவிடுவர். மாலை வந்து விட்டால். அவர்கள் ஆடவரும் பெண்டிரும் மது வெறியேறி ஒருவரையொருவர் தழுவியவாறும் முத்தமிட்டவாறும் தமிழர்கள் இழுக்கும் ரிக்ஷாக்களில் கடை வீதிகளில் சென்று கொண்டிருப்பர். புதுவைத் தெருக்களில் அழகும் தூய்மையும் நிறைந்திருந்தது.

எனினும் அயல் நாட்டு நாகரிகமெனும் சகிக்க முடியாத காட்சிகளும் புதுவைக்குப் பெருங்களங்கமாக இருந்து வந்தன. ஆறு வயதுச் சிறுவர்கள் கூட வீதிகளில் புகை பிடித்தவாறு செல்வார்கள். அவர்களிடம் தங்கள் பீடிக்கு நெருப்புக் கேட்கும் காவலர்களும் நிறைய இருந்தனர். இந்தியாவை வெற்றி கொள்ள முயன்று, 'கிளைவ்' குறுக்கீட்டால் தடைப்பட்டு, புதுவை, காரை, மாகி. ஏனாம் என்று சில சிறு நிலப் பகுதிகளை மட்டும் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் நிலைத்திடச் செய்த டுய்ப்ளே'யின் சிலையொன்று எடுப்பும் சிறப்புமாகப் புதுவைக் கடற்கரையை நோக்கி நின்று கொண்டிருந்தது.

உடல் போன்ற இந்தியா ஆங்கிலேயனிடமும், அதன் கழுத்தில தொங்கும் பதக்கம் போன்ற புதுவைப் பகுதி பிரெஞ்சுக்காரனிடமும் இருந்த 1945-ம் ஆண்டு எங்கள் திராவிட நடிகர்க் கழகம், தனது நாடகங்களை 'கெப்ளே' என்ற தியேட்டரில் நடத்தத் தொடங்கியது. விழுப்புரத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் இங்கு இல்லை நாடகம் காணத் திரளான மக்கள் நாள்தோறும் வந்தனர். இடமின்றிப் பலர். திரும்பினர் நான் நடித்த "சாந்தா, அல்லது பழனியப்பன்" நாடகம் மிக வெற்றிகரமான வசூலுடன் இருத்பது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

அந்த நாடகத்தில் நான் தாங்கிய பாத்திரத்திற்குப் பெயர் சிவகுரு! என்னைப் புதுவையிலேயுள்ள பொதுமக்கள், 'சிவகுரு,' என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர். புதுவையில் திராவிடர்க் கழகத் தொண்டர்கள் - முன்னணியினர் என்னைச் சூழ்ந்து கொண்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்கள். திரு. பெருமாள் அவர்களது ஆதரவோடு "தொழிலாளர் மித்திரன்'. என்ற வார இதழை, திரு. காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் நடத்தி வந்தார்கள். அந்தப் பெருமாள் தான் அவுக்காப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்ற சில காலம் புதுவைச் சபா நாயகராக இருந்தவர்!

அவுக்கா என்றால் அங்கே வழக்கறிஞர் என்று பொருள் படும். 'தொழிலாளர் மித்திரன்' இதழில் என்னைக் கட்டுரைகள் எழுதுமாறு அதன் ஆசிரியர் தூண்டினார். அதை நிறைவேற்றினால் ஒரு வாரத்திற்கு அவரது அலுவலகத்திலே தொடர்ந்து தேநீர் கிடைக்கும். அந்த அலுவலகம், கார்கள் நிறுத்தும் ஓர் இடம். காருக்குப் பதிலாக அச்சுக் கோக்கும் இடமும் ஆசிரியர் இருக்கையும் இருந்தது. "அந்தப் பேனா!"

என்று ஒரு கட்டுரை எழுதினேன். காந்தி அடிகளின் ஆசிரமத்தில் காணாமற்போய்விட்ட ஒரு பேனாவைப் பற்றிய கட்டுரை அது! அந்த இதழ் வெளிவந்த மறுநாளே, அந்த ஊர் காங்கிரசார் என்னை அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டார்கள். அடுத்த இதழில், 'காந்தி வைசிராய் ஆனால்?""

என்ற ஒரு கட்டுரை எழுதினேன். மூன்றாவது கட்டுரை எழுதுகிற வரையில் காங்கிரஸ் நண்பர்கள் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்குரிய பயங்கர வீடொன்றில் ஒரு நாள் இரவு கூடி, சதித் திட்டத்தைத் தீட்டி விட்டார்கள். அவர்கள் திட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் நிலையில் எதிர்பாராதவிதமாக, புதுவையில் கழக மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அனைவரும் முழுமூச்சாக ஈடுபட்டோம். இரவெல்லாம் நாடக வேலை-பகலில் மாநாட்டு வேலை!

மாநாடு, சீரும் சிறப்புமாக நடைபெற எல்லா ஏற்பாடுகளும் எங்கள் எண்ணம் போல் முடித்துவிட்டனர். பெரியார், அறிஞர் அண்ணா, அழகிரிசாமி - மற்றும் கழகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கு கொண்டனர். மாநாடு காலை பத்து மணிக்குத் தொடங்கிற்று. மாநாட்டில் கலகம் விளைவிக்கத் திட்டமிட்டவர்களும் ஒன்று, இரண்டு, பத்து, நூறாக, மாநாட்டு முகப்புக்கெதிரே கூடி எதிர்ப்பு முழக்கங்கள் செய்திடத் தொடங்கினர். "திராவிடத் தலைவர்களே!

திரும்பிப் போங்கள்!' என்பதே அவர்களது கூச்சலாக இருந்தது. "வா!' என்றழைப்பதுதான் தமிழர் பண்பு! 'போ!' என்று கூறக் காரணம் யாதோ?" என்று தொடங்கி, அறிஞர் அண்ணா அவர்கள் அரியதோர் உரையாற்றினார்கள். அந்த உரையினைத் தொடர்ந்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள். கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடி மரத்தை வீழ்த்தி விட்டார்கள் எதிரிகள்? அவ்வளவுதான், அமளி தொடங்கி விட்டது. பெரியாரையும் அண்ணாவையும் ஏனைய தலைவர்களையும் வண்டிகளிலும் ரிக்ஷாக்களிலும் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பி விட்டு பாரதிதாசனும் நானும், காஞ்சி கல்யாணசுந்தரம் ஆகியோரும் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு பெருங்கூட்டம் எங்கள் மூவரையும் சூழ்ந்து கொண்டது. நாங்கள் மூவரும் திசைக்கொருவராக ஆகிவிட்டோம். பாரதிதாசனை யாரோ அழைத்துக் கொண்டு ஓடி ஒரு வீட்டில் ஒளித்து விட்டார்கள். அவரது காலணியொன்று தெருவிலே கிடந்தது. அதனைக் கருவியாகக் கொண்டு என்னைத் தாக்கினார்கள். பெரிய லாடம் அடிக்கப்பட்ட பூட்ஸ்! அடி எப்படியிருக்கும் என்று கூற வேண்டியதில்லை. அப்பொழுது வலித்தது. ஆனால் இப்பொழுது நினைத்தாலும் அந்தச் சம்பவம் இனிக்கிறது.