உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நண்பர்கள் முகம் வாடலாமா?
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நண்பர்கள் முகம் வாடலாமா? · 56 / 391

நண்பர்கள் முகம் வாடலாமா? நா ன் எழுதி நடித்த 'பழனியப்பன்' நாடகத்தை நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டவர் 'திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரால் ஒரு கலை மன்றத்தைத் துவக்கி கழகப் பிரசார நாடகங்களை நடிப்பது என்ற தீர்மானத்துடன் என்னை அணுகினார். நானும் அதற்கு ஒப்புதல் அளித்து, முதல் முதலாக நாடகக் குழு விழுப்புரத்தில் முகாமிட்டது. என்னையும் அந்த மன்றத்தில் இணைந்து நடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

நான் எழுதும் நாடகத்தில் மட்டுமே நடிப்பது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக் கொண்டேன். நாடகங்களைத் துவக்குவதற்கு முன்பு ஒரு மாத காலம் விழுப்புரத்தில் ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கே நாடக மன்றத்தினர் தங்குவதற்காக ஒரு வீடு வாடகைக்குப் பிடிக்கப் பட்டது. என்னுடன் தென்னனும், சி. டி. மூர்த்தியும் இருந்தார்கள். இளமை முதல் நான் தனியாக இருந்து பழக்கப்பட்டவன் அல்ல. இரண்டு, மூன்று நண்பர்களுடன்தான் என்னைக் காண முடியும்.

அன்பு, நட்பு என்பதற்குப் பொருள் புரியாத ஒரு சில மனிதர்களுக்கு நான்கு நண்பர்களுடன் ஒருவனைப் பார்ப்பதே பொறாமையாக இருக்கும். ஏதாவது பொல்லாங்கு கூறச் செய்யும். யார் யாருடைய கண்களையோ உறுத்துகிறது என்பதற்காக நான் கவலைப்பட்டவனும் அல்ல. என் நண்பர்களின் முகம் வாடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பல நண்பர்களில் ஓரிருவர் நான் காட்டும் பாசத்தைப் பைத்தியக்காரத்தனம் என்று கருதியிருக்கலாம்; அல்லது அதனைப் பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றியிருக்கலாம்.

அதைப் போலவே என்னைப் பற்றி அவர்கள் தவறாகக் கருதுமளவிற்கு என்னையறியாமல் இடையிலிருப்பவர்களால் ஏதாவது நடந்தும் இருக்கலாம். ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு பொதுவாக நட்பு என்னும் பண்புக்கே புதிய தத்துவம் கற்பித்து விடக்கூடாது. தென்னன், மூர்த்தி இருவரின், துணையுடன் விழுப்புரத்து வேதனைகளை நான் சமாளித்துக் கொண்டேன். விழுப்புரத்தில் எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளின பட்டியலைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

காலையில் எழுந்ததும் கடமைகளை முடித்துக்கொண்டு எல்லாரும் நடுக்கூடத்திற்கு வந்து விடுவோம். அனைவரும் வரிசையாக எழுந்து நிற்க வேண்டும். நாடகக் குழுக்களில் வழக்கமாகக் கடைப்பிடித்து வரும் 'கோரஸ்' பாட்டு, கடவுள் வணக்கம் அல்ல. நாட்டு வணக்கமாக இருந்தது. 'திராவிடம் திராவிடம்' என்று தொடங்கும் நாட்டுப் பாடலைப் பாடி முடித்ததும் காலை அரைகுறையாகக் கிடைக்கும் உணவு.

அதை முடித்துக் கொண்டு நாடக ஒத்திகையை ஆரம்பிப்போம். ஒத்திகை முடிந்ததும் குளிப்பதற்குப் புறப்படுவோம். குளிப்பது என்பது அங்கு மிகப் பெரிய பிரசினை. நாங்கள் குடியிருந்த வீட்டிலிருந்து ஒரு மைல் தூரமாவது செல்ல வேண்டும். அங்கு குழாய்கள் மூலம் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில்தான் எங்களுக்குக் குளியல். ஆம். அந்தக் குழாய் நீர் தான் எங்களுக்குக் குற்றால அருவி. அந்த ஓரிரு நிமிடங்களிலே நான் வாழ்க்கையில் குளிர்ச்சியைக் கண்டேன் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமேயாகும்.

ஆனால் அந்தச் சமயங்களிலும் என் கண்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் நீர்த்துளிகள் குழாய்த் தண்ணீரோடு கலந்து விடுவதை நான் மட்டுமே அறிவேன். குளித்து விட்டு வீட்டிற்குக் கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக்கொண்டு துவைத்த சட்டையைத் தோளில் உலரப் போட்டுக் கொண்டு அரையணா சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை இரு கைகளாலும் தலைக்கு மேலே குடைபோலப் பிடித்துக் கொண்டு அதனை உலரவைத்தவாறு வீட்டிற்கு வந்து, உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு, பிற்பகல் உணவிற்குத் தவம் இருப்போம்.

'தண்டனை'யை அனுபவித்த பிறகு சற்று நேரம் கண் அயர்வோம். எனக்குத் தூக்கம் வரும் என்றா கருதுகிறீர்கள். இளமையிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சுமை தாங்க முடியாமல் உள்ளத்தை நலித்துக் கொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். கட்சிக் கொள்கைகளை நாடக வாயிலாகப் பரப்புவதற்கு நமது பணி பயன்படுகிறது என்ற ஒரே ஆறுதல் தவிர வேறு எந்த ஆறுதலும் எனக்கில்லை. மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஒத்திகை தொடங்கும்.

இரவுச் சாப்பாட்டை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு நாடகக் கொட்டகைக்கு 'வேஷம்' தடவிக் கொள்ளப் புறப்பட்டு விடுவோம். ஒவ்வொரு வேளை உணவிற்கும் 'கோரஸ்' பாடி, கடைசியில் நாடகத் துவக்கத்திலும் இறுதியிலும் பாடுவதோடு மொத்தம் ஐந்து முறை ஒரு நாளைக்கு நாங்கள் 'கோரஸ்' பாடியாக வேண்டும். ஒரு வழியாக அன்றைய நாடகம் ஆரம்பிக்கப்படும். ஒரு வழியாக என்று அந்த வார்த்தையை ஏன் அழுத்திச் சொல்லுகிறேனென்றால், நாடக வசூலைப் பொறுத்துத்தானே நாடகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிய வைப்பதற்காகத்தான்!

முதல் ஒரு வாரம் நான் எழுதிய 'பழனியப்பன்' நாடகம் நடைபெற்றது. மக்களைக் கவரும் வகையில் அந்த நாடகத்தின் பெயரை 'சாந்தா', அல்லது 'பழனியப்பன்' என்று மாற்றிக் கொள்ளலாம் என்று நாடக உரிமையாளர் கருத்துத் தெரிவித்தார் என்னதான் பெயர் மாற்றினாலும் எங்கள் நாடகத்தைக் காண மக்கள் வரவில்லை.

பார்த்த மக்கள் நாடகத்தைப் பாராட்டினர். ஆனால் வசூலில்லை. நாடக மன்றம் கடனாளியாகத் தொடங்கிற்று ஒரு நாளைக்கு எண்பது ரூபாயும், எழுபது ரூபாயும் வசூல் என்றால் என்ன செய்ய முடியும்? ஒரு நாள் நாடகத்திற்குத் தலைமை வகிக்கப் பெரியார் வந்திருந்தார். இன்னொரு நாள் அண்ணா வந்திருந்தார். அவரிடத்திலேயே நாடக மன்ற உரிமையாளர் பத்து ரூபாய் கடன் கேட்டு வாங்கிய நிகழ்ச்சியையும், அண்ணா புன்னகையோடு அந்தப் பத்து ரூபாயைக் கொடுத்த நிகழ்ச்சியையும், நாடகம் முடிந்து ஊருக்குப் போகு முன், அண்ணா அவர்கள் என் முதுகில் தட்டி, "கருணா, போய் வருகிறேன்" என்று அன்பொழுகக் கூறியதையும் என்னால் மறக்கவே முடியாது.

விழுப்புரத்தில் எங்கள் நாடகங்கள் வெற்றிகரமான வசூலைத் தராததற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. திராவிட நடிகர்க் கழகம் என்ற பெயரை விழுப்புரத்து மக்கள் வெறுத்தனர். எதற்காக? அரசியல் காரணங்களுக்காகவா? அல்ல! அல்ல! அவர்கள் கடைத்தெருவில் பேசிக் கொண்டதை அப்படியே தருகிறேன்: "நாகப்பட்டினத்திலிருந்து ஒரு நாடகக் கம்பெனி வந்திருக்கப்பா. நாற்பது பசங்களுக்கு மேல் இருக்காங்க. எல்லாம் படிச்ச பறப்பசங்க. பறயன் பேராலேயே கம்பெனிக்கும் பேர் வச்சிக்கிட்டிருக்காங்க."

"அப்படியா சங்கதி? அந்த நாடகத்தைப் பார்க்க அவன் சாதிக்காரன்தான் வரணும்." எங்கள் தோல்விக்குக் காரணம் இதுதான். 25-ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் போன்ற பட்டணங்களில் சாதி வெறி எந்த அளவிற்குத் தலைதூக்கி இருந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். அது மட்டுமல்ல. 'திராவிட' என்ற சொல் சாதி வேறு - பாடின்றித் தென்னகத்தில் உள்ள பழம் பெரும் இனத்தினைக் குறிக்கும் பெயர் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளக்கூடிய பக்குவம் பெறாதவர்களாக மக்கள் இருந்தார்கள் என்பதற்கும் இது எடுத்துக்காட்டாகும்.

விழுப்புரத்தில் 1944-ஆம் ஆண்டு 'திராவிட' என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டு அதன் காரணமாக அருமையான தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாகப் பேசுகிற நிலை இருந்தது என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் 1940-ல் திருவாரூரில் கூடிய நீதிக் கட்சி மாநாட்டில் பெரியார் அவர்களுடைய தலைமையில், "திராவிட நாடு திராவிடருக்கே" என்ற தீர்மானத்தைத் திரு பி.பாலசுப்ரமணியம் முன்மொழிய, அறிஞர் அண்ணா அவர்களும் சி. பாசுதேவ் அவர்களும் வழிமொழிந்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தொன்மை திராவிட மொழி ஒன்றிலிருந்து தோன்றியவைகளே என்பதும் அம்மொழிகளைப் பேசுவோர் திராவிடர் என்பதும் கால்டுவெல் பாதிரியார் போன்ற அறிஞர் பெருமக்கள்செய்த ஆராய்ச்சி முடிவுகளாகும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் திருவாரூர் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவைகளுக்கான வழிமுறைகளைப் பற்றி நீண்டதொரு விளக்கச் சொற்பொழிவாற்றினார்.

அதுவரை நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை வகித்து வந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், கட்சித்தலைவர் பெரியார் அவர்களிடம் பல்வேறு காரணங்களால் கருத்து வேறுபாடு கொண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். அப்போது 'விடுதலை'ப் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த அண்ணா அவர்கள் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடம், திராவிடர் என்ற உத்வேகத்தை நாட்டில் எழுப்புவதற்காக 'திராவிட நாடு' என்கிற கிழமை இதழை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் துவக்கினார்கள்.

அதனையொட்டித் திராவிடர்க் கழகம் என்ற பெயரால் ஒரு துணை மன்றம் போன்ற அமைப்பினை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் உருவாக்கினார். அந்தத் துணை அமைப்பு எதிர்காலத்தில் நாடு தழுவிய இயக்கமாக ஆகுமென்று அன்று யாரும் எதிர்பார்த்திட்டதில்லை. நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா அவர்கள் இருந்ததால் கட்சி வளர்ந்திடவும் புதிய வேகம் கொண்டிடவும் புதிய குறிக்கோள் பெற்றிடவும் வழிமுறை காண வேண்டுமென்று அண்ணா அவர்கள் துடித்தார்கள்.

நீதிக் கட்சியில் இருந்த பெரும் தலைவர்கள் மாட மாளிகை, மல்லிகை மஞ்சம், கூட கோபுரம், கொட்டு முழக்கு என்றெல்லாம் ஆடம்பரப் பிரியர்களாக இருந்தார்கள். குடிசைகளும், அங்கேயெழும் குரல்களும் அவர்கள் காதில் விழ வாய்ப்பில்லை. அத்தகையோர் பிடியிலிருந்த நீதிக்கட்சியை அண்ணா விடுவிக்க முயன்றார். நான் விழுப்புரத்திலே நாடகம் நடத்திக் கொண்டிருந்த அதே 1944-ம் ஆண்டில்தான் சேலத்தில் நீதிக் கட்சி மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பெரியாரை இறக்கிவிட நீதிக் கட்சிச் சீமான்களும், கோமான்களும் முயன்றார்கள். அப்படி நடைபெற்று விடாமல் பெரியாரின் தலைமையைக் காப்பாற்ற அண்ணா நாடெங்கும் சூறாவளிப் பிரயாணம் செய்து, கட்சித் தொண்டர்களின் ஆதரவைப் பெருக்கினார். எதிர்ப்புக்களை முறியடிக்கவும் நீதிக் கட்சியை ஏழைகளின் இல்லத்திற்குக் கொண்டுவரவேண்டுமென்ற தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்திய விடுதலையில் தனக்கிருந்த அழிக்க முடியாத பற்றினை வெளிப்படுத்திக் கொள்ளவும் அண்ணா அவர்கள் சேலம் மாநாட்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

சரித்திரப் புகழ் படைத்த அந்தத் தீர்மானத்திற்கு 'அண்ணாதுரை தீர்மானம்' என்று பெயர். நீதிக் கட்சி என்ற பெயரை மாற்றித் திராவிடர் கழகம் என்று பெயரிடப்பட வேண்டுமென்றும், வெள்ளையன் ஆட்சியால் தரப்பட்ட 'சர்', 'ராவ்பகதூர்' திவான்பகதூர்' போன்ற பட்டங்கள் துறக்கப்பட வேண்டுமென்றும் கௌரவ நீதிபதி மற்றும் நியமனப் பதவி கொண்டவர்கள் அவைகளை ரரஜினாமாச் செய்யவேண்டுமென்றும், தங்களுடைய பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை விட்டொழிக்க வேண்டுமென்றும் அண்ணாவின் தீர்மானம் முழக்கமிட்டது.

35-மணி நேர விவாதத்திற்கு அந்தத் தீர்மானம் உள்ளாகியது. கட்சியின் ஆய்வுக் குழு அண்ணாவின் தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தது. பின்னர் பொது மாநாட்டினில் அண்ணாவின் தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டுப் பிறகு இறுதியில் அண்ணா விளக்கவுரை வழங்கினார். அதனைக் கட்சித் தோழர்களும், பொது மக்களும் தங்கள் ஆர்வமிகுந்த கையொலிகளால் வரவேற்றவாறு இருந்தனர். அதனைக் கண்ட நீதிக் கட்சிப் பெரிய மனிதர்கள் ஒவ்வொருவராக மாநாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இறுதியில் அண்ணா தீர்மானம் இடி முழக்கமெனக் கையொலிகளுக்கிடையே நிறைவேறியது. பெரியார் தலைமையை அண்ணா காப்பாற்றியது மட்டுமல்ல, நீதிக் கட்சிக்கு ஒரு புதிய திருப்பத்தையும் தந்தார். அப்பொழுது பரவத் தொடங்கிய 'திராவிட' என்னும் அந்தச் சொல்தான் விழுப்புரத்தில் பிரசினைக்குரியதாக மாறி எங்கள் நாடக மன்றத்தின் வசூலையும் பாதித்து எங்களை அந்த ஊரிலிருந்து மூட்டை கட்டிக் கொள்ளவும் செய்தது!