நெஞ்சுக்கு நீதி
இதயத்தைத் தந்திடு, அண்ணா! · 55 / 391
இதயத்தைத் தந்திடு, அண்ணா! -ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் நள்ளிரவு. உலகமே அமைதியில் புதைந்து கொண்டிருக்கும் வேளை. ஆனால் அடையாறு மருத்துவ மனையைச் சுற்றிலுமோ இலட்சக் கணக்கான மக்கள் கடல் வெட வெடக்கச் செய்யும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அண்ணாவைப் பற்றிய நற்செய்தி கேட்டிட ஆர்வத்தோடு அலை மோதிக் கிடக்கிறது. பன்னிரண்டு மணியும் தாண்டி பிப்ரவரி மூன்றாம் நாள் தொடங்குகிறது. மணி 0.22.
திடீரென்று ஒரு பேரதிர்ச்சி-பிரளயம். இறப்புக்கு இரக்கம் ஏது? அதற்கு அண்ணாவின் இன்னுயிர் மீது அதற்குள் ஏன் தான் அத்துணை விருப்பமோ? வெறிப் பாய்ச்சலோ? எத்தனை எத்தனையோ ஏழை எளிய உயிர்களைக் கரையேற்றிடப் புறப்பட்ட ஒரு மாபெரும் கருணைக் கப்பல் திடீரென்று கவிழ்ந்து போயிற்று! எத்தனை எத்தனையோ இருண்ட மனக்காடுகளில் எல்லாம் சிந்தனை ஒளிக்கதிர்களைப் பரப்பிய ஒரு நந்தா விளக்கு திடீரென்று அணைந்து விட்டது!
நாடே கண்ணீர்க் கடலாய் மாறிற்று; கதறிக் கதறிப் புலம்பிற்று. 'அண்ணா இறந்து விட்டார்' என்ற சொற்களையே கேட்கப் பொறுக்காத சிலர் அந்தக் கணமே தங்கள் உயிரினைத் துறந்து அவரைத் தேடிச் சென்றனர்! அண்ணாவின் சடலத்தையாவது காண மாட்டோமா என்ற ஆற்றொணாத் துயருடன் சென்னை நோக்கி வந்த ரயிலின் உள்ளே இடங்கிடைக்காமல் மேற்கூரையிலும் ஏறி வந்த இலட்சியத் தங்கங்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் அருகே தங்கள் தலைகளைக் காவு கொடுத்து மாண்டனர்.
இறுதி அஞ்சலி செலுத்திட இதுகாறும் வேறு எந்தத் தலைவருக்குத் தான் அப்படியொரு மக்கள் வெள்ளம் சென்னையை நோக்கிப் பாய்ந்து வந்தது?. இனி எந்தத் தலைவருக்குத்தான் அப்படியொரு வெள்ளம் பாயப் போகிறது? இராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட அண்ணாவின் சடலத்தைக் கண்டிடச் சுவர்களின் மீது ஏறி அப்படியே நீர்க் குழாய்களையும் தாவித் தாவி எத்தனையோ ஆடவர்கள் மட்டுமா, பெண்களும் கூட இடுப்பொடிந்து விழுந்தார்களே!
படிகட்டுகளிலே மேலேறி வரமுடியாமல் புரண்டு உருண்டார்களே! எத்தனையோ பேர் மயங்கி விழுந்தார்களே! மடிந்தும் போனார்களே! எல்லாத் துறைகளிலுமே புதிய வரலாறு படைத்திட்ட அண்ணா தமது மரணத்திலும் அப்படியொரு வரலாற்றைப் படைத்து விட்டார்! அவருடைய இறுதிப் பயணமுந்தான் எத்துணை பிரம்மாண்டமான அழுகைக் காவியமாய் அமைந்து போயிற்று! மவுண்ட்ரோடில் செம்பட்டு விரிப்பாகச் சிரித்துக் கிடந்த அந்த ரோஜாப் பூக் குவியலெல்லாம் அண்ணாவின் சவப்பெட்டி கடந்து சென்ற பின்னர் இலட்சக் கணக்கான காலடிச் சுவடுகள் பட்டுக் கன்னங்கரேல் என்று கரியாகி விடவில்லையா?
பிறப்பும் இறப்பும் கலந்த வாழ்க்கையின் தத்துவத்தையே கரியாகிப் போன சிவந்த ரோஜாக்கள் பிரதிபலிப்பதாக அப்போது நான் கருதிக் கொண்டேன். அண்ணா அவர்கள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்ததும் குடும்ப வழக்கப்படியே அவர் தம் சடலத்தை எரிப்பதற்கே முதலில் எண்ணப்பட்டது. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்று விடியற்காலை வெளியான ஏடுகளிலும் செய்தி வந்து விட்டது. ஆனால் எங்களுக்கென்னவோ பத்தோடு பதினொன்றாக அவர் அவ்வாறு எரிக்கப்படுவது உகந்ததாகப் படவில்லை.
தமிழினத்தையே தலை நிமிர்த்திடச் செய்து கலங்கரை விளக்கமாக வழிகாட்டிய, ஒளியூட்டிய அண்ணா அவர்களுக்குக் காலாகாலத்திற்கும் அழியவே அழியாத ஒரு நிலையாய நினைவுச் சின்னம் எழுப்புவதே முறையான நன்றிக் கடன் ஆகும் என்று நம்பினோம். அதற்கு அவர்தம் சடலத்தை எரிக்காமல் புதைக்கச் செய்து அங்கே கல்லறை எழுப்புவதே சரி என்றும் கருதினோம். அந்தக் கருத்தினை அண்ணியார் மற்றும் அண்ணாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்கள் எல்லோருமே அதனை ஏற்றுக் கொண்டனர்.
உடனே வங்கக் கடற்கரையோரத்தில் அந்தத் தங்கக் குணத் தலைவரின் சடலம் தங்குவதற்குரிய இடம் தேர்ந்தெடுக்கப் பெற்றது. புதர்கள் மண்டிக் கிடந்த இடம்தான் அது எனினும்- 'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கவினொழுகும் கல்லறை எழுப்பப்பட்டுப் புதுமை அழகு கொழிக்கும் நினைவுச்சின்னம் உள்ள- இடமாக அணையா விளக்கு அமைந்த நெடுந்தூண் நிற்கும் இடமாக அது மாற்றப்பட்டுவிட்டது.
சென்னைக்குச் செல்பவர்கள் அண்ணா சமாதி அழகினைப் பருகிடாமல் திரும்ப மாட்டார்கள் எனச் சொல்லிடும் அளவுக்கு அந்த நினைவு நெடுந்தூண் ஒளிவீசி நிற்கிறது. தமிழக முதல்வராக இருந்த அண்ணா அவர்களின் மறைவு இந்தியா முழுவதையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும் மற்ற மாநில முதலமைச்சர்களும், ஏனைய அரும்பெரும் தலைவர்களும் வெளிநாடுகளின் தூதுவர்களும் இரங்கற் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
மத்திய அரசின் சார்பில் அண்ணாவின் சடலத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திட அமைச்சர் ஒய். பி. சவான் அப்போது வருகை புரிந்தார். அரசாங்க மரியாதைகளுடன் அண்ணாவின் சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில் ஆட்சி யந்திர ஓட்டத்தில் தேக்கம் ஏற்படாமல் இருந்திட அரசாங்க அளவில் இன்னொரு ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்திய அரசியல் சட்ட விதிகளின்படியும் மரபுகளை ஒட்டியும், அண்ணா மறைந்த பின் அரை மணி நேரத்திற்கெல்லாம் உடனடியாகப் புதிய தற்காலிக அமைச்சரவையொன்று அன்றிரவே கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டு, பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டது.
நாவலர் அவர்கள் தற்காலிக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் அந்தந்தத் துறைகளுடனேயே புதிய அமைச்சரவையில் இடம் பெற்றோம். அடுத்தாற்போல் நிலையான அமைச்சரவை அமைப்பதற்குரிய சட்டமன்ற தி. மு. கழகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று 10-2-1969 அன்று சட்டமன்ற விடுதியில் கூடியது. காலஞ் சென்ற அமைச்சர் ஏ. கோவிந்தசாவி அவர்கள் அதற்குத் தலைமை தாங்கினார்.
தேர்தல் நடைபெற்று முடிந்த பின், வெளியே காத்துக் கொண்டு இருந்த செய்தியாளர்களிடம் "தி. மு.க. சட்ட மன்றக் கட்சியின் தலைவராகத் திரு. மு. கருணாநிதி அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்" -என்று நாவலர் அவர்கள் தெரிவித்தார்கள். கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் அன்று மாலையே தமிழக முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். மற்ற அமைச்சர்களும் என்னைப்போலவே தமிழில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அந்த நிகழ்ச்சி முடிவுற்றதும் நேரே அண்ணா சாலைக்குச் சென்று எங்களையெல்லாம் அரசியலிலே வளர்த்து ஆளாக்கிவிட்ட எங்கள் இதயக் கோவிலிலே இறைவனாகவே கொலுவேறிவிட்ட அறிஞர் அண்ணா அவர்களின் அழகுச் சிலைக்கு மாலை அணிவித்தேன். கடற்கரையிலுள்ள கல்லறையிலும் மலர் வளையம் வைத்து வணங்கினேன். பின்னர் கோட்டைக்குச் சென்று முதலமைச்சருக்குரிய அந்த இருக்கையை அணுகிய போது 'அண்ணா இருந்த இருக்கையல்லவா?'
-என்று எண்ணிய அளவிலேயே அவருடைய மறைவினால் பீரிட்ட மாளாத்துயரம் என் மனத்தை அழுத்தியது. என் கண்கள் கலங்கின. அதன்பின் தலைமைச் செயலகத்திலிருந்து நேரே அடையாறு சென்று அங்கே நண்பர் கி. வீரமணியின் இல்லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன். மூதறிஞர் இராஜாஜி, காயிதே மில்லத், காமராசர், பக்தவத்சலம் ஆகியோரது இல்லங்களுக்குச் சென்று அவர்களது வாழ்த்துக்களையும் பெற்றேன்.
பதவி என்பது பொது மக்களுக்குப் பணியாற்றக் கிடைத்திட்ட ஒரு கருவிதான். அந்தக் கருவியை முறையாக, நெறியாக முழுப்பலன் விளைவிப்பதற்காகப் பயன் படுத்துவதைப் பொறுத்துத் தான் அந்தப் பதவிக்கும் பெருமை, அதனை ஏற்பவருக்கும் பெருமை. என்னைப் பொறுத்தமட்டில் அண்ணாவின் அடிச்சுவட்டில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் முயற்சியில் என் நெஞ்சம் கூறும் நீதிக்கேற்ற முறையில் முதலமைச்சர் பொறுப்பினை நிறைவற்றுவதற்கு என்னாலானவரை முயன்று வந்திருக்கிறேன்.
எதிர்க்கட்சி நிலையில் இருந்த காலத்தில் என்னென்ன கழக இலட்சியங்கள் எதிரொலிக்கப்பட்டனவோ அவற்றையேதான் நான் முதலமைச்சரான பிறகும் செயற்படுத்திட முனைந்திருக்கிறேன். அமைச்சர்கள், கழகத் தோழர்கள், அதிகாரிகள் ஆகியோரது ஒத்துழைப்புடன் கடந்த ஐந்தாண்டு காலத்திற்குள் என்னென்ன காரியங்கள், எத்தகைய இடையூறுகள், தடைக்கற்களுக்கிடையே நடைபெற்றன என்பது உங்கள் யாவருக்கும் தெரியும். அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகத்தில் பின்னர் எழுதலாம் என எண்ணியுள்ளேன்.
என்னைக் கைதியாக்கிச் சூழ்ந்து கொண்டிருக்கும் கடமைகளின் பெருஞ்சுமையால் காலத்தின் அருமையால் எனக்குச் சிறிது ஓய்வு தேவைப்ப[கிறது. வெகுவேகமாகப் பல நிலையங்களில் நிற்காமலே ஓடிவந்த விரைவுப் புகை வண்டி கூட இடையில் ஒரு பெரிய சந்திப்பில் களைப்பாற்றிக் கொள்ள நீரோ நிலக்கரியோ டீசலோ ஏற்றிக்கொள்ளச் சிறுபொழுது நின்று புறப்படுவது உண்டு. அப்படித்தான் கொஞ்சம் இடைவேளை எனக்கும் தேவைப்படுகிறது சிறிது இளைப்பாறிய பின்னர் 'நெஞ்சுக்கு நீதி'யின் நீடித்தபயணம் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்து நடைபெறும் என்பதை, உறுதியாகக் கூற விரும்புகிறேன், ஒன்றை மட்டும் இங்கே நான் தெளிவாகப் பதிய வைப்பதும் என் கடமையாகும்.
நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் அண்ணா அவர்களைப்பற்றிய நினைவே எனக்கு ஊன்றுகோலாய்த் துணைபுரிகிறது. அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்றுக் கொண்ட உணர்வோடு தான் நான் ஒவ்வொரு கணமும் நடை போடுகிறேன். அண்ணா அவர்களின் மறைவையொட்டி வானொலி மூலம் நான் அஞ்சலி செலுத்தினேனோ அந்த ஒலி முழக்கங்கள் என் செவியிலும் எதிரொலித்த வண்ணமே இருக்கின்றன... வானொலியில் என்னுடைய அந்த இரங்கற்பாவைக் கேட்டுவிட்டு, "அன்புள்ள திரு.
கருணாநிதி அவர்களுக்கு, அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டிருக்கிறீர்கள். அது இதுவரை எந்தக் கவிஞருக்கும் தோன்றாத கற்பனை" -என்று திரு. எஸ். எஸ். வாசன் அவர்கள் உளந் திறந்து மடல் விடுத்தாரே, அதுவும் என் நினைவில் நிழலாடிக்கொண்டே யிருக்கிறது. அந்தக் கவிதை வரிகளுடனேயே இந்த 'நெஞ்சுக்கு நீதி' முதற்பாகம் முடிவுக்கு வருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்: எம் அண்ணா......இதய மன்னா படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே எமைவிடுத்துப் பெரும்பயணத்தை ஏன் தொடர்ந்தாய் ?
உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே! என் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றி விட்டாய் ? நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல் நிலத்துக்குள் நிழல்தேடப் போய்விட்டாய்; நியாயந்தானா? கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல; நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ....? நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய் ? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்...இன்று மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை! கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்' கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்துவா எம் அண்ணா! வரமாட்டாய், வரமாட்டாய் இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா...நீ இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா......
வணக்கம் முதற்பாகம் முற்றிற்று
