உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வாழ்வதற்கு வழி? நடிகனானேன் நான்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வாழ்வதற்கு வழி? நடிகனானேன் நான்! · 54 / 391

வாழ்வதற்கு வழி? நடிகனானேன் நான்! பெ ண் எப்படி இருப்பாளோ? அழகியோ? அல்லவோ? கறுப்போ? சிவப்போ? குணவதியாக இருப்பாளோ? குடும்பத்துக்கு ஏற்றவள்தானா? சிந்தனை இந்தக் கேள்விகளோடு நின்றுவிடவில்லை. அதற்குள் நமக்கேன் கல்யாண ஆசை வந்தது? சே, சே, அந்தக் காதல் விவகாரம் அல்லவா நம்மை இப்படி நம் வீட்டாரிடம் காட்டிக் கொடுத்துவிட்டது என்றெல்லாம் எண்ணிக் குழம்பியவனாகப் பெண் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த என்னைப் பெண்ணின் தகப்பனார் அறிமுகம் செய்து கொண்டதும்- "மகமாயி!"

என்று உரத்த குரலில் அவர் கூறினார். யானை பிளிறுவது போல் இருந்தது. தலையணைக்கு அருகேயிருந்த விபூதியை எடுத்து என் கையிலே பக்தி சொட்டச் சொட்டக் கொடுத்தார். மறுக்க முடியுமா? வாங்கிக்கொண்டேன். பூசிக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே நான் என் வீட்டாரிடம், "பெண்ணைப் பார்ப்பது இருக்கட்டும். சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக்கொள்ளாவிடில் பெண்ணைப் பார்த்து என்ன பயன்? முதலில் நான் பார்த்த பெண் போல் ஆகிவிடப் போகிறது!"

என்று கூறினேன். பெண்வீட்டார் சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு பெண் பார்க்கும் படலம்! எனக்குச் சொல்ல முடியாத வெட்கம்! எவ்வளவோ முயன்றாலும் என் தலை நிமிர மறுத்துவிட்டது. கடைசியாக தாழ்வாரத்துப் பக்கம் என்னை நிற்கவைத்துக் கொஞ்ச தூரத்தில் பெண்ணை அழைத்து வந்து நிறுத்தினார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட எத்தனையோ காட்சிகள் மறந்துவிட்டன. ஆனால் அந்தக் காட்சி நான் இன்னும் மறக்காத காட்சிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது!

இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவில் உள்ள அந்த இல்லத்துத் தாழ்வாரத்தில் அடுக்களை ஓரமாக உள்ள தட்டிக்கு மறைவில் நின்றவாறு, முதல் தடவையாக அவள் என்னைப் பார்த்த அந்த மோகனக் காட்சியை அதே சுவையுடன் நான் காணமுடிகிறது. அது மறையாத காட்சி! அழியாத காட்சி! திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. 1944-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பதின்மூன்றாம் நாள் நான் வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பத்தைச் சந்திக்க வேண்டியவனானேன்.

திருவாரூரில் எனக்கும் என் உயிர் அணுக்களில் கொலு வீற்றிருக்கும் அன்புப் பத்மாவிற்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடைபெற்றது. அதே நாளில் எனது மைத்துனர் ஜெயராம் அவர்களுக்கும் அதே வீட்டில் திருமணம். எனக்குச் சுயமரியாதை முறையில் 'மணவிழா' நடைபெற்றது. அவருக்குப் புரோகித முறையில் 'விவாக சுபமுகூர்த்தம்' நடைபெற்றது. இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தனது இளவல் செழியனுடன் வடகண்டம் என்னும் சிற்றூரிலிருந்து (அவரது சொந்த ஊர்) ஏறத்தாழ ஆறு மைல் நடந்தே வந்து திருமணத்தில் கலந்துகொண்டார் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், கடலூரில் சிறந்ததொரு வழக்கறிஞராகவும் விளங்கிய நண்பர் இளம்வழுதி எனக்கு நெருங்கிய தோழர். இரண்டு நாட்கள் முன்னதாகவே மணவிழாவுக்கு வந்து பணியாற்றினார். நாகை வழக்கறிஞர் விசயராகவலு என்னும் பெரியவர் தலைமையில்தான் நானும் பத்மாவும் மாலை மாற்றிக் கொண்டோம். எங்கள் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, என் மைத்துனரின் திருமணத்திற்குக் குறிப்பிட்ட லக்கினம் தவறிவிடுமோ என்ற கவலை பழைமைவாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

அவர்கள் என் திருமணத்தில் நுழைந்து பரபரப்புக் காட்டினர். பதைத்தனர்; சீறி விழுந்தனர். அவர்களின் லக்கினம் தவறிவிடக்கூடாதே என்பதற்காக நாங்களும் திருமண நிகழ்ச்சியையொட்டிய சொற்பொழிவுகளை மாலை நேரத்துக்கு மாற்றி வைத்துக்கொண்டு அவர்கள் விரும்பி வரவேற்ற லக்கினத்துக்கு வழிவிட்டோம். அன்றிரவு கலைவாணர் என். எஸ். கே. அவர்களின் 'கிந்தனார் கதா காலட்சேபம். காலட்சேபம் என்றால் பழமையின் முடை நாற்றம் வீசுகின்ற ஒரு நிகழ்ச்சி என்னும் நிலையை மாற்றியவர் கலைவாணர் அவர்கள்.

பாகவத சிரோன்மணியைப் போலவே வேடமணிந்து, பக்கவாத்தியக் குழுவினருடன் மேடையில் அவர் காட்சியளிக்கும் போது, இன்றைக்குப் பக்திரசம் சொட்டுகின்ற அருமையான கதையொன்றை ரசிக்கப் போகிறோம் என்று புராணிகர்கள் வால் பிளந்து நிற்பார்கள். "ஆலயத்துக்குச் சென்றான் அந்தக் காலத்து நந்தன்; அறிவாலயத்துக்குச் செல்கிறான் இந்தக் காலத்துக் கிந்தன்" என்று கலைவாணர் முழங்கும்போது கூடியிருப்போரின் முகம் மலரும்.

"கருத்து விருந்து இதுவன்றோ!" எனக் கூறிக் களிப்படைவர். அவரது புரட்சிகரமான கதாகாலட்சேபத்துக்குத் தென்னகமெங்கும் வரவேற்பு, ஆதரவு, பாராட்டு. சேரியிலே பிறந்து செழிப்பின்றித் திரிந்த ஓர் இளைஞன் சென்னையம்பதிக்குச் சென்று கல்வி பயின்று 'நானும் மனிதனே' எனக்கஜனை செய்யும் கதைப் போக்குக் கண்டு கலைவாணரின் துணிவைப் பாராட்டாதவர் யார்? "அனைவரும் சமம்!"

என்ற தத்துவம் ஆல்போல் தழைத்துவிட்ட காலத்தை இன்று கண்டு மகிழ்கின்றோம். ஆனால் கலைவாணரின் 'கிந்தனார்' புரட்சி நடைபெற்ற காலம் எப்படிப்பட்டது? பழைமையில் மோகமும், வெறியுங்கொண்டவர்கள் கலைவாணருக்குத் தந்த எதிர்ப்புகள் எப்படிப்பட்டவை? அத்துணைக் கிளர்ச்சிக்குக் காரணமான 'கிந்தனார்' எங்கள் திருமண விழாவிலே நடைபெறுகிறதென்றால் பந்தல் கொள்ளுமா? நீண்ட நெடும் பந்தல் இருந்த இடம் தெரியவில்லை. அலைகடலெனக் கூட்டம் உள்ளே நுழைந்துவிட்டது.

கிந்தனார் கதை நிகழ்ச்சி தடைப்பட்டது. பாதுகாப்புக்கு நூற்றுக் கணக்கில் போலீசார் வந்தனர். மாப்பிள்ளைகளான நானும் என் மைத்துனரும் கூடப் பந்தலுக்குள் நுழைய முடியாமல் தவித்தோம். அந்த நேரத்தில் என் கண்கள் என்னையறியாமல் பெண்கள் பகுதியில் பார்த்தன. ஏன் என்று சொல்லவும் வேண்டுமோ? அவள் பத்திரமாக இருக்கிறாளா என்று பார்க்கத்தான். என்னைப் போலவே அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து என் பத்மாவின் கண்கள் ஏக்கத்துடனும்.

அச்சத்துடனும் நான் எங்கேயிருக்கிறேன் என்று தேடிக்கொண்டிருந்தன. கூட்டத்தில் சிக்கிக் கொண்டு நான் தவிப்பதை அவள் பார்த்து விட்டாள். ஐயோ! அந்த முகம் எவ்வளவு வாடிவிட்டது? காலையில்தான் எனக்கும் அவளுக்கும் வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டது. அதற்குள் எங்கிருந்து வந்தது இந்தப் பாச உணர்ச்சி! இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பேரலை எழுந்து வந்து என்னையும் அவளையும் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் பிரித்துவிட்டது.

அந்த அலையில் இரண்டொரு வாலிபர்கள் தங்கள் கால்களை முறித்துக் கொண்டார்கள். பிறகு 'கிந்தனார்' நிகழ்ச்சி பந்தலை விட்டுத் தெருவுக்கே மாற்றப்பட்டுவிட்டது! வெள்ளமெனக் கூடியிருந்த மக்களைக் கண்ட கலைவாணர் அவர்கள் அன்றையத் தினம் புதிய தெம்புடன் தனது கருத்துக்களை அள்ளிக் கொட்டினார். நானும் நண்பர்களும் இரவு உணவு கூட அருந்தாமல் கலைவாணரின் நிகழ்ச்சியைத் திருமண வீட்டின் கொல்லைப்புறத்துக் கிணற்றோரத்தில் அமர்ந்து ஒலிபெருக்கியின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

கொல்லை வழியாக உள்ளே நுழைந்து 'கிந்தனார்' மேடைக்குப் போக வழியிருந்தது. அந்த வழியே போகலாம் என்ற தீர்மானத்துடன் கொல்லைக் கதவைத் தட்டினோம். நடந்தது என்ன? உள்ளேயிருந்து பெண்கள் ஒரே கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். கூட்டத்திலேயுள்ள முரடர்கள் தான் கதவை இடிக்கிறார்கள் என்று பெண்கள் கருதிக்கொண்டு கத்திவிட்டனர். பிறகு என்ன செய்வது? இனி அங்கிருந்தால் ஆபத்து என எண்ணி அதைவிட்டு ஓடிவிட்டோம். மணவிழாவில் மாப்பிள்ளையின் கதி இப்படி ஆகிவிட்டது!

ஒருவாறு திருமண நிகழ்ச்சிகள் முடிவுற்றன. நண்பர்களும், சுற்றத்தாரும் அவரவர் ஊர் போய்ச் சேர்ந்தனர். ஓராண்டுக் காலம் வரையில் வாழ்க்கையின் சுவைப் படலம் பேரானந்தமாகத்தானிருந்தது. அதற்குப் பிறகு மன அமைதி குறையத் தலைப்பட்டது. "இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால் வருங்காலம் எப்படிப் போய் முடிவது?"

என்ற கேள்விகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கிளம்பின. அவைகளையெல்லாம் விட அருகிலிருந்து புறப்பட்ட அன்புக் கணைகள் என் உள்ளத்தைத் துளைக்கத் தொடங்கின. திருமணம் முடிந்த அடுத்த வாரமே பத்து நாட்கள் சுற்றுப் பயணம் அமைத்துக் கொண்டு பிரசங்கத்திற்குச் சென்று விட்டவன் நான். அப்படிக் கட்சி வெறி பிடித்து அலைந்த என் காதுகளில் யாருடைய சொல்லும் விழவில்லை. ஆனால் என் துணைவியின் அறிவுரைகள் என் கட்சி வேகத்தைத் தணிக்காமலே குடும்பப் பொறுப்பு என்னும் உணர்ச்சியை எனக்கு உண்டாக்கின.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். ஆனால் அப்படிக் கிடைக்கிற எந்த வேலையும் என்னை அடிமைப்படுத்திடும் வேலையாய் இருப்பதை நான் விரும்பவில்லை. பிறகு எனக்கு யார் வேலை தருவார்கள்? 'வாழ்வதற்கு என்ன வழி?' என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். என் பத்மா - என் கழுத்தில் மாலை சூட்டும்போது என்னென்ன எண்ணி இருப்பாள்? இப்போது அவள் என் நிலை கண்டு எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருப்பாள்! சே! சே! அவளை வேதனையடையச் செய்யக் கூடாது என்று திடமான முடிவு செய்து கொண்டேன்.

அதன் விளைவு? நான் நடிகனானேன்!