நெஞ்சுக்கு நீதி
கலைவாணர் சிலை திறந்தோம்! · 53 / 391
கலைவாணர் சிலை திறந்தோம்! சி ரிப்பு விருந்தளித்தார்; சிந்தனை மருந்தளித்தார். பட்டு விரிப்பொத்த உள்ளத்தால் பாசவெள்ளம் பாயவிட்டார். நரிப்போக்குத் துளியுமிலா நகைச்சுவையின் மாமன்னர்; எரிப்பாக ஒருசொல்லும் இயம்பாத என்.எஸ்.கே. அவருக்குச் சென்னையில் சிலை எழுப்பிட வேண்டும் என்கிற ஆசை எங்கள் எண்ணத்தில் அலை மோதிக்கொண்டிருந்த போதிலும், அது ஈடேறாமலே போய் விட்டது பல ஆண்டுகளாக. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு எழிலோடு நடந்து முடிந்த சமயம்.
அந்த மாநாட்டு ஊர்வலக் காட்சிக் குழுவினர் ஊர்வலத்தைப் படமாக்கி வெளியிட்டதில் கிடைத்த மிச்சப் பணத்தை என்ன செய்வது என்று என்னிடம் கேட்டனர். "கலைவாணர் அவர்களுக்குச் சிலை வைக்கலாமே!" என்று என் எண்ணத்தை வெளியிட்டேன். உடனே அதனை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சென்னை தியாகராயநகரில் வாணி மகாலுக்கு அருகில் நான்கு சாலைகளும் சந்திக்கும் பரந்த இடத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் கம்பீரமான முழுத்தோற்ற உருவச்சிலை அமைக்கப்பட்டது.
இருபதாயிரம் ரூபாய் செலவில் எடுப்பாக எழுப்பப்பட்ட அந்தச் சிலை 1969 ஜனவரித் திங்களில், பொங்கல் திருநாளில் என்னுடைய தலைமையில் திறந்து வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் யாரைக்கொண்டு சிலையைத் திறப்பது என்று சிந்தித்தபொழுது, அண்ணாவே எங்கள் கண்ணெதிரில் தோன்றினார். கலையுலகையே இருள் மூட்டம் கவிந்திடும் வகையில் கலைவாணர் சிறைப்பட்டிருந்த காலத்தில், அவரைப்பற்றி மற்றவர் எல்லாரும் மவுனம் சாதித்த வேளையில் அவரையும் எம்.கே.
தியாகராஜ பாகவதரையும் விடுதலை செய்திடத்தான் வேண்டும் என்று விடாமல் தமது 'திராவிட நாடு' இதழில் அஞ்சாமல் கோரிக்கை எழுப்பிய கரம் அண்ணாவின் கரமே அல்லவா? அந்தக் கரத்தைக் கொண்டே கலைவாணர் சிலையைத் திறந்து வைப்பதே பொருத்தமான செயலாக எங்களுக்குத் தோன்றியது. அண்ணா அவர்களோ உள்ளூற மறுபடியும் வாட்டத் தொடங்கிய நோயின் காரணமாக உருவமே மாறி, இளைத்து மெலிந்து, பழைய தெம்பை, கம்பீரத்தை இழந்து கொண்டிருந்த சமயம்.
எனினும், ஓய்வு கொள்வதற்காக அவர் காஞ்சி செல்லும் வழியில் அப்படியே கலைவாணர் சிலையைத் திறந்து வைத்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று என் கருத்தினை வெளியிட்டேன். மறுத்திடவில்லை அவர்; உடனே ஒப்புக்கொண்டார். டாக்டர்கள் தடுத்திட்ட போதிலும், அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விருப்புடன் இசைந்தார். சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு இருவரும் ஒன்றாகவே சென்றோம். கலைவாணர் சிலையினைத் திறந்து வைத்திட அண்ணாவால் வரமுடியுமோ, வரமுடியாதோ என்று ஐயப்பாடு கொண்டிருந்தவர்களுள் ஜெமினி அதிபர் திரு எஸ்.
எஸ். வாசன் அவர்களும் ஒருவர். அண்ணாவை நான் அழைத்துக்கொண்டு வந்ததால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் அவர். "இப்போதுதான் நல்ல நேரம் வந்திருக்கிறது கலைவாணர் சிலையைத் திறப்பதற்கு!" என்று உணர்ச்சிப் பெருக்கோடு உரைத்தார். அதைப்பற்றி அண்ணா அவர்கள் தம்முடைய சொற்பொழிவினூடே நகைச்சுவை மிளிர்ந்திட இவ்வாறு குறிப்பிட்டார்கள்: "....திரு வாசன் அவர்கள், இப்போதுதான் நல்ல நேரம் வந்திருக்கிறது' என்று கூறினார்.
வாசன் குறிப்பிட்ட நேரம் ராகுகாலமோ எமகண்டமோ இல்லாத நேரம் என்ற பொருளில் இல்லை. அவருடைய நண்பர்களான நாங்கள் ஆளவந்திருக்கின்ற நல்ல நேரத்தைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார்." அண்ணா கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி கலைவாணர் சிலை திறப்பு விழாதான். அதற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதை எண்ணும்பொழுது, ஏதோ ஒரு வகையான வியப்பும் உண்டாகிறது. இதில் இன்னொரு பொருத்தமான வேடிக்கை என்னவென்றால், கலைவாணர் தாம் இறப்பதற்கு முன்னால் இறுதியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி அண்ணா படத்திறப்பு விழாதான்.
அண்ணா அவர்கள் கடைசியாகக் கலந்துகொண்ட பொது நிழ்கச்சி கலைவாணர் சிலை திறப்பு விழாதான்! இருவர்தம் இதயப் பிணைப்புக்கு, எல்லையில்லாத நட்பின் ஆழத்துக்கு, எத்தகைய அருமையான எடுத்துக்காட்டுகளாக அமைந்து விட்டன அந்த இரு விழாக்களும்! "ஓர் இலையின் மேலுள்ள பனித்துளிபோல- உனது வாழ்க்கை என்பது காலத்தின் விளிம்புகளில் நடனமாடிக் கொண்டிருக்கட்டும்!"
என்றார் கவியரசர் ரவீந்திரநாத தாகூர். பனித்துளி மறையக் கூடியது. ஆனால் அண்ணா தமிழினத்தின் எழுச்சிக்காக, ஏற்றத்திற்காகப் புரிந்துள்ள பணிகள் மறையக் கூடியனவா? காலங்கள் மாறலாம். தமிழக மண்ணில் அண்ணா பதித்து விட்டுச் சென்றுள்ள காலடிச் சுவடுகள் மாறுமா என்ன? உறக்கமும் இறப்பும் ஒன்றே என்றார் திருவள்ளுவர். அந்த மீளாஉறக்கம் எங்கள் அண்ணனை அத்துணை விரைவில் வந்து அணுகும் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.
டாக்டர் மில்லர் அவர்கள் புற்று நோயைக் கடல் நண்டுக்கு ஒப்பிட்டார். அந்தக் கடல் நண்டு அண்ணாவின் மென்மையான உடம் பிற்குள் எத்தனையோ வளைகளை வெளியே தெரியாமலே தோண்டிக் கொண்டிருந்திருக்கிறது. டாக்டர்கள் அதனை 'செகண்டரி' என்று சொன்னார்கள்.
மறுபடியும் தாங்கொணாத வலி அண்ணாவைத் தாக்கத் தொடங்கிற்று. உடனடியாக வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தோம் அண்ணா அதற்கு உடன்படவில்லை. "சென்னையில் அரசாங்க மருத்துவ மனை இருக்கும் போது அதை விட்டுவிட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்குச் செல்வது நாமே நம்முடைய அரசு மருத்துவ மனையை மதிக்காதது போல ஆகி விடும்" என்றார்.
பொதுவாகத் தனியார் துறைகள் தளிர்ப்பதை விட, ஏழை எளியவர்களுக்குப் பயனளிக்கக் கூடிய அரசாங்கத் துறை ஆக்கம் பெறுவதிலேயே அண்ணாவுக்கு அக்கறை மிகுந்திருந்தது என்பதனையே அவருடைய வாதம் புலப்படுத்தியது. ஆயினும், அவருக்கு வந்துற்ற கொடிய நோய்க்குச் சிகிச்சையளித்திட வேலூரில் சில புதிய கருவிகள் வந்திருப்பதைக் கூறி அங்கே அழைத்துக் கொண்டு சென்றிட ஆவன செய்தோம். எங்களுடன் உரையாடிய அண்ணா குளியலறைக்குச் சென்றார்.
அங்கே அவர் கீழே விழுந்து மூர்ச்சையானார். ஓடிப் போய்த் தூக்கி நிமிர்த்தினோம். இனி வீட்டிலேயே வைத்திருப்பதில் பயனில்லை என்பதனை உணர்ந்து சென்னை-அடையாற்றில் உள்ள புற்று நோய் மருத்துவ நிலையத்துக்கு அவரைக் கொண்டு சென்றோம். டாக்டர் சி. எஸ். சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் குழு அண்ணாவின் உடல் நிலையைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டது. அமைச்சர்களாகிய நாங்கள் அத்தனை பேரும் எங்கள் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்துச் செய்து விட்டு அண்ணாவின் அருகிலேயே தங்கி விட்டோம்.
கழகத் தோழர்களும் பொது மக்களும் சுமக்க வொண்ணா இதய வேதனையைச் சுமந்தவர்களாக அலை அலையாக அடையாறு நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பம்பாயில் உள்ள 'டாட்டா நினைவுப் புற்று நோய்' மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் இருவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர், அண்ணாவைப் பரிசோதனை செய்வதற்காக. நிலைமை என்ன ஆகுமோ என்கிற அச்சம் எங்கள் நெஞ்சங்களை வாட்டிடவே அண்ணாவுக்கு முன்னர் சிகிச்சையளித்த டாக்டர் மில்லரையே அமெரிக்காவிலிருந்து வரவழைப்பது என்று முடிவெடுத்தோம்.
21-1-1969 அன்று நியூயார்க்கிலிருந்து டாக்டர் தியோடர் மில்லர் அவர்கள், தமக்குத் துணையாக டாக்டர் ஹென்ஸ்கே என்னும் இன்னொரு அமெரிக்க டாக்டரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். நான்கு நாட்கள் சென்னையில் தங்கி சிகிச்சைகள் செய்தார். ஆனால்- எத்தனை சிகிச்சைகள் செய்தென்ன? எத்துணை சக்தி வாய்ந்த மருந்துகளையெல்லாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் வரவழைத்துப் புகட்டி என்ன? எத்தனை விழிமணிகள் இமைக் கூடுகளையே மூடிடாமல், திறந்தபடியே இருந்தென்ன?
எத்தனை இதயங்கள் விம்மி வெடித்து, 'ஓ, இரக்கமற்ற சாவே! எங்கள் அண்ணனின் உயிருக்குப் பதிலாக என்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளேன்!' என்று கதறிப் புலம்பிக் காணிக்கை செலுத்திட முன் வந்தென்ன?
