நெஞ்சுக்கு நீதி
அண்ணனைப் பற்றியது நோய்! · 52 / 391
அண்ணனைப் பற்றியது நோய்! ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி உவகை வெள்ளத்திலே மிதந்து பீடுநடை போட்டுக் கொண்டிருந்த தமிழகத்தில்- 1968-செப்டம்பர் திங்கள் தொடக்கத்திலேயே துயர் நிழலொன்று படரத் துவங்கிற்று. அண்ணா அவர்கள் வயிற்று வலி தாங்காமல் அவதிப்படலானார். உதிராத மலர் இல்லை; உலராத பனி இல்லை; புதிரான வாழ்க்கை யிதில்; புதையாத பொருள் இல்லை; ஒலியாத சங்கில்லை; ஒடுங்காத மூச்சில்லை; இயற்கை நியதிகளில் இறப்பும் ஒரு கூறு அன்றோ?
ஆனால்- அந்த இறப்பு- எளிதாகவே வந்து மனிதரை ஏந்திச் சென்றால் எத்துணை இனிமையாக இருக்குமென அடிக்கடி நான் எண்ணிக் கொள்வது உண்டு. வாழும் பொழுதுதான் மனிதன் வடிக்கின்றான் கண்ணீர் என்றால்- துடிக்கின்றான் துயர் நெருப்பில் என்றால்-மாளும் பொழுதாவது மரணம் அவனுக்கு மலர் மெத்தையாக மாறக்கூடாதா? வாளாக-வேலாக அவனை அது குத்தத்தான் வேண்டுமா? வன்னெஞ்சக் கழுகாக அவனை அது கொத்தத்தான் வேண்டுமா? அண்ணாவைக் கொடுமைப்படுத்திய நோயை எண்ணிடும் பொழுதெல்லாம் கண்ணீர் பொங்குகிறது; கனக்கிறது நெஞ்சம்!
முதன் முதலில் வயிற்று வலிதான் அண்ணாவை வந்து வாட்டியது. வீட்டிலேயே -இருந்து மருந்துகளை அவர் அருந்தினார். டாக்டர் இரத்தினவேல் சுப்ரமணியம் கவனித்து வந்தார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், அண்ணா அவர்களுக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கப் போவதாக அறிவித்திருந்தனர். அந்தப் பட்டத்தினை நேரில் சென்று பெற்றுக் கொள்வதே முறையாகும் என்று நினைத்தார் அண்ணா. பிணியோ அவருக்குப் பெரும் வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது.
அதனால் அந்தச் சமயம் பயணம் எதுவும் மேற்கொண்டால் அது அவரது உடல் நலனுக்கு மேலும் ஊறு விளைத்திடுமே என்கிற அச்சத்தில் பட்டம் பெற்றிட அண்ணாமலை நகர் செல்வது அவ்வளவாக உகந்தது அல்ல என்று மற்றவர்கள் அண்ணாவிடம் சொல்லியிருக்கின்றனர். டாக்டரும் தடுத்திருக்கிறார். ஆனால் அண்ணா அவர்களோ தம் எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை. அந்த நிலையில் அண்ணியார் அவர்கள் என்னை அழைத்தார்கள். "நாங்க எவ்வளவோ சொல்லியும் அவங்க பிடிவாதமா இருக்கிறங்க.
நீங்க சொன்னால்தான் உன் அண்ணன் கேட்பாங்கன்னு எனக்குத் தோணுது!" என்றார்கள். நான் உடனே அண்ணாவிடம் சென்றேன். "இப்போ. அண்ணாமலை நகருக்குப் போக வேண்டாம். கொஞ்சம் அசைந்தாலும் அலுக்கை தாங்காது என்கிறபோது அவ்வளவு தொலைவு பயணம் போனால் உடம்பு எதுக்கு ஆகும்? அந்த அவதியைப் பிறகு எப்படித் தாங்க முடியும்? சிகிச்சைகளை ஒழுங்காகச் செய்து கொள்வதும் தடுமாறிப் போகுமே! 'டாக்டர்' பட்டத்தை வேறு யாராவது உங்கள் சார்பில் போய்ப் பெற்று வந்தால் போகிறது."
என்னுடைய வார்த்தைகளைக் கேட்டதும், "அப்படியா சொல்கிறாய்?...ம்" என்று மெலிந்த குரலில் முனகிய அண்ணா, என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தார். அந்தப் புன்னகையிலேயே என்னுடைய வேண்டுகோளுக்கு என் அண்ணள் இசைந்து விட்டார் என்பதைக் கண்டு கொண்டேன்-களிப்புற்றேன். "அது சரி, நாம் எல்லாரும் சென்னையிலேயே தங்கிவிட்டால் எப்படி? நானும் சுற்றுப்பயணம் போகாமல், நீயும் சுற்றுப் பயணம் போகாமல் இருக்கலாமா? கூடாது; நீ உடனே உன் திட்டப்படிச் சுற்றுப் பயணம் போய் வா!"
என்றார் கனிவோடு. அவர்தம் அன்புக் கட்டளையை ஏற்றுத் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தொகுதி நோக்கிப் பயணம் புறப்பட்டேன் நான். குற்றாலத்தில் கலையரங்கம் ஒன்று கட்டப்பெற்றது. 3-9-1968 அன்று கலைவாணர் பெயர் சூட்டி அதனைத் திறந்து வைத்திடச் சென்ற நான், குற்றலத்தையொட்டிய தென்காசியில் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். பின்னர் அங்கிருந்து காரைக்குடி நோக்கி நான் போய்க் கொண்டிருந்தபோது வழியில் மதுரை புகைவண்டி நிலையத்தில் அதிர்ச்சி அளித்திடக் கூடிய தொலைபேசிச் செய்தியொன்று எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து டாக்டர் இராமமூர்த்திதான் பேசினார். "அண்ணாவைப் பரிசோதனை செய்து பார்த்தோம். புற்று நோய்க்கான அடையாளம் இருப்பதாகத் தெரிகிறது." இந்தச் சொற்களைக் கேட்டதுமே என் நெஞ்சம் பதறிற்று; கண்ணீர் பெருகிற்று. "வரக்கூடாத நோய் வந்து விட்டதே அண்ணா! அதுவும் உங்களுக்கா அந்த நோய்!"
என்று வாய் விட்டுக் கதற வேண்டும் போல் நான் துடியாய்த துடித்தேன். மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் உடனடியாக ரத்து செய்து விட்டு அன்று இரவே நான், அரங்கண்ணல், மதுரைமுத்து ஆகியோர் கண்ணீர் மாலையுடன் சென்னைக்குத் திரும்பினோம். சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை யெல்லாம் ரத்துச் செய்துவிட்டுத் திரும்புமாறு நாவலர் அவர்களுக்கும் செய்தி அறிவிக்கப்பட்டு, அவரும் அவ்வாறே வந்து சேர்ந்தார். சென்னைப் பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த அண்ணாவைக் கண்டதும் துயரம் என் தொண்டையை அடைத்தது என் இதயமே தூக்க முடியாத சுமையாக எனக்குக் கனத்தது.
சோதனை செய்த மருத்துவ வல்லுநர்கள், அண்ணாவின் உணவுக் குழாயில் சதை வளர்ந்திருப்பதாகக் கூறினார்கள். அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்கள். அத்தகைய அறுவைச் சிகிச்சை சென்னையில் வசதிப்படாது என்று தோன்றியதால் அண்ணா அமெரிக்கா சென்று வருவதே அவசியமானதாகக் கருதப்பட்டது. அதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. 1968 செப்டம்பர் 8-ம் நாள். இருண்டு கிடந்த தமிழ் மண்ணிலே எழு ஞாயிறாய் ஒளிக் கதிர்களை உலவ விட்ட எத்தனை எத்தனையோ இலக்கியக் கருவூலங்களை - இலட்சிய முழக்கங்களைப் - பாயவிட்ட அறிவுப் பெரும் புனலாம் அண்ணா அவர்களுக்கு 'இலக்கியப் பேரறிஞர்' என்னும் பொருள் தரும் 'டாக்டர்' பட்டத்தினை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அளித்துச் சிறப்பித்தது; அதன் மூலம் தானும் சிறப்புப் பெற்றது.
முன்னர் நான் குறிப்பிட்டதைப் போலவே, முற்றிவிட்ட நோயின் காரணமாக அண்ணாவால் நேரில் சென்று அந்தப் பட்டத்தினைப் பெற்றுவர முடிந்திடவில்லை. நாவலர் அவர்களே அண்ணாவின் சார்பில் சென்று அப்போதைய ஆளுநர் உஜ்ஜல்சிங் வழங்கிய அந்தச் சான்றிதழை வாங்கி வந்தார். செப்டம்பர் பத்தாம் நாள் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் அண்ணா. அவரைத் தங்கள் உள்ளக் கோவிலில் ஒரு பெரும் ஆற்றலாய் ஏற்று வழிபடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழியனுப்பி வைத்திட வெள்ளமென நிரம்பி வழிந்தனர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்.
ஆளுநர் உஜ்ஜல்சிங், அமைச்சர் பெருமக்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாருமே அண்ணாவுக்கு வாழ்த்துக் கூறிட அங்கே வந்திருந்தனர். எனினும், தம்முடைய தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் அமர்ந்தபடி, சமுதாயப் பொதுப்பணிபில் தமக்குத் தனயனாக விளங்கிய அண்ணாவை வழியனுப்பிடத் தந்தைப் பெரியார் அவர்கள் வந்து காத்திருந்தது, அங்கே குழுமியிருந்தோர் அத்தனை பேருடைய நெஞ்சங்களையும் நெகிழச் செய்தது. நான், நாவலர், ஏனைய சில நண்பர்கள், விமானத்திலேயே பம்பாய் வரை சென்று அண்ணாவை வழியனுப்பி வைத்து விட்டுத் திரும்பினோம்.
அவருடன் அண்ணியார். பரிமளம், க. இராசாராம், இரா. செழியன், டாக்டர் சதாசிவம் ஆகியோர் அமெரிக்காவுக்குச் சென்றனர். பம்பாய் விமான நிலையத்துக்கு மராட்டிய முதல்வர் திரு வி. பி. நாயக், தம் துணைவியாருடன் வந்து அண்ணாவை வழியனுப்பியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு ஆண்டும் தம்முடைய பிறந்த நாளின்போது அண்ணா தமிழகத்தில்தான் இருந்திருக்கிறார். அவருக்காக விழாக்கள் எடுப்பதில் கழகத் தோழர்கள் கரைகடந்து களிப்புக் கடலிலே மிதந்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளிலோ எல்லா நிகழ்ச்சிகளும் எழுச்சியோடு கொண்டாடப்பட்ட போதிலும், ஏதோ ஓர் இனம் விளங்காத இருண்ட நிழல், அண்ணாவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்கிற ஏக்க நிழல், இடையிடையே எங்கள் இதயங்களில் படராமல் இல்லை. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரையில் 16-9-68-இல் கவியரங்கம் ஒன்று நடைபெற்றது. அதற்கு நான் தலைமையேற்றேன். அதனையடுத்து செப்டம்பர் பதினாறு, பதினேழு தேதிகளில் முறையே தஞ்சை, திருச்சி நகரங்களில் அண்ணாவின் திருவுருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
நானும் நாவலரும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். நியூயராக்-மெமோரியல் மருத்துவமனையில் 16-9-68 அன்றுதான் அண்ணாவுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதே நாளில்தான் தஞ்சையில் மணிக்கூண்டு அருகே அவர் தம் அழகான சிலையை, அமர்ந்தவாறே நூலைப் படிப்பதுபோன்ற சிலையை- நாவலர் தலைமையில் நான் திறந்து வைத்தேன். அப்போது இவ்வாறு குறிப்பிட்டேன்: ".....அமெரிக்க நாட்டிலே ஆப்ரகாம் லிங்கன் பிறந்தார், கென்னடி இருந்தார்; ஆனால் ஓர் அண்ணா பிறக்கவில்லையே என்று அமெரிக்கர்கள் ஏங்கினார்கள் போல் இருக்கிறது; அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதத்தில் இன்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ள அண்ணாவைத் தமிழ்த் தாய் மீண்டும் அங்கே பிரசவித்திருக்கிறாள்.
"இன்று அமெரிக்காவில் பிறந்திருக்கும் அண்ணா அவர்களுக்கு ஒரு நாள் வயதாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தை இன்னும் நூற்றாண்டு காலம் நலமுடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம். இந்த இதய வாழ்த்துக்களைப் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் நியூயார்க் மருத்துவ மனையிலிருக்கும் அண்ணா அவர்களுக்குக் காற்றின் வழியாக அனுப்புகிறோம்! கொடுமையான நோய்க்கு இரையாகிக் கடுமையான அறுவைச் சிகிச்சைக்கும் ஆளாகிவிட்ட அண்ணா அதிலிருந்து மீண்டும் பிழைத்து வருவது புத்துயிர் பெற்றுப் புதுப்பிறவி எடுத்து வருவதைப் போன்றது என்பதையே அவ்வாறு நான் குறிப்பிட்டேன்.
மாலையே இல்லாமல் எங்காவது வரவேற்பு வைபவம் உண்டா? எத்தனையோ அற்புதங்கள் அரசியல், சமூக, கலை, இலக்கிய அரங்குகளிலே நிகழ்த்திக் காட்டிய அண்ணாவின் வாழ்க்கையில் அந்த அற்புதமும் நடைபெற்றது. மாலையே அணிவிக்க முடியாத மனத்தவிப்புடன் இலட்சக் கணக்கான மக்கள் கடல், அண்ணா அவர்களுக்கு ஒரு முறை மகத்தான வரவேற்பு அளித்தது. அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் மருத்துவ மனையில் உலகப்புகழ் பெற்ற டாக்டர் மில்லர் அவர்களின் திறமையான சிகிச்சையின் காரணமாகத் தேறித் திரும்பி வந்த அண்ணா அவர்களுக்குத்தான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6-11-68 அன்று அத்தகைய விந்தையான வரவேற்பு வழங்கப்பட்டது.
ஏறத்தாழ அறுபது நாட்கள் அவர் தம் திருமுகம் காணாமல் சோக உருவங்களாய் உலவிய கழகத் தோழர்கள், அண்ணா விமானத்திலிருந்து தலையை நீட்டியதுமே மழை கண்ட பயிர் போல மகிழ்ச்சி தாங்காமல் துள்ளிக் குதித்தனர்; "அண்ணா வாழ்க!" என்னும் முழக்கங்கள் விமான நிலையமே அதிர்ந்திடும் அளவுக்கு அலைகளை எழுப்பின. குடை பொருத்தப்பட்ட திறந்த 'ஜீப்' வண்டி அண்ணாவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அண்ணா தாமே அதில் வந்து ஏறிக்கொண்டார்.
குடையின் கீழ் அவர் வசதியாக அமர்ந்துகொள்ள, நான் அருகில் நின்றிருக்க, நாவலரும் மற்றவரும் உடனிருக்க, அங்கிருந்து மெள்ளக் கிளம்பிற்று அந்த ஊர்தி. மீனம்பாக்கத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை வழிநெடுகக் கண் கொள்ளாக் காட்சியாக வண்ண வண்ணத் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், வளையாத, வற்றாத வாஞ்சை உள்ளங்கள் இலட்சக் கணக்கில். வீடு வந்து சேர்ந்ததும் அண்ணா மாடிக்குச் சென்றார். சில நொடிகளில் நண்பர் பொன்.
சொக்கலிங்கம் என் அருகே வந்து என்னை மாத்திரம் அண்ணா மாடிக்கு வரச் சொல்லதாகக் கூறினார். நான் மேலே செனறேன். என்னை அமருமாறு கூறிய அண்ணா நாம் அணிந்திருந்த சட்டையை மேலே தூக்கி அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருந்ததைக் காட்டினார். அதனைக் கண்டதும் எனக்கு நெஞ்சமே வெடித்து விடும் போல் இருந்தது. வேதனை தாங்க முடியாமல், விம்மலை அடக்க முடியாமல் அண்ணாவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
அவரும் என்னைத் தழுவிக்கொண்டு அழுகையை அடக்க முடியாமல் தவித்தார். தாய்ப் பறவையும் குஞ்சும் போல அந்தத் தழுவலிலேயே அண்ணாவும் நானும் குமுறிக் குமுறிக் கரைந்தோம். பின்னர் நீண்ட நேரம் நாட்டின் நிலைமை, கட்சியின் நிலவரம் முதலானவை குறித்து உரையாடினோம். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்று மனமார நம்பிய அண்ணா மறுபடியும் அரசாங்க அலுவல்களில் ஆழ்ந்திடலானார்.
சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு அலுவலில் ஈடுபடலாமே என்று எவ்வளவோ நாங்கள் எடுத்துச் சொல்லியும், எங்கள் வார்த்தைகளைக் கேட்க மறுத்து விட்டார், அந்தத் தொண்டின் மணிவிளக்கு. அது மட்டும் அல்ல- நலிவுற்றிருக்கும் தம் உடல் நிலைக்கு ஏற்பச் சில வசதிகளைச் செய்துகொள்ளவும் அவர் மறுத்துவிட்டார். உலவிடத் தோட்டம் சூழ்ந்த விசாலமான வீட்டில், குளிர் சாதன அறையில் இருப்பதே அண்ணாவின் உடலுக்கு ஏற்றது என்று அண்ணாவுக்குச் சிகிச்சையளித்த டாக்டர் மில்லர் சொல்லியனுப்பியிருந்தார்.
அவரது ஆலோசனைப்படியே இருபது நாட்களுக்குள் அமைச்சர் ஏ கோவிந்தசாமி அவர்கள் இருந்த இல்லம் மாற்றி அமைக்கப் பட்டது. அண்ணாவும் அந்த வீட்டை வந்து பார்த்தார். சோபாவில் உட்கார்ந்து பார்த்தார். 'இந்த சோபாவைவிட ஏழையின் நெஞ்சில் எனக்காகப் போடப்பட்டிருக்கும் சோபா உயர்ந்தது; இந்த விசாலமான கட்டடத்தைவிட ஏழையின் குறுகலான குடிசையில் எனக்காகத் தரப்பட்டிருக்கும் இடம் பெரியது!'
என்று எண்ணினார் போலும் அண்ணா. "இந்த வீடு எனக்கு வேண்டாம்" என்று அறிவித்து விட்டார். சென்னை மாநிலம் என்றிருந்ததைத் 'தமிழ்நாடு' என மாற்றிப் பெயர் சூட்ட வேண்டுமெனத் தமிழகச் சட்ட மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை டில்லி நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதையொட்டி 'தமிழ்நாடு' மகிழ்ச்சி விழா நாடு எங்கணும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் 2-12-68 அன்று அந்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடாயிற்று. அதில் நானும், சிலம்புச் செல்வர் ம.
பொ. சி., சி,பா. ஆதித்தனார் ஆகியோரும் கலந்து கொண்டோம். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர் வேறு எந்தப் பொது நிகழ்ச்சியிலுமே பங்கேற்காமல் இருந்திட்ட அண்ணா, அந்தப் பெயர் மாற்ற மகிழ்ச்சி விழாவில் மட்டும் முதன் முதலாகக் கலந்து கொண்டார். மருத்துவ வல்லுநர்கள் தடுத்தும்கூட அவரால் விழாவுக்கு வராமல் வீட்டிலேயே இருந்திட முடியவில்லை. அதுபற்றி விழாவிலேயே அண்ணா இவ்வாறு குறிப்பிட்டார்: "...நான் இந்த மகிழ்ச்சி விழாவல் கலந்துகொள்ள முடிவெடுத்த போது, 'நீங்கள் கூட்டத்தில் பேசக்கூடாது; அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடும்' என டாக்டர்களும், நண்பர்களும் தடை விதித்தனர்.
'தமிழ்நாடு' பெயர் மாற்ற மகிழ்ச்சி விழா நடைபெறும் இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேருமென்றால் இந்த உடல் இருந்தே பயனில்லை என்று கூறி, எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவேண்டும்' என மருத்துவர்களிடமும் நண்பர்களிடமும் கேட்டுக் கொண்டேன். "இத்தகைய வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும்; பல முறை வருவதில்லை!"
அண்ணாவின் இந்த உருக்கமிகு உரையைக் கேட்டதும் அரங்கில் குழுமியிருந்தோர் அனைவரது விழிகளுமே குளமாயின.
