உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/'ஹிம்மத்' ஏட்டுக்குப் பேட்டியளித்தேன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

'ஹிம்மத்' ஏட்டுக்குப் பேட்டியளித்தேன் · 51 / 391

'ஹிம்மத்' ஏட்டுக்குப் பேட்டியளித்தேன் மூ ன்று நாட்கள் கழித்து வடநாட்டிலிருந்து வெளியாகும் 'ஹிம்மத்' (Himmat) ஆங்கில ஏட்டின் ஆசிரியர் திரு லாலா என்பவர் என்னைப் பேட்டி கண்டிடச் சென்னைக் கோட்டைக்கு வந்தார். அவர் எழுப்பிய சில வினாக்களும் அவற்றிற்கு நான் அளித்த விடைகளும் வருமாறு: கேள்வி : இந்தியாவின் மொழிச் சிக்கலுக்குத் தாங்கள் சொல்லும் தீர்வு என்ன? நான்: எங்கள் தலைவர் அண்ணா அமெரிக்காவிலும் இங்கும் சொல்லியிருப்பதைப் போன்று மொழிப் பிரச்சினையையே 25 ஆண்டுகளுக்குத் தள்ளி வைத்துவிட வேண்டும்.

கேள்வி: மத்திய மாநில உறவு பலப்படுவதற்குத் தாங்கள் கூறும் யோசனை என்ன? நான் : வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, செய்திப் போக்கு வரத்து போன்ற ஒருசிலவற்றை மட்டும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு மீதியுள்ள அதிகாரங்களை மாநில அரசுக்குத் தருவது மத்திய மாநில அரசுகளின் உறவு பலப்பட வழி வகுக்கும்; உண்மையான தேசிய ஒருமைப்பாடும் ஏற்படும். கேள்வி: தங்களுடைய இந்த யோசனைக்கு மற்ற மாநிலங்களின் ஆதரவு இருக்கிறதா?

நான் : மற்ற மாநிலங்களிலுள்ளவர்களிடம் இந்த எண்ணம் இருக்கிறது. அதை ஒன்று சேர்த்து உருவாக்கி யார் எழுப்புவது என்பதுதான் பிரச்சினை. கேள்வி : தமிழகம் இந்தியாவுக்கு எந்த வகையில் வழிகாட்ட விரும்புகிறது? நான் : வேற்றுமையுணர்ச்சி களையப்பட்டு, ஒன்றுமையுணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பிறரது நியாயமான உணர்ச்சிகளை மதிக்கும் மனப்பக்குவம் ஏற்படவேண்டும். இந்தியாவில் இப்போது. வேற்றுமையுணர்ச்சி களையப்படறத் தமிழகத்தின் நியாயமான மொழியுணர்ச்சியைப் பிறர் மதிக்க வேண்டும்.

அப்படி மதிப்பதன் மூலம் நியாய உணர்ச்சியை மதித்தோம் என்கிற மன நிறைவும் உண்மையான ஒற்றுமையுணர்வும் நாட்டில் ஏற்படும். இதுதான் தமிழகம் காட்டும் வழியாகும். இதைத் தொடர்ந்து இன்னொரு முக்கியமான நடைமுறைச் செயலிலும் இந்தியாவுக்குப் புதிய தமிழகம் ஒரு செய்தியைத் தருகிறது. இப்போதிருக்கும் நிலைக்கு மாறாக விவசாயத்திற்கு முதலிடமும் அதனைத் தொடர்ந்து தொழில் வளர்ச்சிக்கு அடுத்த இடமும் தரப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அதை நடைமுறைப் படுத்தியும் வருகிறோம். எங்களைப்போன்று நாட்டின் பிற பகுதியினரும் விவசாயத்திற்கு முதலிடம் காட்ட முன் வரவேண்டும். மாநில சுயாட்சி பற்றிய கருத்துக்கள், நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு முன்பே, பொதுப்பணித் துறை அமைச்சராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த காலத்திலேயே என் உள்ளத்தில் ஆழமாக வேர்விடத் தொடங்கிவிட்டன என்பதற்கு 16-5-1968-இல் 'ஹிம்மத்' ஆசிரியருக்கு நான் அளித்திட்ட இந்தப் பேட்டியும் ஒரு சான்றாகும்.

சிலை என்பது அந்தச் சிலைக்குரியவரின் சீரிய பணிகளுக்கு தியாகத் தழும்புகளுக்கு மற்றவர்கள் காட்டிடும் நன்றியின் சின்னமேயாகும். பேரறிஞர்கள், பெருந் தலைவர்களுக்கு எழுப்பப்படும் சிலைகள் வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக ஊக்கமளிப்பது உண்டு. அதனால்தான், உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது பல ஆன்றோர்களுக்குச் சிலையெழுப்பிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது தி. மு. க. அரசு. ஆனால் எனக்கே அப்படியொரு சிலையெழுப்பிடும் முயற்சியில் கழக நண்பர்கள் ஈடுபடக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

சென்னை-ஜெமினி ஸ்டூடியோ'வை ஒட்டியுள்ள ஐந்து சாலைகளும் சந்திக்கின்ற பரந்த பகுதியில் என்னுடைய சிலையை எழுப்பி எனது பிறந்த நாளான 3-6-1968 அன்று அண்ணா அவர்களின் கரத்தாலேயே அதனைத் திறந்து வைப்பதென்றும் கழகத் தோழர்கள் திட்டமிட்டு விட்டனர்; அதற்கு அண்ணாவின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றுவிட்டனர். செய்தி அறிந்த நான் திகைப்படைந்தேன். அருமருந்தன்ன நண்பர்களின் அன்புப் பெருக்கை, ஆர்வத் துடிப்பை நான் உணர்ந்து கொண்ட போதிலும், ஐம்பது வயதினைக்கூடத் தாண்டாத எனக்குச் சிலையெழுப்பிடும் ஏற்பாடு பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

"......நண்பர்களுடைய அன்புக்கு என் நன்றியுணர்வைக் காணிக்கை ஆக்குகிறேன். சிலையைத் திறந்து வைக்கப் பெருமனதுடன் ஒப்புதல் அளித்த அண்ணன் இருக்கும் திக்கு நோக்கி வணக்கம் செலுத்துகிறேன். சிலை அமைப்பது போன்ற பெருமைகளுக்கான தகுதியை நான் பெறவில்லை என்பது அடக்கத்தின் காரணமரக அல்ல; திறந்த மனத்துடன் தெரிவிக்கும் உண்மை நிலையும் ஆகும். நாட்டுக்கும் இலக்கியத்துறைக்கும் .நான் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் ஏராளமாக உண்டு.

அதற்குள் நண்பர்கள் அவசரப்படுவது சரியுமல்ல; முறையுமல்ல......கழகத்தினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேணிக் காத்து வருவதும் கழகத்துக்கு வெற்றிகளைத் தேடித்தருவதும் அந்த வேலைகளில் என்னையும் ஊக்குவிப்பதும்தாம் அவர்கள் எனக்கு அமைக்கிற சிலைகளாகும்; தருகிற பிறந்த நாள் பரிசுகளாகும்......."

என்னுடைய இந்த வேண்டுகோளுக்குப் பிறகே, என் விருப்பத்திற்கிணங்க எனக்குச் சிலையெழுப்பிடும் முயற்சியினை நண்பர்கள் கைவிட்டார்கள். திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் என்னுடைய 45-ஆவது பிறந்த நாள் விழாவினை 9-6-1968 அன்று கோலாகலமாகக் கொண்டாடினர். அதில் நானும் பங்கு பெறத்தான் வேண்டுமென்று அன்பில், பராங்குசம், எம். எஸ். மணி முதலான நண்பர்கள் வற்புறுத்திவிட்டனர். அந்த விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு அந்த ஞாயிற்றுக்கிழமை இரவே, திருநெல்வேலி விரைவு ரயில் வண்டியில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டேன்.

நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். இரயில் வண்டி அரியலூரைத் தாண்டி, 'ஒட்டக்கோயில்' என்னும் இரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒருவன் நான் பயணம் புரிந்து கொண்டிருந்த இரயில் பெட்டிக்குள் தாவி விழுந்தான், அவசர அவசரமாக. அவனது முகத் தோற்றமே அவனொரு முறையான மனிதன் இல்லை என்பதைக் காட்டிக் கொடுத்தது. அரசியல் அரங்கில் கள்ள மனம் கொண்டோரைச் சில சமயம் என்னால் கண்டுபிடிக்க முடியாமற்போனாலும், அந்தச் சமூகத் திருடனை எப்படியோ என்னால் சரியாக இனம் காண முடிந்தது.

அவன் தப்பியோடி விடாதபடி, உடனே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். இரயில் நின்றது. என் மெய்க்காவலர்களும் ஏனைய அதிகாரிகளும் விரைந்தோடி வந்தனர். அந்தத் திருடனைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் விசாரித்ததில், பிடிபட்டவன் பெயர் ஆல்பர்ட் என்றும் திருச்சியைச் சேர்ந்தவன் என்றும், அவன் ஏற்கெனவே பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவன் என்றும் தெரியவந்தது. பூஞ்செடிகளை அரித்து அழித்திடும் பூச்சிகளாகச் சமுதாயத்தைக் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு புல்லுருவியைப் பிடித்துக் கொடுத்ததில் உண்மையிலேயே எனக்கு அப்போது ஒருவிதப் பெருமிதமே உண்டாயிற்று.