நெஞ்சுக்கு நீதி
எனது நாடகக் காப்பியம் · 50 / 391
எனது நாடகக் காப்பியம் அந்த விருந்தின்போதே நான் எழுதிய 'சிலப்பதிகார நாடகக் காப்பியம்' என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு, ஆங்கிலப் பதிப்புகளின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நாடகக் கலை வெறும் பொழுதுபோக்குக் கலை மட்டும்/அல்ல; மனித உணர்வுகள் புழுதி படியாமல் பொலிவு பெற்றிட உதவும் புதுமைக் கலையும் ஆகும். உறைந்துவிட்ட பனிக்கட்டி உள்ளங்களையும் உருகவைத்து உலர்ந்துவிட்ட உணர்ச்சிகளுக்கெல்லாம் பசுமையூட்டி நனைந்துவிட்ட விறகுகளாகப் புகைந்தவாறே நகைச்சுவையை மறந்தவர்களையும் சிரிக்க வைத்துச் சிந்தையைக் கிளறிவிடும் விந்தைக் கலையும் நாடகமே.
அதனால்தான் முத்தமிழில் ஒரு கூறாக முத்தான ஓர் இடங்கொடுத்து நாடகத் தமிழை வளர்க்க முயன்றிருக்கின்றனர் நம் முன்னோர்கள். எனினும் மேடைகளிலே மேன்மையுற்றுச் சிறந்த அளவுக்கு நூல் வடிவிலே இலக்கியத் தகுதியோடு நாடகத் தமிழ் வளர்ந்திடவில்லை என்பது என் பணிவான கருத்தாகும். கிரேக்க நாடகப் பேராசிரியன் சோபக்ளிஸ், ஆங்கில நாடகப் பேராசிரியன் ஷேக்ஸ்பியர், பிரெஞ்சு நாடகப் பேராசிரியன் மோலியர் முதலானவர்களைப் பற்றிக் கேள்வியுறும் பொழுதெல்லாம் நம்முடைய தமிழிலும் மற்ற இலக்கியங்கள்- குறிப்பாக இயற்றமிழ் வளர்ந்திட்ட அளவுக்கு, நாடகக் காப்பியங்கள் இயற்றப்படவில்லையே என்று நான் ஏங்குவதுண்டு.
சிலப்பதிகாரம் ஒரு வகையில் நாடகக் காவியமாகத் தோற்றமளிப்பதுதான்; அதன் கதை மேடைகளில் நடிக்கப்பட்டும் வருவதுதான். ஆயினும் சிலப்பதிகாரத்தில் நாடக உணர்வு (Dramatic sense) இருக்கிறதே அல்லாமல், 'நாடக வடிவம்' (Dramatic shape) இருப்பதாகக் கூறமுடியாது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய 'மனோன்மணியம்' ஒன்று மட்டுமே இந்த வகையில் பாலைவனத்தில் தென்- படும் சோலைவனமாய் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
அவரைப் பின்பற்றி ஒரு சிலர் நாடகக் காப்பியங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாக்கிட முயன்றிட்ட போதிலும் பொதுமக்களின் நெஞ்சங்களிலே நிலையான இடம் பிடித்திடும் வகையில் அவை அமைந்திடவில்லை. திரு பம்மல் சம்பந்த முதலியார் பல தமிழ் நாடகங்களை எழுதினாலும் அவை காப்பிய வடிவமோ கவிதை நடையோ பெறவில்லை. சிலப்பதிகாரத் தேன் சுனையில், தீராத ஆசையுடன் அடிக்கடி மூழ்கித் திளைத்திடும் எனக்கு, அந்தக் கதைக்கே நாடகக்காப்பிய வடிவம் தந்தால் என்ன என்று தோன்றியது.
அந்த எண்ணத்தின் விளைவாக எழுந்ததே என்னுடைய 'சிலப்பதிகார நாடகக் காப்பியம்' நூல். தமிழர்கள் மட்டுமே சிலப்பதிகார அருமை பெருமைகளை அறிந்திருந்தால் போதுமா, மற்ற மொழிக்காரர்களும் மற்ற நாட்டவரும் அதன் பழச்சாறு சுவையினைப் பருகித் திளைத்திட வேண்டாமா என்றும் சிந்தித்தேன். ஆங்கில மொழியில் புலமை மிக்கவரான திரு .டி. ஜி. நாராயணசாமி அவர்களைக் கொண்டு நான் எழுதிய தமிழ் நூலையே மொழிபெயர்க்குமாறு ஏற்பாடு செய்தேன்.
அந்த நூல்களின் வெளியீட்டு விழாதான் 18-1-1968-இல் உலகத் தமிழ் மரநாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு விருந்தோடு இணைந்து நடைபெற்றது. முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கி என்னை உளந்திறந்து பாராட்டியதுடன், "இந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கே மகுடம் சூட்டுவது போல் இந்த நிகழ்சி அமைந்திருக்கிறது" -என்றும் குறிப்பிட்டார்கள். 'சிலப்பதிகார நாடகக் காப்பியம், தமிழ் நூலை அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட, அதனை இலங்கை அமைச்சரின் துணைவியார் திருமதி திருச்செல்வம் பெற்றுக்கொண்டார்; ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஆஸ்திரேலிய நாட்டினைச்சேர்ந்த திரு.
ஜோர்தான் என்பவர் பெற்றுக்கொண்டார். அப்போது அண்ணா அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்! "........ தமிழில் உள்ள காப்பியங்களும் செய்யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், உருவத்திலேயும்; நாடக வடிவத்திலேயும்,கட்டுரைவடிவத்திலேயும்பல நூல்கள் நமக்குத் தேவைப்- படுகின்றன. அந்த வகையில் தம்பி கருணாநிதி சிலப்பதிகாரத்தை நாடக உருவில் தந்திருக்கிறார். தமிழ் கற்ற அனைவரும் இதனைப் பாராட்டுவார்கள்.
தம்பி கருணாநிதியின் சிறந்த தமிழ் நடை அனைவரும் உணர்ந்தது; அவரது நடையில் இலக்கிய அறிவும், கலைத் திறனும் இருக்கும். அவர் இந்நாடகக் காப்பியத்தை எழுதுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர். அண்ணாவின் இந்தக் குளுமை மிகு சொற்கள் என் உள்ளத்திற்கும் உடலுக்கும் புல்லரிப்பையே கொடுத்தன; மேலும் பல நூல்களை இயற்றிட வேண்டும் என்னும் ஆர்வத்தையும் அளித்தன. அண்ணல் காந்தியடிகளுக்கு அகில முழுவதும் அழியாப் புகழ் வாங்கிக் கொடுத்தது அவர்தம் அகிம்சை நெறியே.
அவருடைய அடிச் சுவட்டிலேயே நடை போட்டு உலகில் பல்வேறு பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பிய தலைவர்கள் பலரும்கூட 'காந்தி' என்னும் அடைமொழிக்கு உரியவரானார்கள். காந்தியடிகளின் வழித்தோன்றலாகவே அவர்கள் கருதப்பட்டார்கள்: மதிக்கப்பட்டார்கள். அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்குப்பெற்றவர்களில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களும் ஒருவர் ஆவார். அமெரிக்க நீக்ரோ இனத்தவரின் ஒரே ஆறுதலாய், ஒரே ஊன்றுகோலாய் ஒளி வீசி உயர்ந்து நின்றவர் லூதர் கிங்.
அண்ணல் காந்தியடிகளையே தம்முடைய மானசீகக் குருவாக வரித்துக்கொண்டு, கவிழ்ந்துகொண்டு இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைப் படகுகளை நிமிர்த்தும் பொருட்டு அகிம்சை நெறியினை விட்டு அணுவும் பிறழாமல், அறப் போர்களில் ஈடுபட்ட அறிஞர் அவர். அதற்காகவே உலகப் பெரும் பரிசான நோபல் பரிசுக்கும் உரியவரானவர். 'அமெரிக்கக் காந்தி' என்றே அழைக்கப் பெற்ற அந்த அறநெறிச் செல்வர், கயவன் ஒருவனால், 1968 ஏப்ரல் 5-இல் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அவருடைய திடீர் மரணம் உலகம் முழுவதையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மார்ட்டின் லூதர் கிங் மறைவைக் கேட்டு நானும் மாளாத் துயர டைந்தேன். "வன்முறையை ஒழிக்கப் புறப்பட்ட நன்னெறியாளர்கள் கடைசியில் வன்முறைக்கே தங்கள் வாழ்க்கையைப் பலி கொடுக்க வேண்டுமா?"
என்று என்னால் அப்போது எண்ணாமல் இருக்க முடியவில்லை. திருக்குறள்' வகுப்பு நடத்தியதன் மூலம் ஒரு புதிய வரலாறே படைத்துவிட்டார். அவர்தம் அறிவின் ஆழத்தை - கூர்மையைக் - கேள்வியுற்றதோடு மட்டுமின்றி நேரிலும் கண்டு வியந்து, 'யேல்' பல்கலைக் கழகம் 'செஃபெல்லோஷிப்' என்னும் பட்டத்தை வழங்கியது அதுகாறும் அமெரிக்க அறிஞர்கள் மட்டுமே அந்தப் பட்டத்துக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அண்ணா ஒருவர்தாம் அந்தச் சிறப்பினைப் பெற்ற முதல் வெளி நாட்டுக்காரர். அமெரிக்கச் செய்தியாளர்கள் எல்லாரும் ஆச்சரியக் கடலில் மூழ்கிடும் வண்ணம் இந்தியாவின் பெருமையே ஏற்றம் பெற்றிடும் வகையில் கட்சி மாச்சரியங்களையெல்லாம் கடந்து கருத்துக் கதிர்களை உதிர்த்த அண்ணா அவர்களைச் சென்ற இடமெல்லாம் ஆர்வம் ததும்பிட வரவேற்றிருக்கின்றனர் அமெரிக்க மக்கள். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அந்தச் சிறப்புமிகு இந்தியத் தலைவர் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வருவார், சிகிச்சை பெறுவார், பின்னர் தங்கள் விழிகளையே குளங்களாக்கி விம்மிடச் செய்வார் என்று அப்போது அவர்கள் எப்படி அறிவார்கள்?
அமெரிக்கா சென்றிருந்த அண்ணா திரும்பும் வழியில் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு, 12-5-1968 அன்று இரவு தாயகம் வந்தடைந்தார்.
