உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/உலகத் தமிழ் மாநாடு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

உலகத் தமிழ் மாநாடு · 49 / 391

உலகத் தமிழ் மாநாடு இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, இணையில்லாச் சிறப்போடு, எடுப்போடு, எழிலோடு சங்க காலமே தமிழகத்தில் தழைக்கத் தொடங்கிவிட்டது என்று பொதுமக்கள் அனைவருமே பூரித்திடும் வகையில் 1968 ஜனவரி முதல் வாரத்தில் பொலிவோடு நிகழ்ந்தேறியது. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்னும் பாரதியின் கனவு நனவாகிடும் வண்ணம் பார் முழுவதும் தமிழின் அருமையை - பெருமையை ஆய்ந்துணர்ந்த அயல் நாட்டு அறிஞர் பெருமக்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்னைக்கு வருகை புரிந்தனர்.

இந்தியாவிலேயே வெளிமாநிலங்களிலிருந்து 30 அறிஞர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 190 அறிஞர்களும் மாநாட்டில் பங்கு கொண்டிட வந்திருந்தனர். 1968 ஜனவரி நான்காம் நாளில் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு (Seminar) சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அங்கே தான் அறிஞர் பெருமக்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். அவற்றின் மீது விவாதங்களை நடத்தினர்.

விளக்கங்களை அளித்தனர்; அடைந்தனர். அந்த அளவோடு உலகத் தமிழ் மாநாட்டின் பணியினைச் சுருக்கி விடுவது கழக அரசுக்கு உகந்ததாகப் படவில்லை. பொதுமக்களுக்கும் எழுச்சி- மகிழ்ச்சி ஏற்படுகின்ற வகையில் வேறு பல சிறப்பு நிகழ்ச்சிகளையும் இணைத்தால்தான் மாநாட்டுக்கு முழுப்பொலிவும், அதனால் உருவான பயனும் விளைந்திட முடியும் என்பதை உணர்ந்தோம். எனவே, உலக அறிஞர்கள் குழுமிய ஆராய்ச்சிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாமற் போன ஏனைய தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் முதலானோர் பங்கேற்றிடும் வண்ணம் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைக் கண்காட்சி முதலானவை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள்: செய்யப்பட்டன.

சென்னையில் 'தீவுத் திடல்' என வழங்கப் பெறும் பகுதி "பூம்புகார்" நகராகப் புது வடிவம் பூண்டது. கலை நேர்த்தியோடு கவினழகு மிளிர்ந்திட அமைக்கப்பட்ட அந்நகரில்தான் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்திடும் வண்ணம் நிகழ்ச்சிகள் பல நடந்தேறின. 4-1-1968-இல் தான் முறைப்படியான ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு தொடங்குவதாக இருந்த போதிலும், ஜனவரி முதல் நாள் முதற்கொண்டே மாநாட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் சென்னை மாதகருக்குத் திருவிழாக் கோலத்தினைத் தரத் தொடங்கிவிட்டன.

தமிழைக் காத்தல், தன்மானக் கொள்கைகளைப் பரப்புதல் ஆகியவற்றை இலட்சிய விளக்குகளாய்க் கரத்தினில் ஏந்திப் பொதுமக்கள் நலத்திற்கே தம் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து, தி.மு.கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப் பீடத்தையும் அடைந்து காட்டித் தம்முடைய அரும் பெரும் கொள்கைகள் காற்றோட கலந்து போய்விடாமல் செயல் வடிவம் பெற்றிடவும் சீராகப் பணியாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை, முன்னர் 'மவுண்டு ரோடு' என்று அழைக்கப் பெற்ற தற்போதைய 'அண்ணா சாலை'யில் 'ரவுண்டாணா, பகுதியில் நிறுவப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையையும் நிலை நாட்டிய டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் ஜனவரி முதல் நாள் அன்று அண்ணாவின் சிலையைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஜனவரி இரண்டாம் நாளில் சென்னைக் கடற்கரையின் நெடுக ஆங்காங்கே, திருவள்ளுவர் அவ்வையார் கண்ணகி கம்பர் வீரமா முனிவர் ஜி.யு.போப் கால்டுவெல் வ.உ. சிதம்பரனார் பாரதியார் பாரதிதாசன் ஆகியோருடைய சிலைகள் திறந்து வைக்கப்பெற்றன.

ஜனவரி மூன்றாம நாள், காலை, பல்கலைக்கழகத் தேர்வு மண்டபத்தில் கலைப் பொருட்காட்சியை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள். அன்று பிற்பகல் 2-30 மணியளவில் மாபெரும் ஊர்வலம் ஒன்று 'பூம்புகார்' அமைந்த தீவுத் திடலை விட்டுக் கிளம்பியது. ஊர்வலத்தின் முன்னே நான்கு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாய்ச் செல்லத் - தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றினை - வீரத்தினை - விவேகத்தினை - விளக்கிடும் அழகோவியங்கள் தீட்டப்பட்ட அலங்கார ஊர்திகள் இருபத்தேழு சென்னையின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியரங்குகளாகப் பவனி வந்தன.

உலகத் தமிழ் மகாநாட்டைத் துவக்கி வைத்திட வந்திருந்த டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள், முதலமைச்சர் அண்ணா அவர்களுடன் அண்ணாசாலை கலைக் கல்லூரியை ஒட்டி அமைக்கப்பட்ட தனிப் பந்தலில் அமர்ந்து அந்த மாபெரும் ஊர்வலத்தைக் கண்டு களித்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தமிழகம் எங்கணுமிருந்து கடலெனத் திரண்டிருந்த இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் விழிகளுக்கு விருந்தளித்த அந்த ஊர்வலம் ஊர்ந்து கொண்டிருந்த இனிய வேளையில் தான் ஓர் இனிப்புச் செய்தியும் என் செவியை வந்து எட்டியது.

கலைத் துறையிலும், கட்சிப் பணியிலும் இணைந்து நின்ற என் இன்னுயிர்த் துணையான ராஜிக்கு எங்கள் அன்பின் சின்னமாகக் கனிமொழி பிறந்தது என்பதே அந்த இனிப்புச் செய்தி. ஊர்வலம் கடற்கரையினை வந்தடைய இரவு ஏழு மணிக்கு மேல் ஆயிற்று. அதன் பின்னர் இலட்சக் கணக்கில் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் தலைமையை அண்ணா அவர்கள் ஏற்றிட, அப்போது இந்தியாவின் குடியரசுத தலைவ ராயிருந்த டாக்டர் ஜாகீர் உசேன்.

மாநாட்டினைத் திறந்து வைத்து அரியதோர் உரையாற்றினார். திரு காமராசர் அவர்களும் வரவேற் புரையாற்றினார் மறுநாள் முதற்கொண்டு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஆராய்ச்சிக் கருத்தரங்கும், தீவுத் திடலில் எழுப்பப்பட்ட பூம்புகார் நகரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் கோலாகலமாய் நடைபெற்றுக் கொள்ளையின்பம் கொடுத்தன. எட்டுத் திக்குமிருந்தும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 450 அறிஞர்கள் வந்திருந்தார்கள்: 'ஏதோ ஒரு மண்டபத்தில் தாங்கள் மட்டும் கலந்துரையாடிக் கலைந்துப் போயினர்' என்று அமைந்திருக்க வேண்டிய அந்த மாநாட்டை இருபது இலட்சம் மக்களும் திரண்டு.

நின்று கூர்ந்து நோக்கிடும் அளவுக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தவை தீவுத் திடல் 'பூம்புகாரில்' நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளே. அந்தச் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும், குறிப்பாக அந்த மாபெரும் ஊர்வலமும் என்னுடைய மேற்பார்வையிலும், நாவலர் மேற்பார்வையிலும் நடந்தேறின. கலைத்துறையிலே உள்ள பெரியவர்களான திரு. எஸ். எஸ். வாசன், ஏ. வி. எம். செட்டியார், நாகிரெட்டி. ஏ. எல். சீனிவாசன் போன்றவர்களின் ஒத்துழைப்பு எங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாய் நின்றது.

அத்துடன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகத் தமிழ் மாநாட்டையும் அதன் கவின் மிகு ஊர்வலத்தையும் வண்ணப் படங்களாக எடுத்திட முன் வந்தனர். அந்தத் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் நானே விளக்கவுரை எழுதி நானே பேசியும் உள்ளேன். ஊர்வலம் பற்றிய எனது கவிதை நடை விளக்கவுரையை கேட்டு விட்டுப் பெரியவர் எஸ் எஸ். வாசன் அவர்கள் அப்படியே என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு உச்சி மோந்தார். இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு எழில் குலுங்கிடத் தமிழன்னையின் இதயங்குளிர்ந்திட இனிது நிகழ்ந்தேறிய பின்னர் மாநாட்டுக்கு வருகை புரிந்திட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வழியனுப்பி வைத்திடும் முறையில் விருந்தொன்றுக்கும் 18-1-1968- இல் ஏற்பாடு செய்யப்பட்டது.