நெஞ்சுக்கு நீதி
கவியரங்கேறினேன் · 48 / 391
கவியரங்கேறினேன் அந்த ஆண்டு (1967) ஆகஸ்டுப் பதினைந்து விடுதலை நாளையொட்டிக் கவியரங்கம் ஒன்று நடைபெறுவதாகவும் அதற்கு நான் தலைமை தாங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த அழைப்பினைக் கண்டதும் கவிதைக் கலை தொடர்பான பழைய நினைவுகள் - நிகழ்ச்சிகள் - என் நெஞ்சினுள்ளே அலை அலையாகப் பாய்ந்து வந்தன. கவிதை என்பது - துடித்தெழும் உணர்ச்சியில் வெடித்திடும் ஊற்று; கற்பனை வானின் மின்னல் கீற்று; கலையெழில் வழிந்திட முளைக்கும் நாற்று; கன்னல் மொழியில் மணக்கும் காற்று இயற்கைக் கவிஞராம் என்னருந்தந்தை வயலில் உழுதார்; வளம் பெறக் கற்பனை வயலிலும் உழுதார்; வக்கணைக் கவிதைப் பயிரையும் வளர்த்தார்; பலாச்சுளைப் பாடல்கள் பலப்பல தந்தார்.
தந்தை வழியே தனயன் எனக்கும் சிந்தை சென்றிடச் சிறுசிறு கவிதை பூத்திடும் செடியாய்ப் பொலிந்திடும் வேட்கையால் யாத்திட முயன்றேன் அரும்புப் பாட்டுகள்! மாணவனாகப் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே எனக்குத் தெரிந்த நடையில் - வடிவில் - நான் இப்படிக் கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டேன். அந்த மாணவருலகு எத்தகையது என்பது குறித்தும் நான் அந்த நாளில் இப்படிக் கவிதைச் சரங்களைத் தொடுத்திட முனைந்திருக்கிறேன்.
எழுச்சியுள்ள மாணவன் தான் ஏறுநடைச் சிங்கந்தான்! கொழித்துவிட்ட உமிகள்தான் குள்ளநரிக் கூட்டத்தார்! பழித்துவிட்டான் பகுத்தறிவால் பக்தி, மதம், பலகடவுள் எல்லாம் பாழ்! பாழ்! பாழ்! என்னுடைய அரும்புப் பருவத்தில், என் இதயங் கவர்ந்திட்ட அரும் பெரும் தலைவர்களில் சர் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும் ஒருவர் ஆவார். இலண்டன் சென்று 'பாரிஸ்டர்' பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பிய பின், நீதி மன்றங்களிலே வாதத் திறமையைக் காட்டுவதில் தாம் நிகரற்றவர் என்பதைப் பல சமயங்களில் நிரூபித்துக் காட்டியவர் அவர்.
அதே சமயம் நீதிக் கட்சித் தலைவராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பெரும் பாடுபட்டவர்; தஞ்சை மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராகவும் பல ஆண்டுகள் அவர் பணியாற்றியிருக்கிறார். இந்தியை எதிர்த்துத் தந்தை பெரியார் அவர்கள் பெல்லாரி இரு்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையிலேயே அவர் நீதிக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 1938-இல் சென்னையில் கூடிய அக்கட்சியின் மாநாட்டுக்கு நேரில் வந்து பெரியாரால் தலைமை தாங்கிட முடியவில்லை.
அப்போது தலைவருக்குரிய இருக்கையில் அவரது படத்தை வைத்து அதற்கு மாலையிட்டு, இந்தப் படத்தைப் பார்த்தே நம் தலைவர் இங்கே இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் இந்த மாநாட்டை நடத்துவோம்!' என்று புரட்சி புரிந்தவரும். பன்னீர் செல்வமே! அவர் தம் ஆற்றலை- அறிவுக் கூர்மையைப் பயன்படுத்திக் கொள்ள விழைந்திட்ட ஆங்கிலேய அரசு அவரை இலண்டனுக்கே அழைத்தது. புதிய பொறுப்பினை ஏற்றுக் கொள்ள அவர் பயணம் புரிந்திட்ட விமானமோ பாதி வழியில் ஓமான் கடலில் விழுந்து நொறுங்கி விட்டது.
பன்னீர் செல்வம் அவர்களின் திடீர் மறைவினால் தமிழகமே அதிர்ச்சியுற்றுக் கண்ணீர்க் கடலிலே தத்தளித்தது; தவித்துப் புலம்பியது. ஆறாத்துயரில் ஆழ்ந்திட்ட நானும் 1940-இல் இப்படி இரங்கற்பாட்டொன்றை இயற்றினேன். கோமானே! உமையெண்ணி யாம் உகுத்த கண்ணீர் ஓமான்கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்! வாழ்வை முடித்துக் கொண்டவர்களுக்காக வருந்தி இவ்வாறு இரங்கற் கவிதைகளை எழுதிய நான் வாழ்வை தொடங்குகின்ற புது மண மக்களுக்காகவும் வாழ்த்துப்பாக்கள் பலவற்றை அப்போது வரைந்து தந்திருக்கிறேன்.
ஈரோடு நகரில் தந்தை பெரியாரின் 'குடியரசு' ஏட்டில் நான் பணியாற்றிய சமயம்; அங்கே லூர்துசாமி என்னும் நண்பருக்கு என் எழுத்துக்களில் அளவில்லாத ஈடுபாடு. மடலாக வரைந்திடும் கார்டுகள் மூலமும் இயக்கக் கொள்கைகளைப் பரப்பிட வேண்டும் என்று அவர் எண்ணினார். அதற்காக, இரண்டே வரிகளில் நறுக்குத் தெறித்தாற் போல் உணர்ச்சித் துடிப்போடு நயமான கவிதைகள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்தம் விருப்பத்தை நிறைவேற்றிடச் சில வரிகளை எழுதிக் கொடுத்தேன்.
'பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோடுப் பூகம்பத்தால் இடியுது பார்'! என்று பெரியாரையும், "துடுக்குமிகக் கொண்டலையும், துணிவுமிக்க ஆரியந்தான் அடுக்குச் சொல் அண்ணாவால் அலறித்தான் சாகுதடா" என்று அறிஞர் அண்ணாவையும், 'புன்னகையா புதுக் கருத்தா புரட்சிக் கனலா?
எல்லாம் உண்டு. எங்கள் கவிஞன் வாழ்க!, என்று பாவேந்தர் பாரதிதாசனையும், நான் பாராட்டி எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கன. 'ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை; மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!' -என்னும் வரிகளும் கார்டுகளில் பொறிப்பதற்கென்று எழுதப் பட்டவையே. இத்தகைய பாட்டுத் துணுக்குகளையும், வேறு சில பாட்டுக்களையும் தொகுத்துப் பின்னர் நூலாக வெளியிட்டேன். ஆனால் அந்தச் சின்னஞ்சிறு நூலுக்குக் 'கவிதை அல்ல' என்றே தலைப்புக் கொடுத்தேன்.
இது பலருக்குத் திகைப்பினைக் கொடுத்தது! உண்ண உண்ணத் தெவிட்டாத கன்னல் தமிழ்ச் சுவையில் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்ட நான் இலக்கண இலக்கிய மரபுகளைப் பிற்காலத்தில் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்திட்ட போதிலும், என் இளமைப் பருவத்தில் முறையாக அவற்றைப் பயின்றிட முடியவில்லை. எனவே அந்த நாட்களில் மற்றவர் நெஞ்சத்தைத் தொட்டிடும் வகையில் துடித்தெழும் உணர்ச்சிகளை வடித்து எடுத்தால் போதும் என்றே என் எழுது கோலை நீட்டினேன்.
என்னுடைய அந்த எழுத்துக்களில் கவிதை வடிவமும் காணப்பட்டது என்றால், அது என் தந்தையார் முத்துவேலர் தம் உதிரத்தோடு உதிரமாய் எனக்கு ஊட்டி விட்டுச் சென்ற 'மூதாதையர்கள் சொத்து' என்றே சொல்ல வேண்டும். என்னுள் இயற்கையாக ஊற்றெடுத்துப் பீரிட்ட உணர்ச்சிகளின் உருவங்களாகிய அந்தக் கவிதை வரிகளில் முறையாகத் தமிழைப் பயின்றவர்கள் எங்கே குறை காண நேரிடுமோ என்னும் அச்சத்தின் காரணமாகவே- 'கவிதையல்ல' என்று அந்த நூலுக்குத் தலைப்புக் கொடுத்தேன்.
நன்றாகத் தமிழைப் பயின்று தேர்ச்சி பெற்ற நாவலர் அவர்களே இதற்கு முன்னுரை நல்கிச் சிறப்புச் செய்தார்கள். திருச்சி வானொலி நிலையத்தார் என்னைக் கவியரங்கத் தலைமை ஏற்க அழைத்திட்ட போது இந்தப் பழைய நினைவுகள்தான் படச் சுருளாய் என் மனத்திரையில் விரிந்தன. 5-8-67 காலையில் அந்தக் கவியரங்க நிகழ்ச்சி பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு 13-8-67 அன்று இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பப்படுவதற்காகப் பதிவு செய்யப்பட்டது.
கட்டபொம்மன், மருதுபாண்டியர், பாரதியார், வ. வே. சு. அய்யர், வ. உ. சிதம்பரனார் ஆகியோரைப் பற்றி ஐந்து கவிஞர்கள், 'தமிழகம் தந்த விடுதலைப் போர்வீரர்' - என்னும் தலைப்பில் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினர். அந்த விடுதலை வீரர்கள் குறித்துத் தலைவர் என்கிற முறையில் நானும் கவிதைகளைப் பாடினேன். அந்தப் புதுமையான நிகழ்ச்சி சிறப்புற அமைந்திட வழிவகுத்தவர்- வரவேற்றவர்- அப்போது திருச்சி வானொலி நிலைய இயக்குநராக இருந்த திரு எம்.
எஸ். கோபால் ஆவார். என்னைப் பொறுத்தமட்டில் அந்த வானொலிக் கவியரங்கம் என் நெஞ்சில் தேனலைகளைப் பாய்ச்சிய புதிய அனுபவமே ஆகும். ஏனெனில் அதுகாறும் நான் ஏடுகளில்தான் கவிதைகளை எழுதி வந்தேனேயல்லாமல் மேடையேறிக் கவிதைகளை அரங்கேற்றியதில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அடிக்கடி என்னைக் கவியரங்கத் தலைமை ஏற்க வைத்துக் களிப்படைவதில் கழக நண்பர்கள் மிகுந்த ஆர்வங்காட்டத் தலைப்பட்டனர். அதுவரை தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூறு பேர்களுக்கு மத்தியில் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டிருந்த நிலைமை மாறி, அடுத்தடுத்துப் பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கவியரங்கங்கள் நிகழத் தொடங்கின வானொலிக் கவியரங்கத்திற்குப் பிறகு நான் முதல் முதல் மேடையேறிப் பொதுமக்கள் முன்னிலையில் கவியரங்கத் தலைமை ஏற்றது 17-9-1967-இல் சென்னையில் நடைபெற்ற 'அண்ணா பிறந்த நாள் கவியரங்கமே' ஆகும்.
அதற்கு வருகை புரிந்திருந்த டாக்டர் சி. இலக்குவனார் அவர்கள் உளந்திறந்து இப்படிப் பாராட்டினார்கள்: "சங்க காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன், கரிகால் பெருவளத்தான், நெடுஞ்சேரலாதன் போன்றோர் வீற்றிருந்து இத்தகைய கவிஞர்கள் போன்றவரெல்லாம் நாக்கவி பாட மக்களெல்லாம் கேட்டிருந்து மகிழ்ந்தார்கள். அந்தநிலை இப்போது தான் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. அமைச்சராகவுள்ள கலைஞர் அவர்கள் இங்கு தலைமை தாங்கி நடத்தியபோது கூறிய கவிதை வரிகளைக் கேட்டு நான் தேனில் விழுந்த வண்டுபோல் மயங்கிக் கொண்டிருந்தேன்.
உள்ளபடியே கலைஞர் அவர்களைப் பெரும் புலவர்மணி என்றே கூறலாம். அவர்களுடைய கவிதையாற்றல்- கற்பனைத் திறம்- செயல் திறமை எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளன. அவர்கள் உள்ளவரை தமிழ்நாடு வருந்தாது. தமிழ் ஆட்சிதான் நடைபெறும்; தமிழ்ப் பகைவர்களும் திருந்தி நம் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்று நம்புகிறேன்."
-தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிராகச் சிற்சில நேரங்களில் சில தவறான சக்திகள் தலையை நீட்டிட முற்படும் பொழுது, டாக்டர் இலக்குவனார் அவர்கள் எடுத்துரைத்தவற்றைத்தான் நான் எண்ணிக் கொண்டு காரியமாற்றுவதுண்டு. சென்னையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றதைத் தொடர்ந்து தஞ்சையிலும் அண்ணா பிறந்த நாள் கவியரங்கத்துக்கு அங்குள்ள நண்பர்கள் ஏற்பாடு செய்து விட்டனர். 24-9-1967 அன்று அதில் கலந்து கொள்ளும் பொருட்டு முந்தின நாள் இரவு 2-30 மணி அளவில் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டேன்.
நண்பர் கவிஞர் ஆனந்தமும், மதுரை முத்துவும், புலவர் பொன்னிவளவனும் உடன் வந்தனர். பரணூரை நெருங்கிடும் போது என் காரில் பழுது ஏற்படவே வேறொரு காரில் நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். விடியற்காலை சுமார் ஐந்து மணி இருக்கலாம். தொழுப்பேடு என்னும் ஊருக்கு அப்பால் இரண்டு மைல் தூரத்தில் ஓங்கூர் ஆற்றுப் பாலத்துக்கு அருகில் திடீரென்று விபத்துக்குள்ளாயிற்று அந்தக் கார். ஒரு டிராக்டர் வந்து மோதியதில் கார் தரைக்கு மேல் தூக்கி எறியப்பட்டது.
தலைகீழாக இரண்டு, மூன்று முறை புரண்டு விழுந்து நொறுங்கி விட்டது. அந்த விபத்தில் நானும் மற்ற நண்பர்களும் உயிர் தப்பியதே ஆச்சரியத்திலும் ஆச்சரியந்தான்! கார் கவிழ்ந்த வேகத்தில் எனக்கு மூக்கிலும் நெற்றியிலும் முழங்காலிலும் பலமான அடி; மேலுதடு பிளந்தே விட்டது. முகத்திலும் அரையங்குலம் ஆழத்திற்குக் கண்ணாடித் தூள்கள் புதைந்து விட்டன. ஆனால் தலைகுப்புறக் கார் கவிழ்ந்த பிறகு என்ன நடந்ததென்றே எனக்குத் தெரியாது.
பின்னால் ஜீப்பில் வந்துகொண்டு இருந்த பாதுகாப்புப் போலீசார், காருக்கு அடியில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த என்னைச் சிரமப்பட்டு மீட்டிருக்கிறார்கள். பின்னர், திண்டிவனம் மருத்துவமனைக்கு ஜீப்பில் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதலுதவி அளிக்கப்பட்டேன். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வண்டியில் சென்னைக்குக் கொண்டு சென்றார்கள். இடையிலேயே சென்னையிலேயே பெரிய மருத்துவமனை டாக்டர்களும் நரம்பு சிகிச்சை நிபுணரும் எதிரே வந்து என்னை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வண்டியைச் சாலை ஓரத்திலேயே நிறுத்தி வைத்து எனக்குச் சிகிச்சை அளித்தார்கள்.
வழியில் செங்கற்பட்டு மருத்துவ மனையிலும் சிகிச்சை நடைபெற்றது. செங்கற்பட்டைத் தாண்டி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த பொழுது. 'அண்ணா வந்திருக்கிறார்!' என்னும் சொற்கள் என் செவிகளிலே அலை மோதின; ஆறுதல் அளித்தன. முகம் முழுவதும் பலமான கட்டுகளுடனும், வீங்கிய உதடுகளுடனும் இரத்தம் தோய்ந்த சட்டையுடனும் இமைகளையே திறக்க முடியாமல் கிடந்த என்னால் அப்போது கையைத் தான் சிறிது அசைத்திட முடிந்ததே தவிர, அண்ணனைக் கண்ணால் கண்டிட முடியவில்லை.
தழுதழுத்த குரலில், 'தைரியமாக இரு!' என்று அவர் உரைத்திட்ட சொற்கள் என் வேதனையை எல்லாம் மறக்கச் செய்யும் மாமருந்தாகவே அப்போது ஒலித்தது. சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான் பல நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னரே உடல் நலந் தேறி வீடு வந்தேன். தஞ்சைக் கவியரங்கின் பயணத்தில் இப்படிக் கார் விபத்தைச் சந்திக்க நேர்ந்திட்ட போதிலும் அந்த நிகழ்ச்சி நிறைவேறாமல் போய்விட்டதே என்னும் ஏக்கம் என் நெஞ்சில் அலை பாய்ந்த வண்ணமே இருந்தது.
மறுபடியும் அங்கே கவியரங்கத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அதில் கலந்து கொண்ட பின்னரே என் மனத்துக்கு ஆறுதல் உண்டாயிற்று.
