உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணன் முடித்த பணிகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணன் முடித்த பணிகள் · 47 / 391

அண்ணன் முடித்த பணிகள் அதே சமயம், கழகத்தின் நீண்ட நாள் இலட்சியங்கள் சிலவற்றை நிறைவேற்றிடும் வகையில், அண்ணாவின் தலைமையில் அமைந்த அரசு இன்றியமையாத சில திட்டங்களைத்-தீர்மானங்களைத் தீட்டியது; சட்டங்களை இயற்றியது. அவற்றில் தலைசிறந்தவையாக குறிப்பிடத்தக்க மூன்று: ஒன்று; 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானம். இன்னொன்று: சுயமரியாதைத் திருமணச் சட்டம். மூன்றாவது: இந்தி ஒழிப்புத் தீர்மானம். இந்த மாநிலத்தின் பெயர் 'மதராஸ்' என்று அழைக்கப்பட்டதைத் 'தமிழ்நாடு' என்று மாற்றிப் பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967 ஜூலை.

18-ஆம் நாளில் சட்டப் பேரவையில் கொணர்ந்தார், அண்ணா. தீர்மானத்தின் வாசகம் வருமாறு: "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இம்மாநிலத்தைக் குறிப்பிடும் பெயர் 'தமிழ்நாடு' என மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இப்பேரவை உறுதியாகக் கருதுவதுடன், இது குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேவையான, திருத்தங்கள் அமையும் வண்ணம் மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இப்பேரவை பரிந்துரைக்கின்றது."

இந்தத் தீர்மானம் எதிர்ப்பு எதுவும் இன்றி ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டப் பேரவை உற்சாகத்தின் உச்சிக்கே சென்று உணர்ச்சிப் பிழம்பாய் மாறியிருந்தது. தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பில் எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும் உவகை வெள்ளம் பொங்கி வழிந்தது. அதனைப் புரிந்து கொண்ட அண்ணா அதுவரை சட்டமன்றத்திலேயே நடந்திராத ஒரு 'வழக்க'த்திற்கும் திடீரென்று அடிகோலினார்.

தம் இருக்கையிலிருந்து எழுந்து நின்று மாண்புமிகு ஆதித்தனார் அவர்களை நோக்கி- "சட்டமன்றத் தலைவர் அவர்களே! வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நன்னாளில் நான் "தமிழ் நாடு" என்று சொல்வதற்கும் வாழ்க என்று அவை உறுப்பினர்கள் சொல்வதற்கும் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

பேரவைத் தலைவர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர், 'தமிழ் நாடு' என்று அண்ணா உரக்கக் குரல் எழுப்பவும், எல்லா உறுப்பினர்களும் 'வாழ்க' என்று முழக்கமிட்டனர். அவ்வாறு மூன்று முறை முழங்கப்பட்டது. தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலே அத்தகைய முழக்கம் எதிரொலித்தது அதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அருமையான வேளையில் எங்கள் நினைவுகள் எல்லாமே மறைந்திட்ட மாபெரும் தியாகி சங்கரலிங்க நாடாரை நோக்கியே அஞ்சலி செலுத்தின.

ஏனெனில் 'மதராஸ்' என்றுள்ள இம்மாநிலப் பெயரைத் 'தமிழ் நாடு' என்று மாற்ற வேண்டும் என்பதையே கோரிக்கையாக வைத்து எழுபது நாட்களுக்கு மேல் உண்ணா நோன்பிருந்து உயிரையே காணிக்கை ஆக்கி மறைந்த உத்தமர் அவர். காங்கிரஸ் கூடாரத்திலே வளர்ந்த பழுத்த காந்தியவாதியான அவருக்கு அழுத்தமான தமிழ்ப் பற்றும் இருக்கிறதே என்று நாங்கள் ஆச்சரியப் பட்டதுண்டு. அவருடைய கட்சிக்காரர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தத் 'தமிழ் நாடு' பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறியிருந்தால் அவர் தம் இன்னுயிர் அத்துணை விரைவில் மண்ணில் மறைந்திருக்காதே என்று அப்போது என்னால் எண்ணாமல் இருந்திட முடியவில்லை.

அடுத்து, கழக அரசு பெருமிதப்படும் அளவுக்கு இயற்றப்பட்ட ஓர் அமைதியான சட்டம் 'சுயமரியாதைத் திருமணச் சட்டம்' ஆகும். இதற்கொரு நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியே உண்டு. தந்தை பெரியார் அவர்களே இந்தச் சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழகத்தில் முதன் முதல் தவழ விட்ட தாய் ஆவார். புரியாத மொழியில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத சாத்திரச் சடங்குகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பழைய திருமண முறை ஒன்றை புறக்கணித்து விட்டுப் புரிந்த தாய்மொழியில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறிக்கொண்டு மந்திரம் ஏதும் ஓதுதல் இன்றி மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்கிற புதிய சீர்திருத்தத் திருமண முறை ஒன்றைத் தோற்றுவித்தார் பெரியார்.

தொடக்கத்தில் இந்தப் புதிய மண முறைக்கு எழுப்பப்பட்ட தடைச்சுவர்கள், சொல்லடிகள், கல்லடிகள், ஏராளம் அவற்றையெல்லாம் மீறிப் பல்லாயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் சுயமரியாதைத் திருமண முறைப்படியே தங்கள் இல்லறத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச். சட்டப்படி சொத்துரிமை முதலான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. ஒன்றிரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்ட போது அத்தகைய திருமணமே செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியாரின் வழியில் புதிய மணமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு இது பூகம்ப அதிர்ச்சியையே கொடுத்தது. குறிப்பாகத் தாய்க்குலத்தினர் தணலில் புழுவெனத் தவித்திடும் நிலையே உருவெடுத்தது. அதனைத் தவிர்த்திட வற்புறுத்தி, சீர்திருத்தத் திருமணங்களுக்கும் சட்டப் பாதுகாப்புத் தந்திட வேண்டும் என்று எதிர்க் கட்சியாக இயங்கியபோதே சட்ட மன்றத்தில் தி.மு. கழகம் குரல் கொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியாளர்களோ அதற்குக் காது கொடுக்க மறுத்தனர்.

இத்துணைக்கும் அப்போது பெரியாரின் ஆதரவு அவர்களுக்குப் பெரும் அளவில் இருந்தது. எனினும் அவரால் உருவாக்கப்பட்டு 30, 40 ஆண்டுகளாக வளர்ந்துவிட்ட ஒரு புதிய சமுதாய முறைக்குச் சட்ட வடிவந் தருவதற்கு உடன்பட மறுத்தது மட்டுமல்ல, உதாசீனப்படுத்துவதற்கும் துணிந்தனர். தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதுமே சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்ட வடிவம் தருவதைத் தனது முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றாக மேற்கொண்டது.

அதற்குரிய மசோதாவைச் சட்ட அமைச்சர் நண்பர் மாதவன் 1967 ஜூலைத் திங்களில் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்தார். அவருடைய தலைமையிலேயே அமைந்த ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுப் பின்னர் சட்டமாக நிறைவேறியது. கழக அரசு புரிந்திட்ட சாதனைகளில் இதுவும் ஓர் இலட்சிய- சாதனை என்பதில் எள்ளளவும் மிகையில்லை. அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் கழக அரசு புரிந்திட்ட கொள்கை வழிச் சாதனைகளில் குறிப்பிடத்தக்க இன்னொன்று, இந்தி ஆதிக்கத்தினை அடியோடு ஒழித்திடும் வகையில் 'தமிழ்நாட்டில் இந்தி இனி இல்லை' என்று 23-1-1968 அன்று சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.

அது உருவெடுப்பதற்கு உரம் ஊட்டிடும் போக்கில் மத்திய அரசின் நடவடிக்கைகளும் அப்போது திசை மாறிச் சென்றன. 1967 டிசம்பரில் டில்லி நாடாளு மன்றத்தில் மத்திய அரசு ஆட்சி மொழிச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டது. அதன் மூலம் இந்திக்காரர்கள் தங்கள் தாய் மொழியான இந்தி மொழியை மட்டுமே படித்துவிட்டு எத்தகைய உயர்ந்த உத்தியோகத்துக்கும் சென்று விடலாம்; ஆங்கிலம் கற்றிட வேண்டிய அவசியம் இல்லை; அதே சமயம் இந்தி பேசப்படாத பகுதிகளைச் சார்ந்தவர்கள் தங்கள் தாய் மொழி ஒன்றை மட்டுமே படித்தால் போதாது; இந்தியையும் அவர்கள் கண்டிப்பாகக் கற்றிருந்தால்தான் மத்திய அரசு உத்தியோகங்களில் அவர்களுக்கு இடம் கிடைக்கும்.

இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் பயின்றால்தான் அவர்களுடைய எதிர்கால நலனுக்கு ஏற்றது. இவ்வாறு இந்திக்காரர்களுக்குக் கண்ணில் வெண்ணெயையும், இந்தி பேசப்படாத மக்களுக்குச் சுண்ணாம்பையும் தடவுகின்ற ஓரவஞ்சனை ஏற்பாடு வழக்கம்போல் உள்ளக் கொதிப்பையே கொடுத்தது தமிழ் மக்களுக்கு. இதனால், மனக் குமுறலுக்கு இலக்கான மாணவ மணிகள் கிளர்ச்சிகளில் இறங்கினர். புரட்சிக் கொடி ஏந்தினர். மத்திய அரசின் சொத்துக்களைச் சேதாரப்படுத்திக் காட்டியாவது தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்திட வேண்டும் என்கிற அளவிற்கு அவர்களுடைய கோபக்கனல் கெர்ழுந்து விட்டு எரிந்தது; அது இரயில் பெட்டிகளை எரித்திடும் அளவிற்கும் தாவிற்று.

இடையிலே வன்முறையாளர்களும் மாணவர் வேடத்தில் ஊடே புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டிட முற்பட்டனர். ஒரு நாள் நண்பகல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டிருப்பதாகவும், அந்தப் பெரிய நிலையமே எரிதழலுக்கு இரையாகலாம் என்றும் எனக்குத் தகவல் வந்தது. உடனே சென்டிரல் நிலையத்துக்குப் புறப்பட்டேன். 'ஆத்திரத்தின் உச்சியில் கிளர்ச்சிக்காரர்கள் எத்தகைய அசம்பாவிதத்திலும் ஈடுபடலாமே?

உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுமே?' என்று சிலர் என்னைத் தடுக்க முயன்றார்கள். நானோ கேட்கவில்லை. மாணவச் செம்மல்களை நேரில் சந்தித்துப் பேசினால் அவர்கள் மனத்தை மாற்றிட முடியும் என்கிற நம்பிக்கையுடனேயே சென்றேன். சென்டிரல் நிலையமோ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் ஆரவார முழக்கங்களால் அதிர்ந்த வண்ணமே இருந்தது. நாங்கள் சென்றதும் மாணவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களை நோக்கி- "...நீங்கள் நடத்துகின்ற கிளர்ச்சியும் காட்டுகின்ற உணர்ச்சியும் தூய்மையானவை; மதிக்கத்தக்கவை; தமிழகத்தின் குரலை எதிரொலிப்பவை.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் மறந்து விடாதீர்கள். தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அரசு 'இந்தி வரட்டும்' என்று கூறுகிற காங்கிரஸ் அரசு அல்ல; இந்தியை எதிர்த்துக் களம் பல கண்ட கழக அரசு. ஆகவே அரசாங்க ரீதியில் இந்தியை எதிர்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் எடுத்தே தீரும். அதற்கிடையே உங்கள் கிளர்ச்சியின் தன்மையை வேறு திசையில் திருப்பவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் விஷமிகள் முயன்று வருகிறார்கள்.

அவர்களுடைய நோக்கம் சட்டம்-ஒழுங்கு குலைந்து விட்டதாகக் கூறிக் கழக அரசைக் கவிழ்ப்பதுதான். அந்தப் போலி வேடதாரிகளுக்கு மாணவர்கள் பலியாகலாமா?" என்றெல்லாம் உருக்கமாகக் கேட்டுக் கொண்டேன். சிறிது நேரத்தில் மாணவர்களிடையே அமைதி நிலவிற்று. எத்தகைய அசம்பாவிதச் செயல்களிலும் ஈடுபடாமல் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு 25-12-67-இல் 'மெயில்' ஏடு ஒரு தலையங்கமே தீட்டியிருந்தது.

அதில்- "...திரு கருணாநிதி, சென்னை-சென்ட்ரல் நிலையத்துக்குச் சென்று நாட்டின் பொதுச் சொத்துகளைச் சேதமடையச் செய்யும் முயற்சியிலிருந்து மாணவர்களைப் பின்னடையச் செய்தார். உள்ளபடியே கருணாநிதி சிறப்புமிகு சுயத் துணிவைக் காட்டினார்" -என்று தன் கருத்தினைத் தெரிவித்திருந்தது. டில்லியிருந்து வெளியாகும் ஸ்டேட்ஸ்மன்-ஏடும் 24-12-67 தேதியதன் தலையங்கத்தில் அடியிற் கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: "...ரயில்வே டெல்லியின் சொத்து இல்லை; மாறாக மொத்த தேசத்திற்கும் உரியது என்று மாணவக் கிளர்ச்சியாளர்களுக்கு நினைவு- றுத்துவதற்காகச் சென்னை-மத்திய ரயில்வே நிலையத்திற்குச் சென்றிருக்கிறார் திரு கருணாநிதி; அதன் மூலம் தன்னுடைய தனித் துணிச்சலுக்கு ஒரு நல்ல உதாரணத்தைப் படைத்திருக்கிறார்!"

கழகத்தைச் சார்ந்த நாங்கள் நாட்டின் மொத்த நலனையும் கருத்தில் கொண்டு காரியமாற்றிய போதிலும் இந்தியைத் திணித்திடும் தன் திட்டத்தை விட்டுக் கொடுக்க மத்திய அரசு முன் வரவில்லை. இதனால், எதிர்ப்புக் கிளர்ச்சிகள் வலுத்த வண்ணமே இருந்தன. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் குலைந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னர் மொழிச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு கண்டிடத்தான் வேண்டுமென்று கழக அரசு உணர்ந்தது.

எனவே 23-1-1968 அன்று தமிழகச் சட்ட மன்றத்தின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப் பெற்றது. அதில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தி ஒழிப்புத் தீர்மானத்தை முன் மொழிந்தார் அண்ணா. "...மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. "தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இம்மன்றம் தீர்மானிக்கிறது.

"என். சி. சி. முதலிய அணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி ஆணைச் சொற்களை நீக்கி விடுவது என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தால், என். சி. சி. போன்ற அணிகளைக் கலைத்து விடவும் இந்த மன்றம் தீர்மானிக்கிறது." அண்ணா கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய காங்கிரஸ் குழுத்தலைவர் திரு கருத்திருமன் - "இப்போது மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகச் சட்ட மன்றத்தை அவசரம் அவசரமாகக் கூட்ட வேண்டுமா?"

என்று கேட்டார். அவருக்குத்தான் அண்ணா இப்படி விடையளித்தார்; "மாணவர்கள் யார்? அவர்கள் நம் ரத்தத்தின் ரத்தம். சதையின் சதை; நம் எதிர்காலத்தின் உருவங்கள்." சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த இந்தி ஒழிப்புத் தீர்மானம், மாணவ மணிகளின் மனச்சுமையை இறக்கி அவர்தம் எதிர்காலத்தையே ஒளி மயம் ஆக்கிய பெருமைக்குரியதாகும். அந்தத் தீர்மானம் தமிழக வரலாற்றிலே வைர வரியாகப் பொறிக்கத்தக்கது; கழகத்தின் புகழ் மகுடத்திற்குப் பொன்னொளியைச் சேர்த்து நிற்பது.

அமைச்சர் நிலையில் நான் என் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் திருச்சி வானொலி நிலையத்தார் அழைப்பொன்றை விடுத்திருந்தனர்.