நெஞ்சுக்கு நீதி
குடிசை மாற்று-கூவம் திருத்தம்-குடிநீர் வருகை · 46 / 391
குடிசை மாற்று-கூவம் திருத்தம்-குடிநீர் வருகை ஆனால் அதற்கு ஈடு செய்திடும் வகையில் குடிசை மாற்று வாரியத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் பல அடுக்குகள் கொண்ட மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு மாதம் 50 ரூபாய் 60 ரூபாய் வாடகை கொடுக்கக்கூடிய வீடுகளில் 10 ரூபாய் 15 ரூபாய் மட்டுமே வாடகை தந்தால் போதும் என்று ஏழை, எளியவர்கள் குடியிருக்க வசதி செய்யப்பட்டது. இப்படிக் குறைந்த வாடகையே வசூலித்ததால் மாதம் அவர்களுக்கு 40ரூபாய் மிச்சப்படுவதற்கு வகை காணப்பட்டது இதனால் படியரிசித் திட்டம் போனதால் பாதிக்கப்பட்ட ஏழைகள் குடிசை மாற்று வாரியத்தால் அதிகமான பயன்களை அடைந்தனர்.
அதே நேரத்தில் படியரிசித் திட்டம் கொணர்ந்ததால் அரசுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த ஆறு கோடி ரூபாய் இழப்பையும் ஈடுகட்டிக் கொள்ளவும் முடிந்தது. பொதுப்பணித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றிருந்த காலத்தில் எத்தனையோ உடனடி நடவடிக்கைகள், விரைவான முடிவுகள், புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன என்றாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக-முக்கியமான ஒன்றிரண்டை மட்டும் தொட்டுக் காட்டினால் போதும் என்றே நினைக்கிறேன்.
நான் அமைச்சரானவுடன், சென்னை, அடையாறு-எல்பின்ஸ்டன் பாலத்தின் ஆபத்தான நிலை என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. உடனே அதனைப் பார்வையிடச் சென்றேன். அந்தப் பாலமோ இரண்டொரு நாட்களிலேயே இடிந்து விழுந்து விடும் போல் இருந்தது. உடனடியாக அதற்கு முட்டுக் கொடுத்துப் பாதுகாத்திடும் பணியினை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினேன். அதுகாறும் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களோ அந்தப் பாலம் விழுந்து விடாதபடியும் பாதுகாப்புத் தரவில்லை.
அடுத்து வந்த பொதுத் தேர்தலில் தாங்கள் விழுந்துவிடாதபடி தங்களையும் பாதுகாத்துக் கொள்ளவில்லை. அவர்கள் விழுந்து விட்டதால், பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் பாலம் திடீரென்று விழுந்திருந்தால் எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும்! அந்தப் பாலம்தான் நான் முதலமைச்சரான பிறகு எழில் கொஞ்சும் வகையில் அகலமாகக் கட்டப்பட்டு 'திரு. வி. க. பாலம்' என்னும் புதிய பெயரினையும் பூண்டு என்னால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!' -என்று பாரதியார் பெருமிதத்தோடு பாடிச் சென்றார். ஆனால் அந்த வள்ளுவரின் வாய்மொழிகளை, வைர வரிகளைத் தங்கள் உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டு அவற்றின் வழி நடப்போர் எத்தனை பேர் என எண்ணிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் பகுத்தறிவுப் பெட்டகமாய், பண்பாட்டின் விளைநிலமாய் பிறர் வகுத்தறியா நெறியையெல்லாம் வகைப்படுத்திய பெருங்கணக்காய் வையம் முழுமைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்கே வள்ளுவம்!
அது தரணியெங்கும் பவனி வருவது ஒருபுறமிருக்க, முதலில் தமிழகத்திலாவது வலம் வந்தால் அது எத்தனை பேருடைய வாழ்வில் ஒளியினை ஏற்றி வைக்கும் என்று நான் எண்ணினேன். தெருவெல்லாம் திருவள்ளுவர் சிந்தனை முழங்கிடத் திருக்குறள் வரிகள் பரவிட பஸ்கள் மிகுந்த பயனுள்ள கருவியாக எனக்குப்பட்டது. எனவே, ஒவ்வொரு அரசுப் பேருந்து வண்டியிலும் பயணம் புரிவோரின் பார்வையை ஈர்த்திடும் வகையில், திருக்குறள் பொறிக்கப் பட்ட பலகையும், திருவள்ளுவர் படமும் வைப்பதற்கு ஆவன செய்தேன்.
அன்னைத் தமிழிடம் பற்றுக் கொண்ட அளைவராலும் இத்திட்டம் வெகுவாகப் பாராட்டப் பெற்றது. அதே போல், மாநிலமெங்குமுள்ள பொதுப் பணித்துறையைச் சேர்ந்த தங்கும் விடுதிகள் அனைத்திலும் வள்ளுவர் படமும் திருக்குறளும் அமைக்கப் பெற்றன. இலை நடுவே செல்லும் நரம்பினைப் போல, ஊரின் நடுவே ஆறு ஓடுவதும் ஒரு தனியான அழகுதான்; செழுமைதான். அந்த அலாதியான இயற்கையின் வனப்பைத் திருவாரூரில் கண்டும் நான் திளைத்திருக்கிறேன்.
தேம்ஸ் நதிக்கரையில் உள்ள இலண்டனில் நின்றும் நான் ரசித்திருக்கிறேன். நான் முதன் முதலில் சென்னையில் அடிவைத்த பொழுது கருநாகம் போல் படுத்துக் கிடக்கும் ஓர் ஆறு என் கண்ணில் பட்டது. 'கூவம்' என்கிற பெயரில் நகரின் நடுவே கரையோ துறையோ இல்லாமல் அது காட்சி அளித்தது, அதன் படுகைப் பகுதியிலோ ஏழைகளின் குடிசைகள்; பக்கத்திலேயே குப்பை மேடுகள்; கழிவு நீர்க்குழிகள்; நாற்றமோ மூக்கைத் துளைத்துக் குடலையே பிடுங்கும்.
ஆறு என்று பேர் படைத்தும் அது அப்படி நாறும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. சில சுருங்கிய நெஞ்சங்களில் சுரந்திடும் அழுக்காற்றினும் கொடிய அழுக்கு ஆறாக, ஏன், சென்னை நகருக்கே ஓர் இழுக்கு ஆறாகவே அது தோற்றம் அளித்தது; நோய்களின் தொட்டிலாகத் தொல்லையும் கொடுத்தது. 'கடற்கரை அழகு படைத்த தமிழகத் தலைநகருக்கு இப்படியும் ஒரு களங்கம் வந்து வாய்த்திட வேண்டுமா? இந்தக் கூவம் ஆற்றையே எழில் கொழிக்கும் ஆறாக மாற்றிட முடியாதா?
அதற்கு ஏன் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஆவன செய்திடவில்லை?' என்றெல்லாம் நான் எண்ணினேன். ஏங்கினேன். பொதுப்பணித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டதும் கூவத்தை எப்படிச் சீரமைப்பது என்பது குறித்து ஓயாமல் சிந்தனை செலுத்தினேன். பொறியியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடிப் பெரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. கூவத்தில் நீரோட்டம் நிலையாக இல்லாத காரணத்தால்தான் அழுகிய பொருள்கள், கழிவு நீர்கள், கொசுக்கள், முதலானவற்றின் தேரோட்டம் 'சிறப்பாக' நடைபெறுகிறது என்பது தெரிந்தது!
எனவே பருவமழை பெய்யாத, பெருக்கில்லாத காலங்களில் கடல் நீரை ஆற்றுக்குள் புகவிட்டு ஓட்டத்தை நிலையாக இருக்கச் செய்வதற்காக அணையொன்று கட்டுதல், மணலிட்டு இடையிடையே மேடுகள் எழாதவாறு மணல் உறிஞ்சிகளை அமைத்தல், கழிவு நீர் சாக்கடை நீர் சேரவொட்டாமல் தடுத்திடச் சென்னையையே ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆங்காங்கே கழிவு நீர் அமைப்புகளை ஏற்படுத்துதல், ஆற்றின் போக்கை ஒழுங்குபடுத்திக் கரை வகுத்துக் கரையின் இரு மருங்கிலும் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் நிறுவுதல், உல்லாசமாய்ப் பொழுதினைக் கழிப்பதற்கேற்பக் கூவத்திலேயே படகுகள் விடுதல், அதற்காக அழகான படகுத் துறைகளை அமைத்தல் முதலானவை அந்தச் சீரமைப்புத் திட்டத்தின் முக்கியமான கூறுகளாகும்.
1967-செப்டம்பரில் அந்தக் "கூவம் நதிச் சீரமைப்புத்திட்டம்" முதலமைச்சர் அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது அவர் குறிப்பிட்ட சொற்கள் வருமாறு: வெகுகாலமாகவே துர்நாற்றம் பிடித்து ஆறு என்று ஏசப்பட்டு வந்துள்ள இந்த ஆறு இன்று மிகுந்த பாக்கியம் செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குப் புதிதாக வந்து போகக் கூடியவர்கள் அவரவர் ஊர் சென்றதும் இந்த ஆற்றின் துர்நாற்றம் பற்றியே பேசுவார்கள்.
புறப்படுகிற இடத்தில் தூய்மையாகவே உள்ள இந்த ஆறு அலைந்து வளைந்து அழுக்கைச் சேர்த்துக் கொள்கின்றது. 'கடலோடு போ!' என்று நகர மக்கள் அதை விரட்டுகிறார்கள். கடல் அலையோ 'நீ இங்கே வராதே!' என்று விரட்டுகின்றன. ஆக, இந்தப் பலமான போராட்டம் பல காலமாகவே நடைபெற்று வருகின்றது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதே இந்தத் திட்டம். "முதல் பட்ஜெட் தயாரிக்கும் போதே இந்தத் திட்டத்துக்குப் பணம் ஒதுக்கும்படி என்னுடைய தம்பி கருணாநிதி என்னைத் துளைத்துக் கொட்டி விட்டார்.
'ஒதுக்கியிருக்கிறேன்' என்று சொல்லியும் அது பட்ஜெட்டில் இருக்கிறதா என்று பார்த்த பின்னரே திருப்தி அடைந்தார்.. நகருக்கு எழில் தோற்றத்தையும், வாணிபப் பெருக்கையும் அளித்திடக் கூடியது இந்தத் திட்டம். இதனை நிறைவேற்றிச் சென்னையைச் சிங்காரத் திருநகராக்குவதே நமது கடமை."
-அண்ணாவின் வார்த்தைகளிலிருந்தே எத்துணைக் கேவலமான முறையில் சென்னையின் அழகைச் சீரழித்தது அன்றையக் கூவும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் கலையழகைப் பருகிட விரும்பி வந்திட்ட வெளிநாட்டவரையெல்லாம் விரைந்து விரட்டியடித்திடும் 'பெரும் புண்ணியத்தையும்' கூவம் ஆறு அப்போது தன் வயிற்றிலே கட்டிக் கொண்டிருந்தது! அத்தகைய அருவருக்கத்தக்க காட்சிகளை அகற்றிடவும், சென்னை மாநகரத்தை அழகுத் திருநகராய் மாற்றிடவுமே கூவம் சீரமைப்புத் திட்டத்தில் நான் குறியாக இருந்து செயலாற்றினேன்.
பொறியியல் வல்லுநர்களின் ஒத்துழைப்போடு அதை நிறைவேற்றிட முடிந்ததில் என் நெஞ்சிற்கு ஏற்பட்டுள்ள நிறைவுப் பெருமிதம் நிகரற்றது என்றால் அது மிகையில்லை. இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜன நாயக நாட்டில் சமதர்மமும் தழைத்திட வேண்டுமென்றால், நாட்டுடைமைக் கொள்கைக்கு நல்ல வேர்ப்பிடிப்பு வேண்டும்; தனியாருடைய ஆதிக்கத் தீ மேலும் மேலும் தாவாதபடி தடுத்திட வேண்டும். தி.மு. கழகத்தைப் பொறுத்தமட்டில் சமதர்மப் பூங்காவைச் சமைப்பதையே தன்னுடைய இதயகீதமாய், இலட்சிய தீபமாய் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் கழகம் ஆட்சி புரிந்திடத் தொடங்கியதும் நாட்டுடைமைக் கொள்கையைச் செயற்படுத்துவதில் நாட்டஞ் செலுத்தியது. முதற்கட்டமாகச் சில பேருந்து வழித் தடங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டன. கடலூர்-சேலம் சென்னை-சென்ராயன்பாளையம் காஞ்சிபுரம்-விழுப்புரம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. காஞ்சிபுரம்-விழுப்புரம் வழித்தடத்தில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பஸ்ஸின் வெள்ளோட்டத்தை அண்ணா பிறந்த மண்ணில் நான் தொடங்கி வைத்தேன்.
நல்ல காரியங்கள் நடைபெறும் பொழுது வேண்டுமென்றே எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் சிலருக்கு வாடிக்கையான பொழுதுபோக்காகும். சமதர்ம கோட்பாட்டுக்குத் தக்க வலிமை சேர்த்திட பஸ்களை நாட்டுடைமை ஆக்க முற்பட்ட போதும் அப்படித்தான் எரிச்சலை உமிழ்ந்தனர் சிலர். "பஸ் அதிபர்கள் தேன் கூடு போன்றவர்கள்; அவர்கள் மீது கை வைத்தால் ஜாக்கிரதை!"
என்று சட்ட மன்றக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக எச்சரித்தார். காஞ்சிபுரத்தில் நாட்டுடமை பஸ்ஸின் வெள்ளோட்ட விழாவில் கலந்து கொண்ட நான் அவருக்கு இப்படித்தான் விடையளித்தேன். "...அந்தத் தேன் கூட்டை எப்படி எடுக்க வேண்டும் எனறு எனக்குத் தெரியும். அதற்குப் போட வேண்டிய முக்காடுகளையெல்லாம் போட்டுக் கொண்டுதான் தேன் கூட்டைத் தீண்டுவேன். இந்தக் கலையை நன்கு கற்றவன் நான். நாங்கள் தேனைத்தான் எடுப்போமே தவிரத் தேனீக்களை கசக்கிப் பிழிய மாட்டோம்.
பஸ் அதிபர்களைத் தொல்லைப் படுத்த மாட்டோம்." பொதுப்பணித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றிருந்த காலத்தில் எனக்குப் பேருவகை அளித்திடும் வகையில் செயலாக்கப்- பட்ட திட்டங்களில் 'வீராணம் காவிரி நீர்த் திட்டமும்' குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மக்கள் தொகை பெருகப் பெருக, சென்னை மாநகரத்தைக் குடிநீர்ச் சிக்கல் இடியெனத் தாக்குவதும் வழக்கமாகி விட்டது. அதனைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி பொன்னி நதியிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவது தான் என்று தோன்றியது.
ஆனால் எந்த இடத்திலிருந்து காவிரி நீரைத் திருப்புவது என்பது பெருங்குழப்பத்தைக் கொடுத்தது. முதலில் ஜேடர் பாளையத்திலிருந்து நீர் கொண்டு வரும் திட்டம் பற்றிச் சிந்திக்கப் பட்டது. அதற்குத் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான நான்காயிரம் ஏக்கர் நன்செய் நிலத்தையும் மூவாயிரம் ஏக்கர் புன்செய் நிலத்தையும் பெருந்தொகை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. எனவே ஜேடர்பாளையம் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு வீராணம் ஏரியே தகுந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
வீராணம் ஏரி காவிரியாற்றின் பாசனத் தொடரில் ஒரு கூறு. அது ஒரு பாத்திரம் போலப் பெரிய நிலையிலிருந்து நீரை அள்ளியெடுத்துக் கொள்ள உதவும் ஒரு வசதி. மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரை வீராணம் ஏரியின் வழியாகச் செலுத்தி, மின்விசை இறைவைகளால் ஏற்றிக் குழாய்கள் மூலமாகச் சென்னைக்குக் கொண்டு வரும் வகையில் திட்டம் உருவாக்கப் பட்டது. 139 மைல் தூரம் குழாய்கள் வழியாக நீரைத் திருப்பிவிடும் இந்தத் திட்டத்தால் வீராணம் ஏரியையே நம்பிக் கொண்டிருக்கும் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழி, துறைகளை மேற்கொள்ளவும் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டது.
சென்னைக்குக் குடிநீர் கொண்டு வந்திடும் இந்தச் சீரிய திட்டத்தை 30-10-67 அன்று சென்னை - சைதாப்பேட்டையில் அண்ணா அவர்கள் துவக்கி வைத்தார்கள். என்னுடைய தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதும் என் நினைவில் அலை மோதுகிறது: "...எங்கெங்கு தேவையோ அங்கே செல்வது காவிரியின் இயல்பாக உள்ளது. கன்னட இலக்கியத்தைக் காட்டிலும் தமிழ் இலக்கியத்தில் தான் காவிரி பற்றிப் பலபடக் கூறப் பட்டுள்ளது.
திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக அது சித்திரிக்கப்பட்டுள்ளது. "நமக்குப் பண நெருக்கடி எவ்வளவு அழுத்தமாக இருந்த போதிலும் பொதுப் பணி அமைச்சர் மு. கருணாநிதி வந்து அணுகிய நேரத்தில் அவர் தாம் மேற்கொண்ட பணியை முடித்திட எப்படி அணுகுவார் என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். தாவிரி நீர்த் திட்டத்துக்காக அவர் அவர் என்னை அணுகிய நேரத்தில் தயக்கம் காட்டாது அதற்கான நிதியை ஒதுக்கித் தரும் மகிழ்ச்சியான நிலையே எனக்கு ஏற்பட்டது."
பொதுமக்களின் துயரினைத் துடைத்துத் தேவைகளை நிறைவேற்றிடத் தி. மு. கழக அரசு எத்துணை ஆர்வத்துடன் செயலாற்ற முற்பட்டது என்பதை எடுத்துக் காட்டிடவே வீராணம் காவிரி நீர்த் திட்டம் பற்றியும் இங்கே குறிப்பிட விழைந்தேன். அமைச்சராக நான் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த துறைகளைப் பொறுத்த மட்டில் உருவாக்கப்பட்ட ஒரு சில முக்கியத் திட்டங்களை - எடுக்கப்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை - மட்டுமே மேலே குறிப்பிட்டேன்.
