நெஞ்சுக்கு நீதி
கலை மாமணியானேன் · 45 / 391
கலை மாமணியானேன் தி ருச்சியில் அச்சமயம் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட நேர்ந்தது. அவற்றில் பஸ் தொழிலாளர்கள் வழங்கிய வரவேற்பு விழாவில் நான் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர்களுக்கு வரவேற்பு என்பது உண்மையில் விழா எடுப்போர் குவிக்கும் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் வழங்கும் வரவேற்புத்தான். பொதுப் பணித்துறை அமைச்சரான என்னிடமும் அப்படித்தான் அன்று கோரிக்கைகள் வந்தன. கொடுக்கப்படும் கோரிக்கைகள் நியாயமானவையாயும் நிறைவேற்றத் தக்கனவாயும் இருக்குமாயின் அவற்றைப் புறக்கணிப்பதிலே பொருளும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; அத்துடன் உடனடியாக நிறைவேற்றத்தக்க கோரிக்கைகளையும் ஊறுகாய் போட்டு உருவழியச் செய்வதைப் போல மிகக் கொடிய ஊறும் தீங்கும் வேறு இல்லை.
எனவேதான் அன்று திருச்சியில் என் முன் இருபத்திரண்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போது அவற்றில் பதினான்கு கோரிக்கைகளை ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கை உடனே நிறைவேற்றுவதாக அந்த இடத்திலேயே அறிவித்தேன். என்னுடைய உடனடியான முடிவுகள் தொழிலாளர்களிடம் உற்சாகமான வரவேற்பை ஆரவாரத்தைப் பெற்றன. என்னுடைய விரைந்த நடவடிக்கை பலருக்கு வியப்பையும் அப்போது அளித்தது. அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்ட மன்றத் தேர்தலுக்குப் போட்டியிடாமல் தென் சென்னைத் தொகுதியில் வேட்பாளராக நின்று நாடாளுமன்றத்துக்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அவர், இந்த மாநிலத்தின் சட்ட மன்றத்தில் உள்ள இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் அரசியலமைப்புச் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் உறுப்பினர் ஆகிவிட வேண்டும். அதன் பொருட்டுச் சென்னை மாநகராட்சித் தொகுதிக்கென மேலவையில் (Legislative Council) ஒதுக்கப்பட்டுள்ள இடம் அச்சமயம் காலியாக இருந்ததால் அந்த இடத்திற்கு அண்ணா போட்டியிட்டார். 22-4-67-இல் நடைபெற்ற அந்த மேலவை இடைத் தேர்தலில் அண்ணா அவர்களே வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் தம் முதலமைச்சர் பதவி சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது. கழகத்தவரும் பொது மக்களும் நெஞ்சம் களித்திட வெற்றிக் கனியினைக் கொய்து நின்றிட்ட அண்ணா, அன்று மாலையே தம்முடைய கரத்தால் எனக்கொரு விருதும் வழங்கினார். தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி ஊக்கமூட்டும் பணியினை விடாது செய்து வருகிறது. அந்த ஆண்டு திரைப்படத் துறையில் 'சிறந்த வசனகர்த்தா' விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
கல்வி அமைச்சர் நாவலர் அவர்கள் தலைமையில் விருது வழங்கும் விழா 22-4-67 மாலை சென்னை ராஜாஜி மண்டபத்தில் நிகழ்ந்தது. அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள் கலைஞர்களை அறிமுகப் படுத்திட, அண்ணா அவர்கள் விருதுகளை வழங்கினார்கள். என்னுடைய முறை வந்து பெயர் அறிவிக்கப்பட்டு நான் எழுந்து சென்றபோது எனக்குரிய விருதை உடனே என்னிடம் அளித்திடவில்லை அண்ணா; தாமே அந்த மாலையை அணிந்து கொண்டார். தன் உயிருக்குயிரான சேயிடம் வேடிக்கை காட்டிடும் தாயைப் போலவே அண்ணா விருதணிந்து நின்றிட்ட அந்த வியத்தகு கோலத்தைக் கண்டு ராஜாஜி மண்டபமே ஆரவாரத்தால் அதிர்ந்தது.
சில நொடிகள் சென்ற பின்னர் அந்த மாலையை எடுத்து எனக்கு அணிவித்தார். "....கலைஞர் கருணாநிதி அவர்கள் கலையில் ஈடுபாடு கொண்டு எதையும் நேர்த்தியாகச் செய்வது போலவே, ஆட்சியிலும் கலையின் நேர்த்தியை இணைத்துக் காரியமாற்றி முன்னேற்றம் கண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் விருது பெறுவதால் நான் தனிப்பட்ட முறையில் பெருமை அடைவதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்" -என்று உளந்திறந்து அப்போது அண்ணா பாராட்டினார்.
நன்றியுரை நவின்றிட்ட நான், "...கடந்த மார்ச் 6-ஆம் நாள் பொதுப்பணி அமைச்சராக இதே மண்டபத்தில் நான் உறுதி மொழி எடுத்துக்கொண்ட அந்த நாளைவிட விருது பெற்ற இந்த நாளை நான் பெருமைக்குரிய நாளாகக் கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாசமுள்ள அண்ணனின் கையால் விருது பெற்றிருக்கிறோம் என்பதை எண்ணுகிற நேரத்தில் உள்ளபடியே நான் பெருமையடைகிறேன்" -என்று குறிப்பிட்டேன். அண்ணாவை அடுத்து நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின்னர் நண்பர் எஸ்.
டி. சுந்தரம் அவர்களைச் செயலாளராகக் கொண்டு இயங்கும் அந்தச் சங்கீத நாடக சங்கமே பிறகு 'இயல், இசை, நாடக மன்றம்' என மூன்று தமிழையும் வளர்க்கக் கடமைப்பட்டது என்கிற வகையில் புதுப் பெயரினை தமிழ் பெயரினைப் பூண்டது. மே-நாள். தொழிலாளர்களுக்கு மேன்மை தரும் நன்னாள்; மேதினியெங்கும் கொண்டாடப்படும் பொன்னாள். 1967-ஆம் ஆண்டு விடுமுறை உண்டு என அண்ணாவால் அறிவிக்கப்பட்ட அந்த மே முதல் நாளில், ஓர் அரிய கடமையை ஆற்றினோம் என்று நானே நெஞ்சாரக் களித்திடக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
காங்கிரசார் ஆண்ட காலத்தில் 1964-இல் பஸ் தொழிலாளர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 63 தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் 52 பேர் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். எஞ்சிய பதினொரு தொழிலாளர்கள் வேலை தரப்படாமல் பழி வாங்கப்பட்டு விட்டனர். மூன்றாண்டுகளாக மன்றாடியும் முன்னாலிருந்த ஆட்சியினர் அந்தத் தொழிலாளர்கள் மீது கருணையே காட்டிடவில்லை.
தி. மு. கழகம் அரசுப் பொறுப்பினையேற்றுப் போக்குவரத்துத் துறை எனக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பழி வாங்கப்பட்ட நண்பர்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். உடனே அந்தத் தொழிலாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் அலுவலில் அமர்த்துமாறு அந்த மே நாளில் ஆணை பிறப்பித்தேன். 'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்-அவன் காணத் தகுந்தது வறுமையாம்! பூணத் தகுந்தது பொறுமையாம்!'
-என்னும் வைர வரிகளைக் கேட்டுக் கேட்டுத் தொழிலாளர்களோடு தொழிலாளியாகக் கலந்து வாஞ்சையை வளர்த்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அந்த வற்றாத வாஞ்சையினால்தான் தொழிலாளர்களுக்கு ஒரு துயரம் எனில் அதை உடனே துடைத்திட வேண்டும் என்னும் துடிப்பு இயற்கையாகவே எழுவதுண்டு. அந்த முறையினால்தான் பழிவாங்கப்பட்ட தோழர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆணை பிறப்பித்தபோது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.
நான் முதல்வர் பொறுப்பை ஏற்ற பின்னர் அதே மே முதல் நாள் சம்பளத்தோடு கூடிய அரசாங்கப் 'பொது' விடுமுறை நாளாக (Negotiable Insrtuments Act) 1969-இல் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் (அதாவது 1967 மே நாளில்) ஏழை நடுத்தர மக்களின் துயர் துடைத்திடும் இன்னொரு பணி பற்றியும் அண்ணாவின் அரசு அறிவித்து அதில் ஈடுபடத் தொடங்கிற்று. சென்னை - கோவை ஆகிய பெரு நகரங்களில் 'ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி' என்னும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப் பட்டது.
வருவாய் குறைந்தோர் அரிசியை வாங்கி உண்பதைத் தவிர வேறு வழியில்லாதோர் இத்தகைய ஏற்பாட்டால் அந்த இரு பெரும் நகரங்களிலும் பெரும் பயன் அடைந்தனர். நாளடைவில் இந்தத் திட்டத்தின் நோக்கம் விழுமியதாயினும் அதனால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்ட அரசால் இயலவில்லை. மற்ற நகரங்களில் உள்ள மக்களும் "சென்னை-கோவை நகருக்கு மட்டுந்தானா அந்தத் திட்டம்?"
என்ற கேள்விக் கணை தொடுத்தனர். அண்ணா காலத்தில் அந்தச் சிக்கலுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது. நான் முதலமைச்சர் ஆனபிறகு, ரூபாயின் மதிப்புப் பெருமளவு குறைந்து விட்டதாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பண்டங்கள் உட்பட மற்றையப் பொருள்களின் விலைகள் உயர்ந்து விட்டதாலும், ஏனைய சூழ்நிலைகள் பலவற்றை எண்ணிப் பார்த்தும் அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
