நெஞ்சுக்கு நீதி
பதவியெனும் புதிய சட்டை · 44 / 391
பதவியெனும் புதிய சட்டை அன்னையின் கல்லறையைத் தொழுதிடச் சென்ற என்னை திருவாரூர் பொதுக் கூட்டமொன்றில் பேசிடத்தான் வேண்டுமென்று தென்னன் முதலான நண்பர்கள் வற்புறுத்தி விட்டனர். ஒப்புக் கொண்டு உரையாற்றிய நான் இவ்வாறு குறிப்பிட்டேன்: "...என்னைப் பற்றி இங்கே பேசிய தோழர்கள் திருவாரூருக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார்கள். தெருவெல்லாம் சென்று விளையாடும் பிள்ளை கடைசியில் தாயின் மடிக்குத் திரும்புவதைப் போலக் - களமெல்லாம் சென்று போரிடும் வாள் கடைசியில் உறைக்கு வருவது போல நான் திருவாரூருக்கு வருகிறேன்.
"நான் பிறந்தது திருக்குவளையென்றாலும் அங்கே இருந்தது 12 ஆண்டுகள்தான். ஏறத்தாழ 20 ஆண்டுக் காலம் திருவாரூரில் வாழ்ந்திருக்கிறேன். ஒரு பெண் பல ஆண்டு காலம் தாய் வீட்டில் வாழ்ந்திருந்தாலும் திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டிற்குச் சொந்தமாகி விடுவதுபோல் நான் திருக்குவளையில் பிறந்தாலும், திருவாரூருக்குச் சொந்தமானவன்; திருவாரூர் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிற காரணத்தால் நான் தஞ்சை மண்ணுக்குச் சொந்தமாகிவிட்டவன்.
தஞ்சை மாவட்டத்துடன் அதிகத் தொடர்பு கொண்டுள்ள நான் இந்த நேரத்தில் உங்கள் காலடிகளில் என் நெஞ்சார்ந்த அன்பைக் குவிக்கிறேன். "நீங்கள் அதை மிதித்தாலும் அந்த அன்பு இதயத்தின் மீது மெல்லக் கால் வைத்தாலும் அதனால் ஏற்படும் உணர்வை வலியென்று கருதாமல் வாய்ப்பாகக் கருதி நான் உங்களுக்குப் பாடுபட்டிருக்கிறேன். என் கண்கள் குளமாகும் விதத்தில் உருக்கமான பழைய நாள் நிகழ்ச்சிகளை மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி இங்கே எடுத்துக் கூறினார்.
"திருவாரூர்த் தெருக்களில் விளையாட்டுத்தனமாக - நான் பேசிய பேச்சுக்களைக் கேட்டு. 'தம்பி!' என்று அழைத்து உற்சாகமூட்டி முதுகில் தட்டிக் கொடுத்த மன்னையின் முரட்டுக் கரங்கள் இப்போது என் நினைவுக்கு வராமல் இல்லை. தோழர் தென்னன் வீட்டுத் திண்ணையில் நாங்கள் பேசிய அரசியல் கருத்துக்கள் என் நினைவுக்கு வராமல் இல்லை. நம்முடைய விஜயராகவனின் 'ராயல் அன் கோ' சோடா பாக்டரியில் உட்கார்ந்து கழக வளர்ச்சிக்குப் போட்ட திட்டங்கள் என் நினைவுக்கு வராமல் இல்லை.
"பழைய பாக்கியைப் பிறகு தருகிறோம், இன்றைய பாக்கியை நாளைக்குத் தருகிறோம்; அடித்த 'முரசொலி' பத்திரிகையைத் தாருங்கள்" என்று கருணாநிதி அச்சகத்தில் உட்கார்ந்து தோழர் ஜமாலோடு நடத்திய போராட்டம் என் நினைவுக்கு வராமல் இல்லை. "சிறு வயதில் இதே திருவாரூரில் நான் என் நண்பர்களுடன் விளையாடிய நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வராமல் இல்லை. நான் மறந்தாலும் நமது எதிர்க்கட்சி நண்பர்கள் 'திருவாரூர்த் தெருவில் விளையாடிய பையன்தானே இந்தக் கருணாநிநி?'
என்று சுட்டிக் காட்டுவதற்கும் தவறுவதில்லை. அவர்கள் அப்படிக் கூறுகிற காரணத்தால் எனக்கு மிகுந்த அடக்கம் ஏற்படுகிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி. "இன்று போட்டுக் கொண்டிருக்கிற புதிய சட்டை அமைச்சர் பதவி; நாளைய தினம் கழற்றி எறிந்து விடலாம். நான் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, உங்களுக்குச் சொந்தக்காரனாக இருப்பது 'முன்பு இருந்தது-என்ற எதிர்காலத் தொடர்பில் அல்ல. அந்தச் சொந்தம் நிகழ்காலத்திலும் இருக்கட்டும்; எதிர்காலத்திலும் தொடரட்டும்; தயவு செய்து 'கலைஞராக இருந்தவர்' என்று சொல்லாதீர்கள்.
இப்போதும் எப்போதும் அப்படி இருப்பவன்தான்!" நான்காவது பொதுத் தேர்தலில் தி. மு. கழகம் வெற்றி வாகை சூடியது குறித்து வெளிநாட்டு ஏடுகள் சில வெளியிட்ட கருத்துக்களை முன்னரே எடுத்துக் காட்டியிருக்கிறேன். அந்த நேரத்தில் இந்திய ஏடுகளும் அரசியல் அறிஞர்களும் கழகத்தின் வெற்றியை எந்தெந்தக் கோணங்களில் நின்று அலசினர், அணுகிப் பார்த்தனர் என்பதும் எண்ணி மகிழத் தக்கதாகும். "...இருபது ஆண்டுக் கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் திரு.
காமராசரது தலைமையும் இந்த (தமிழ் நாடு) மாநிலத்தில் ஒரு முடிவுக்கு வந்தன. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆளுங்கட்சியாக உதயமாகியிருப்பது தமிழ் நாட்டு அரசியலை; மேலை நாட்டில் உள்ள மிகச்சிறந்த ஜனநாயகங்களோடு ஒப்பிடச் செய்கிறது" என்று கருத்துத் தெரிவித்தது 'இந்துஸ்தான் டைம்ஸ்'.
"...பண்பாட்டுத் துறையில் தி.மு.க. நிச்சயமாகத் திட்டவட்டமாக மேலானது. 1965-ஆம் ஆண்டைய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின்போது மந்திரி சபையால் கையாளப்பட்ட முறை மாணவர்கள் நினைவில் பசுமையாக இருந்திருக்கிறது... தி.மு. கழகம் விடாது செய்த பிரச்சாரம் காங்கிரஸ் சவப்பெட்டி மீது கடைசி ஆணியையும் அடித்துவிட்டது" -என்றது யு.என்.ஐ. செய்தி நிறுவனம். '...புதிய நாடாளு மன்றத்தில் தி. மு. கழகத்தினர் 25 பேர் இருப்பர்; அக்கட்சி நிறுத்திய அத்தனை பேரும் வெற்றி பெற்றனர்.
இது ஒரு சாதனை (ரிகார்டு) ஆகும்!' -என்றது 'பேட்ரியட்' ஏடு. 'மற்ற இடங்களில் ஜன நாயகம் வெற்றி பெற்றிருக்கிறதாயினும் சென்னையில் மட்டுமே 'பார்லிமெண்டரி ஜனநாயகம்' வெற்றி பெற்றிருக்கிறது... இது மட்டில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு அதாவது இந்தியா முழுவதுக்கும் வழிகாட்டியாக அமைந்திருப்பது பற்றி நாம் பெருமைப்படலாம்...பதவியேற்கும் தி.மு.க. கட்சித் தலைவர்களின் ஆரம்ப உரைகள் நம்பிக்கை அளிப்பவைகளாகவே இருக்கின்றன' -என்றது 'தினமணி'.
'தமிழகத்தில் வேட்டு முழக்கத்தை வென்றது ஓட்டுச்சீட்டு!' என்றது 'பிளிட்ஸ்' 'தி.மு.கழகமோ இன்னும் போராடும் இயக்கமாக உள்ளது. ஆளும் (காங்கிரஸ்) கட்சியின் சினத்தையும் -ஏன், பகிரங்கப் பரிகாசத்தையும் கூடக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தைரியமாகச் சமாளித்து வந்துள்ளது. அதன் தேர்தல் பணிகள் உணர்ச்சி கொண்டனவாயும் தொண்டு மனப்பான்மை நோக்கம் வாய்ந்தவையாகவும் இருந்தன' -என்றது 'கரண்ட்.'
'தி.மு.க. வாய்ச் சவடால் அமைப்பு என்றும் தீவிரவாத அரசியல் கட்சி என்றுமிருந்த கருத்தை அழிக்க திரு. சி. என். அண்ணாதுரை முயன்று வந்தார். தமிழக வாக்காளர்களில் கணிசமானோர் அவரது கட்சிக்கு அமோக வாக்களித்திருக்கும் அம்சம் அவர் தமது முயற்சியில் வென்றுவிட்டார் என்பதையே நிரூபிக்கிறது' என்றது 'ஸ்டேட்ஸ் மென்.'
'பொதுத் தோதலில் தி.மு.கழகத்தின் வெற்றி இந்திக்காரர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். வட நாட்டுக்காரர்கள் இந்தியைக் கடவுளாக நினைப்பதை இனி விட்டுவிட வேண்டும்' என்றார் அலகாபாத் நீதிபதி திரு. எஸ். எஸ். தவான். இவர் பின்னர் ஆளுநராகவும் ஆனவர். "அகில இந்திய அடிப்படையிலோ மாநில அளவிலோ காங்கிரசுக்கு எதிராக உறுதியாகப் போட்டியிடக்கூடிய வேறு எந்தத் தனிக்கட்சியும் இன்னும் நெடு நாளைக்குத் தோன்ற இயலாது என்றே காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அதற்கு மாறான அதிசயம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. தி.மு.க. இங்கு இருந்தது. தாமதமின்றி அக்கட்சியை மக்கள் பதவிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து விட்டனர்" -என்றார் முன்னாள் லெப்டினென்ட் கவர்னர் திரு. க. சந்தானம். அந்தப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கவிழ்ந்தது போலவே இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் அது வேரோடு சாய்ந்தது. எதிர்க் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றன. கேரளாவில் திரு ஈ.
எம். எஸ். நம்பூதிரிப்பாடும், மேற்கு வங்கத்தில் திரு. அஜாய் முகர்ஜியும், பஞ்சாபில் திரு. குர்நாம் சிங்கும், ஒரிசாவில் சிங்தேவும், பீகாரில் திரு பி.பி. சின்காவும் முதல்வர்களாக அமைச்சரவை அமைத்தனர். இவ்வாறு ஆறு மாநிலங்களில் தான் எதிர்க்கட்சிகள் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றின என்றாலும் இந்தியா முழுவதிலுமாக அறுபது சதவிகிதமான வாக்குகள் காங்கிரசுக்கு எதிராகவே விழுந்திருந்தன. தி.மு.கழகத்தைப் பொறுத்த மட்டில் வாக்குகள் பெற்ற வகையில் ஒரே மாநிலத்தில் தான் போட்டியிட்டது என்றாலும் அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஒப்பு நோக்கியதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த பெருமையினை அது பெற்றது.
அந்த நேரத்தில் அண்ணா வெளியிட்ட ஓர் அரிய கருத்தும் அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைவரும் தங்கள் இதயத்திலே பதிய வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். மக்கள் இது வரையில் ஒரே கட்சி-காங்கிரஸ் கட்சிதான் ஆள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அதை மாற்றி இன்று எதிர்க்கட்களிடம் ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்றா விட்டால் மக்களுக்கு நம்மிடமுள்ள நம்பிக்கை நசித்துப் போய்விடும். ஆகவே நிலையான ஆட்சிக்கு உறுதி எடுத்துக் கொள்வோம்-என்றார் அண்ணா.
அத்துடன் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையிலும் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜோதி பாசு போன்றவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டபோது- "மத்திய அரசிடம் உரிமைக்காகப் போராட வேண்டும்: அதே நேரத்தில் இந்தியாவின் கட்டுக்கோப்பைக் கலைத்துவிடக் கூடாது" என்றும் அவர் கூறினார்.
இதே உணர்வோடுதான் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சேலம் இரும்பாலைக்காகச் 'சேலம் எழுச்சி நாள்' கொண்டாடிய போது மத்திய அரசுக்கு மாநிலத் தேவையை உணர்த்தும் நாளாக அது அடக்கத்துடன் கொண்டாடப்பட்டது; ஒரு மோதல் என்கிற அளவில் அது மூண்டெழவில்லை. ஆனால் அண்ணா அவர்களின் எச்சரிக்கைப்படி விழிப்போடு இயங்கிட மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி ஆட்சிகள் தவறி விட்டன. அதனால்தான் காங்கிரசுக்கு எதிராக எழுந்த ஆட்சிகள் அனைத்தும் பிற இடங்களில் நாளாவட்டத்தில் கவிழ்ந்தன.
கழக ஆட்சி ஒன்றுதரன்; அண்ணா காலத்திலும் அவருக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது; ஐந்தாவது பொதுத் தேர்தலிலும் முன்னை விட அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றி நீடித்துக் கோலோச்சுகின்றது. தி மு. கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் மக்களின் துயர் துடைத்திடும் பணிகளில் முனைந்து ஈடுபட்டது. உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றிட, தொலைதூர பஸ் கட்டணங்களைக் குறைத்திட, தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கைகளைக் கழக அரசு உற்சாகத்துடன் மேற்கொண்ட வேளையில் திடுக்கிடும் உண்மை ஒன்று எல்லாருடைய உள்ளத்தையும் உருக்கிற்று.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பதற்குள் உள்ள இடைக்காலத்தில் 'காபந்து சர்க்கார்' நடத்திக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பக்தவத்சலனார் இந்தி எதிர்ப்புச் சம்பந்தப்பட்ட முக்கியமான பைல்கள் சிலவற்றை எரிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார். அவரது தவறான நடவடிக்கையை அறிந்து தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதும் பைல்கள் சில ஓடி ஒளிந்தன என்னும் செய்திகள் அப்போது உலவிடத்தான் செய்தன என்றாலும் தமிழகத்தில் அதற்கு முன் 'பைல் எரிப்பு' நடைபெற்றதாக வரலாறு இல்லை.
எனவே அது மிகுந்த பதைப்பினை இங்கே ஏற்படுத்தியது. இதிலே வேதனைக்குரியது இந்த எரிப்பு வேலைக்கு வருத்தம் ஏதும் தெரிவிக்காதது மட்டும் அல்ல, அது சரியே என்றும் திரு பக்தவத்சலனார் வாதித்ததுதான்; அதுவும் என்னைத் தொடர்புபடுத்தி வாதித்தார். "தமிழ் நாட்டில் ஆட்சி மாறப்போகிறது; நான் போலீஸ் மந்திரியாவேன். அப்போது இந்தப் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்துக் கொள்கிறேன்!"
என்று பத்திரிகைகளில் படித்ததாகவும் ஆகவேதான் இந்தி எதிர்ப்புப் பைல்களை, முக்கியமாக என் சம்பந்தப்பட்ட பைல்களை எரிக்க அவர் உத்தரவு போட்டதாகவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக இட்டுக்கட்டி பைல் எரிப்பு வேலையில் ஈடுபட்ட பக்தவத்சலனார் பற்றிப் பத்திரிகை நிருபர்களிடம் நான் கூறினேன்: "நான் போலீஸ் மந்திரியாவேன் என்றோ போலீஸ் அதிகாரிகளை அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்றோ கூறவே இல்லை.
முன்னாள் முதலமைச்சர் இப்போது கூறியிருப்பது அப்பட்டமான பொய்யுரையாகும். வெள்ளைக்காரன் பாணியில் பைல்களைக் கொளுத்தியதாக அவர் கூறியிருக்கிறார். அது வேண்டுமானால், அவரது செயலுக்குப் பொருத்தமானதாகும்; தாம் செய்துவிட்ட ஒரு தவறுக்கு அவர் காட்டுகின்ற காரணம் பெருந் தவறானதாக இருக்கின்றதே என்று நான் மெத்தவும் வருத்தப்படுகிறேன்."
அவருடைய செயலுக்காக எவ்வாறேனும் அவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அண்ணா அவர்களோ தமக்கே உரிய பெருந்தன்மை காரணமாக முன்னாள் முதல்வர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திடாமல் விட்டு விட்டார். இந்தியா முழுமையிலும் நான்காவது பொதுத் தேர்தல் நாற்பது சதவிகிதம் வாக்குகளையே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தபோதிலும் நாடாளுமன்றத்தில் அது கூடுதலான இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
எனவே, அக்கட்சியினைச் சார்ந்திட்ட திருமதி இந்திரா காந்தி அம்மையாரே மீண்டும் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பினைப் பெற்றார். இந்திரா காந்தி முதல் முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிலவிய அரசியல் நிலைமைகள் அவரே இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டபோது அடியோடு மாறிவிட்டன. முன்னர் கேரளம் ஒன்றைத் தவிர பிற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே கோலோச்சிக் கொண்டிருந்தது.
இப்போதோ மேலும் ஐந்து மாநிலங்கள் காங்கிரஸ் பிடியினை உதறி விட்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. இதனால், மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆண்டதால் அந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, தான் பாட்டு பாடுவதற்கேற்பவே மாநிலங்களை நாட்டியம் ஆடிட வற்புறுத்துகின்ற கட்டளை பிறப்பிக்கின்ற மத்திய அரசின் போக்கில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இத்தகைய மாறுபட்ட அரசியல் நிலைமை மாளாத 'மண்டையிடி'யாகவே இந்திரா காந்திக்குத் தொந்தரவு தரப்போவதாக அன்றைய அரசியல் வல்லுநர்கள் 'ஆரூடங்கள்' கணித்தனர்.
ஆனால், நாளாவட்டத்தில் எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகள் அவருக்கு ஒத்துழைப்பையே ஈந்திட-அவர்தம் சொந்தக் கட்சியினரே அவரைத் தொலைத்துக் கட்டிட அணி திரண்டனர். அதனுடைய விளைவே பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் விழுந்து விட்ட 'சிண்டிகேட்' - 'இண்டிகேட்' என்னும் விரிசல் வெடிப்புகள் தமிழகத்தில் புதிய சட்ட மன்றம் 15-3-67இல் கூடியது. தற்காலிகப் பேரவைத் தலைவராக அமர்த்தப்பட்ட திரு பி. கே. மூக்கையாத் தேவர் புதிய உறுப்பினர்களுக்குப் பதவி உறுதி மொழி செய்து வைத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து முறைப்படியான சட்டப் பேரவைத் தலைவராகத் திரு சி.பா. ஆதித்தனாரும் துணைத் தலைவராகப் புலவர் க. கோவிந்தனும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தமிழக ஆட்சித் துறைகளில் தமிழன்னைக்குரிய தகுதிமிகு இடங்கள் காங்கிரஸ்காரர்களால் தரப்படவில்லையே என்பதுதான் தமிழ் மக்களின் ஏக்கமாக உருவெடுத்து எரிச்சலாகக் கொழுந்துவிட்டது. அவர்களுடைய ஏக்கத்தை நீக்கிட - எரிச்சலைத் தணித்திட-உடனடியாக ஏதேனும் செய்திட வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்பு எங்கள் உள்ளத்தினுள் அலை மோதிக் கொண்டே இருந்தது.
அதனுடைய விளைவாக முதற்கட்டமாக அடுத்து வந்த தமிழ்ப் புத்தாண்டு நாளில் (14-4-1967-இல்) தமிழக அரசின் தலைமைச் செயலகம் இயங்குகின்ற புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் 'தமிழக
அரசு தலைமைச் செயலகம்' என்னும் ஒளியுமிழ்ப் பெயர்ப் பலகை அண்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் பெயர்ப் பலகையில் அரசின் இலச்சினையைச் சுற்றிலும் காங்கிரஸ் ஆண்ட காலத்தில் 'மதராஸ் கவர்ன்மெண்ட்' என்று ஆங்கிலத்திலும் 'சத்தியமேவ ஜயதே' என்று வடமொழியிலும் சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது வழக்கம்; அந்த வழக்கத்திற்கு விடை கொடுத்துத் - 'தமிழக அரசு' - 'வாய்மையே வெல்லும்'.
என்னும் இனிய தமிழ்ச் சொற்கள் இலச்சினையைச் சுற்றி இடம் பெற்றிடவும் அப்போது முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அந்த முறையே இலச்சினையில் தொடர்ந்து கையாளப்பட்டது. ஓர் அரசுக்குக் கொடி எப்படி உயிர் போன்றதோ அப்படியே இலச்சினை (Emblem) என்பதும் ஒரு தனித் தன்மைக்குச் சாட்சியமாய் ஒளிர்ந்திடும் சிறப்புமிகு சின்னமாகும். அத்தகைய உன்னதமான இலச்சினையிலும் அன்னை மொழி ஆட்சி செய்வதுதானே அறமாகும், முறையாகும்.
எனவேதான் மேலே குறிப்பிட்டவாறு அழ்கிய தமிழ்ச் சொற்கள் இலச்சினையைச் சுற்றிலும் மாலையாக அணிவிக்கப்பட்டன. அசோகர் காலத்துக் கல்வெட்டுகளும் தூபிகளும் இல்லாமற் போயிருந்தால் அந்த மவுரியப் பேரரசனின் மாட்சியினை, மனிதத் தன்மையினை நம்மால் உண்மையாகவே உணர்ந்திருக்க முடியுமா? டில்லியிலே உள்ள 'குதுப்மினார்' கூறிடும் சரித்திரச் சான்றுகள் தான் எத்தனை!
எத்தனை! ஆக்ராவில் அமைந்துள்ள ஷாஜஹானின் தாஜ்மகால்தான் எத்தகைய எழில் கொஞ்சும் காதல் காவியத்துக்கு அழிவில்லா ஓவியக் கோவிலாய் ஒளி வீசுகிறது! இவற்றைப் பற்றியெல்லாம் படித்தவர்கள் மட்டுமல்ல; நேரில் பார்த்துக் களிப்பவர்களும் கூடத் தி. மு. கழகம் சான்றோர்களுக்குச் சிலையெடுத்தால், கல்லறை கட்டினால் நினைவுச் சின்னங்களை நிறுவினால் ஏளனஞ் செய்வதிலும், ஏசல் கணைகள் தொடுப்பதிலும் ஈடுபடுவது உண்டு. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்தான் சில வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுறுத்தும் வடிவங்கள் சமைப்பதையும் தன் கடமையாகக் கொண்டு செயலாற்றி வந்திருக்கிறது கழகம்.
ஏனெனில்- வரலாறு என்னும் அருமையான தங்கப் பேழைக்குத் திறவு கோலாய்த் திகழ்பவையே சிலைகள், கல்லறைகள், ஸ்தூபிகள், நெடிய் தூண்கள். இதே சரித்திர உணர்வோடுதான் கழகத்தோழர்கள் இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து வெந்தீயில் வெந்து கருகிய சிங்கத்தமிழன் சின்னசாமிக்கு ஒரு நினைவுத் தூண் எழுப்பினர். திருச்சி - தென்னூர் இடுகாட்டில் அந்த மாவீரனின் கல்லறையில் அமைந்த அந்நினைவுத் தூணை 16-4-67-இல் நான் திறந்து வைத்தேன்.
அப்போது சின்னச்சாமியின் தாயார் தங்கம்மாள், மனைவி கமலா, மகள் திராவிடச் செல்வி ஆகிய மூவரும் அங்கே வந்து நின்ற காட்சி, வெள்ளமெனத் திரண்டு வந்திருந்த கூட்டத்தை விம்மி விம்மி அழச் செய்தது. தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தைத் தேடிக் கொண்ட அந்தத் தியாக மறவனின் அன்னையார் எனக்கொரு பூமாலை அணிவித்தார்கள்; அப்போது கண்ணீர் மாலையைத்தான் என்னால் காணிக்கை ஆக்கிட முடிந்தது.
