நெஞ்சுக்கு நீதி
மாமனார் தந்த வரவேற்பு · 43 / 391
மாமனார் தந்த வரவேற்பு என்னுடைய சீர்திருத்தச் சங்கத்துக்கும் நண்பர் தியாகராசனின் இளைஞர் சங்கத்துக்கும் தேர்தல் போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்கள் முந்தி இளைஞர் சங்க நாடகமொன்று நடைபெற்றது. தியாகராசன் வீட்டுத் திண்ணையில் அந்த நாடகத்தில் கதாநாயகன் வேடம் தாங்க வேண்டியவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார். நாடகத்துக்குக் காலணா டிக்கட் வீதம் வசூல் வேறு செய்யப்பட்டுவிட்டது!
தியாகராசன் என்னிடம் ஓடிவந்து செய்தியைக் கூறி வேதனைப்பட்டார். உடனே நான் ஒரு நிபந்தனை விதித்தேன். "நாடகத்தில் நான் வேடம் புனைகிறேன். அதற்குக் கைமாறாக நீ தேர்தல் போட்டியிலிருந்து விலகி விடு" என்றேன். சரியென்றார். தேர்தல் அதோடு முடிந்து விட்டது. நாடகம் ஆரம்பமாயிற்று. நான் துஷ்யந்தனாக நடித்து சபாஷ் பெற்றேன். இதோடு இளைஞர் சங்கம் கலைக்கப்பட்டு எல்லாமே சீர்திருத்தச் சங்கமாகி அதுவும் விரைவில் அழிந்து விட்டது!
அந்த அழிவுக்குக் காரணம் எனது அரசியல் ஈடுபாடுதான். தென்னக வாழ்வுக்கென ஏற்பட்ட அமைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 1938-ம் ஆண்டு ஆரம்பமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வேகம் என்னைத் தமிழர் படையில் அணி வகுத்து நிற்கத் தூண்டியது. முழு வேகத்துடன் ஈடுபட வாய்ப்புக் கிடைக்கவில்லையாயினும், "தமிழ் வாழ்க!"
"இந்தி ஒழிக!" என முழக்கமிடும் படை வரிசையினரில் ஒருவனாகக் கொடி பிடித்துத் திரியலானேன். மறைந்த மாவீரன் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் கூட்டம் ஒன்று. அதுதான் என்னைக் 'கருணாநிதி' ஆக்கிற்று எனக் கர்வத்தோடு கூறிக் கொள்வேன்! தமிழ் காக்கும் படை வீரர்க்குப் போர்முரசு தந்து அழகிரி ஆற்றிய அந்தச் சொற்பொழிவு இன்னும் என் காதில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது; ஒரு மணி நேரத்துக்கு மேலாக மேடையில் புயல் வீசியது!
புரட்சியின் ஒலி வானத்தை எட்டியது! ஆயிரம் சிங்கங்கள் ஏக காலத்தில் கூடி நின்று கர்ஜிப்பதுபோல் முழக்கம். "இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் தமிழர்களே!" எனக் கூவினார்-குமுறினார்-கூட்டம் முடிந்ததும் குருதி கக்கினார். மயக்கம் போட்டு வீழ்ந்தார். அடி வயிற்றிலும் விலாவிலும் வலி தாங்கவில்லையெனத் துடிதுடித்துத் துவண்டார். காரணம் வினவினேன். அவர் நோயாளி என்றனர். ஏன் இப்படிக் கத்த வேண்டும் என்று கேட்டேன்.
இந்தக் கேள்வி அழகிரியின் காதில் விழுந்து விட்டது. அவர் என்னை அன்போடு அணைத்து, "தம்பி, என்னைவிட இந்த நாடு நோயாளியாக இருக்கிறது! டாக்டருக்கு ஜலதோஷம் என்பதற்காக ஜன்னி பிறந்தவனைக் கவனிக்காமலிருக்கலாமா? அதுபோலத்தான் நான் பணியாற்றுகிறேன்" என்றார், வலியையும் பொறுத்துக் கொண்டு.
அந்தச் சொற்கள்தான் என்னை உங்கள் முன்னே ஒரு தொண்டனாக நிறுத்திக் காட்டியிருக்கின்றன. அழகிரி எனக்கு நெருங்கியவரல்ல; அடிக்கடி பழகியவருமல்ல அப்போது! ஆனாலும் அவர் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார். அழகிரியின் கொள்கை வெறிக்கு அடிமையானேன். கையெழுத்து ஏட்டிலே எழுதி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே நமது எழுத்தைப் படித்தால் போதுமா என்ற அதிருப்தி என் மனத்தில் மூண்டது. அச்சு வாகனத்தில் என் எழுத்துக்கள் ஏறி வேண்டுமென்ற ஆவல் மிகுந்தது.
அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து 'திராவிடநாடு' இதழைத் தொடங்கியிருந்தார்கள். அதில் மூன்றாவது இதழிலோ அல்லது நான்காவது இதழிலோ என்னுடைய கட்டுரை வந்தது என்றால் எனக்கு எவ்வளவு குதூகலமாக இருந்திருக்கும்? பள்ளி மாணவன் நான். நானே எழுதி நானே படித்து மகிழும் நிலை மாறிப் பத்து, நூறு பேர் படித்துப் பாராட்டும் நிலைக்கு வளர்ந்தேன். ஏதோ ஆசையில் ஒரு கட்டுரை எழுதி 'திராவிடநாடு, காஞ்சிபுரம்' என்று அனுப்பி வைத்தேன்.
அடுத்த வாரமே கட்டுரை திராவிட நாட்டில் வந்துவிட்டது. நாடெங்கும் என் கட்டுரையைப் படித்து மகிழ்வார்கள் என்று எனக்குள் நானே புகழ்ந்து கொண்டேன். எனக்கு உறுதுணையாயிருந்தவரும் இயக்கத்தில் நீங்காப் பற்றுக் கொண்டவருமான ராஜகோபால் என்பவர் என் கட்டுரை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு திருவாரூர் முழுவதும் ஒரு வார காலம் சுற்றி வந்தேன். அந்த மகிழ்ச்சியை வர்ணிக்கவே முடியவில்லை!
நாலு பேர் உட்கார்ந்து பேசுமிடத்திற்கு அந்தப் பத்திரிகையுடன் போவேன். பேசிக் கொண்டே கையில் இருக்கும் பத்திரிகையைக் கீழே வைப்பேன். யாராவது எடுத்து என் கட்டுரையைப் படிக்க மாட்டார்களா என்று ஆவலோடு அமர்ந்திருப்பேன். அவர்கள் அதைப் படித்து என்னைப் பாராட்டிய பிறகே அந்த இடத்தை விட்டு அகல்வேன். இப்படி என் வாழ்வில் பெரு மகிழ்ச்சியளித்த அந்த நாளை நினைத்தால் இப்போதும் இன்பம் அலை மோதுகிறது. என்னை உற்சாகததிலாழ்த்திய அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?
'இளமைப் பலி!' ஆம். அதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு! அப்போதே என் நாட்டுக்கு என் இளமையைப் பலியிடத் துணிந்து விட்டேன் என்று என்னை அறியாமலே கூறியிருக்கிறேன், அந்தத் தலைப்பின் மூலம். அடுத்த கிழமை இன்னொரு கட்டுரை அனுப்பினேன். 'பகுத்தறிவு பரமசிவம்' கட்டுரையின் தலைப்பு. அது பிரசுரமாகவில்லை. அதற்கு அடுத்த வாரம் நபிகள்நாயகம் விழாவில் கலந்து கொள்ள அறிஞர் அண்ணா அவர்கள் திருவாரூர் வந்தார்கள். அதுவரை நான் அண்ணாவைச் சந்தித்ததில்லை.
இயக்கத்தின் தூண்போன்றவராம் டி. என். ராமன் அவர்கள் இல்லத்தில் அண்ணா தங்கியிருந்தார். "இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்" என்று அண்ணா கூறவே என்னை அழைத்துப் போனார்கள்; என்னைப் பார்த்ததும் அண்ணா ஆச்சரியத்தில் மூழ்கினார்.
அவ்வளவு பொடிப் பையனாக நானிருப்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. "படிக்கிறாயா?" என்றார். "படிக்கிறேன்" என்றேன், நடுங்கும் குரலில். "இனிமேல் கட்டுரை எதுவும் எழுதி எனக்கு அனுப்பாதே!" என்று சற்றுக் கடுமையாகக் கூறினார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! அன்று அறிவுரை கூறி என்னை அணைத்து மகிழ்ந்த அண்ணன் தொடர்ந்து 27 ஆண்டுக் காலத்திற்கு மேலாக எனக்கு உடன் பிறவா அண்ணனாய், அரிய தலைவனாய், ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரனும் காட்டிடாத பாசத்தை என்னிடம் காட்டிய அன்புத் தெய்வமாய், என் தாயினும் மேலான தாயாய் இலங்கி இன்றைக்கும் எனது இலட்சியத் திருவுருவாய் விளங்குகிறார் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
மகிழ்ச்சியினூடே விழிநீர்த் திரை விழுகிறது. திரையில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பொன் எழுத்துக்கள் மின்னுகின்றன. அந்த அன்புக் கோயில் அண்ணாவின் அறிவுரைகளையும் மீறி எழுந்த இயக்கவெறி என் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக நானே எழுதி, நடித்த 'பழனியப்பன்' என்ற நாடகத்தைத் திருவாரூரில் நடத்தினோம். நாடகம் நடத்துவதற்கான செலவு இருநூறு ரூபாய்!
வசூல் எண்பது ரூபாய்! பயங்கர மழையின் காரணமாக ஏற்பட்ட அந்த விளைவு எங்களை நட்டாற்றில் தவிக்க விட்டது. நூறு ரூபாய்க்கு மேல் தாண்டி விட்ட கடனை அடைத்தாக வேண்டும். என்ன செய்வது? எங்கு சென்றாலும் கடன்காரர்கள் எதிரே வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது அநாகரிகம் என்ற புதிய பாடத்தை நான் படித்ததில்லை. அதன் வழி நிற்க விரும்பியதும் இல்லை. நானும், என் நண்பர் தென்னனும் உட்கார்ந்து அழுதோம்.
நாடகக் கொட்டகைக்குள்ளேயே வந்து கடன்காரர்கள் முற்றுகையிட்டு விட்டனர். எங்கள் நாடகத்தில் கதாநாயகி வேடம் தரித்த நடிகைக்கு சம்பளமும், அவள் ஊருக்குச் செல்ல வழிச்செலவுப் பணமும் தந்தாகவேண்டும். வழியெதுவும் தென்படவில்லை. நாடகத்தில் ஒரு நண்பர் எனக்கு வெள்ளிக் கோப்பையொன்று பரிசாகக் கொடுத்தார். இருபது ரூபாய் பெறும் அந்தப் பரிசுப் பொருள். அந்தக் கோப்பையை அந்த நடிகையிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தோம்.
பாக்கிக் கடனைத் தீர்ப்பது எப்படி? தென்னனின் யோசனைப்படி யாருக்கும் தெரியாமல் நாகப்பட்டினம் ஓடினோம். அங்கு திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வி. கோபால் அவர்களை அணுகி, எங்கள் நிலைமையை விளக்கினோம். ஆர். வி. கோபால் அவர்களுக்கு என்மீது நல்ல அன்பு உண்டு. இருந்தாலும் நூறுரூபாய் கடன் தருவதென்றால்... அதற்குச் சிறிது யோசித்தார். அங்கு உள்ள நண்பர்கள் பக்கிரிசாமி, மலைக்கொழுந்து ஆகியோர் எங்களுக்காகச் சிபாரிசு செய்தனர்.
இறுதியில் நூறு ரூபாய் பணம் கிடைத்தது. எப்படித் தெரியுமா? திரு. ஆர். வி. கோபால் ஆரம்பிக்கவிருந்த நாகை திராவிட நடிகர் கழகத்துக்கு 'பழனியப்பன்' நாடகத்தை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். அதன் மூலம் ரூபாய் கிடைத்தது. என்னுடைய முதல் நாடகம் 'பழனியப்பன்', 'சாந்தா'. என்னும் தலைப்பில் பல இடங்களில் நடத்தப்பட்டது. அதுவே 'நச்சுக் கோப்பை' என்னும் பெயரில் இன்றைக்கும் பல இடங்களில் நடத்தப்படுகிறது.
ஒரு நாடகம் விற்பனையானதும் மேலும் ஆசை எழுந்தது எனக்கு. இன்னும் பல நாடகங்களை எழுதி விற்பனை செய்யலாம், அதையே வாழ்க்கைக்குத் தொழிலாகவும், அதே சமயம் நல்ல கொள்கைப் பிரசார சாதனமாகவும் கொள்ளலாம் என்று கருதி மளமளவென்று எழுத ஆரம் பித்தேன். அந்த முயற்சிக்கு என் வீட்டாரும் உறவினரும் தடையாக நின்றனர். "ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் போதும்! அதற்கு முயற்சி செய்!"
என்று என்னை விரட்டத் தொடங்கினார்கள். எனக்கு வேலை பார்ப்பது என்பது விஷம் போல் இருந்தது. மன நிம்மதி குலைந்தது. சோற்றுக்குத் தண்டமாக வீட்டில் இருக்கிறோம் என்ற நினைவு வேறு என்னைக் குடைய ஆரம்பித்தது. இந்த வெட்கக்கேட்டில் காதல் ஒரு கேடா? அதுவும் வந்து சேர்ந்தது. காதலுடன் கூடக் கட்டுப்பாடும் தொடர்ந்தது. கன்னியொருத்தியின் கைப்பிடித்து வாழ்க்கையின் பயணம் தொடங் கலாம் என்று நானே தீர்மானித்தேன். அவளும் சம்மதித்தாள்.
இடையே பெற்றோர் குறுக்கிட்டனர். இரு தரப்பிலும் படை திரண்டது. இறுதியில் காதல் தோற்றது. அந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் நான் சுயமரியாதைக்காரன்; அவ்வளவுதான். புரோகித முறைப்படி அவளுக்கும் இன்னொருவனுக்கும் திருமணம் நடைபெற்றது. காதலில் தோல்வியுற்ற என் உள்ளத்தின் எதிரொலிதான் 'பழனியப்ப'னாக இருந்து நச்சுக் கோப்பையாக மாறிய அந்த நாடகம். மனமுடைந்து போய் விட்ட எனக்கு உடனடியாகத் திருமணம் செய்து விட வேண்டும் என்று என் வீட்டார் பெண் தேடப் புறப்பட்டு விட்டனர்.
எனக்காக ஒருத்தி சிதம்பரத்திலே காத்திருந்தாள். இசைவாணர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் அருமைத் தங்கை தான் அவள். பெண் பார்ப்பதற்காக என் உறவினர் ராஜ சந்தானம் அவர்களும், என் சகோதரிகளும் சென்றார்கள். பெண் வீட்டார் சம்மதம் தந்து விட்டனர். சிதம்பரத்திலிருந்தவாறே என்னை உடனே வருமாறு தந்தி கொடுத்தனர். நானும் தென்னனும் புறப்பட்டோம். திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிற அளவுக்கு நமக்கு என்ன மாத வருமானம் இருக்கிறது?
ஏதாவது ஒரு வேலையில் போய் உட்கார்ந்து கொண்டு அல்லவா திருமணம் செய்து கொள்ள வேண்டும்? புகைவண்டி போகும் வேகத்தையும் மிஞ்சிக் கொண்டு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. சிதம்பரம் நிலையமும் வந்து விட்டது. நானும் தென்னனும் குதிரை வண்டியொன்றைப் பிடித்துக்கொண்டு பெண் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். வாசலில் போய் அடியெடுத்து வைத்தோம். "மகமாயி, தாயே!"
என்ற பெருங்குரல் ஒன்று கேட்டது. திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தோம். திண்ணையில் மலை போன்ற ஓர் உருவம். ஆம்! அவர்தான் பெண்ணின் தகப்பனார். பாடக சுந்தரனார் எனும் இசைத்துறை மேதை. அவரது அன்புச் செல்வியைக் காணத்தான் நான் வந்திருக்கிறேன்.
