உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தந்தையைச் சந்தித்தோம்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தந்தையைச் சந்தித்தோம்! · 42 / 391

தந்தையைச் சந்தித்தோம்! -மார்ச் 2-ஆம் நாள் காலை பத்து மணி அளவில் தான் அந்த ஆளுநர் சந்திப்பு நடைபெற்றது. ஏறத்தாழ அரை மணி நேரம் புதிய அமைச்சரவை பற்றியும், சட்டமன்றங்களின் இரு அவைகளின் கூட்டம் பற்றியும் அப்போது உரையாடினோம். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பிய நாங்கள் திருச்சி நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் திருச்சிக்குச் சென்றது எங்களை வளர்த்து ஆளாக்கி விட்ட தந்தை பெரியாரைச் சந்தித்திடத்தான்.

1949-இல் தந்தையைப் பிரிந்திட்ட தனயன்கள், பசுவிடந் திரும்பிடும் இளங்கன்றுகளாகப் பாசப் பிணைப்புடன் சென்றிட்டோம். திருச்சி சென்றதும், உடனிருக்கும் அன்பிலும் உடன் வந்தார். 'பெரியார் மாளிகை'யில் அடி வைத்த பொழுது- கடந்த கால நினைவுகள் காட்டாறெனப் பொங்கிப் புரண்டன. ஈரோடு நகரில் 'குடியரசு' ஏட்டில் பணியாற்றியகாலை பெரியாரின் குடும்பத்தில் ஒருவனாக நான் கருதப்பட்டேன். கலந்து பழகினேன். அண்ணாவுக்குப் பிறகு பெரியாரது வீட்டிலேயே தங்கி உணவுண்டு ஏட்டையும் கவனித்துக் கொண்ட பெருமை எனக்குண்டு.

மணியம்மையார் உணவு பரிமாறிட, நண்பர்கள் கருணானந்தம் ஜனார்த்தனம், தவமணிராசன் ஆகியோர் உடன் அருந்திட, அய்யாவோ நகைச்சுவை விருந்தும் பரிமாறிடுவார். பெரியார் பொழிந்திட்ட பாசப் பெருக்கினை எப்படித்தான் மறந்திட இயலும். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அய்யாவின் பக்கத்தில் போய் அமர்ந்த பொழுது பாசவெள்ளம் கண்ணீராகி விழிகளுக்குத் திரையிட்டது. குரல் தழுதழுத்தது; நாவும் எழ மறுத்தது: என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

தனயன்களின் நிலையே தந்தைக்கும்! "என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள்!" என்று பெரியார் குமுறிடும் குரலில் கூறினார். கண்ணீர் பொழிவதில் குழந்தையாகவும் மாறினார். அமைச்சர் பொறுப்பினை ஆற்றிடும் சூழ்நிலை உருவாகிய காரணத்தால், 'முரசொலி'யின் ஆசிரியர் பொறுப்பினை விட்டிடும் நிலைக்கும் நான் தள்ளப்பட்டேன். தம்பி மாறன் 4-3-67 முதல் அதன் ஆசிரியராக என்னுடைய சுமையினை ஏற்றுக் கொண்டார். பள்ளியில் பயின்றிட்ட காலத்திலேயே துண்டுப் பிரசுரமாய் 'முரசொலி'யை நான் தோற்றுவித்தேன்.

1957-இல் அதற்குப் பத்திரிகை வடிவம் தந்தேன். பின்னர் இருபதாண்டு காலம் அதனைப் பேணி வளர்த்திட, பெரிய ஏடாய்க் கழக முரசாய் ஆக்கிட, நான் பட்டிருக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு வெள்ளி விழாக் காலம் என் மடியிலே 'முரசொலி' தவழ்ந்து கிடந்தது. அமைச்சர் பதவியோ அதன் ஆசிரியர் பதவியைப் பறித்துக் கொண்டது. 1967-ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள் நாலாம் நான் அன்று, தம்முடைய தலைமையில் இயங்கிடப் போகும் அமைச்சரவையின் பட்டியலை அண்ணா அவர்கள் ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்களிடம் அளித்தார்.

அண்ணாவின் தலைமையில் நாங்கள் எட்டுப் பேர் அமைச்சரவையில் இடம் பெற்றோம். நாவலர் கல்வி அமைச்சராகவும், நான் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், மதி உணவமைச்சராகவும், சத்திய வாணிமுத்து அரிசன நலத்துறை அமைச்சராகவும், ஏ. கோவிந்தசாமி வேளாண்மைத் துறை அமைச்சராகவும், மாதவன் சட்ட அமைச்சராகவும், சாதிக் சுகாதார அமைச்சராகவும், முத்துச்சாமி உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்புக்களை ஏற்றோம். எங்களுக்குத் தரப்பட்ட துறைகளைப் பற்றி அப்போது நான் அடியிற்கண்டவாறு குறிப்பிட்டதும் நினைவில் நிழலாடுகின்றது.

"எனக்குப் பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாவலருக்குக் கல்வித் துறை; மதியழகனுக்கு உணவுத் துறை, எந்தத்துறை ஒதுக்கப்பட்டாலும் அதை நாங்கள் சரிவர நிருவகிப்போம் என்ற தெம்பு ஏற்படக் காரணம், அண்ணாதுரை தான்! "அந்தத் 'துரை'யை நம்பித்தான் இந்தத் 'துறைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்தத் 'துரை'யை நம்பினால் தான் நாடு முன்னேறும்; நாட்டில் உள்ள ஏழை மக்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்."

புதிய அமைச்சரவை 6-3-67 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் பதவி ஏற்றது. அண்ணா உட்பட அமைச்சர்கள் அனைவரும் தமிழிலேயே 'உளமார' உறுதி மொழி எடுத்துக் கொண்டோம். 1967 மார்ச்சு ஆறாம் நாள் உண்மையிலேயே ஜனநாயகத் திருநாள். அதைப் பற்றி 'முரசொலி' ஏட்டில் இப்படியொரு பெட்டிச் செய்தி அப்போது வெளியிடப்பட்டது. "பொங்கு மணி மார்பும் - பொரு தடக்கை வாளும் ஏந்தி அரசுகளை வீழ்த்தி வெற்றி முரசுகளை முழக்கினான் அன்றையத் தமிழன்.

பொங்கும் விழி நீரும் பொறுக்க முடியா வறுமையும் தந்த அரசை வீழ்த்தி ஜனநாயக வெற்றி முரசை முழக்கினான் இன்றையத் தமிழன். அந்த வெற்றி முரசின் நாதமாய்-வீர முழக்கத்தின் கீதமாய் ஒலிப்பது: "அண்ணா முதலமைச்சர்! அண்ணா முதலமைச்சர்" என்பதுதான். "தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்."

-என்று ஏங்கியவாறு பாடினார் புரட்சிக் கவி பாரதிதாசன். அந்தக் கவியின் கனவு நிறைவேறும் நாள் மார்ச் 6-ஆம் தேதி. இந்தப் புவி மாந்தர் புளகாங்கிதம் அடையும் நாள் மார்ச் 6-ஆம் தேதி. தமிழன்னை ஆனந்தக் கண்ணீர் விட்டு அண்ணலின் உச்சி மோந்து முத்தமிட்டு மணி மகுடத்தைச் சூட்டிய நாள் மார்ச் 6 -ஆம் தேதி. அந்நாள் அல்லவோ நமது திருநாள்! நாட்டின் திருநாள்! தமிழுக்கு இனிப்பான எதிர்காலம் வந்தது தோழர்களே என்று இனிப்பு வழங்கிடுவீர் நாடெங்கும்!

'ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசுக் கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது!' என்று கூறி இனிப்புப் பொங்கல் தருவீர் தோழர்களே! தந்தை பெரியார் அவர்களுக்கும் எங்களுக்கும் ஏற்பட்டிருந்த பாசப் பிணைப்பு இறுக்கமானது; இணையற்றது; பதினெட்டு ஆண்டு காலம் ஏதோ சிறிய இடைவெளி. ஆனால் அந்தப் பிரிவை அறுந்து போன உறவு அறுந்ததுதான் என்று எதிர் முகாம்களில் இருந்தோர் எக்களிப்பிலே மிதந்தனர். திருச்சியில் பெரியாருடன் நாங்கள் மேற்கொண்ட சந்திப்போ அவர்களது கனவைக் கலைத்தது; கற்பனையைக் கவிழ்த்தது.

'நீரடித்து நீர் விலகிடுமா?' என்கிற முறையில் எங்கள் சந்திப்புக்குப் பிறகு பெரியார் அவர்கள் அடியிற்கண்டவாறு ஓர் அறிக்கை வெளியிட்டார்கள்: "உண்மையாகச் சொல்கிறேன். காமராசரைத் தவிர்த்துக் காங்கிரசில் இருக்கும் எவரையும் விட தி. மு.க. வின் தலைவர்கள்- தரத்தில் இருக்கும் எல்லாரிடமும் எனக்குக் கவர்ச்சி இருக்கிறது. அவர்கள் (தி. மு. க) என்னிடம் துவக்கம் முதல் இன்று வரை தாட்சண்யமாக (நாகரிகமாகவே) நடந்து வந்திருக்கிறார்கள்.

"நான் அவர்களை (ரிசர்வேஷன்) மீதி இல்லாமல் எவ்வளவு கண்டித்துக் கடுமையான குறைவான வார்த்தைகள் பயன்படுத்திய காலத்திலும் இவர்களில் (தி. மு. க. தலைவர்களில்) ஒருவர் கூட என்னைக் கடிந்தோ, குறை கூறியோ எந்த விதமான குற்றஞ் சாட்டியோ, தரக் குறைவாகவோ ஒரு வார்த்தையைக் கூடச் சொன்னது கிடையாது. இதை நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களில் (தி. மு.க.) சிலரை அதிகமாகச் சந்திக்க நேரவில்லை என்றாலும், அப்படி நேர்ந்த போது பழைய முறையிலேயே நடந்து கொண்டிருக்கிறார்கள்."

6-3-67 நாளிட்ட 'விடுதலை'யில் வெளியான இந்த அறிக்கை கழகத்தவர்களுக்கு அகமகிழ்ச்சியையும் காங்கிரசாருக்கு அதிர்ச்சியையும் அளிப்பதாகவே அமைந்திருந்தது. அமைச்சர் பொறுப்பினை ஏற்றிட்ட என் நெஞ்சினை அன்னையின் நினைவு ஆக்கிரமித்துக் கொண்டது. நான் பதவியேற்ற காட்சியினைப் பார்க்காமல் போய் விட்டார்களே என்று என் இதயம் புலம்பிற்று. அவர்களுடைய கல்லறைக்குச் சென்று கண்ணீர் வெள்ளத்தைக் காணிக்கையாக்கி வாழ்த்தினைப் பெற்றிட விரும்பினேன்; திருவாரூர் நோக்கிக் கிளம்பினேன்.

திருவாரூரை அடுத்த காட்டூரில் தான் என் அஞ்சுகத்தாயின் கல்லறை அமைந்திருக்கிறது. 8-3-67 அன்று அங்கு போய்ச் சேர்ந்தேன். எத்தனை எத்தனையோ பழைய நினைவுகள் படமென விரிந்தன. கழகம் ஈடுபடும் எந்த எந்தத் தேர்தல்களாயினும்-ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல்களாக இருக்கலாம்-அல்லது சென்னை மாநகராட்சி மன்ற மேயர் தேர்தலாக இருக்கலாம் - அவைகளைப் பற்றிய விவரங்களையெல்லாம் பேரப் பிள்ளைகளின் வாயிலாகவும், வீட்டுப் பிள்ளையாகவே வளர்ந்திட்ட விசுவாசமிக்க செயல்மணிப் பையன் வாயிலாகவும் தெரிந்து வைத்துக் கொண்டு அண்ணாவையும் என்னையும் மற்றும் கழக முன்னணியினரையும் ம் சந்திக்கும் போதெல்லாம்- "இத்தேர்தல்களில் கோட்டை விட்டு விடாதீர்கள்.

நம்ப கழகம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும்" என்று புன்னகை தவழ எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த என் தாயார், இப்போது நாங்கள் கோட்டையைப் பிடித்து வெற்றிக் கொடி நாட்டியபோது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு பூரித்துப் போயிருப்பார்கள் என்று எண்ணினேன்.

கண்கள் குளமாகி விட்டன.