நெஞ்சுக்கு நீதி
ஆட்சியை மாற்றிய தேர்தல் முடிவுகள் · 41 / 391
ஆட்சியை மாற்றிய தேர்தல் முடிவுகள் "இ ன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!" என்னும் சொற்களை எதிர்க்கட்சி முகாமிலிருந்து கேட்ட பிறகும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எப்படி அமைதியாக இருந்திட முடியும்? எனவே, என்னை எவ்வாறேனும் கைது செய்திட வேண்டும் என்று ஆலோசனை செய்திருக்கிறார்கள் மேல் மட்டத்தில். அவ்வாறு ஆலோசனை நடைபெற்றது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதைப் போலவே முதல்வராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்களும், "...அதிகாரிகளைப் பற்றிப் பேசி வரும் கருணாநிதி மீது அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சென்னைக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகவே குறிப்பிட்டார்.
அது காவல் துறையினருக்கு முதல்வர் விடுத்த மறைமுகமான ஆணையாகவும் அப்போது கருதப்பட்டது. எனவே தேர்தலுக்கு முதல் நாள் காலையிலிருந்தே 'முரசொலி' அலுவலகத்திற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, "கருணாநிதி கைது செய்யப்பட்டு விட்டாராமே, உண்மையா?"
என்று விசாரிக்கத் தலைப்பட்டு விட்டனர் ஏராளமான நண்பர்கள். நானோ கைதாவது பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். எரிச்சலுற்ற காங்கிரஸ்காரர்கள் என்னைச் சிறைப்பறவை ஆக்கிடவே சிந்தித்த போதிலும் உடனடியாகக் கைது செய்தால், தேர்தலில் காங்கிரசுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்றும் பயந்திருக்கிறார்கள். ஆயினும் தேர்தல் முடிந்தவுடன் என்னைக் கைது செய்து விடுவது என்றும் தீர்மானித்திருக்கிறார்கள்.
அதிகார வட்டத்தில் என்னைக் கைது செய்வதற்குரிய ஆலோசனைகள் அலை மோதுவதை எப்படியோ கண்டு பிடித்துவிட்ட செய்தியாளர்கள் என்னை அணுகி, என் கருத்தினைக் கேட்டனர். அவர்களுடைய வினாக்களுக்கு, "என்னைக் கைது செய்து, என் மீது வழக்குப் போடும் நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!"
என்று விடையளித்தேன். ஆனால் அந்த நன்னாள் எனக்குப் பின்னர் வாய்த்திட வாய்ப்பு இல்லை-தேர்தல் காற்று காங்கிரசுக்கு விரோதமாகத் திசை மாறி விட்டது! 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் பூந்தென்றலாகவே வீசியது; காங்கிரஸ் கட்சிக்கோ பொல்லாத புயலாகவே மாறியது! அந்த மாபெரும் மாளிகையின் நெடிதுயர்ந்த தூண்களாய் விளங்கிய பலர் தோல்வியையே அப்போது தழுவிட நேர்ந்தது.
அரசியல் திறனாய்வாளர்களின் கணிப்புகள் ஆரூடங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, அமைதிப் புரட்சியாகவே நடைபெற்று விட்டது தமிழக ஆட்சி மாற்றம். அப்போது தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. திருமங்கலம் தொகுதியில் கூட்டணி வேட்பாளர் திடீரென்று இறந்து விட்டதால் அந்த ஒரு தொகுதி நீங்கலாக எஞ்சிய 233 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 173 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு 138 இடங்களைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியோ எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி வைத்தும், 49 இடங்களையே அடைந்திட முடிந்தது. நாடாளுமன்றத்தைப் பொறுத்த மட்டில் போட்டியிட்ட 25 இடங்களையுமே கைப்பற்றி விட்டது கழகம். இது இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்குமே கிட்டிடாத வரலாற்றுச் சாதனையாகும். அகில இந்தியாவிலும் மலையென வளர்ந்து நின்ற காங்கிரஸ் அப்படி நிலை குலைந்து சரிந்திடும் என்றோ, 'மாநிலக்கட்சி' தானே என்கிற அலட்சியப் பார்வைகளுக்கு ஆளான தி.
மு. கழகம் ஆளுகின்ற தகுதியினை எய்திடும் என்றோ எவருமே அன்று எதிர்பார்த்திடவில்லை. அந்தத் தேர்தலில் தமிழக அமைச்சர்களில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அத்தனை பேருமே தோல்வியைச் சந்தித்தார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இரண்டு தடவைகள் இந்தியப் பிரதமர்களின் ஒருமனதானத் தேர்வுக்கு வழிவகுத்தவர் என்னும் பெருமைச் சிறகை விரித்துக் கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த திரு. காமராசரே சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
அகில இந்தியத் தலைவர் நிலைக்குத் தேசியத் தலைவராக (National Leader) உயர்ந்திட்ட பின்னரும் அந்த அளவிலேயே நின்றிடாமல் மறுபடியும் மாநில அளவில் தம்மைச் சுருக்கிக் கொண்டு கோலோச்சிட எண்ணிய அவரது குறுகிய ஆசையை அவருடைய விருதுநகர்த் தொகுதி மக்களே நிறைவேற விடவில்லை. இவ்வாறு காங்கிரஸ் கவிழ்ந்ததும், கழகம் ஆட்சியைக் கைப்பற்றியதும் உலக நாடுகளின் கவனத்தையெல்லாம் கூடக் கவர்ந்தன. வெளிநாட்டு ஏடுகள் பல வெவ்வேறு கோணங்களில் நின்று அந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி வியப்பினைத் தெரிவித்தன; விமரிசனங்களை வெளியிட்டன.
"காங்கிரசின் தேர்தல் தேல்விகளால் இந்திய ஜனநாயகம் உயிர் வாழும் என்பது மட்டுமல்ல; நல்ல ஆரோக்கிய உருவத்தோடு செயல்படும் என்றும் இந்தத் தேர்தல் முடிவால் தெரிகிறது. இதனால் தட்டிக் கேட்பாரற்ற ஓர் அரசியல் சக்தி மறைந்து விட்டது! புதிய உறவுகள் மக்கள் ஆதரவுடன் கிளம்பத் தொடங்கிவிட்டன. இதுவரை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பெரிய கொள்கைப் பிரச்சினைகளைக் கூடத் தான் மட்டுமே ரகசிய அறைகளுக்குள் முடிவு செய்து வந்தது.
மாநில அரசுகளைக் கட்சிக் கிளைகளாகவே கருதி வந்தது! அந்த நிலை இப்பொழுது மாறிவிட்டது!" -என்று கருத்துத் தெரிவித்தது 'லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' என்னும் அமெரிக்க ஏடு. "இந்தியாவின் இயற்கையான மாநில நோக்கும் காங்கிரஸ் ஆட்சியின் மதர்ப்பான போக்கினால் வளர்ந்த இன மொழி எதிர்ப்புணர்ச்சியும் தேர்தலின்போது வெகுவாகக் காணப்பட்டன. தமிழகத்தில், இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி ஆவதை மிக வன்மையாக எதிர்த்து வந்த தி.
மு. கழகத்தின் வெற்றி இதற்குச் சரியான முன் உதாரணமாகும்!" -என்று 'மெய்னிச் சிம்பன்' எனனும் ஜப்பானிய ஏடு தனக்குத் தோன்றிய முறையில் மதிப்பீடு செய்திருந்தது. பொதுத் தேர்தல் நடைபெறத் தொடங்கிய ஒரு வாரம் கழித்தே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதற்கட்ட அறிவிப்புகளே கழகத்துக்கு வெற்றி முரசு கொட்டுவனவாக அமைந்துவிட்டன. நான் வேட்பாளராக நின்று போட்டியிட்ட சைதாப்பேட்டைத் தொகுதியில் தேர்தல் முடிவு 23-2-67 மாலையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வெற்றிச் செய்நியினைக் கேட்டவுடன் வாக்குகள் எண்ணப்பட்ட இடத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். வெடிகளை வெடித்து வாழ்த்துக்களை, முழங்கினர்; அந்தக் காட்சிகளை இந்தியச் செய்திப்படத் துறையினரே அப்போது படமாக்கினர். எனது வெற்றியினைக் கொண்டாடிய அந்தப் பல்லாயிரக் கணக்கான பாச நெஞ்சங்களில் அன்புப் பிடியிலே சிக்கி நான் படாத பாடு பட்டேன். அதே மக்கள் வெள்ளத்திற்கிடையே ஒலிபெருக்கியைப் பொருத்திக் கொண்டு அப்போதே சைதைத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டேன்: "சைதைத் தொகுதிப் பெருமக்களும், கழகத் தொண்டர்களும், கூட்டணித் தோழர்களும் எனக்கும் என் தலைவர் அண்ணா அவர்கட்கும் அளித்துள்ள பெரும்பான்மை வாக்குகளுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குக் கிடைத்த வாக்குகள் 53,000; என்னை எதிர்த்த காங்கிரஸ் நண்பருக்கு 32,000 வாக்குகள் கிடைத்துள்ளன. 32,000 பேர் என் மீது ஏதோ குறை கண்டு எனக்கு வாக்களிக்கத் தவறியிருக்கிறார்கள். அவர்கட்கும் சேர்த்து திருப்தி ஏற்படும் வகையில் இந்தத் தொகுதிக்காக நான் பணி புரிவேன். இந்த வெற்றியை நான் இப்போது அதிக ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடினால் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கட்கு மனம் புண்படும். ஆகவே அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டுகிறேன்.
தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் என் நன்றியை அவர்களது பொன்னடிகளில் குவிக்கிறேன்." எருதுபட்ட புண்ணிலே காக்கை வந்து குந்துவது மட்டுமல்ல; குத்துவதும் உண்டு தன் அலகினால். அத்தகைய அநாகரிக மனப்போக்கு அரசியலில் தலையெடுத்திடக் கூடாது என்று எண்ணியதாலேயே வெற்றி ஆரவாரம் செய்திடாமல் தத்தம் வீட்டுக்கு அமைதியாகத் திரும்புமாறு என்னைச் சுற்றிச் சூழ்ந்து நின்ற மக்கள் வெள்ளத்தை அன்போடு வணங்கிக் கேட்டுக் கொண்டேன்.
அவர்களும் மதிப்பளித்துக் கலைந்து சென்றனர். தேர்தல் முடிவுகள், தி.மு. கழகமே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினைப் பெறப் போகிறது என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே- 23-2-67-இரவு மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கச் சென்றார் அண்ணா. அவருடன் நானும், நாவலர், மதி, அரங்கண்ணல் முதலானோரும் போனோம். ராஜாஜி அவர்களுக்கு அறிஞர், அண்ணா மாலை அணிவித்தார். அப்போது சுதந்திரா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெற்றி குறித்தும், புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்துக்களை வழங்கினார் ராஜாஜி 26-2-67 அன்று சென்னை தியாகராய நகர் எஸ்.
ஜி.எஸ். திருமண மண்டபத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி. மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது அமைப்புச செயலாளர் என். வி. நடராசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிட வேண்டுமென்று சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு முன்மொழிந்தார். நான் அதனை வழி மொழிந்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அண்ணா- அவர்கள் அறிவுரைகள் பல பகர்ந்தார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த தி. மு. க., ஆளுங்கட்சியாக மாறிய நிலையில் முதன் முதல் கூடிய கூட்டமாதலால், மண்டபத்தின் வெளியேயும் உள்ளேயும் பெரும் பரபரப்பு காணப் பட்டது. தென் சென்னை நாடாளுமறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணா புது டில்லிக்கே போய்விடுவாரா அல்லது தமிழகத்தில் புதிய அமைச்சரவையைத் தாமே அமைக்கப் போகிறாரா என்கிற அரசியல் ஊகங்களும் அப்போது பலமாக உலவின 1-3-67 அன்றுதான் அத்தகைய ஊகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அன்று காலை பத்து மணி அளவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி. மு. க. சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்ட மன்ற தி. மு. கழகக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அதன் மூலம் புதிய அமைச்சரவையில் தலைமைப் பொறுப்பினை ஏற்றிடும் தகுதியினை அரசியல் சட்டப்படி அவர் பெற்றார். முதலமைச்சர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய தினமே ஒரு முதல்தரமான முதல் மரபினை உருவாக்கிட முற்பட்டார் அண்ணா.
எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தித்து அவர்களது வாழ்த்தினைப் பெற முற்பட்டதைக் குறிப்பிடுகிறேன். தேர்தல் களத்தில் தி. மு. கழகத்தையும் அதன் தோழமைக் கட்சிகளையும் எப்படியும் தீர்த்துக்கட்டி விடுவது என்றே முனைந்து பாடுபட்டது காங்கிரஸ் கட்சி. ஆனால் பலித்திட வில்லை. 'தமிழாய்ந்த தமிழ்மகனே தமிழ் நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்!'
-என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கனவே நனவாயிற்று. தமிழ்த் தாயின் தலைமகனாம் அண்ணா அவர்களின் தலைமையில் வளர்ந்து விட்ட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கொலுவேற்றிடும் வாய்ப்பினைப் பெற்ற வரலாற்றுச் சிறப்பினைப் பலரால் அப்போது தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உள்ளூற அவர்கள் பொருமினார்கள்; புழுங்கினார்கள். அந்தப் புழுக்கத்தின் வெளிப்பாடாகத்தான் தி.மு. கழக வெற்றி பற்றிச் செய்தியாளர்கள் கருத்தினைக் கேட்டபோது முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், "விஷக் கிருமி பரவி விட்டது!"
என்று தம்முடைய வெறுப்பை யெல்லாம் ஒன்றாய்த் திரட்டி உமிழ்ந்து விட்டார். வெறும் வாயையே மெல்லுவதில் வல்லவர்களான செய்தியாளர்கள் இப்படி அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? என்னை வந்து சூழ்ந்து கொண்டு, ' பக்தவத்சலம் இப்படிப் பாடியிருக்கிறாரே வசைப் புராணம், அதற்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்?"
என்று கேட்டார்கள். அதற்கு- "...காங்கிரசை ஆதரித்துப் பேசிய சொற்பொழிவாளர்களும் கலைஞர்களும் காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே எத்துணை அநாகரிகமாக உரையாற்றினார்கள் என்பதை நாடு அறியும். அதற்கும் சேர்த்து நாடு அளித்திட்ட தீர்ப்பே இந்த நல்ல முடிவாகும். இத்தனைக்கும் பிறகும் பக்தவத்சலம் அவர்கள் விஷக்கிருமி போன்ற சொற்களைப் பயன்படுத்தியது அவர்களது கட்சி சமீப காலமாக வளர்ந்து வருகிற பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாகும்!"
என்று கருத்துத் தெரிவித்தேன் நான். தி. மு. கழகத்தை அவர் அப்படி நெருப்புச் சொற்களால் எரித்திடும் நிலைக்கு இறங்கிய பிறகும் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்தினைப் பெற வேண்டிய மாற்றுக் கட்சித் தலைவர்களின் பட்டியலில் பக்தவத்சலம் அவர்கள் பெயரை அண்ணா நீக்கிடவில்லை. 1-3-67 அன்று அண்ணா, நாவலர், நான் ஆகிய மூவரும் அவரது இல்லத்திற்குச் சென்றோம். அவர் தம் ஆதரவையும் வாழ்த்தையும் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
"தி.மு. கழகத்தை நான் விஷக் கிருமி என்று சொல்லவில்லை" என்ற கருத்துப்பட சில விளக்கங்களைப் பெரியவர் பக்தவத்சலம் பின்னர் செய்தி ஏடுகளுக்குத் தந்தார். தொடர்ந்து தமிழக மேலவைத் தலைவராயிருந்த மாணிக்க வேலரையும் மேலவை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார் அவர்களையும் நாங்கள் மூவரும் சந்தித்தோம். அண்ணா அவர்கள் புதிய ஆளுங்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பின்னர் ஆளுநர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்.
நாவலரும், நானும் உடன் சென்றோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முதன் முதலாக அப்போதுதான் நாங்கள் ஆளுநரைச் சந்திக்கச் செல்கிறோம். அந்த முதல் சந்திப்பின் போது ஓர் ஆளுநரை எத்தகைய மரியாதைகளுடன் சந்தித்திட வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எங்களுடைய கார் சைதாப்பேட்டை மர்மலாங் பாலத்தை விரைந்து கொண்டிருந்த வேளையில்- 'வெறுங்கையோடா கவர்னரைச் சந்திப்பது?'
என்னும் உணர்வு எழுந்தது. பாலத்தைக் கடந்ததும் ஒரு கடையின் பக்கம் காரைநிறுத்தி எலுமிச்சம் பழம் ஒன்றை வாங்கிக் கொண்டோம். அதுவோ வற்றிப்போன பழம்! இதைப் போய்க் கொடுப்பதா என்று எண்ணினாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. கைக்குள்ளேயே மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் அதனை வைத்திருந்த அண்ணா ஆளுநரைச் சந்தித்ததும் அவர் காத்தினுள்ளே அவசரமாகத் திணித்து விட்டார்.
