நெஞ்சுக்கு நீதி
கூட்டணியும் கேலிச் சித்திரமும் · 40 / 391
கூட்டணியும் கேலிச் சித்திரமும் 'எ ந்தக் கட்சியும் தன் இலட்சிய மனத்தினை இழந்திடத் தேவையில்லை; தன்னுடைய கொள்கை, கொடி, குறிக்கோள்களை விட்டுக் கொடுத்திட வேண்டியதில்லை. அதே சமயம், தோழமை உணர்வுடன் அந்தந்தத் தொகுதிகள் அளவில் மட்டும் உடன்பாடு செய்து கொண்டு எதிர்ப்புச் சக்தி அனைத்தையும் ஒருமுனைப்படுத்திக் கொண்டு இணைந்து நின்று பொருதினால் தேர்தல் களத்திலே வெற்றி பெற்றிடலாம் உறுதியாக என்கிற நம்பிக்கையோடுதான் நான்காவது பொதுத் தேர்தலில் தோழமைக் கட்சிகள் ஒன்று சேர்ந்தன.
திராவிட முன்னேற்றக் கழகம், சுதந்திரா, முஸ்லிம் லீக், தமிழரசுக் கழகம், ஃபார்வேர்டு பிளாக் (முன்னேற்றக் கட்சி), மார்க்சீயக் கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், சம்யுக்த சோஷலிஸ்ட் ஆகிய கட்சிகள் அந்த அணியில் அங்கம் பெற்றன. இந்திய அரசியலில் அதிகார பலம் மிகுந்த ஆளுங்கட்சியை வீழ்த்திடும் பொருட்டு எதிர்க்கட்சிகள் பல இணைந்து நின்று தத்தம் கொள்கை, கொடிகளை விட்டுக் கொடாமலே தொகுதி அளவில் மட்டும் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு இத்துணை ஒற்றுமையோடு தேர்தல் களத்தில் ஈடுபட்டதாக அதுவரை வரலாறு இல்லை.
இவ்வாறு தோழமைக் கட்சிகள் தோளோடு தோள் நின்று தேர்தலில் போட்டியிடுவதால் தங்களுடைய செல்வாக்கு மேலும் மேலும் தூள்தூள் ஆகிடுமே என்கிற அச்சமும் ஆளும் காங்கிரசாரை அளவுக்கு மீறிக் குடைந்தெடுத்திருக்கிறது. அதன் விளைவாக எழுந்தவையே என் மீதும் மற்ற தோழர்கள் மீதும் ஏவி விடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள். அரசியல் களத்தில் நேரடியாகக் குதித்து விட்ட கட்சிக்காரர்கள்தான் அப்படிக் கண்ணியத்தைக் கழற்றி வைத்து விட்டு நடந்து கொண்டார்கள் என்றால், சில ஏடுகளும் தங்கள் நாகரிக் நடைக்கு- நடுநிலைமைப் போக்குக்கு மூடு விழாக் கொண்டாடும் முறையில் ஓட விட்டன, தங்கள் பேனா முனைகளை தரம் தாழ்ந்த நிலையில் கேலிச் சித்திரங்களையும் வெளியிட்டன.
மக்களின் மனத்தில் எத்தகைய மாசுகள் படிந்தால் என்ன; நம்முடைய விற்பனை பெருகினால் போதும் என்கிற வியாபார நோக்கு ஒன்றையே பிழைப்பாகக் கொண்ட ஏடுகள் சில நஞ்சையே மையாக்கிக் கொண்டு, நடந்தவற்றையே திரித்து வெளியிட்டு, நரகல் நடையில் நாராசக் கடை விரிப்பது பற்றி நான் என்றைக்குமே கவலைப் பட்டது இல்லை. ஆனால், 'ஆனந்த விகடன்' ஏட்டிலேயே இழிவான கேலிச் சித்திரங்கள் வெளிவந்தபோது என் போன்றவர்களால் வேதனைப் படாமல் இருந்திட முடியவில்லை.
தமிழகத் திரையுலகில் புதுமையான உத்திகள் பலவற்றைப் புகுத்திச் 'சந்திரலேகா', 'ஒளவையார்' போன்ற படங்களைத் தயாரித்ததன் மூலம் தமக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தவர் பெரியவர் எஸ். எஸ். வாசன். தம்முடைய இளமைக் காலத்தில் தந்தை பெரியார் அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அவர் தம் அறிவுரைப்படியே ஏடு ஒன்றைத் துவங்கிடும் துணிவினையும் பெற்றவர் அவர். திரு. வாசன் அவர்கள் கண்ணியம் மிகுந்தவராக விளங்கினார் என்பதாலேயே அவர் நடத்திடும் 'ஆனந்த விகட'னில் பணியாற்றிடும் அத்தனை பேருமே தங்கள் முதலாளியின் பெருமையில் மூளி ஏற்படாமல் கவனித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
அவர்களில் ஒன்றிரண்டு பேர் தங்கள் உள்ளத்தில் விஷயத்தையே விருட்சமாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள்-ஜனநாயக நெறியின் வேரையே அறுக்கத் துணிந்து விட்டார்கள்-என்பதை விளம்பரப்படுத்துவது போலத்தான் அப்போது 'ஆனந்த விகட'னில் வெளியாயிற்று ஒரு கேலிச் சித்திரம். அதில் மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., மார்க்சீயப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பி.
ராமமூர்த்தி ஆகியவர்கள் கழுதைமீது ஏறிக் கொண்டு கோட்டை நோக்கி சவாரி செய்வதாகத் தீட்டியிருந்தார்கள் கீழ்த்தரமாக. கேலிச் சித்திரம் என்பது வெறும் கேளிக்கைச் சித்திரமாக மட்டும் இல்லாமல் சிந்தனையைக் கிளறிவிடும் சித்திரமாகவும் அமைந்திடல் வேண்டும். அத்துடன் கண்ணியப் பண்பாட்டையே கேவலப்படுத்தும் சித்திரமாக அது வெளி வருவதும் கூடாது. அதனால் சம்பந்தப்பட்ட ஏட்டுக்கும் பெருமை இல்லை, அதைத் தீட்டியவருக்கும் சிறப்பில்லை.
நச்சு நோக்கோடு வரையப்படும் கேலிச் சித்திரங்கள் ஓவியக் கலையையே கொச்சைப் படுத்தும் அழுகிய கறைகளாகவே ஆகிவிடுகின்றன. சில சமயம் கொதிப்பையும் கொடுக்கின்றன, பொது மக்கள் மனத்துக்கு. 1967 பொதுத் தேர்தலின் போது 'விகடன்' வெளியிட்ட அந்தக் கேலிச் சித்திரமும் கொதிப்பைத்தான் கொடுத்தது பொது மக்களுக்கு. ஆனால், மூதறிஞர் ராஜாஜி அவர்களோ அதனைப் பார்த்து விட்டு- "காங்கிரஸ் வசமுள்ள இந்தக் 'கோட்டை யைப் பிடிக்கக குதிரை தேவையில்லை.
ஒரு கழுதையே போதும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதினார்கள் போலும்! எதிலே ஏறிப் போனால் என்ன? கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தால் சரி!" என்று வேடிக்கையாக வெளியிட்டார் தம் கருத்தினை. வாக்காளர்களின் கவனத்தைக் கவர்ந்திடும் பொருட்டு, தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கழகமும் சில சுவரொட்டிகளை வெளியிட்டது. ஆனால் வறுமையிலே வாடிய நாட்டு மக்களின் வாட்டத்தைக் காட்டுவனவாக-இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து எரிதழலிலே வெந்திட்ட இளைஞர்களின் சோக வரலாற்றைச் சொல்லுவனவாக-அந்தச் சுவரொட்டிகள் அமைந்திருந்தனவேயன்றித்-தனிப்பட்ட தலைவர்களைத் தரக் குறைவான முறையில் தாக்கிடும் போக்கில் அவை தீட்டப்படவில்லை.
எனினும் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தி விட்டன அந்தச் சுவரொட்டிகள்; எனவே அவற்றை உடனுக்குடன் அகற்றியே தீர வேண்டும் என்று ஏவி விடப்பட்டனர் காவல் துறையைச் சார்ந்தவர்கள். அதே சமயம் 'விகட'னில் வெளிவந்த விஷம் தோய்ந்த கேலிச் சித்திரமும் பெரிய அளவில் சுவரொட்டிகளாகத் தயாரிக்கப்பட்டு நாடெங்கும் ஒட்டப்பட்டன காங்கிரஸ்காரர்களால். கண்ணியம் மிகுந்த ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்களைக் கழுதை மீது சவாரி செய்வதாகக் கேவலப்படுத்திடும் அந்தக் கேலிச் சுவரொட்டிகளைப் பற்றிக் கவலையே படவில்லை அன்றைய ஆட்சியாளர்கள்; அவற்றை அப்புறப்படுத்திட எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுத்திடவும் இல்லை.
பத்திரிகையில் சித்திரமாக வந்த போதே பதறித் துடித்தது எங்கள் நெஞ்சம். அதுவே பெரிய அளவில் சுவரொட்டியாகவும் பரிணமித்து விட்டது என்றால், அதனை அகற்றுவதற்கும் ஆவன செய்யப் படவில்லை என்றால் அந்த இதயக் குமுறலை எங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? காங்கிரஸ் ஆட்சியாளர்களின் இத்தகைய ஓரவஞ்சனைப் போக்குகளையெல்லாம் ஊன்றிச் சிந்தித்துத் தான் - பொது மக்களின் உள்ளக்கிடக்கையையும் ஓரளவு உணர்ந்து கணித்திட்ட முறையில்தான்- மயிலாப்பூர் பகுதியில் 10-12-1967-இல் நிகழ்ந்த தேர்தல் கூட்டத்தில் ஆணித்தரமாக அறைகூவல் விடுத்தேன் அடியிற்கண்டவாறு: "..கழுதைப் படம் போட்டு ராஜாஜியை உட்கார வைத்துச் சித்திரம் தீட்டியிருக்கிறார்களே!
அது மக்கள் மனத்தைப் புண்படுத்தாதா? யார் இந்த ராஜாஜி? இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியா- வின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். நாளை அவர் மாண்டு மறைந்தால் அரசாங்க மரியாதைகளுடன் அடக்கம் செய்யப் பட வேண்டிய பெரியவர். சட்ட சபைக்குள்ளே வந்து பார்த்தீர்களானால் மகாத்மா காந்தியினுடைய படம் இருப்பதைக் காணலாம். அதற்கு நேராக ராஜாஜியின் படம்; ஆள் உயரத்திற்கு உள்ள ராஜாஜி படத்திற்கு மேல், 'மனிதரில் மேலோன்' என்று எழுதப்பட்ட வாசகம்.
"அந்தத் திருவுருவப் படத்தை அங்கே மாட்டி வைத்துக் கொண்டு சட்ட மன்றத்திலே காங்கிரஸ் கட்சி தன்னுடைய செயல்களை ஆற்றுகின்றது. இங்கே கழுதை மீது ஊர்வலமிட்டு ஒரு படம். ஒன்று அந்தப் படத்தைக் கழற்ற வேண்டும். அல்லது இந்தப் படத்தை எடுக்க வேண்டும். "எவ்வளவு அரசியல் அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் கழிசடைப் புத்தியும் இருக்குமேயானால் இந்த நாட்டினுடைய தகுதி மிக்க தலைவர்களை-தமிழக மக்களின் இதய சிம்மாசனத்திலே நிரந்தரமாகக் கொலு வீற்றிருக்கும் தலைவர்களை- மூதறிஞர் ராஜாஜியை- பேரறிஞர் அண்ணாவை- சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யை காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை- ராமமூர்த்தியைப்- பல கோடி மக்களின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும், மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய தலைவர்களைக் கழுதை மீது வைத்துப் படம் போடுவதற்குத் துணிவீர்கள்; அதை மற்றவர்கள் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்க வேண்டுமா?
நாங்கள் நாட்டு நிலையைச் சித்திரித்துப் படம் போட்டால் அதை எடுக்க மட்டும் ஓடோடி வருகிறீர்களே! "எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்ய முடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! இன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!" உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தை எட்டிய நிலையில்தான் நான் அப்படி உரைத்திட்டேன். என்றாலும், தமிழகம் எங்கணும் தேர்தல் நிதிக்காகவும் பிரச்சாரத்திற்காகவும் பயணம் மேற்கொண்டதன் பயனாக என் உள்ளத்தின் அடித்தளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த தன்னம்பிக்கையின் அழுத்தமும் என்னுடைய அந்த அறை கூவலுக்குக் காரணமாகும்.
10-2-67-இல் தான் நான் அவ்வாறு பேசினேன், அடுத்த ஆறாவது நாளில் தான் -15-2-67-இல் தான்- பொதுத் தேர்தல் தொடக்கம். அதன் முடிவு, நான் உரைத்ததே உண்மை என்கிற வகையில் பின்னர் அமைந்திடும் என்று அப்போது காங்கிரஸ்காரர்களோ, ஏன் கழகத் தோழர்களோ கூட முழுமனதோடு நம்பிடவில்லை. ஆயினும், கழகம் என்றாலே அலட்சியப் பார்வை வீசிக் கொண்டிருந்த அதிகார வட்டத்தில் எனது மயிலாப்பூர் அறை கூவல் ஒரு கலக்கு கலக்கவே செய்தது என்பதைப் பிறகு நான் அறிந்து கொண்டேன்.
