நெஞ்சுக்கு நீதி
கோட்டூரில் கொலை வெறியரிடையே · 39 / 391
கோட்டூரில் கொலை வெறியரிடையே -ம் ஆண்டு பொதுத் தேர்தலின் முதற்கட்டமாக 15-2-67-ஆம் நாள் சென்னையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முதல்நாள் இரவு சென்னை நகரில் இருபாராளுமன்றத் தொகுதிகளிலும் உள்ள எல்லா சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி விட்டுத் தியாகராய நகர்த் தொகுதியில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தேர்தல் அலுவலகத்திற்கு இரவு பதினொரு மணிக்கு வந்தேன்.
அப்போது மூன்று கார்கள், என் காரைத் தொடர்ந்து வந்து வேறு ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டதை நான் கவனித்தேன். எனினும் அதனை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. பிறகு, அங்கிருந்து மயிலாப்பூர்த் தொகுதியில் அரங்கண்ணல் அவர்களின் தேர்தல் அலுவலகம் சென்றேன். அங்கே தோழர்கள் டி. கே. கபாலி, வேலு முதலிய நண்பர்களுடன் நிலைமைகளை விவாதித்து விட்டு இறுதியாக நான் போட்டியிடும் சைதாப்பேட்டைத் தொகுதிக்குக் கோட்டூர் வழியாகச் செல்லத் தொடங்கினேன்.
நான் தியாகராய நகரில் கண்ட அதே மூன்று கார்களும் என் காரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. என் காரில் காஞ்சிமணிமொழியார்,வெங்கிடங்கால் சந்தானம். வாழைக் கரை ராஜகோபால் ஆகியோர் இருந்தனர். கோட்டூரில் மாநகராட்சி மகப்பேறு இல்லத்திற்கு முன்னால் என் காரை நிறுத்தி அருகேயுள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் செல்வதற்குக் கீழே இறங்கினோம். அதற்குள் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மூன்று கார்களிலுமிருந்து பளபளக்கும் பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டு குண்டர்கள் பலர் குதித்தோடி வந்தனர்.
மணிமொழியார், சந்தானம், ராசகோபால் ஆகிய மூவராலும் கட்டாயமாக மகப்பேறு மருத்துவ மனைக்குள் நான் தள்ளப்பட்டேன். மருத்துவமனையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு அந்த குண்டர்களைத் தடுத்து நின்றனர் மூவரும். அதற்குள் கதவுகள் நொறுங்கின. மருத்துவ மனையில் இருந்தவர்கள் போலீசுக்கு 'போன்' மூலம் தகவல் கொடுத்தனர். அதற்குள், ஓர் இளம் கழகத் தோழன், என்னைக் கொல்லைப்புறமாக இழுத்துக் கொண்டு அந்தக் காரிருளில் ஓடினான்.
குய்யோ! முறையோ!' என்று ஒரே சப்தம். என் காலில் முட்கள் ஏறின. "வெட்டு! குத்து! விடாதே பிடி!" என்று காட்டுக் கூச்சல்! அப்பப்பா! அந்தப் பயங்கர இரவை இன்றைக்கு நினைத்துக் கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. முதியவர் மணிமொழியார் முறுக்கேறிய காளை போல் அந்த முரடர்களை எதிர்த்து நின்ற காட்சியை எப்படி மறக்க முடியும்? எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கதவு நொறுக்கப் பட்டவுடன் மணிமொழியாரும், மற்றவர்களும் என்னை காப்பாற்றத் துடியாய்த் துடித்து, அந்தப் பயங்கர இருளில், "கலைஞரே!
கலைஞரே" என்று கத்துகிறார்கள். என்னை அழைத்துக் கொண்டு ஓடுகிற இளைஞனோ, என் வாய் திறக்க முடியாமல் என் வாயைப் பொத்திக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான். முரடர்களின் கொலை வெறிக் கூச்சல் நாலா பக்கமும் கேட்கிறது. கழக இளைஞன் என்னை ஒரு குடிசைக்குள் இழுத்துச் செல்கிறான்.அந்தக் குடிசையில் ஒரு வாலிபன், அவர் மனைவி, அவர்களின் பச்சிளங்குழந்தை, மினுக் மினுக்' என்று எரியும் ஒரு சிறிய விளக்கு.
அந்த வாலிபன் பெயர் சாரங்கன். நான் உள்ளே வந்ததும், குடிசைக் கதவு தாழ் போடப்பட்டது. அழைத்து வந்த இளைஞன் கொல்லை வழியாகப் போய் விட்டான். என்னை அங்குள்ள ஒரு கயிற்றுக் கட்டிலின் கீழ் படுக்க வைத்துப் பழந்துணிகளைப் போட்டு மூடி விடுகிறார்கள். அப்போது குழந்தை அழத் தொடங்குகிறது. அதே நேரம் பக்கத்தில் உள்ள குடிசைகளில் நான் இருக்கிறேனா என்று குண்டர்கள் ஊளையிட்டுக் கொண்டு சோதனை நடத்துகிறார்கள். குடிசைகளின் கூரைகளில் தடி கொண்டு தாக்குகிறார்கள்.
சரமாரியாகக் கற்கள் விழும் ஓசை! "அய்யோ!அய்யோ!" என்ற தாய்மார்களின் சப்தம்! அந்த நேரத்தில்தான் நானிருக்குமிடத்தில் குழந்தை அழுகிறது. உடனே அதன் தாய் குழந்தையின் வாயை மூடிக் கொள்கிறாள். "அய்யோ, வேண்டாம்! குழந்தையைத் தொந்தரவு செய்யாதீர்கள்!"
என்று நான் கெஞ்சுகிறேன். அந்தத் தாய், என் பேச்சைக் கேட்கவில்லை. அந்தச் சகோதரி என் மீது காட்டிய பாசத்தை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. குழந்தையின் வாயைப் பொத்திய கையை எடுக்கவே இல்லை. சாரங்கனும் என் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு பதைபதைப்பாக மூச்சு விடுவது என் காதில் விழுகிறது. வெளியில் என்ன நடக்கிறது? மணிமொழியார், சந்தானம், ராசகோபால் என்ன ஆனார்கள்? ஒன்றுமே புரியவில்லை. கடைசியாகக் குண்டர்கள் நானிருக்கும் குடிசைக்குள் நுழைந்து விட்டால் நான் ஒரு கறுப்புக் கந்தல் துணியுடன் வேறுபக்கமாக இருளில் மறைந்து ஓடவும் நண்பர் சாரங்கன் திட்டம் போட்டு அதற்கேற்ப என் உடைகளையும் மாற்றி வைத்துவிட்டார்.
அதே பதைப்புடன் நள்ளிரவிலிருந்து விடியற்காலை ஐந்து மணிவரையில் அந்தக் குடிசைக்குள் இருந்திருக்கிறேன். இதற்கிடையில் வீட்டார்கள் கதறியிருக்கிறார்கள். அண்ணா நாவலர், இரவு முழுவதும் தூங்கவில்லை. அவர்களது எந்த முயற்சிக்கும் அன்றையப் போலீஸ் அதிகாரிகளிடமிருந்து என்னைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அண்ணா விழிகளில் நீர் வழிந்து கொண்டேயிருந்ததாம். விடியற்காலை ஐந்து மணிக்குக் குடிசைக்கு வெளியே இரண்டொரு போலீசாரின் பூட்ஸ் ஒலி கேட்டது.
நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி அவர்களின் குரல் கேட்டது. அவருக்கே உரிய இனிய சாரீரத்தில், "மூனா கானா!" என்று உரத்த குரல் எழுப்பிக் கூப்பிட்டார். பிறகு குடிசையிலிருந்து வெளியே வந்தேன். நடிகமணி நாராயணசாமி, முரசொலி மாறன், மைனர் மோசஸ், அரங்கண்ணல், டி.கே. கபாலி, பரிமளம், இளங்கோ. ஆனந்தம் மற்றும் கழகத் தோழர்கள் இருந்தனர். அங்கிருந்து புகார், கொடுக்க அடையாறு காவல் நிலையத்துக்குச் சென்றோம். நடந்தவைகளையெல்லாம் நான் அங்கு எழுதிக் கொடுத்திட்ட அதே வேளையில் இன்னொரு வேதனை கலந்த வேடிக்கைக்காட்சி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
என்னுடன் கோட்டூருக்கு வந்த வெங்கிடங்கால் சந்தானம், ராசகோபால் ஆகிய இருவரும் இன்னும் சில தோழர்களும் கைதிகளாக அங்கே காணப்பட்டனர். எங்களைத் துரத்தி வந்த வெறியர்கள் கொடுத்திட்ட பொய்யான புகாரின் பேரிலேயே அந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. நான் உடனடியாக அடையாறு காவல் நிலையத்தில் இருந்தவாறே போலீஸ் இன்ஸ்பெக்டர் - ஜெனரலுக்குத் தொலைபேசியிலேயே விவரங்களை எடுத்துச் சொல்லி விளக்கினேன். என்னுடன் காரில் வந்த என் நண்பர்கள் இருவரை மட்டும் கைது செய்துவிட்டு என்னையும் மணிமொழியாரையும் கைது செய்யாதது ஏன் என்றும் கேட்டேன்.
என் வினாவுக்குச் சரியான விடையளித்திட முடியாத காவல் துறையினர், நண்பர்கள் சந்தானம், ராசகோபால் ஆகிய இருவரை மட்டும் பின்னர் பொறுப்பிலே விடுவித்தனர். என் உயிரைக் குடித்திடக் கோட்டூரில் நிகழ்ந்திட்ட கொலை முயற்சிக்கு ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டுத்தான் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பின்னர் நான் தெரிந்துகொண்டேன். சைதைத் தொகுதியில் ஒரு புதிய வீட்டின் 'கிரகப்பிரவேச' விழாவின் போதுதான் அந்தச் சதிப்பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன.
எவ்வாறோ, கழகத் தோழர்களின் விழிப்புணர்ச்சியால், விரைவான நடவடிக்கையால், குடிசைவாழ் குடும்பம் ஒன்று என்மேல் கொண்டிட்ட பாசத்தால் மாற்றாரின் சதித் திட்டத்தில் மண் விழுந்தது. ஆனால் அப்போது காவல் துறையினைச் சார்ந்த அதிகாரிகளில் ஒரு சிலர் நடந்து கொண்ட முறை எனக்கு வியப்பையே அளித்தது. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தமிழகப் போலீஸ் துறைக்கு எப்போதுமே நற்பெயர் உண்டு. அதுவும் அந்தத் துறையில் பணியாற்றிடும் சாதாரணப் போலீஸ்காரர்களிடம் எனக்கு அளப்பரிய அனுதாபம் உண்டு.
அதனால்தான் அன்றாட வாழ்க்கையில் அவர்களைத் திண்டாட வைத்திடும் தொல்லைகளை, சோதனைகளைச் சித்திரித்துக் காட்டினேன், எனது 'உதயசூரியன்' நாடகத்தில். அதன் காரணமாகவே காங்கிரஸ் ஆட்சியாளரின் தடைக்கும் அந்த நாடகம் இலக்காயிற்று. பின்னால் நான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதில்லை என்று சொல்லிடத்தக்க வகையில் 'காவல் துறை ஆய்வுக் குழு' (போலீஸ் கமிஷன்) ஒன்றினை அமைத்ததும், -அண்ணா பிறந்த நாளில் தீரம் மிகுந்த போவீசாருக்கு 'அண்ணா பதக்கம்' வழங்கிட ஆவன செய்ததும், அதற்கு முன் இல்லாத அளவுக்குப் பல சலுகைகளைத் தந்திட முற்பட்டதும் காவல்துறை நண்பர்களிடம் எனக்குள்ள பரிவினால்தான்.
ஆனால், கோட்டூர் நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டிலோ, எல்லாரையும் குறைகூறிட முடியாது என்றாலும், ஒன்றிரண்டு அதிகாரிகள் நடந்துகொண்ட முறை அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட பண்பாட்டுக்கும் பாரபட்சமற்ற தன்மைக்கும் உகந்ததாக இல்லை. மற்றவர்களும் அன்றைய அரசின் ஆணைப்படி நடந்துகொண்டனர். நான் உயிர் பிழைத்து வந்த மறுநாள் சாரங்கனையும் அவர் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன். சாரங்கனின் மனைவியின் காலில் என் மனைவி விழுந்து "தாலி பாக்கியம் கொடுத்த தாயே!"
என்று நன்றி செலுத்திய நிகழ்ச்சியை எப்படி விவரிப்பது? அண்ணா அவர்கள் சாரங்கனையும் அவர் மனைவியையும் அவர் இல்லத்திற்கு அழைத்து அண்ணியாரின் கையால் சாரங்கன் துணைவிக்குப் புடவைகளைப் பரிசாக வழங்கினார். "என் தம்பியைக் காப்பாற்றினாய் அப்பா!"
என்று சாரங்கனைத் தட்டிக் கொடுத்தார் அண்ணா, தழுதழுத்த குரலில். தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுத் தொகுதி தொகுதியாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் உடலும் உள்ளமும் அலுப்புற்றுச் சோர்வடைந்து கொண்டிருந்த நிலையில் ஓர் இனிப்புச் செய்தியும் என்னை வந்து எட்டியது. இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரிலிருந்து வெளியாகும் 'டைம்ஸ்' ஏடு உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றாகும். அதில் என்னுடைய 'காகிதப் பூ' நாடகத்தைப் பற்றி வந்த பாராட்டுரையே என் 'நெஞ்சில்' தேனை வார்த்திட்ட செய்தியாகும்.
7-2-67 நாளிட்ட அந்த லண்டன் 'டைம்ஸ்' ஏட்டில், 'விழாக் கோலத்தில் சென்னை' என்னும் கட்டுரையில் அடியிற் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "...தமிழக ஆட்சியின் எதிர்ப்புச் சக்திகளில் முன்னணியில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம். அது தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறையே வேறானது. மிகப் பெரிய திடல் ஒன்றின் மூலையில் திரளான மக்கள் அமர்ந்து திறந்தவெளி அரங்கில் நடைபெறும் ஒர நாடகத்தைப் பார்க்கிறார்கள்.
அதனைப் பார்த்துப் பார்த்து உள்ளம் உருகுகிறார்கள்; மனம் திறந்து வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்! "இந்த நாடகம் 'காகிதப்பூ' -திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஒருவரால் எழுதப்பட்டுத் தமிழகம் முழுவதும் நடிக்கப் படுவதாகும். கதராடை உடுத்தி, உழைப்பின் சிறப்பு பற்றிய போலிப் பேச்சுக்களால் மக்களை மயக்கி வாக்குகள் பெற முயலும் காங்கிரஸ்காரர்களாக இந்த நாடகத்தின் வில்லன், நகைச்சுவைப் பாத்திரங்கள் காட்டப்படுகின்றன.
"இந்த நாடகம், தொழில் முறைத் தயாரிப்புப் போலவே இருக்கிறது; நேரம் போவதே தெரியவில்லை. கருத்தும் தெளிவாக இருக்கிறது." இங்கிலாந்து ஏட்டின் இந்தப் புகழுரை எனக்குத் தனிப்பட்ட முறையில் கிட்டிய பெருமையாக மட்டும் கருதிடாமல் கழகத்தின் வலிமைக்கு அயல்நாட்டார் அளித்திடும் பாராட்டிதழாகவே நான் அப்போது நினைத்துக் களித்தேன். 1967 பொதுத் தேர்தல் மிகுந்த பதற்றமான, பரபரப்பான சூழ்நிலையிலேயே நடைபெற்றது.
இந்தியா விடுதலை பெற்ற பின் இருபதாண்டுக் காலம் 'தட்டிக் கேட்காவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்' என்கிற போக்கில் எதேச்சாதிகாரமாக ஆட்சியின் சுவையினை அனுபவித்துப் பழகிவிட்ட காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற உரிமையை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவதா என்கிற வெறியோடு தேர்தல் களத்திலே குதித்தது; அந்தக் கட்சியைச் சார்ந்திட்ட ஆட்சியாளர்களோ அடக்குமுறைகள் அத்தனையையும் அவிழ்த்து விட்டு 'இந்தத் தேர்தலோடு எந்த எதிர்க்கட்சியும் -குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இனி எக்காலத்திலும் தலையெடுக்க முடியாதபடி செய்துவிடுவோம்!'
என்கிற எண்ணத்துடன் ஈடுபட்டனர். தோழமைக் கட்சிகளின் துணையோடு கழகமும் முனைந்து பாடுபட்டது, காங்கிரசை ஆட்சிக் கட்டிலை விட்டு அகற்றிட, ஜனநாயகப் பெருந்தீபம் அணையாமல் காத்திட! எனினும் வெறியர்களைத் தூண்டிவிட்டுக் கழகத் தோழர்களையும், தோழமைக் கட்சி நண்பர்களையும் உருட்டல், மிரட்டல்களுக்கு உள்ளாக்கித் துன்புறுத்திடும் வேலை தொடர்ந்து நடத்தப்பட்டது. கோட்டூரில் என் மீது ஏவப்பட்ட கொலை முயற்சி குறிதவறிப் போய்விடவே நான் எங்கே சென்றாலும் என்னை எப்படியாவது தீர்த்துக் கட்டிவிடுவது என்பதில் தீவிரமாய் இருந்தனர், வன்முறையையே பிழைப்பாய்க் கொண்டிட்ட வஞ்சக நெஞ்சினர்.
அதனால்தான், கடலூரிலும் 20-2-67 அன்று நான் தாக்குதலுக்கு இலக்காகிடும் நிலை ஏற்பட்டது. 15-2-67 அன்றே நான் வேட்பாளராகப் போட்டியிட்ட சைதாப்பேட்டைக்குரிய முதற்கட்டத் தேர்தல் முடிந்துவிடடது. எனினும் 18-2-67, 21-2-67 ஆகிய நாட்களில் முறையே இரண்டாவது, மூன்றாவது கட்டத் தேர்தல்களுக்குரிய தொகுதிகளிலும் பிரச்சாரம் புரிந்திட நான் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற் கொண்டேன். அவ்வாறு மதுரை-இராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சென்று விட்டுச் சென்னை திரும்பிடும் வழியில் கடலூரில் இறங்கினேன்.
முன்பே அடிக்கடி வந்து வாட்டிடும் நெஞ்சு வலி அப்போதும் என்னை வேதனைக்கு ஆட்படுத்தியது. அதனையும் தாங்கிக் கொண்டு அங்குள்ள தேர்தல் நிலவரங்களை அறிந்திடக் கழகப் பணிமனைகளைப் பார்வையிடச் சென்றேன். அச்சமயம் மூன்று, நான்கு கார்கள் என்னைப் பின்தொடர்ந்தே வந்தன. காரில் இருந்தவர்கள், "கருணாநிதியே திரும்பிப் போ! இல்லையென்றால் வெட்டுவோம், குத்துவோம்!"
என்று அநாகரிகமாகக் கூச்சலிட்டனர். அவர்களைப் பொருட்படுத்தாமல், என் பணியினைத் தொடர்ந்திட்ட நான் எனது அருமை நண்பர் வழக்கறிஞர் இளம்வழுதி அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது என்னுடன் முன்னாள் மேயர் அ.பொ.அரசுவும் இருந்தார். அங்கும் அந்தக் கார்கள் வந்தன. காரில் இருந்தவர்கள் கீழே இறங்கிக் காட்டுக் கூச்சல் எழுப்பினர். இல்லத்தை முற்றுகையிட்டுக் கல்மாரி பொழிந்தனர். உடனே உள்ளூர்ப் போலீசுக்குத் தகவல் தரப்பட்டு அவர்களும் வந்தனர்.
ஆயினும் அங்கே உரக்க முழங்கப்பட்ட கொலை வெறிக் கூச்சலை அடக்கிடவோ வன்முறைப் போக்கினரை அங்கிருந்து அகற்றிடவோ போலீசார் எதுவும் செய்திடவில்லை. நண்பர் இளம் வழுதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட அமைதிக்குரிய நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இதற்குள் கடலூரில் உள்ள கழகத் தோழர்கள் திரண்டு விட்டனர். எனினும் எதிர் நடவடிக்கை எதிலும் ஈடுபட்டு விடாமல் அறவழியில் அமைதி காத்து நின்றனர். நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தவிர்த்திடச் சென்னையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலிடம் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார் இளம்வழுதி.
நானும் ஐ. ஜி. யிடம் எடுத்துரைத்தேன் அங்குள்ள பதட்டமான நிலைமையினை. பின்னர், பெரிய போலீஸ் அதிகாரிகள் இளம்வழுதி இல்லத்துக
்கு விரைந்து வந்து வெறியோடு நின்றிருந்த வன்முறைக் கும்பலை விரட்டியடித்தனர். அதன் பிறகு, எனக்குத் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளித்துத் தென்னாற்காடு மாவட்ட எல்லைவரை கொண்டு வந்து விட்டனர். இவ்வாறு கொலை முயற்சிகள் என்னை நிழலெனத் தொடர்ந்த போதும் என் நெஞ்சம் குலைந்திடவில்லை, என் கழகப் ப.னி தளர்ந்திடவில்லை. அடுத்த சில நாட்களில் வெளிவரத் தொடங்கிய தேர்தல் முடிவுகளும், கழகம் 'கோட்டை'யைப் பிடிப்பதைக் காங்கிரசால் தடுத்திட முடியாது என்பதையே அறுதியிட்டுக் காட்டின.
