உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விருகம்பாக்கம் மாநாடு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விருகம்பாக்கம் மாநாடு · 38 / 391

விருகம்பாக்கம் மாநாடு தி ராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நான்காவது பொது மாநாட்டுக்குச் சிறப்பான இடமுண்டு. நாட்டு மக்களின் கவனத்தையெல்லாம் ஈர்த்திடும் வகையில் மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த அனைவரும் மலைத்திடும் அளவில் நான்கு நாட்கள் நடைபெற்றிட்ட அந்த மாபெரும் மாநாடு 1966 டிசம்பர் 29-இல் தொடங்கிற்று. அண்ணா அவர்கள் தலைமை தாங்கிய அந்த மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றிடும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது.

கொடியேற்றிடும் பொறுப்பு காஞ்சி கல்யாண சுந்தரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. கழகத்தின் வளர்ச்சிக்கென தங்கள் உயிரையே காணிக்கையாக்கிய தீரமறவர்களைத் - தியாகிகள் கோட்டத்தினைச் சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு திறந்து வைத்தார். கலைக் கண்காட்சியினைத் திறந்து வைத்திடும் பொறுப்பைத் திரு ஏ. கோவிந்தசாமி ஏற்றிருந்தார். அந்தப் பொது மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாகச் சென்னை தீவுத்திடலை விட்டுப் புறப்பட்ட அன்றைய ஊர்வலத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் பேராவது கலந்துகொண்டிருப்பர்.

அது சென்றிட்ட பாதையின் இருமருங்கிலும் மாடிக் கட்டடங்களிலும் மரக்கிளைகளிலும் அமர்ந்தவண்ணம் அதன் அணிவகுப்பு மாட்சியினைப் பார்த்துக் களித்திட்டோர் பல லட்சம் இருப்பர். கழகத்தின் அறப் போராட்டங்களை, கதியற்ற மக்களின் கண்ணீர் வெள்ளங்களை, அதிகார வெறி கொண்டோரின் அடக்குமுறை அக்கிரமங்களை, சதிகாரர் சிலரின் மொழி ஏகாதிபத்திய முயற்சிகளை எழில் மேலிடச் சித்தரித்திடும் நூற்றுக்கும் மேற்பட்ட அலங்கார 'டிரக்' வண்டிகள், ஐந்நூற்றுக்கும் அதிகமான பஸ், லாரிகள், பத்தாயிரத்துக்கும் கூடுதலான மிதி வண்டிகள் ஊர்வலத்தைக் கண்கொள்ளாக் காட்சி ஆக்கின.

தீவுத் திடலுக்கும் பொது மாநாட்டிற்கென விருகம்பாக்கத்தில் பொலிவோடு அமைக்கப்பட்ட 'நீலமேகம் நகருக்கும்' இடையே ஊர்வலம் சென்றிட்ட பாதையின் நீளம் ஏழு மைல் இருக்கலாம்; ஊர்வலத்தின் நீளமோ ஐந்து மைல் இருக்கும்! ஊர்வலம் ஓர் இடத்தைக் கடந்திட இரண்டு மணிநேரம் பிடித்தது. தொண்டர் படைத் தலைவராகக் கே.எம். கண்ணபிரான் தானைத் தளபதிபோல் உடுப்பணிந்து ஊர்வலத்தை நடத்திச் சென்றார். நடிகர்கள் எம். ஆர். ஆர். வாசு, ஆனந்தன் ஆகியோரும் குதிரை, மீது அமர்ந்து ஊர்வலத்தில் வந்தனர்.

மாநாட்டுத் தலைவர் அண்ணா அவர்களும், தலைமை நிலையச் செயலாளர்களும், மாநாட்டுப் பொறுப்பாளர் நாவலரும், கொடி யேற்றும் காஞ்சி கல்யாணசுந்தரனாரும், வரவேற்புக் குழுத்தலைவர் நீலநாராயணனும், நானும் தேர்போல் அழகுற அமைக்கப்பட்டிருந்த ஓர் ஊர்தியில் அமர்ந்து சென்றோம். பிற்பகல் 3-30 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம் இரவு 9-30 மணிக்குத்தான் போளூர்-சுப்பிரமணியம் பெயரில் அமைந்த மாநாட்டுப் பந்தலை அடைந்திட முடிந்தது.

சுதேசமித்திரன், மெயில், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்ற கழகச் சார்பற்ற ஏடுகளே ஊர்வலச் சிறப்பினை உளந்திறந்து அப்போது பாராட்டின. 'சென்னை நகரில் தி.மு.க.வின் செல்வாக்கு எவ்வளவு என்பதைப் பற்றி வோட்டுப் பெட்டிதான் தீர்ப்பளிக்க முடியும். பிப்ரவரி (1967) கடைசி வாரத்தில் அந்தத் தீர்ப்புத் தெரிந்து விடும். ஆனால், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு தீர்ப்பளிக்க முடியுமென்றால், நகரில், தி.மு.க.

வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்லிவிடலாம். அவ்வளவு பிரும்மாண்டமான முறையில் இன்று ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.' -என்று 'தினமணி' ஏடே ஊர்வலத்தைப் பற்றித் தீர்க்க தரிசனத்தோடு வர்ணித்திருந்தது. நெருங்கிக் கொண்டிருக்கும் பொதுத் தேர்தலில் பொதுமக்களின் நேசக்கரம், நெஞ்சார்ந்த ஆதரவு எந்தக் கட்சியின்பால் நிற்கிறது என்பதற்குரிய படப்பிடிப்பாகவும் விளங்கிற்று அந்த பவனி; எனவே மாற்றுக் கட்சி நண்பர்கள் மருண்டிடத் தக்க வகையிலேயே அன்றைய ஊர்வலத்தின் மாட்சிமை அமைந்திருந்தது என்றாலும் மிகையில்லை.

மாநாடு நடைபெறுவதற்கு ஒரு திங்களுக்கு முன்னர், மாவட்டங்கள் தோறும் ஆங்காங்கே நிகழ்ந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு நான் சென்னைக்குத் திரும்பிய சமயம். வழக்கம்போல் அண்ணா அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த என்னை, "ஏறு, காரிலே!"

-என்றார் அவர். "எங்கே அண்ணா, எதற்கு அண்ணா?" -என்றெல்லாம் வினாக்களை வீசவில்லை நான்; அவர்தம் பரந்த முகத்தையே பார்த்தேன். "மாநாட்டுக்காக ஓர் இடத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். அதை உனக்கும் காட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். அங்கே தான் இப்போது நாம் போகிறோம் -என்றார் அண்ணா. கார் பறந்தது. சில மைல்கள், சில மணித்துளிகள் கடந்திட்ட பிறகு, கார் நின்றது, சாலையில் ஓர் ஓரமாக. அண்ணா இறங்கி நடந்தார்; நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.

ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பரந்த வெளி. அதனைக் காட்டி- "இதுதான் மாநாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம்" என்றார். எனக்கே சற்று மலைப்பாக, திகைப்பாகவே இருந்தது. ஏனெனில் பார்க்கும் இடமெங்கும் பள்ளங்கள், மேடுகள், குன்றின் முகடுகள் போல் கற்களின் குவியல்கள். இடையிடையே இரண்டாள் உயரத்திற்கு மேல் மரம், செடி, கொடிகள், கள்ளிப் புதர்கள்! அந்தப் பகுதியின் அலங்கோலத்தைப் பார்வையால் அளந்திடும் போதே அண்ணா மேலும் தொடர்ந்தார்: "இங்குதான் மாநாட்டை நடத்தியாக வேண்டும்.

நாவலரிடத்தில் சொல்லிவிட்டேன். என்.வி.என். இடமும் இந்த இடத்தைக் காட்டி விட்டேன். மற்றவர்களும் பார்த்துவிட்டனர். நீயும் பார்த்துக்கொள். இந்த இடம் மாநாடு நடைபெறுவதற்குரிய எழிலான பூமியாக மாற வேண்டும்." அண்ணா ஆணையிட்டு விட்ட பிறகு அதற்கு அட்டியேது? தயக்கம் ஏது? புதர்கள் மண்டிக் கிடந்த அந்த மலைப்பாங்கான மண், புதுமைச் சிந்தனைகள் மண்டிடும் பொலிவு மிக்க 'நீலமேகம் நகர' ஆக மாற்றப்பட்டு விட்டது, மாநாட்டிற்காக!

அதுவும் பதினைந்தே நாட்களுக்குள்! இதைப்பற்றி, மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் என்னுடைய திறப்புரையின்போது இவ்வாறு குறிப்பிட்டேன்: "நண்பர்களே! காடாகக் கிடந்த இந்த இடத்தைக்-கரு நாகங்கள் ஊர்ந்துகொண்டிருந்த இந்த இடத்தைத் தொட்டால் தேளும், தீண்டினால் நட்டுவாக்கிளியும் வரவேற்றுக் கொண்டிருந்த இந்த இடத்தைப் பதினைந்தே நாட்களில் எழில் மிக்க பூமியாக, நீங்கள் எல்லாரும் அமர்ந்து களிக்கும் இடமாக, மாநாட்டுப் பந்தலாக மாற்றியிருக்கிறோம்.

இதே நேரத்தில், அறிஞர் அண்ணா ஆணையிட்டால் காங்கிரஸ் ஆட்சியினால் காடாகிப் போய்விட்ட இந்த நாட்டை, ஏன் எழில் மிக்க பூமியாக மாற்ற முடியாது என்று என்னரும் நண்பர்களே, நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள்! "நீங்கள் கேட்கின்ற இந்தக் கேள்விகளின் எதிரொலி, நாடாளுகின்ற காங்கிரஸ்காரர்களின் செவிப்பறைகளைத் தட்டட்டும். அவர்களெல்லாம் தம் காலம் முடிவடைந்து விட்டது என்ற கணக்கைப் பார்த்துக் கொள்ளட்டும்; பிரிவு உபசாரப் பத்திரத்தைத் தமிழ் நாட்டு மக்களிடமிருந்து வாங்கக் காங்கிரஸ் ஆளவந்தார் தயாராகிக் கொள்ளட்டும்.

"இதைத்தான், காடாகிக் கிடந்த இந்த நிலம், எழில் பூமியாக மாற்றப்பட்ட இந்தச் சிறு சரித்திரம் நமக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது." அந்த விருகம்பாக்கம் மாநாடு இயக்கத் தோழர்களுக்கு விறுவிறுப்பான எழுச்சியினை ஊட்டியதோடு வேற்று முகாம்களில் உள்ளோரும் வியப்புக் கடலில் மிதந்திடும் வண்ணம் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டதாகவும் விளங்கிற்று. ஒரு தனிப்பட்ட கட்சியினர் நடத்திய மாநாடுதான் எனினும் பிற தோழமைக் கட்சிகளைச் சார்ந்திட்ட அரும் பெரும் தலைவர்களான- மூதறிஞர் ராஜாஜி காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சிலம்புச் செல்வர் ம.

பொ. சி. முதலானோரும், கேரள மாநிலத் தலைவர்களான முகமது கோயா பாஃபகி தங்கல் -ஆகியோரும் அந்த மாநாட்டின் பெருமைக்கு மகுடம் சேர்த்தனர். அப்போது மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வெளியிட்ட ஒரு கருத்து எப்போதும் என் செவிகளிலே எதிரொலிப்பது உண்டு; "இப்போதைய (இந்தியப்) பொருளாதாரம் மிகவும் சீர் கெட்டிருக்கிறது. காங்கிரசின் அரசியல் அழுகிய பழமாக ஆகிவிட்டது. அதை அகற்ற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் உடன்பாடு செய்து கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சி அணி நிச்சயம் வெற்றி பெறும். "எனது வாழ்நாளில் எனது கட்சியை அல்லது கூட்டத்தைச் சேராத மக்கள் என்னிடம் இவ்வளவு பற்று வைத்திருப்பதை நான் பார்த்ததே கிடையாது. அதை நான் இப்போது என் கண் முன்னால் காண்கிறேன். "தி. மு. க. தம்பிகளுக்கும் அவர்களது பேரன்மார்களுக்கும் எனது மனப்பூர்வமான ஆசி."

முன்னாள் கவர்னர்ஜெனரல் அவர்களின் இந்த உளத்திறந்த உரையினைக் கேட்டு நாங்கள் அடைந்திட்ட புளகாங்கிதத்திற்கு-பூரிப்பிற்கு எல்லையே இல்லை. சீரிய சிந்தனையாளர்கள், நேரிய திறமைசாலிகள் மாற்று முகாம்களிலே இருந்தாலும் அவர்களை மதித்திடக் கூடிய மனப்பக்குவம் தி.மு. கழகத்திற்கு எப்போதும் உண்டு. ராஜாஜி அவர்களின் அந்த மாநாட்டு உரை கழகத்தின் கண்ணியப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்ட அரிய சான்றிதழாகவே அமைந்திருந்தது.

அந்த மாநாட்டில்தான் கழகப் பொருளாளர் என்கிற முறையில், பொதுமக்களிடமிருந்து திரட்டிய ரூபாய் பதினொரு லட்சம் தேர்தல் நிதியினை அண்ணா அவர்களிடம் காணிக்கையாக அளித்திடும் பேற்றினையும் பெற்றேன். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், தேர்தல் நிதிக்கென முன்னர் வகுத்துக் கொள்ளப்பட்ட இலக்கு பத்து லட்சம்தான். அதனையே முழுமையாகத் திரட்டிட முடியுமா என்று நானே நெஞ்சம் குழம்பிய நேரங்களும் உண்டு. அந்த இலக்கினையும் தாண்டி ஒரு லட்சம் கூடுதலாகவே கிடைத்ததை எண்ணும் போது எல்லாருக்குமே வியப்பு ஏற்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது!

இதைப்பற்றி அண்ணா அவர்களே மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: "...பதினொரு லட்சம் ரூபாயைத் தம்பி கருணாநிதி என்னிடம் தந்தார். தான் பேசும் போது 'அந்தத் தொகையைச் சேர்க்க முடியுமா என்று என் விழிகள் வியப்பால் விரிந்தன' என்றார்.

"தம்பி! உனக்கு 'நிதி' என்று பெயரிட்டார்களே உன் தாயார், சும்மாவா இட்டார்கள்? 'தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பொருள் உள்ளவை' என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். உன் தாயார் உனக்கு 'நிதி' என்று பெயரிட்டதே, உன்னை நாட்டு மக்கள் நிதியாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று தான்.

இன்றைக்கு இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்திருந்தால், 'உனக்கு இட்ட பெயர் வீணாகி விடவில்லை' என்று உன் தாயார் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்! "ரூபாய் பத்து லட்சம் கேட்டதற்கு பதினொரு லட்சமே கொடுத்திருக்கிறாய்! ஆனால் மக்கள் சிக்கவேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கியிருந்தால் நீ இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்! -அண்ணா இவ்வாறு கூறியதுடன் நின்றிடவில்லை 1967 - பிப்ரவரித் திங்களில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.

மு. கழக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டபொழுது என் பெயரையே மாற்றியும் அழைக்கலானார் அந்தப் பாசக் கடவுள். மற்ற வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் அந்தந்தத் தொகுதிகளைக் குறிப்பிட்டு அவைகளுக்குரிய வேட்பாளர்களின் பெயர்களையே சொல்லி வந்தார் அவர். "சைதாப்பேட்டை......"

என்று கூறிவிட்டுக் கணப்பொழுது அமைதியாக இருந்தார். பின்னர் "பதினொரு லட்சம்!" என்றார். அந்த இரு சொற்களும் என்னைத்தான் குறிக்கின்றன என்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டுவிட்ட மாநாட்டினர் உற்சாகத்தோடு கரவொலி எழுப்பியதை என்றைக்குமே என்னால் மறந்திட இயலாது. இதில் வேடிக்கை என்னவெனில், மாநாட்டில் அறிவிக்கப்படும். வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெறும் என்று நான் எதிர்பார்த்திடவே இல்லை.

அண்ணாவும் முன்கூட்டியே தம் முடிவினை எனக்குத் தெரிவித்திடவும் இல்லை. அதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் இருந்தது. 1967 - பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினை வீழ்த்திடத் தவறிவிட்டால், பிறகு எதிர்க்கட்சியினர் எந்தக் காலத்துக்குமே தலையெடுத்திட முடியாது. எதேச்சாதிக்காரப் போக்கினை அந்தக் கட்சி குத்தகைக்கு எடுத்துக்கொண்டுவிடும் என்கிற அச்சம் என் போன்றவர்களின் உள்ளத்தைக் குடைந்த வண்ணமே இருந்தது.

1965 இந்தி எதிர்ப்புப் போரிலே அவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைக் கொடுமைகளாலும் அரிசிப் பஞ்சத்தாலும் ஆற்றொணாத் துயரக் கடலில் அமிழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்கள் கரையேறிடக் கிட்டிய கட்டு மரமாகக் கருதி நம்பிக்கை வைத்தது கழகத்திடமே. அந்த நம்பிக்கை நாசமாகாமல் காத்திடவும் ஜனநாயகம் சவக் குழிக்குச் சென்றிடாமல் தடுத்திடவும் எப்போதுமே விழிப்புடன் பணியாற்றினால்தான் தேர்தலில் வெற்றி பெற்றிட முடியும் என்று எனக்குத் தோன்றிற்று.

நொடிப் பொழுது கண்ணயர்ந்தாலும் இடி விழுந்துவிடும் கழகத்தின் எதிர்காலத்தில்! எனவே நானும் ஒரு சில முன்னணியினரும் வேட்பாளராகப் போட்டியிட்டு எங்கள் தொகுதிகளுக்குள்ளேயே முடங்கி நின்று எங்கள் கவனத்தைக் கருத்தைக் காலத்தை வீணடித்து விடாமல், நாங்கள் வெளியேயிருந்த மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக எல்லாத் தொகுதிகளிலுமே வேலைகள் செய்திடுவதையே நான் விரும்பினேன். என் எண்ணத்தை அண்ணா அவர்களிடமும் வெளியிட்டேன்.

அதனால்தான், வேட்பாளர் பட்டியல் விருகம்பாக்கம் மாநாட்டில் அறிவிக்கப்படும் வரை எனது நிலை என்ன என்பது பற்றி சந்தேகமாகவும் இருந்தது. ஆனால் என்னைவிட அதிகம் சங்கடப்பட்டவர்கள் காங்ரஸ்காரர்கள் தான். 'தேர்தலில் நிற்கிறானா, இல்லையா? என்பதைக்கூடச் சொல்லித் தொலைக்காமல் இருக்கிறானே!'

என்பதுதான் அவர்கள் அடைந்திட்ட சங்கடம். அத்துடன், நான் சென்னையிலேயே நிறுத்தப்படுவேன் என்பதும் எனக்கு முன் கூட்டியே தெரியாது. அவ்வாறு நான் சென்னை-சைதாப்பேட்டையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது. தலைமைக் கழகம் திரட்டியுள்ள தேர்தல் நிதியினைச் சீராகச் செலவு செய்யப் பொருள்களை முறையாக வழங்கிடப் பிரச்சாரக் கருவிகளை, காரியங்களை ஒழுங்குபடுத்திடப் பொருளாளராகிய நானும் சென்னையிலேயே தங்கியிருப்பதுதான் தக்க ஏற்பாடாகும் என்று அண்ணா கருதியிருக்கிறார்.

அத்துடன் சைதாப்பேட்டை உள்ளிட்ட தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலேயே அண்ணா அவர்களும் வேட்பாளராகப் போட்டியிட்டதால் அந்தத் தேர்தல் வேலைகளையும் நான் அருகில் இருந்தால் இன்னும் செவ்வனே செய்திட முடியும் என்றும் கருதப்பட்டது. எனவேதான் சைதாப்பேட்டைத் தொகுதியில் அப்போது நான் நிறுத்தப்பட்டேன். 1967-பிப்ரவரி திங்களில் மூன்று கட்டங்களாகத் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருந்தது. வாக்களித்திடும் நாட்கள் நெருங்க நெருங்க அரசியல் பிரச்சாரச் சூடும் அதிகமாகிக்கொண்டே போயிற்று.

காங்கிரசாட்சியினரின் அமளிகளும் ஆத்திரமூட்டும் செயல்களும் அளவில்லாமல் நீண்டு கொண்டே இருந்தன. அவற்றின் உச்சகட்டமாகத் தான் என் உயிருக்கே உலை வைத்திடக் குறி வைத்த கோட்டூர் நிகழ்ச்சி என் வாழ்க்கைப் பயணத்திலே குறுக்கிட்டது!