நெஞ்சுக்கு நீதி
இலக்கியத்தில் பிரச்சாரமா? · 37 / 391
இலக்கியத்தில் பிரச்சாரமா? 'இ லக்கியத்தைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?" என எதிர்ப்புக் குரல் கொடுப்போரும் இந்த நாட்டில் இல்லாமல் இல்லை. ஏதாவது ஓர் இலக்கினை வகுத்துக் காட்டி அதனை நோக்கி மனித மனத்தை இட்டுச் சென்று சிந்திக்கத் தூண்டுவதற்காக எழுதப்படுவதே இலக்கியம். அவ்வாறு ஓர் எழுத்தாளனோ, கவிஞனோ தேர்ந்தெடுக்கின்ற இலக்கு மனிதப் பண்பாட்டுக்கு மணம் சேர்ப்பதாகவும் இருக்கலாம். சமுதாய அழுக்குகளைச் சலவை செய்வதாகவும் விளங்கலாம்.
அரசியல் இருட்டில் ஒளியேற்றுவதாகவும் அமையலாம். இத்தகைய அடிப்படை நோக்கங்களைப் -பொதுத் தேவைகளை - உன்னிப்பாக ஊன்றிப் பார்க்க மறுப்பவர்கள்தான் இலக்கியத்தில் பிரச்சாரமா - என்கிற வறட்டுக் கேள்வியினை எழுப்புவார்கள் என்பது என் கருத்து. என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிடத் தடுமாறும் நெஞ்சங்களுக்குத் தக்கதோர் வழிகாட்ட அடாத செயல் புரிவோரின் அழுக்கு நினைவுகளை அகற்றிட ஏற்புடைய கருவியாகத் திகழ்வது இலக்கியமே.
அதுவும் நாடக இலக்கியம்போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக்கூடிய ஆற்றல் வேறு எதற்கும் அவ்வளவாக இல்லை. அதனால்தான் அரசியல் கருத்துக்களைப் பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளித் தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை நல்லதோர் கருவியாக - வல்லமை வாய்ந்த சக்தியாக - நான் பயன்படுத்திட எண்ணினேன்: அந்த வகையில் நான் எழுதிய நாடகங்களில் ஒன்றுதான் 'மணி மகுடம்'. மக்களாட்சி நெறிமுறையே மலர்ந்திட வேண்டும். அதற்குரிய மதிப்பினையும் அளித்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தி எழுதப்பட்டதே அந்த வரலாற்று நாடகம்.
அரசியல் பயணத்தில் சந்திக்கக்கூடிய சக்திகள், சந்தேகங்கள், திருட்டுத்தனங்கள், அவற்றையும் மீறிய தியாகச் சுடர்கள் முதலான பல கோணங்களையும் சித்திரிக்க முயன்றிருந்தேன் அந்நாடகத்தில். ஆயிரக்கணக்கான மேடைகளில் பல ஆண்டுகள் நடிக்கப் பெற்ற அதனைத் திரைப்படம் ஆக்கிட விழைந்தார் இலடசிய நடிகர் எஸ். எஸ். இராசேந்திரன். அதற்கு என் இசைவினை அளித்ததுடன் திரைப்படத்திற்கேற்ற உரையாடலையும் தீட்டி த் தந்தேன். அந்த 'மணிமகுடம்' திரைப்படம் 9-12-66-இல் வெளியிடப்பட்டது.
அதனையொட்டிச் சென்னை காமதேனு தியேட்டரில் விழா ஒன்றும் நடைபெற்றது. அண்ணா அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிலம்புச் செல்வர் ம.பொ. சி., டாக்டர் மு. வரதராசனார், ஏ. எல். சீனிவாசன், சி.பா. ஆதித்தனார், டி.கே. சண்முகம், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான திரு நாரண துரைக்கண்ணன் பேசும் பொழுது- "நல்ல வசனமும் நல்ல கதையும் உள்ள படம் இது. ஜனாதிபதி பரிசுக்குரிய படம் இது.
நிச்சயம் இதற்கு ஜனாதிபதி பரிசு கிடைக்க வேண்டும்!" என்று கூறினார். அதைப் பற்றி அண்ணா அவர்கள் தமது பின்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்கள். "இந்தப்படத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைக்க வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். இப்படத்திற்கு இங்கே பேசிய கருத்துச் செல்வர்கள் அளித்த (பாராட்டுப்) பரிசு ஜனாதிபதிப் பரிசைவிடப் பெருமை வாய்ந்தது. இவர்கள் ஜனாதிபதியாக இல்லாததாலேயே ஜனாதிபதியாகும் தகுதி பெறாதவர்கள் என்று பொருள் அல்ல.
"இந்தப் படத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடப்பதற்குள் இப்போதே பத்து ஜனாதிபதிகளின் பரிசுகள் கிடைத்து விட்டன!" திரைப்படங்களுக்கு ஜனாதிபதி பரிசுகள் அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் அண்ணா 'மணி மகுடம்' விழாவிலே உதிர்த்திட்ட அந்த மணி மொழிகள் என் செவிகளில் எதிரொலிப்பது உண்டு. நகைத் தொழிலாளர் மாநாடு ஒன்று சென்னையில் 26-12-66 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர்கள் ந. கணபதி, சுப்பையா, அதியமான் முதலானவர்களின் முயற்சியோடு நிகழ்ந்திட்ட அம் மாநாட்டில் வெள்ளிக் கேடயம் ஒன்றை வழங்கினார்கள்.
'பூம்புகார்' படத்தில், நகைத் தொழிலாளிகள் மீதுள்ள பழியைத் துடைத்திடும் வகையில் உரையாடல் தீட்டியதற்காகவே அந்தப் பரிசு எனக்கு அளிக்கப்பட்டது.
