உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/காமராசரைக் காப்பாற்றியவர்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

காமராசரைக் காப்பாற்றியவர் · 36 / 391

காமராசரைக் காப்பாற்றியவர் இந்த மாநிலத்தில் ஏறத்தாழ இருபதாண்டுக் காலம் தொடர்ந்தாற் போல் கோலோச்சிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத்தில் "Treasury Bench" என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறதே அந்த ஆளுங்கட்சிப் பகுதியில் அமர்ந்திட - முடிந்திட்ட கடைசி நாள் அதுதான். அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தல் மூலம் புதிய சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில் பழைய சட்ட மன்றம் முடிவுறுந் தறுவாயில் நடைபெறும் இறுதி நாள் கூட்டத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒன்றையொன்று பரஸ்பரம் பாராட்டிக்கொள்வதே வாடிக்கை.

நானும் அன்றைய தினம் 'பாராட்டு வழங்கிடும் பணி'யில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்கிற முறையில். ஆனால் தனிப்பட்ட முறையில் அமைச்சர் பெருமக்கள் சிலரின் ஆற்றலைப் போற்றிய அளவில் என் நெஞ்சம் நிறைவு பெற்றிடவில்லை அது பழைய சட்ட மன்றத் தொடரின் இறுதி நாள் கூட்டமாயினும் எதிர்க்கட்சிப் பொறுப்பினை ஏற்றிட்ட நிலையில் பொதுமக்களில் இன்னல்களை - கண்ணீர் வெள்ளங்களை இதயப் பொருமல்களைப்-எரிமலை குமுறல்களை எதிரொலிக்காமல், போற்றிப் பாசுரம் மட்டுமே பாடிவிட்டு அமர்வது எனக்குரிய ஜனநாயகக் கடமையாகாதே என்கிற உள்ளுனர்வும் ஊற்றெனப் பொங்கிற்று என் உள்ளத்தில்.

அதனால்தான், நண்பர் மாதவன் கொண்டு வந்த "சுயமரியாரைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லத்தக்கதாக்கிடும்" தீர்மானம் போன்ற எத்தனையோ கழக உறுப்பினர்களின் தனி நபர் மசோதாக்களையெல்லாம் தங்களுக்கிருந்த பெரும்பான்மை பலத்தால் தள்ளுபடி செய்து தோற்கடித்துவிட்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களின் தவறான போக்கினச் சுட்டிக்காட்டிடவும் அன்றைய தினம் நான் தவறிடவில்லை. அத்துடன், அச்சமயம வீசிய கோரப்புயலினை நேரில் சந்தித்தவன் என்கிற நிலையில், வீடுவாசல்களை இழந்து, விழிநீர் பெருக்கி, வேதனையே உருவமாகிவிட்ட பொதுமக்களுக்கு விரைந்து செய்திட வேண்டும் நிவாரணப் பணிகளை என்று வேண்டுகோள் விடுத்தேன் ஆட்சியாளர்க்கு.

புயலின் போது சாலைகளில் விழுந்துவிட்ட மரங்களை அப்புறப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட இலாகாவினர் காட்டிய 'ஆமை வேகத்தையும்' சாடினேன் அப்போது. அந்த இறுதி நாள் சட்டமன்றக் கூட்டத்தில் இப்படியும் குறிப்பிட்டேன்: "...பாராட்டுவது வேறு, குறைகளைச் சுட்டிக்காட்டுவது வேறு இரண்டையும் குழப்பிக்கொள்வது அரசியல் தெளிவாகாது. "ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து, நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து நான் கேட்கிற வரம் இதுவாகத்தான் இருக்கும்.

முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு!' என்றுதான் கேட்பேன். அந்த வரத்தைக் கேட்ட பிறகு, அடுத்த வரமாக 'முதலமைச்சர் அவர்களுடைய பிடிவாத உள்ளத்தைப் போக்கி விடு!' என்று அந்த ஆண்டவனைப் பார்த்துக் கேட்டிருப்பேன்! ...முதலமைச்சர் (திரு பக்தவச்சலம்) அவர்களுக்கு எங்களிடம் ஒரு குறை உண்டு. எதிர்க்கட்சி நல்ல அனுபவம் பெறவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்; அதற்கான அனுபவத்தை அளிக்கும் வகையில் அந்த இடத்தை (எதிர்க்கட்சி இடத்தை) இந்தச் சட்ட மன்றத்தில் பிடித்துக்கொண்டு அடுத்த தடவை எதிர்க்கட்சி அனுபவங்களையெல்லாம் எங்களுக்குச் சொல்லித்தர வேண்டும் என்று அவர்களை நான் பணிவன்புடன் சபா நாயகர் அவர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்......"

ஆனால், அடுத்து நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கே புயலாக-பூகம்பமாகப் போய்விட்டதால் பின்னர் என்னுடைய எண்ணம் ஈடேறவில்லை. திரு. பக்தவத்சலனார் அவர்கள் சட்ட மன்றத்துக்கு வெளியே இருந்தே எதிர்க்கட்சிப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு விட்டார் தீவிரமாக. வன்முறையை மேற்கொள்ளும் வன்கணார்கள் மக்களாட்சி நெறி முறைக்கே வைரிகள். அந்தச் சமுதாயப் புல்லுருவிகளைச் சாடுவதற்கோ அவர்தம் அடாத செயல்களைத் தடுப்பதற்கோ என்றைக்குமே நமது கழகம் தயக்கம் காட்டியதில்லை.

இதில் கட்சி வேறுபாடுகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. அவ்வாறுதான் 1966 - நவம்பர் திங்களில் திரு காமராசர் அவர்கள் புது டில்லியிலே தாக்கப்பட்டார் என்கிற செய்தி அறிந்ததும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டேன். வடநாட்டில் பசுவை வதைக்கக்கூடாது என்கிற இயக்கம் ஒன்றை நடத்தினர் சிலர். பசுவைக் காப்பாற்றப் புறப்பட்ட அவர்களோ புலியினும் கொடியவர்களாக மாறிவிட்டார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக, இரண்டு தலைமை அமைச்சர்களை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க வழிவகுத்து 'king maker' ('அரசரையே உருவாக்குபவர்') என்னும் பெயர் பெற்றவராகத் திரு காமராசர் நிகரில்லாச் செல்வாக்கு பெற்றிருந்த நேரம் அது.

அவர்மீது, அந்த வன்முறைக் கும்பலுக்கு என்னதான் அத்துணைக் காழ்ப்போ, கசப்போ, கோபமோ, குமுறலோ தெரியவில்லை 'பசுவைக் கொல்லாதே' என்று முழக்கமிட்டுச் சென்ற அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காமராசரைக் கொல்லவும் துணிந்து விட்டவர்களாக அடாத செயல்களில் இறங்கி விட்டனர்.

அவருடைய வீட்டை நாற்புறமும் சுற்றி வளைத்துக் கொண்டு கற்களை வீசிக் கதவுகளை உடைத்துக் கண்ணாடி சன்னல்களை நொறுக்கித் தீ வைத்திடவும் முனைந்து விட்டனர். அவர்களுடைய தாக்குதலைச் சமாளித்திட முடியாமல் காமராசரின் 'சமையற்காரரும் அடிபட்டு விழுந்து விட்டார். காமராசரோ ஓர் அறையினுள்ளே உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தவித்திட வேண்டிய நிலை. இந்தச் செய்தி டெல்லியில் இருந்த நமது கழகத் தோழர் ஒருவருக்கு எட்டியது.

விரைந்தோடினார், காமராசர் இருந்த இல்லத்திற்கு. ஆர்ப்பாட்டக்காரர்கள் அறியா வண்ணம் அவர் தங்கியுள்ள அறையருகே சென்றார். கதவைத் தட்டினார். ஆனால் எவனாவது வன்முறையாளனாகத்தான் இருப்பானோ என்கிற எண்ணத்தில் கதவைத் திறந்திடவில்லை காமராசர். உடனே தமிழில் பேசினார் கதவைத் தட்டியவர். அந்தத் தமிழைக் கேட்டதும் தைரியம் வந்து விட்டது காமராசருக்கு! கதவைத் திறந்து விட்டார். அடுத்த கணமே அவருடைய கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வேறொரு பாதுகாப்பான இடத்துக்கு இட்டுச் சென்றார்.

அவர் மட்டும் அந்த நேரத்தில் அங்குச் சென்றிடாமல், துணிச்சலோடு செயல்படாமல் போயிருந்தால்... நினைத்தாலே நெஞ்சம் பதறக் கூடிய நிலைதான்! அன்று அந்தக் கொலை வெறியர்களிடமிருந்து காமராசரை மீட்ட கோதண்டபாணி என்னும் பெயருடைய அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரிய தொண்டர்களில் ஒருவர். அந்தப் புதுடில்லி நிகழ்ச்சியைப் பற்றி 'முரசொலி' 8-11-66 இதழில் தீட்டிய தலையங்கத்தில் இவ்வாறு நான் குறிப்பிட்டேன்.

"...அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் டெல்லிப் பட்டணத்தில் திரு காமராசர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கெதிரே ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் நில்லாமல்; வீட்டுக்கே தீயிட்டுக் கொளுத்தியிருக்கிற கொடுஞ்செயலையும் காணுகிற நேரத்தில் பண்புடைய அரசியல்வாதிகள் பதறவே செய்வர். "பசுவதைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இரக்கத்தின் அடிப்படையில் கொள்கையை முழக்குகிறவர்கள், இப்படிப்பட்ட இரக்கமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத் தக்கதாகும்."

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்திட்ட போதிலும் காமராசர் தாக்கப்பட்டார் தறுக்கர்களால் என்கிற தகவல் எட்டியதுமே தவியாய்த் தவித்திட்டோம், தி.மு. கழகத்தைச் சார்ந்திட்ட அனைவருமே. ஒரு கழகத் தொண்டர் அவர் தம் உயிரினைக் காப்பாற்றிட துடியாகத் துடித்து ஓடியிருக்கிறார்; என்னைப் போன்றவர்கள் தயங்காமல் தொடுத்திட்டோம் கண்டணக்கணைகளை. ஏன்? இரத்த பாசம் தழுவிய இன்பப்பற்றால்-மொழிப் பற்றால்.

ஆனால் அதே சமயத்தில் இங்கே தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அறிஞர் அண்ணாவின் உயிரையே பறித்திடக் குண்டர்கள் ஏவி விடப்பட்டனர். அந்தக் கொலை முயற்சி நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அந்த வன்முறைச் சம்பவம் பற்றிக் கண்டனம் தெரிவித்திட இங்குள்ள எந்தக் காங்கிரஸ் தலைவரும் கடுகளவு கூடக் கவலைப் படவில்லை. கண்டனந்தெரிவிப்பது இருக்கட்டும்; கிண்டலாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா, வன்முறையாளர்களால் தாக்கப்படும் கழகத்தவரை?

அதுவும் இல்லை. அண்ணாவுக்கு வந்திட்ட ஆபத்து ஒருபுறம் இருக்க, நாவலர் தேனியில் உயிர் தப்பியபோதும் சரி, நான் சென்னை-கோட்டூர்புரத்தில் கொலை வெறியர்களிடமிருந்து மீண்டபோதும் சரி, எங்கள்மீது அள்ளி வீசப்பட்ட ஏளனங்கள், ஏகடியங்கள்தான் எத்தனை, எத்தனை? கட்சி வெறி இருக்க வேண்டியதுதான்; அதற்காக நடுநிலைச் சிந்தனையையே படுகுழியில் தள்ளிடும் அளவுக்கு -வன்முறை நிகழ்ச்சிகளைக் கூடக் கண்டிக்கத் தயங்கிடும் அளவுக்குப் பெரிய மனிதர்களின் கண்ணை மறைத்திட வேண்டுமா, கருத்தைச் சிதைத்திட வேண்டுமா அந்தக் கட்சி வெறி?

மராட்டியத்திலும், குஜராத்திலும் உள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களைச் சந்தித்திடவும், பம்பாய் ஆமதாபாத் முதலான நகரங்களில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டிடவும் 12-11-66 காலை 9-10 மணி அளவில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து கிளம்பிய புகைவண்டியில் புறப்பட்டேன் சென்னை விட்டு. நான் பம்பாய்ப் பெருநகரத்தை அடைவதற்குள்ளேயே வழியில் குண்டக்கல், பூனா, கிர்க்கி, கல்யாண் முதலான இடங்களில் கழகத் தோழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் அன்பு மழையிலே என்னை நீராட்டித் திளைத்தனர்.

பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தினுள் புகை வண்டி நுழைந்தபோதே கழகத் தோழர்கள் எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் அந்த வண்டியில் பயணம் புரிந்திட்ட அத்தனை பேருடைய கவனத்தையுமே ஈர்த்திடும் வண்ணம் எதிரொலி எழுப்பின. கரங்களிலே கழகக் கொடியினை ஏந்தி, ஆயிரக்கணக்கில் அந்தப் புகை வண்டி நிலையத்தையே ஆக்கிரமித்து நின்றிட்ட காளையர்களைக் கண்டபோது, நான் மராட்டிய மாநிலத்திற்குத் தான் வந்திருக்கிறேனா, இல்லை, தமிழகத்திலேதான் இருக்கிறேனா என்கிற உணர்வு என்னுள் எழுந்தது.

அந்தப் புகை வண்டி நிலையமே அதிர்ந்திடும் வகையில் எனக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை, அணிவிக்கப்பட்ட மாலைகளைக் கைத்தறி ஆடைகளைப் பல வடநாட்டுக்காரர்களும் கூட ஏன் வெளிநாட்டுக்காரர்களும்கூட வேடிக்கை பார்த்தனர் வியப்போடு. பின்னர், திறந்த காரில் அமர்ந்தவாறே கழகத் தொண்டர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டேன். பம்பாய் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நான் தங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் கழகத் தோழர்கள்.

ஆனால், ரயில் பம்பாயை அடைவதற்குத் தாமதமாகி விட்டதால், என்னால் விடுதிக்குச் சென்று களைப்புக்கு விடை கொடுத்திட ஓய்வு எடுக்க முடியவில்லை. மாலை நான்கு மணிக்குத் திட்டமிட்டபடியே கிளம்பிய ஊர்வலத்தில் உடனடியாக நான் கலந்துகொள்ளும்படி ஆயிற்று. மாதுங்கா-'போதர்' கல்லூரிக்கு எதிரிலிருந்துதான் ஊர்வலம் புறப்பட்டது. மூன்றரை மைல் கடந்து தாராவியைச் சென்று அடைந்தது. வழியெங்கணும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.

மாதுங்காவும் தாராவியும்தான் பம்பாயில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்திடும் பகுதிகள். அவர்கள் அங்கே கூட கோபுரங்களிலே கோலாகலமாக வாழ்ந்திடவில்லை. குடிசை வாழ் மக்களாகவும் அவர்கள் குடல் எரிந்திட-உடல் நலிந்திடத்-தங்கள் வாழ்க்கை வண்டியினைத் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழகத்திலிருந்து சென்ற என்னைக் கண்டதும் அவர்களுக்குத்தான் எத்துணை அன்புப் பெருக்கு! இதய மலர்ச்சி! அதனை வெளிப்படுத்திடும் வகையில் வழிநெடுக இருபுறங்களிலும் நின்றவாறும், தங்கள் இல்லங்களில் இருந்தவாறும், முதியவர், பெண்டிர், குழந்தைகள் எல்லாரும் என்னை நோக்கிச் செய்த கையசைப்புகளை-உற்சாகக் கண் பார்வைகளை -என்னவென்று சொல்வேன்!

பல தோழர்கள் காரில் சென்றுகொண்டிருந்த என் கரத்தினைக் குலுக்கிட முண்டியடித்துக்கொண்டு வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்திடத் தொண்டர் படையினர் முற்பட்டபோது, அவர்கள் வேறொரு யுக்தியை கையாண்டனர். தேர்தல் நிதி அளித்திட்டால் தாராளமாகக் கை குலுக்கலாமே எனக்கருதி, ஒவ்வொரு ரூபாயாக வழியெங்கும் தேர்தல் நிதி அளித்து என் கையைத் தொட்டுவிட்டுச் சென்றனர். ஆங்காங்கே தென்பட்ட அலங்கார வளைவுகள்-என் தலைமீது பொழியப்பட்ட மலர் மாரிகள்-என்னுடைய பயணக் களைப்பையெல்லாம் கூடப் பறந்தோடச் செய்துவிட்டன.

மக்களோ கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கடலெனத் திரண்டிருந்தனர். அந்தக் காட்சியினைக் காண்பதற்கு மாற்றுக் கட்சியினருக்குப் பொறுக்க முடியவில்லை போலும்! எனவே கூட்டம் நடைபெறாமல் செய்யும் பொருட்டு, முன்பே காவல் துறையினரை அணுகித் தடை விதித்திடுமாறு விண்ணப்பித்திருக்கின்றனர். கடைசி நேரத்தில் அந்தக் கூட்டத்திற்குத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பம்பாய்க் கழகக் கண்மணிகள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிக் கூறிய பின் அந்தத் தடையுத்தரவு நீக்கப்பட்டுக் கூட்டம் நடந்திட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துணை இடர்களை விளைவித்தது போதாது என்று நான்கு செத்த நாய்களைக் கூட்டம் நடக்கும் இடத்தருகே கொண்டு வந்து போட்டிருக்கின்றனர் காங்கிரசார். தாராவிவாழ் மக்களுக்கு நாற்றம் ஒன்றும் புதிதல்ல. சாக்கடை ஓடிடும் வீதிகளிலேயே நடமாடிப் பழக்கப்பட்ட அவர்களுக்கு, தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வரும் பிண நாற்றத்தையே வாழ்நாளெல்லாம் சகித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு, அந்தச் செத்த நாய்களின் நாற்றந்தானா அவர்களுடைய கழகப் பற்றைக் குறைத்திடப் போகிறது?

கூட்டத்திற்கு வராதபடி தடுத்திடப் போகிறது? எனவே பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் அங்கே திரண்டுதான் இருந்தனர் பொதுமக்கள். தேர்தல் நிதியினையும் வாரி வாரி வழங்கினர். பன்னிரண்டாயிரம் ரூபாய்வரை தேர்தல் நிதியாக என்னிடம் வழங்கப்பட்டது. ஒரு தோழர் புதுமையான இத்தாலியக் கோழி ஒன்றைத் தேர்தல் நிதிக்கு அளித்தார். அதனை ஏலம் விட்டதில் ரூ.192 வரை போட்டி போட்டுக்கொண்டு தோழர்கள் எடுத்தனர். இவ்வாறு பம்பாய்த் தோழர்கள் காட்டிய ஆர்வமும் அக்கறையும் எனக்குப் பன்மடங்கு உற்சாகம் ஊட்டின.

இந்தியாவிலேயே ஆலைகள் நிறைந்திட்ட- ஆடைகள் நெய்து குவிக்கின்ற- நகரமாம் ஆமதாபாத்துக்கு நான் வரவேண்டுமென்றும் வற்புறுத்தினர் அங்குள்ள கழகக் கண்மணிகள். அவர்களுடைய அழைப்பினை ஏற்று 14-11-66 அன்று காலை ஏழு மணி அளவில் பம்பாயிலிருந்து ஆமதாபாத்துக்குப் புறப்படும் விமானத்தில் சென்றிட நான் ஆயத்தமானேன். ஆனால் விமானமோ குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பிடவில்லை. ஏதோ பழுது பட்டிருப்பதாகவும், பதினொரு மணிக்குத் தான் அது புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

காலை 8-20 மணிக்கே ஆமதாபாத்தை அடைந்திட வேண்டிய நான் திட்டமிட்டபடி செல்ல முடியாமற்போனதால் பம்பாய் விமான நிலையத்தில் இருப்பே கொள்ளாமல் தவியாய்த் தவித்தேன். குஜராத் மாநிலத்தில் வாழும் கொள்கைத் தங்கங்கள் குறித்த நேரத்தில் நான் வராமையால் ஏமாற்றத்துக்கு இலக்காகி இருப்பரே என்கிற கலக்கமும்

என்னை வாட்டிற்று. மணி பதினொன்றைத் தாண்டிற்று; அப்படியும் பறந்திடவில்லை விமானம், முன்னர் முழங்கிய அறிவிப்புப்படி. 'பகற்பொழுது முழுவதும் பயனில்லாமல் கழிந்து விட்டதே!' என்கிற வேதனை வேலெனத் துளைத்தது என் நெஞ்சினை. மாலை ஐந்து மணி அளவில்தான் பின்னர் விமானம் கிளம்பிற்று பம்பாயிலிருந்து. நான் ஆமதாபாத்தை அடைந்திட்ட பொழுது இரவு மணி ஏழு. எனினும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் என் வருகைக்காகக் காத்திருந்தனர்.

வாழ்த்தொலிகள் எழுப்பி வரவேற்றனர். காலை ஏழு மணிக்கே ஆமதாபாத் விமான நிலையத்துக்கு அலை அலையாய் வந்து விட்ட இலட்சிய வைரங்கள் அவர்கள் ஏறத்தாழப் பன்னிரண்டு மணி நேரம் கால் கடுத்திடக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். கொளுத்தும் வெயில்; பசியால் கொதிக்கின்ற வயிறு; எனினும் கழகத்தின் பால் அவர்கள் கொண்டிருந்த பாசம் குன்றிடவில்லை! அதனால்தான் வெட்ட வெளியான அந்த விமான நிலையத்தில் ஆடவர்கள் மட்டுமின்றி அரும்புகளைச் சுமந்திட்ட அன்னையரும் நின்றிருக்கின்றனர் வெகு நேரமாக!

தமிழ்ப் பெருங்குடியினர் அவ்வாறு பெருந்திரளாய்க் குழுமியிருந்ததைக் கண்ட விமான நிலைய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தங்கள் ஆச்சரியத்துக்கு அணை போட்டுக் கொள்ள முடியவில்லை போலும்! 'தி. மு. கழகத்தின் வளர்ச்சி ஆமதாபாத்திலேயே இப்படி என்றால், தமிழகத்தில் எப்படி இருக்கும்!'

என்று இரண்டொருவர் வாய் விட்டே தங்கள் வியப்பினை வெளிக்காட்டியிருக்கின்றனர், நம் கழகத் தோழர்களிடம். ஆமதாபாத்தில் மணிநகர் என்பது தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்திடும் பகுதியாகும். அங்கு நான் சென்றிட்ட போது, ஆடி வெள்ளம் போல் ஓடி வந்தது மக்கள் கூட்டம். அதனைக் கட்டுப்டுத்தி எனக்கு வழியமைத்துக் கொடுப்பதற்குள் காவல் துறையினரும் கழகத் தொண்டர்களும் படாதபாடு பட்டனர். மணிநகர் வட்டத் தி.மு.

கழகத்துக்குச் சொந்தமான இல்லத்தைப் பார்வையிட்ட பின் அதில் இரு வண்ணக் கொடிகளை ஏற்றி வைத்து விட்டு இன்னொரு புதிய இல்லத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவிட்டுத் தேர்தல் நிதியளிப்பு விழாக் கூட்டத்தில் உரையாற்றிட நான் விரைந்து சென்றேன். ஆமதாபாத்தில் காங்கரீயா அம்பிகா ஆலை 2-ஆம் எண் அருகில் அருகில் அழகிரி அண்ணன் அவர்கள் பெயரால் அமைந்திட்ட திடலில்தான் அந்தத் தேர்தல் நிதியளிப்பு விழா சிறப்பாக நடை பெற்றது.

தேர்தல் நிதியாக ரூ. 11,500 கிடைத்தது. மறுநாள் நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், ஆமதாபாத்திலுள்ள செய்தியாளர்கள் என்னைப் பேட்டி காண வந்தனர். சிக்கலான கேள்விகளையெல்லாம் தொடுத்தனர். எனினும் தக்க விடைகளை அளித்தேன். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த சமயமாதலால், கேள்விகள் பெரும்பாலும் அந்தத்திசை நோக்கியே அமைந்திருந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கப்பல் கவிழ்ந்து விடுமோ என்கிற கலக்கமும் அவர்கள் தொடுத்திட்ட வினாக்களில் தொனித்தது.

அந்தச் செய்தியாளர்களுக்கிடையே நான் அளித்திட்ட விடைகளின் சுருக்கம் இதுதான்: "...தமிழகத்தில் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் வீக், சுதந்திரா ஆகியவற்றுடனும், பிற கட்சிகளுடனும் தி.மு. கழகம் தேர்தல் உடன்பாடுகளைச் செய்து கொள்ளவிருக்கிறது; பூர்வாங்கப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஆனால் யார் யாருக்கு, எந்தெந்த இடங்களை ஒதுக்குவது என்பது இதுவரை முடிவாகவில்லை. "மக்களின் மனோநிலையைக் கணித்துப் பார்த்திட முயன்றதில் வருகின்ற (1967) பொதுத் தேர்தலில் தமிழக மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அதிகமான இடத்தைப் பெறும் என்கிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெறக்கூடிய இடங்கள் இவ்வளவுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லி விட முடியாது." சிவசேனை பற்றியும் என் கருத்தினைக் கேட்டனர் அச்செய்தியாளர்கள். அந்தக் கேள்விக்கு இப்படித்தான் நான் பதில் சொன்னேன்: "மராட்டியர்களிடம் தமிழர்களுக்கு என்றுமே அன்பு உண்டு. அவர்களது வீரத்தை மதிக்கிறோம்; 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்று சிவாஜியின் வரலாற்றை எழுதித் தாமும் வேடம் பூண்டு நாடகமாக நடத்தி தமிழகமெங்கும் சிவாஜியின் வீரத்தைப் புகழ்ந்துரைத்த பெருமை எங்கள் தலைவர் அண்ணாவுக்கு உண்டு.

"மராட்டியர்களிடம் எங்களுக்குப் பற்றே தவிர வெறுப்புக் கிடையாது. மேலும் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்குச் சென்றிருப்பது யாரையும் சுரண்டுவதற்காக அல்ல. அவர்கள் சுரண்டுவது தங்கள் வரண்ட தோலையும் எண்ணெய் இல்லாத தலையையுந்தானே தவிர வேறு யாரையும் அல்ல. அவர்கள் உழைத்துக் கூலி வாங்கும் தொழிலாளிகள்; தங்கள் வாழ்வை நகர்த்தத்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே தமிழர்களைக் காப்பாற்றுவது மராட்டிய அரசாங்கத்தின் கடமையாகும்."

என்னுடைய இந்தக் கருத்து விளக்கம் சற்றுத் திகைப்பையே கொடுத்திருக்கலாம் அந்தச் செய்தியாளருக்கு. ஏனெனில், தமிழர்களைத் தாக்கிடும் சிவசேனைமீது நான் சீற்றத்தைக் காட்டுவேன் என்றே அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்; அன்றையச் சூழ்நிலையில் அது இயற்கையும் கூட. நானோ தங்களுடைய மாநிலத்தில் மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கம் ஓங்குவதா என மனங்குமைந்திட்ட சிவசேனையையோ அதன் தலைவர் பால் தாக்கரேயையோ வசை பாடிடவில்லை ; தாழ்தாழ்ந்து தனிப்பட்ட முறையில் இழித்துரைத்திடவில்லை.

மாறாக மராட்டிய மக்களின் மன்னர் சிவாஜியின் மாட்சிமையையே போற்றிப் புகழ்ந்தேன். அத்தகைய உன்னத பரம்பரைக்கு உரிமையுள்ளவர்கள் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஊறு விளைவிக்கலாமா என்று சிந்திக்குமாறுதான் அச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொண்டேன். பின்னர் ஆமதாபாத் நகரைவிட்டு 15-11-66 அன்று பிற்பகல் 12-10 மணியளவில் பம்பாய் வந்து சேர்ந்தேன் விமானம் மூலம். பம்பாயில் மன்கூர்டு என்னும் இடத்தில் 16-11-66 அன்று சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது.

துறைமுகத் தொழிலாளிகள் பெரும் எண்ணிக்கையில் உறைந்திடும் பகுதியே மன்கூர்டு. அங்குள்ள தோழர்களின் ஆர்வமோ கங்கு கரையற்றுப் பொங்கி வழிந்தது; போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் நிதி வழங்கினர். அறுபது வயது மூதாட்டி ஒருவரும், கோழி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார் தேர்தல் நிதிக்கு. அங்கே கூட்டம் முடிவுறுவதற்கு இரவு 12-30 மணியாயிற்று. பம்பாய்த் தமிழ்ச் சங்கம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பெருமைக்குரியதாகும்.

18-11-66 அன்று அச்சங்கத்தினர் எனக்கு வரவேற்பு அளித்தனர், வற்றாத வாஞ்சையோடு. சங்கத்தின் பொறுப்பாளராகச் செயலாற்றிய திரு கந்தசாமிக்கு நான் எங்கே அரசியல் பற்றிப் பேசி விடுவேனோ என்கிற அச்சம் போலும்! என்னை விமான நிலையத்தில் கண்டு அழைத்த போதும், தொலைபேசியில் உரையாடிய போதும் அதனை அவர் சூசகமாகத் தெரிவித்தார். அந்த அருமை நண்பரின் அச்சம் அவசியமற்றதாகவே எனக்குத் தோன்றியது. எனவே அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இவ்வாறு எடுத்து வைத்தேன் என் எண்ணத்திற்கு சரியென்று பட்டதை: "இலக்கியமும் அரசியலும் பிரிக்க முடியாதவைகளாகும்.

இலக்கியத்திலிருந்து அரசியலைப் பிரிக்க வேண்டுமென்றால் தமிழ் இலக்கியத்தில் அறமாக விளங்கும் திருக்குறளில் சில பக்கங்களைக் கிழித்து விட்டுத்தான் படிக்க வேண்டும்......" தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியமாய்ப் - பொது மறையாய்ப் - புத்தொளி பரப்புவது திருக்குறள். அதிலேயே அரசியலைப் புறக்கணிக்காதது மட்டுமல்ல. நடுநாயகமான சிறப்பிடத்தையே அதற்கு வழங்கியிருக்கிறார் வள்ளுவர். அதனைக் கருத்திற்கொண்டே அரசியல் என்றதுமே அஞ்சி நடுங்குவோருக்கு, அருவருப்பைக் காட்டுவோர்க்குத் தெளிவினை அளித்திடவே, அந்த வரவேற்புக் கூட்டத்தில் அவ்வாறு பேசினேன்.

பம்பாய், ஆமதாபாத் நிகழ்ச்சிகளை ஒருவாறாக முடித்துக் கொண்டு 19-11 -66 மாலை ஆறு மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது என்னைத் திணறிடச் செய்தது இங்குள்ள நண்பர்களின் வரவேற்பு.