நெஞ்சுக்கு நீதி
காகித ஓடம் · 35 / 391
காகித ஓடம் தீ விரமான அரசியல் பணிகளுக்கு என்னை நானே ஆட்படுத்திக் கொண்ட பொழுதே திரைப் படங்களுக்கு உரையாடல் தீட்டுவதை,, அந்த உரையாடல்களிலே கழகக் கொள்கை மணத்தைக் கமழ விடுவதை ஒரு கடமையாகவே நான் கொண்டிருந்தேன் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 'அவன் பித்தனா?'
திரைப்படம் என் கலைத் துறைப் பணிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும். இலட்சிய நடிகர் எஸ். எஸ் இராசேந்திரன் நடித்த உமையாள் புரொடக்ஷன்சாரின் தயாரிப்பான அப்படம் 1966 ஏப்ரல் 29-இல் தமிழகம் எங்கணும் திரையிடப்பட்டது. அதில் இப்படி ஓர் உரையாடலையும் எழுதியிருந்தேன்: "ஒற்றுமை பேசி வேற்றுமை வளர்ப்போர்- ஊரையடித்து உலையில் போடுவோர்- ஒருவர் தேவைக்கே இவ்வுலகு உண்டென்று கூறுவோர்-<brஉழைத்தும் கூலி கொடார்- உண்ணச் சோறிடார் வண்ணத் தமிழ் அழிப்போர் வளர் தொழில் வாழாது கெடுப்போர்- ஏமாற்றக் கற்றவர் ஏமாறி இளைத்தவர்- இவர்களுக்கு மத்தியில் கொள்கைச் சிங்கங்கள் இலட்சியத் தங்கங்கள் கொடுமை கண்டு அஞ்சாத இவர்கள் அத்தனை பேரும் பைத்தியக்காரர்கள் என்றால், நானும் பைத்தியக்காரன்தான்!"
சில நேரங்களில் சில மனிதர்களைச் சிந்திக்கும் பொழுது, சந்திக்கும் பொழுது, இந்த 'அவன் பித்தனா?' உரையாடல் என் நெஞ்சிலே வந்து அலை எழுப்புவது உண்டு! அந்தப் படத்துக்கு அடுத்தபடியாக நான் திரைக் கதை உரையாடல் தீட்டி வெளியிட்ட படம்: 'மறக்க முடியுமா?'
என் தமக்கை மகன் முரசொலி மாறன் முதன் முதலாக இயக்குநராக அறிமுகமானது அந்தப் படத்தின் மூலம்தான். இன்னொரு தமக்கை மகன் அமிர்தம் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறப்புச் செய்தியும் உண்டு. மெல்லிசை மன்னர் இராமமூர்த்தி அவர்களின் இசை அமைப்பில் நான் ஒரு பாடலையும் அந்தப் படத்திற்கென்று தீட்டியிருந்தேன். 'காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்' அந்தப் படத்தில் வரும் உள்ளத்தை உருக்கிடும் ஒரு காட்சிக்கேற்பவே இந்தப் பாடலை நான் உருவாக்கியிருந்தேன்.
பின்னால், பல ஆண்டுகள் கடந்த பிறகும் கூட எல்லாருடைய இதயத்தையும் தொட்டிடும் அளவுக்கு அது செல்வாக்குப் பெற்றிடும் என்று அப்போது நான் எண்ணவே இல்லை. ஒருவருடைய உள்ளத்தில் பீரிடும் உணர்ச்சி வெள்ளத்திற்கு உண்மையான வடிவம் மட்டும் கிடைத்துவிட்டால் அது மற்றவர் மனத்திலும் நிலையான இடத்தைப் பெற்றுவிடும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே எனக்குக் காட்சி தருகிறது இந்தக் 'காகித ஓடம்' பாட்டு. கலை விருந்திலே நாட்டங்கொண்ட மக்களைக் களிப்புக் கடலிலே ஆழ்த்திட- அதே நேரத்தில் அவர்தம் அன்புக் காணிக்கையாகத் தேர்தல் நிதிக்குப் பணமும் திரட்டிட முப்பெரும் கலை விழாக்களை மூன்று நாட்கள் நடத்துவது சென்னையில் என்று திட்டமிட்டோம்.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டியே 1966 செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் அந்தக் கலை நிகழ்ச்சிகள் விழிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்து படைத்தன. பல்லாயிரக்கணக்கில் மக்கள் மட்டுமல்ல, பணமும் வந்து குவிந்திட்ட அந்த விழாக்களில் நண்பர் நாகூர் அனிபாவின் இசை, குமாரி விஜயாவின் கதா காலட்சேபம், குடந்தை சீனிவாசனின் வில்லுப் பாட்டு, கழக முன்னணியினரின் கற்கண்டுச் சொற்பொழிவுகள், இலட்சிய நடிகர் எஸ்.
எஸ். இராசேந்திரனின் 'தென்பாண்டி வீரன்' நாடகம்-முதலான பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. மூன்றாவது நாள் விழாவில் நான் எழுதி நடித்த 'காகிதப் பூ' நாடகமும் அரங்கேறிற்று. அந்த முப்பெரும் விழாக்கள் மட்டும் ரூபாய் 67 ஆயிரத்தை அள்ளித் தந்தன தேர்தல் நிதியாக. அந்தத் தொகையோடு முன்பே திரட்டப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாயையும் சேர்த்து அவற்றுக்குரிய பாங்க் ரசீதுகளை ஒரு சந்தனப் பேழையில் வைத்துப் பொருளாளர் என்கிற முறையில் கழகத்தலைவர் அண்ணா அவர்களிடம் அளித்தேன்.
'இன்னும் நான்கு மாதங்களுக்குள் நாலரை லட்சம் திரட்டிப் பத்து லட்சம் எல்லையை எட்டிட வேண்டும்!' என்கிற எண்ணமும் அச்சமயம் மின்னலெனப் பாய்ந்திட்டது என் நெஞ்சினில்; ஒரு விதத்தில் அது எனக்குக் கலக்கத்தையும் கொடுத்தது. எனினும், 18-9-66-இல் அந்த முப்பெரும் கலை விழாவில் முதன் முதல் அரங்கேற்றம் பெற்றிட்ட என்னுடைய 'காகிதப் பூ' நாடகம் என் கனவை நனவாக்கிடும், என் கவலை தீர்க்கும் மருந்தாக்கிடும் என்கிற உள்ளுணர்வும் எனக்கு நம்பிக்கை ஊட்டிடத் தவறவில்லை அப்போது.
ஏனெனில் எடுத்த எடுப்பிலேயே, தொடக்க நாளிலேயே பொது மக்களிடமிருந்து கிடைத்திட்ட உற்சாகமிகுந்த வரவேற்பு நான் எதிர்பார்த்ததற்கு மேல் அமைந்திருந்தது. எனவே, 'காகிதப் பூ' வைக் கொண்டே தேர்தல் நிதி என்னும் மாலையை மேலும் தொடுத்து முடித்திடத் தீர்மானித்தேன். தமிழகம் எங்கணும் பல ஊர்களில் அந்நாடகம் நடத்தப்பட்ட ஒரே நாளில் திருச்சியில் ரூ.13 ஆயிரம், கடலூரில் ரூ.6 ஆயிரம், கள்ளக்குறிச்சியில் ரூ.10 ஆயிரம், மன்னையில் ரூ.
12 ஆயிரம், தஞ்சையில் ரூ. 10 ஆயிரம் என்கிற வேகத்தில் பண வசூலுக்கும் அது வழி வகுத்தது. சிறிய விதை பெரிய மரமாய் உருவெடுப்பதைப் போல, ஒரு சிறு நிகழ்ச்சி அரிய திட்டம் ஒன்றுக்கு அடித்தளம் அமைத்து விடுவதும் உண்டு. என்னுடைய வாழ்க்கையில் நான் அப்படிச் சில நெஞ்சுருக்கும் நிகழ்ச்சிகளைக்-காட்சிகளைச் சந்திக்க நேர்ந்ததும் உண்டு. சந்தர்ப்பம் வாய்த்திட்ட போது அவற்றுக்கு நான் பரிகாரம் தேடிட முற்பட்டதும் உண்டு.
1966 செப்டம்பர் திங்கள் இறுதியில் கரூர் நகரில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நான் சென்றிருந்தேன். பல தோழர்கள் கழகத்தின்பால் உள்ள பிடிப்பால், பேரன்பால், தேர்தல் நிதி அளித்திட முண்டியடித்துக் கொண்டு முன் வந்தனர். அவர்களுடைய உற்சாகமான கொடையளிப்புப் போட்டியிலே நான் உள்ளம் பறி கொடுத்து நின்றிட்ட வேளையில் உண்டியலை ஏந்திக் கொண்டு மெள்ள மேடை எறி வந்தனர் இரண்டு தோழர்கள்.
கழகத்தை எப்படியேனும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியே தீருவது என்னும் ஆர்வங்கொண்டு அயராது உழைத்திடும் இலட்சக் கணக்கான மக்கள் வெள்ளத்திலே தாங்களும் சிறு துளிகளாகப் பணத்தைச் சேமித்து அவர்கள் தந்திட்ட அந்த உண்டியலைப் பெற்றுக்கொண்ட போது என் சிந்தை நெகிழ்ந்தது; நீரிலும் மிதந்தன என் கண்கள்! காரணம், நிதியளித்திட வந்திட்ட பழனிச்சாமி, தங்கராஜ் ஆகிய இரு தோழர்களில் தங்கராஜ் என்பவர் கரம் இழந்து பரிதாபமாகக் காணப்பட்டார்.
அவர் உண்டியலைத் தந்திட முயன்ற காட்சி உள்ளத்தையே வெடித்திட வைப்பதாக உருக்கிற்று. இப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் முதியவர்கள் கரம் இழந்து, காலொடிந்து, உடல் ஊனமுற்று நடைப்பிணங்களாக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றனர் வாழ்க்கையோடு! இவர்கள் எல்லோரும் ஓரளவேனும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிட -கவலைத் தீயைத் தாண்டி வந்திட -ஏதேனும் நிவாரணம் தேடிச் சுமைதாங்கியாய்த் தொண்டாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கரூரிலே மட்டுமின்றி, இன்னும் பல இடங்களிலே நான் காண நேர்ந்திட்ட அத்தகைய அவலக் காட்சிகளே, பிறகு முதலமைச்சர் பொறுப்பினை நான் அடைந்திட்ட பின்னர் 'ஊனமுற்றோர் மறு வாழ்வுக்கான திட்டம்' ஒன்றினை உருவாக்கிட அடித்தளமாய் அமைந்தன என்றாலும் மிகையில்லை. நெல்லை நகராட்சியினைத் தி. மு. கழகம் கைப்பற்றிவிட்டதே என்கிற தீராத ஆத்திரத்தால், அன்றையக் காங்கிரஸ் ஆட்சியினர் திடீரென்று அதனைக் கலைத்து விட்டனர் ஆதாரம் ஏதுமின்றி.
அந்த நியாயமற்ற அரசின் நடவடிக்கையை எதிர்த்து நீதி மன்றத்திலே வழக்குத் தொடுத்திட நிதி திரட்டிட உதவுமாறு நெல்லை நண்பர்கள் கேட்டுக் கோண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப 1966 அக்டோபர் 30-இல் நெல்லை சங்கீத சபாளில் 'காகிதப் பூ' நாடகம் நடத்தப்பட்டது. ரூ. 8500 வரை வசூல் ஆயிற்று' அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பும் வழியில் திண்டிவனம், திருக்கோயிலூர் ஆகிய இடங்களிலும் நிதி நிகழ்ச்சிக்காகக் 'காகிதப் பூ' நாடகத்தில் நான் நடிக்கும்படி ஆயிற்று.
அச்சமயம் வழக்கத்திற்கு மாறாக என் குடும்பத்தினரும் என்னுடன் பயணம் புரிந்தனர். அந்தப் பயணத்தின் போதும், வேறொரு நிகழ்ச்சிக்காகக் குடும்பத்தினர் மதுரை சென்றிருந்த நிலையில்தான் திரும்பும் வழியில் அவர்களையும் என்னோடு இணைத்துக் கொண்டேன். 1966 அக்டேபர் முதல் நாள் திண்டிவனத்தில் 'காகிதப் பூ' நாடகம் மற்ற ஊர்களையெல்லாம் மிஞ்சிடும் வகையில் ரூ.13, 250 வரை வசூல். மறுநாள் காலை தம்முடைய மழலைச் செல்வங்களுடன் நண்பர் இரெ.
இளம்வழுதி அவர்கள் என்னைக் கண்டிட வந்தார் திண்டிவனத்திற்கு. இரண்டு குடும்பங்களும் அன்றே செஞ்சி, சாத்தனூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு களித்துவிட்டு, திருக் கோயிலுர் சென்றோம். அக்டோபர் மூன்றாம் நாள் திருக்கோயிலூரிலிருந்து சென்னைக்குப் புறப்பாடு. அதற்குமேல் இயற்கைக்குப் பொறுக்கவில்லை! மதுராந்தகத்தைக் கடந்தபோது சீறிடும் கோரப் புயல் எங்கள் காரை மடக்கிப் போட்டு விட்டது. அதனுடைய சுழல் வீச்சினால் படாதபாடு பட்டன மரம் மட்டைகள் செடி கொடிகள் எல்லாம்!
எங்கள் காருக்கு எதிரிலேயே ஒரு மரம் முறிந்து விழுந்து விட்டது. அதனுடைய கிளைகளை அப்புறப்படுத்தி விட்டுக் காரை நகர்த்திட முயன்றிட்டபோது, மறுபடியும் ஒரு பெரிய மரமே விழுந்தது, எங்களைச் சிறை வைப்பது போல. இனியும் பயணத்தைத் தொடர்ந்திட முயல்வது அறிவுடைமை ஆகாது; முடியவும் முடியாது என்கிற நிலையில் சாலையிலேயே தேங்கி நின்று விட்டோம். கொம்பு சுற்றி அடித்திடும் கோரப் புயலில் காரின் கதியே என்ன ஆகுமோ என்கிற கலக்கம் வேறு எங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்தது.
சிறிது நேரம் சென்று சாலையிலிருந்து ஒரு கல் தொலைவு உட்பகுதியில் உள்ள கருங்குழி பயணிகள் விடுதிக்குச் சென்றோம். உணவு வாங்கி வரக் காரை மதுராந்தகம் அனுப்பினோம் போன காரோ திரும்பி வரவில்லை. பாதையின் குறுக்கே மரம் விழுந்து விட்டதால் கார் வர முடியாமல் மதுராந்தகத்திலேயே நின்று விட்டது. காரோட்டியும் வர இயலாத அளவுக்குக் கடும் புயல் நாங்கள் இருந்த விடுதியைச் சுற்றிலும் எல்லா மரங்களுமே விழுந்து கொண்டிருந்தன.
ஒரு நாள் முழுதும் பசியோடு போராட்டம். குழந்தைகள் துடித்துப் போனார்கள். விடுதி முழுவதும் குளம் போலத் தண்ணீர். உட்காரவும் இடமில்லை. ஒரு சிறிய கட்டிலில் ஐந்து பேர்-நான், துணைவி, அமிர்தம், செல்வி, தமிழரசு ஆகியோர் அமர்ந்து கொண்டோம். இரவு பத்து மணி இருக்கும். அந்தப் பகுதியில் வீடிழந்த ஆதித் திராவிட மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த விடுதியில் எங்களோடு அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் ஒரு சகோதரிக்குப் பிரசவ வேதனை.
அவரைச் சுற்றிப் பரிதாபத்திற்குரிய ஒரு குடும்பம். ஒரே அழுகை. அந்தத் தாய்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரவு முழுவதும் தூக்கம் ஏது? அமிர்தத்திற்கு உடல் நலிவு ஏற்பட்டு ஏதோ ஒரு மாத்திரையைச் சாப்பிட, அது 'அலர்ஜி' ஆகி உடம்பெல்லாம் வீங்கி விட்டது. இப்படி இரவு முழுதும் பசி பட்டினியோடு பயங்கர வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். பொழுது விடிந்தது: புயலும் ஓய்ந்தது. மழை மட்டும் கொட்டிக் கொண்டிருந்தது அப்போது "அண்ணே" என்ற ஒலியுடன் இரண்டு, மூன்று பேர் விடுதிக்குள் ஓடி வந்தனர்.
மதுராந்தகம் ஆறுமுகமும் கழக நண்பர்களும் கையில் சில உணவுப் பொட்டலங்களுடன் அலறித் துடித்து எங்களருகே வந்தனர். நாங்கள் பட்ட வேதனை கண்டு, அவர்கள் கண்கள் குளமாயின. அதுதானே எங்கள் கழகத்தின் குடும்பப் பாசம்! எப்போதுமே தொண்டாற்றும் பண்பு கொண்ட தோழர் ஆறுமுகமும், ஏனைய மதுராந்தகம் தோழர்களும் விடுதியில் விழி நீர் பெருக்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
பின்னர், விடுதியிலிருந்து மதுராந்தகம் நோக்கி மழையில் நனைந்தவாறு நடக்கத் தொடங்கினோம். மதுராந்தகம் ஏரியின் கரைகள் உடைந்து வெள்ளம் பல முனைகளில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஏரி மிகவும் பழுதுபட்டுப் போவதுடன் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆறுமுகம் கவலை தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் அண்ணா தலைமையில் ஆட்சி உருவாகி, நான் பொதுப்பணி அமைச்சர் பொறுப்பேற்று, அதே கருங்குழி விடுதியில் மாவட்ட அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, மதுராந்தகம் ஏரி உட்படப் பல ஏரிகளின் சீர்திருத்தப் பணிகள் பற்றி முடிவுகள் எடுப்பேன் என்று அப்போது யாரும் கருதியிருக்க முடியாது.
ஆனால் அதுவே சில மாதங்களில் நடந்து விட்டது. இயற்கைப் புயலால் ஒரு முறை கருங்குழி விடுதியில் வாட்டம்! அடுத்து வீசிய அரசியல் புயலால் அதே கருங்குழி விடுதியில் பொதுப்பணிக்கான கூட்டம். மூன்றாவது பொதுத் தேர்தல் மூலம் 1962-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டம் 9-11-1966 அன்று நடைபெற்றது.
