உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நாணயங் கெட்டது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நாணயங் கெட்டது · 34 / 391

நாணயங் கெட்டது அதன் படி இந்திய ரூபாய் நாணயத்தின் மதிப்பு திடீரென்று 36.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட பரபரப்பு- குழப்பம்- பொருளாதாரச் சீர்குலைவுகள்-பொருள்களின் விலைவாசி ஏற்றங்கள் - அளவிடற்கரியன. அதுவரை ஓர் அமெரிக்க டாலருக்கு ரூ.4.76 கொடுத்தால் போதும்; நாணய மதிப்புக் குறைப்புக்குப் பின்னரோ அதே டாலருக்கு ரூ5.00 தர வேண்டியதாயிற்று. ஒரு ஸ்டர்லிங் பவுனுக்கு அதுவரை ரூ.

15 இணையாக இருந்தது. அந்த நிலைமை மாறி ரூ. 21 கொடுக்கும் அளவுக்கு ரூபாயின் மதிப்புக் குறைந்தது. பொதுவாக ரூ.100 கொடுத்து வரவழைத்துக் கொண்டிருந்த எந்த அந்நியப் பொருளுக்கும் ரூ. 157-50க்கு மேல் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாயிற்று. எனவே, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்கால முடிவில் அயல் நாடுகளுக்கு இந்தியா திருப்பித் தரவேண்டிய கடன் தொகை ரூ. 2269 கோடியுடன் மேலும் ரூ. 1500 கோடி கூடுதலாகத் தந்திட வேண்டிய இடர்ப்பாட்டுக்கு இலக்காகிட நேர்ந்தது, நாட்டின் மொத்தப் பொருளாதாரம்.

அந்த நாணய மதிப்புக் குறைப்பால்- வெளிநாட்டுப் பத்திரிக்கைகளின் விலையெல்லாம் அடுத்த நிமிடமே உயர்த்தப்பட்டன. விமானம் உயரப் பறப்பதைப் போன்றே வெளிநாடுகளுக்குரிய விமானக் கட்டணங்களும் உடனே உயரப் பறந்தன. பம்பாய், கல்கத்தா முதலான பெரு நகரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி ஆகும் அத்தனை பொருள்களும் மின்னல் வேக விலையேற்றம் பெற்றன. இந்தியா விடுதலை பெற்ற அந்தப் பதினெட்டு ஆண்டுக் காலத்தில் இரண்டாவது முறையாக 1966-இல் நாணயத்தின் மதிப்புக் குறைக்கப்பட்டது.

1949-இல் முதல் நாணய மதிப்புக் குறைப்பு மேற்கொள்ளப் பட்டது. உலகப் போரால் ஏற்பட்ட சீர்குலைவுகளைச் சரிகட்ட மற்ற நாடுகளைப் பின்பற்றி முதலில் நாணயக் குறைப்புச் செய்ததற்குப் போதுமான முகாந்- திரம் இருந்தது. ஆனால், இந்த இரண்டாவது முறை நடவடிக்கைக்கு எத்தகைய தர்க்கரீதியான காரணங்களையும் தந்திட முடியவில்லை மத்திய அரசால். எனவேதான், காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த கிருஷ்ண மேனன் போன்ற தலைவர்களே அரசின் திடீர் நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

வெளி நாடுகளின் வற்புறுத்தலால் நாணய மதிப்பைக் குறைக்கவில்லை என்று அரசுத் தரப்பிலே கூறப்பட்டாலும், அமெரிக்க அரசும், உலக வங்கியும் வற்புறுத்தியதாலேயே அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது பரவலாகப் பேசிக் கொள்ளப்பட்டது. அப்போது 'முரசொலி'யில் தீட்டிய தலையங்கத்தில் இவ்வாறு நான் குறிப்பிட்டிருக்கிறேன்: ...நாணய மதிப்பைக் குறைப்பது என்பது பல்வேறு நாடுகளிலே கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று எனினும், அவர்கள் புத்திசாலித்தனமாகப் புளியங்கொம்பைப் பிடித்துத் தப்பித்துக் கொண்டவர்கள்; இங்குள்ளவர்கள் முருங்கைக் கொம்பைப் பிடித்துக்கொண்டு 'இதுதான் புளியங் கொம்பு' என்று முரட்டுத்தனமாகச் சாதிப்பவர்களாயிற்றே!

பண மதிப்புக் குறைப்பு என்பது அரிதாகப் பயன்படுத்தப்பட வேண்டிய முறை. அடுத்தடுத்துப் பல தடவை பணமதிப்புக் குறைப்பு ஏற்படுமானால் மக்கள் நாணயத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழப்பர். "...எப்படியோ யார் வைத்த கொள்ளியோ-வீடு வேகிறது!... பதினெட்டு ஆண்டுக் காலப் 'பிளவைக்கட்டி' இன்று பண மதிப்புக் குறைப்பு என்னும் சிகிச்சையால் உடைத்துக் கொண்டு சீழும் இரததமும் சிந்துகிறது! இனி எந்தச் சிகிச்சையும் பயன்படாது.

புரையோடி விட்டது. கபாலத்தைக் குடைந்து கொண்டு போய்விட்டது. இனி அறிவிலாவது மதிப்பைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காங்கிரஸ் தர்பாரின் கடைசி முயற்சியாக இருக்கட்டும்!" 1966-இல் செய்யப்பட்ட நாணய மதிப்புக் குறைப்பினால் ஏற்பட்ட விளைவுகள்தான் பின்னால் விலைவாசி ஏற்றத்தை இறக்க முடியாமலே செய்து விட்டது என்பது நிபுணர்கள் பலரின் கருத்து. திருச்சி-தஞ்சை வட்டாரத் தி. மு.க. மாநாடு 1966-ஜூன் திங்கள் 14, 15 நாட்களில் பேராசிரியர் க.

அன்பழகன் அவர்கள் தலைமையில் பெருஞ்சிறப்போடு நடைபெற்றது. சி. வி. எம். அண்ணாமலை அவர்கள் தான் மாநாட்டுத் திறப்பாளர். தி. மு. கழகத்தின் அந்தக் காலத் தூண்களில் ஒருவரான மறைந்திட்ட பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்களின் நினைவுப் பந்தலில்- தீக்குளித்த 'சிங்கத தமிழன்' சின்னச்சாமி அரங்கில்-சீர்மல்கிட நிகழ்ந்தேறிய அந்த மாநாட்டில் நான் மட்டும் கலந்து கொள்ளவில்லை. பாதை தவறிடத் தயங்காத ஒருவரது பாதகச் செயலே என் நெஞ்சினில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கால்களையும் கட்டிப் போட்டுவிட்டது-திருச்சி மாநாட்டுக்கு அப்போது நான் செல்ல முடியாதபடி.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராசேந்திரன் போட்டியிட்டார். அவருக்கு எதிராகக் காகா ராதாகிருஷ்ணன் மாற்றுக் கட்சியினரால் நிறுத்தி வைக்கப் பட்டார். கழகத்தைச் சார்ந்தவர் எவராயினும் எஸ். எஸ். ஆரைத்தானே ஆதரிக்க வேண்டும்? அதுதானே கட்சிக்குக் காட்டக் கூடிய நன்றி; நாணயம்; கடமை; கட்டுப்பாடு? ஆனால், கழகத்தின் 'முக்கியப் புள்ளிகளில்' ஒருவராகக் கருதப் பட்ட ஒரு 'தீவிரவாதியோ' -சொந்தக் கட்சிக்காரரையே தோற்கடித்திடும் நோக்கோடு-சூதுகள் நிறைந்த போக்கோடு - சுழன்று பணியாற்றினார்.

மாற்றுக்கட்சி நண்பர் வெற்றியைப் பெற்றிட வேண்டி மறைமுக வேலைகள் அத்தனையிலும் மனங்கூசாமல் அவர் ஈடுபட்டார். அள்ளிவிட்டார் பணத்தை; அனுப்பி வைத்தார் கார்களை; எப்படி யாவது இலட்சிய நடிகரைத் தோல்விப் படுகுழியிலே நெட்டித் தள்ளிட வேண்டும் என்கிற நீங்காத ஆசை-நெறி பிறழ்ந்த வெறி-அவருக்கு! இவ்வளவுக்கும் அவர் கழகம் மேற்கொண்ட அறப்போர்களிலே கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவரா? தியாகத் தழும்புகளை ஏற்றவரா?

கருஞ்சட்டையைக் கழற்ற மாட்டேன் என்று கொள்கைப் பிடிப்போடு நின்றமைக்காகக் கொலை மிரட்டலுக்கு இலக்கானவரா? 1965-இல் இந்தித் திணிப்பினை எதிர்த்துத் தன்னுடைய வீட்டு மாடியில் கொடி ஏற்றி துக்கம் கொண்டாடிய துணிச்சலுக்காக அன்றையக் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்குத்தான் ஆளாக்கப்பட்டவரா? ஏதும் இல்லை! எந்தத் தியாக முத்திரைக்கும் இடம் கொடாமலே கழகத்தின் முன் வரிசையிலே இடம் பிடித்துககொண்டவரே அவர்.

அவருக்குள்ள பெருமையெல்லாம், ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் 1965 அறப்போரில் ஈடுபட்டுத் தங்கள் உயிரைப் பறிகொடுத்து- உதிரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த காலத்திலும், கோவா கடற்கரையிலே காதற் காட்சிகளில் நடிக்கத் தயங்காதவர் என்பதே! அந்த 'அரிய மனிதர்' திரு எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள்தான். சொந்தக் கட்சிக்காரர் ஆயிற்றே என்கிற நிதானம் கூட இல்லாமல் இலட்சிய நடிகரைத் தோற்கடிக்க முயன்றிட்டார். கட்சிக் கட்டுப்பாட்டையே குலைத்திடும் அவர்தம் கண்ணியமற்ற செயல் கண்டு என் நெஞ்சம் புண்பட்டுப் புலம்பிற்று.

நான் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் இருந்த போது எழுந்திட்ட எண்ணங்களைத் தொகுத்துப் 'பாளை நினைவுகள்' என்னும் தலைப்பில் 'முரசொலி' பொங்கல் மலர் ஒன்றில் கட்டுரை தீட்டியிருந்தேன். அதில், 'கழகத்தால் தனக்கு என்ன லாபம் என்று கருதுபவன் புற்று நோயைப் போன்றவன்: தன்னால் கழகத்திற்கு எந்த அளவுக்கு லாபத்தைத் தேட முடியும் என்பவன் கழகத்திற்கு இரத்த நாளத்தைப் போன்றவன். -என்று குறிப்பிட்டிருந்தேன்.

நடிகர் சங்கத் தலைவராக இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராசேந்திரன் தேர்தெடுக்கப்பட்டார். அது கழகத்திற்குப் பெருமை என்று கருதிட வேண்டிய நண்பர் எம். ஜி. ஆர். கழக, வேட்பாளரை எதிர்த்தே வேலை செய்வதைக் கண்டதும் இரத்த நாளமாக இயங்கிட வேண்டியவர் எப்படியோ மாறிவிட்டாரே -என்று அப்போதே நான் எண்ணிக்கொண்டேன், எரிச்சலும் அடைந்தேன். அவர்தம் அடாத செயலுக்கு அணை போட்டிட வேண்டாமா என்று அண்ணா அவர்களிடமும் முறையிட்டேன்.

நடிகர் சங்கத் தேர்தலில் எம். ஜி. ஆரால் ஆதரிக்கப்பட்ட மாற்றுக் கட்சி நண்பர் தோற்கடிக்கப்பட்டு இலட்சிய நடிகரே வெற்றி பெற்று விட்டதால், பிரச்சினைகளைப் பெரிதாக்கிட வேண்டாம் என்கிற பெரும் போக்கில் அண்ணா அமைதியாக இருந்து விட்டார். ஆயினும் கட்சிக் கட்டுப்பாட்டுக்கே களங்கம் விளைத்திட்ட எம். ஜி. ஆரின் செயல், நெருஞ்சி முள்ளிலும் கொடுமையாக என் நெஞ்சினை உறுத்திற்று. அதனால்தான் அவர் பங்கேற்றிடும் நிகழ்ச்சிகளில் சில காலமாவது நாமும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்போமே என்கிற எண்ணத்தில் திருச்சி-தஞ்சை வட்டார மாநாட்டிற்கு நான் செல்லாமல் சென்னையிலேயே தங்கி விட்டேன்.

அதே ஜுன் திங்கள் 18, 19 தேதிகளில் தமிழக மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழுவினர் சார்பில் சிறப்பு மாநாடு ஒன்று தஞ்சையில் நடைப்பெற்றது. எழுச்சிப் பிழம்புகளாய்-எரிமலைச் சிகரங்களாய்-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற மாணவ இளஞ்சிங்கங்கள் அங்கே திரண்டிருந்தனர். ஆனால். அந்த மாநாட்டிற்கு முன் கூட்டியே என்னால் சென்றிட முடியவில்லை. காரணம், மாநாடு தொடங்கிய முதல் நாளான 18-6-66 மாலையில் தென்காசியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

அடுத்த நாள் 19-6-66 காலையிலோ மதுரையில் டாக்டர் இலக்குவனார் துவங்கிய 'குறள் நெறி' நாளிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிடவும் ஒப்புக் கொண்டிருந்தேன். மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் தஞ்சைக்கு விரைந்து சென்ற போது மாநாடே முடியுந்தறுவாயில் இருந்தது. அண்ணா அவர்கள் வீணைக் குரலில் தேனில் குழைத்தெடுத்த செந்தமிழ்ச் சொற்களில் வீர முழக்கம் புரிந்து கொண்டிருந்தார் தானைத் தளபதியாக.

அலைகடலின் ஓசையும் அடங்கிவிட்டதோ என்னும்படியாக அண்ணாவின் விளக்கவுரையினை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர் மாணவ மணிகள். அந்த அமைதியான கடலினூடே நான் மேடையை நோக்கி மெள்ள ஊர்ந்திட முற்பட்டேன். அண்ணா அவர்கள் பங்கேற்றிடும் எந்தப் பொது நிகழ்ச்சியிலும் அவர்தான் இறுதி உரையாற்றுவார். அவருக்குப் பின்னர் எவர் பேச முற்படினும் அது எடுபடவே எடுபடாது. அன்றையத் தஞ்சை மாணவர் மாநாட்டிலும் அண்ணா பேசத் தொடங்கிய பின்னரே நான் சென்றதால் எனக்குச் சொற்பொழிவு நிகழ்த்திடும் சுமை குறைந்தது என்றே நான் எண்ணிக் கொண்டேன்.

ஆனால், அண்ணா அவர்களோ தம்முடைய சொற்பொழிவோடு மாநாட்டினை முடிவிற்குக் கொணர்ந்திடவில்லை. அந்த வாடிக்கையை வழியனுப்பி வைத்துவிட்டு என்னையும் பேச அழைத்திட்டார் இப்படிச் சொல்லி: "...நான் இத்துடன் முடிக்கவில்லை! தம்பி தொடர்கிறான்!"

அந்தச் சொற்களைக் கேட்டதும் என் உள்ளமும் உடலும் புல்லரித்தன; எதிரே குழுமியிருந்த மாணவச் சிங்கங்களோ கொள்ளை மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். என் உரையைத் தொடங்கும்பொழுதே இவ்வாறு குறிப்பிட்டேன்: "அறிஞர் அண்ணா அவர்கள் பேசிவிட்ட பிறகு நான் பேசுவது என்பது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருக்கிறது. "அறிஞர் அண்ணா அவர்கள் பேசிவிட்டார்கள் என்றால்- தமிழ் நாடே பேசிவிட்டதாக அர்த்தம்.... தமிழ்த் தாயே பேசிவிட்டதாகப் பொருள்; மாணவர்களின் பொங்கும் உணர்ச்சியே பிரதிபலித்துவிட்டதாகவும் பொருள்."

-நான் இப்படி அண்ணாவின் பெருமையினைப் பாராட்டிப் பெருமிதத்தோடு உரையாற்றிய அந்த மாணவ மாநாட்டில், அச்சமயம் கட்சிக் கட்டுப்பாட்டையே கறைப்படுத்திய எம்.ஜி.ஆர். இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.