உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வள்ளுவருக்கு ஏற்றம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வள்ளுவருக்கு ஏற்றம் · 33 / 391

வள்ளுவருக்கு ஏற்றம் தே ர்தல் நிதியாகப் பத்து லட்சம் ரூபாயைத் திரட்டிட வேண்டும்-திரட்டமுடியும்-என்னும் கருத்தினைக் கழகத் தோழர்களிடமும் தலைவர்களிடமும் சிந்தித்துத்தான் நான் தெரிவித்தேன் என்றாலும், அவ்வளவு பெருந்தொகையினை, அத்துணைக் குறுகிய காலத்திற்குள் குவித்திட முடியுமா என்னும் கேள்விக்குறி என் நெஞ்சினைக் குடைந்தெடுத்ததும் கொஞ்ச நஞ்சமல்ல. எனினும் சோர்வுச் சூறாவளியில் சாய்ந்திடும் மன மரத்தைத் தாங்கி நிமிர்த்தும் சூட்டுக்கோலும் தன்னம்பிக்கைதானே!

அந்தத் தன்னம்பிக்கையுடன் பலப் பல திட்டங்களையும் வகுத்துக் கொண்டு, துவளாத செயல் மறவர்களின் துணையோடு சுற்றுப் பயணங்களையும் இடைவிடாமல் மேற்கொண்டேன் நிதி திரட்டிட. அத்தகைய நீண்ட நெடும் பயணங்களில் ஒன்றுதான் 1966 ஏப்ரல் 21-லிருந்து மே-முதல் நாள் வரை நான் புரிந்திட்ட கோவை மாவட்டச் சுற்றுப் பயணம். குருச்சான்வலக என்னும் குக்கிராமத்திலே தொடங்கிக் கோவைப் பெருநகர் வரை சென்று அந்தப் பயணத்திலே நாள் ஒன்றுக்கு 15 கூட்டங்கள் வீதம் 150 கூட்டங்களில் ஏறத்தாழ பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்தேன், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூட!

கொங்குச் சீமையின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொங்கி வழிந்தது பொது மக்களின் கழக ஆதரவு, கூட்டங்கள்-கொடியேற்று விழாக்கள் என்று திறமுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் காசுகளை மட்டும் அள்ளித் தரவில்லை. தங்களிடமுள்ள அணிமணிகள்- கம்மல், கொலுசு, வளையல், கணையாழிகள் போன்றவைகளையெல்லாம் கூடக் கழற்றித் தந்தனர். கோழிகள், புறாக்கள், முயல்கள், முட்டைகள் முதலானவையும் கொடுக்கப்பட்டன.

அவையெல்லாம் உடனுக்குடன் ஏலம் விடப்பட்டு அந்தத் தொகைகள் தேர்தல் நிதியிலே சேர்த்துக் கொள்ளப்பட்டன. நானோ கூட்டங்கள், கொடியேற்று விழாக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் நிதிகளைப் பெற்றுக்கொள்வதோடு நின்றிடவில்லை. யாராவது எனக்கு விருந்து பறிமாறிட-சிற்றுண்டி வழங்கிட-என் கையெழுத்துப் பெற்றிட-என் கையினைக் குலுக்கிட-என் அருகே அமர்ந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டும்போது அவைகளுக்கும் கட்டணங்கள் விதித்துத் தேர்தல் நிதிக்குத் தென்பூட்டினேன்.

என்னுடைய இந்தக் கட்டண ஏற்பாடுகள் சில விந்தையான நிகழ்ச்சிகளைச் சந்திக்கவும் வைத்தன. அப்படித்தான் கண்ணமநாய்க்கனூரிலிருந்து எஸ். வி. மில் செல்லும் வழியில் எனக்குத் தாங்கொணாத தாகம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஒரு தோட்டத்தருகே காரை நிறுத்தினோம். வழியில் கார் நிற்பதனையும் அதில் நான் அமர்ந்திருப்பதையும் அறிந்து கொண்டுவிட்ட அந்தத் தோட்டத்து நண்பர் எலுமிச்சைச் சாறு பிழிந்து 'சர்பத்' கொண்டு வந்தார்.

தாகந்தீர்த்திட வந்த அவரைப் பார்த்து, "நான் சர்பத் குடிக்க வேண்டுமென்றால் நீங்கள் தேர்தல் நிதிக்குப் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்"- என்று வேடிக்கையாகக் கேட்டேன். "என்னய்யா கிண்டலா பண்ணுகிறீர்? மத்தியானம் மூன்று மணி வெய்யிலில் தாகத்தால் தவிப்பீரே என்று தண்ணீர்கூட அல்லாமல் சர்பத்தே கொண்டு வந்திருக்கிறேன், 'இரக்கப்பட்டு' இதற்கு நீர் காசு தருவதை விட்டுவிட்டு என்னிடமே கட்டணம் கேட்கிறீரா?"

-என்று என்னைத் திருப்பிக் கேட்டிருந்தாலும் நான் வாயடைத்துப் போயிருக்க வேண்டியதுதான். அந்தப் பண்பாடுடைய நண்பர்-கழகத்தைப் பற்றியோ, கட்சி அரசியலைப் பற்றியோ அதிகம் அறிந்தவராகக் காணப்படாத அந்தக் கிராமத்து மனிதர்-என்னுடைய வினாவுக்கு-விடையேதும் பகர்ந்திடவில்லை. முறுவல் பூத்திட்ட முகத்துடனே தம் வீட்டுக்கு விரைந்து சென்றார்; திரும்பி வந்தார் பத்து ரூபாய் பணத்தோடு. அதனை என்னிடம் நீட்டியவாறே, "சீக்கிரம் சர்பத்தைக் குடிங்க!"

என்று தாய்மையுணர்வோடு அவர் வேண்டிக் கொண்டபோது என் நெஞ்சம் கரைந்தது நெக்குருகி. சிற்றூராகட்டும், பேரூராகட்டும், தாரை, தப்பட்டை முழங்கிடத்- தாய்மார்கள் ஆரத்தி எடுத்திட - எனக்குத் தரப்பட்ட வரவேற்புகள் கரைகடந்த உற்சாகத்தையே ஊட்டின. மற்ற மாவட்டங்களைப் போலவே கோவையும் எனக்குத் தூரமில்லை என்கிற உண்மையையும் முதன் முறையாக அவை உணர்த்தின. நானும் அதுவரை அத்தனை நாட்கள் தொடர்ந்தாற் போன்று பங்கேற்றுப் பயணம் மேற்கொண்டதில்லை.

உழைப்புத் திலகமென ஒளிர்ந்திட்ட மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன் அவர்களின் திட்டமிட்ட ஏற்பாடுகளால் கொங்குநாட்டுக் கொள்கை மறவர்களின் முயற்சிகளால் என்னுடைய அந்தச் சுற்றுப் பயணத்தின்போது ரூபாய் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு தேர்தல் நிதியாகத் திரட்டிட முடிந்தது. ஒரே சுற்றுப் பயணத்தில் - ஒரே மாவட்டத்தில் அதுகாறும் இத்துணைப் பெருந்தொகையைத் தேர்தல் நிதியாக அடைந்ததில்லை. எனவே, மற்ற மாவட்டங்களில் நிதி திரட்டும் அரும் பணிக்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது அந்தத் தொகை.

வாழ்வுக்கு வழி வகுத்த தமிழ்த்தலைவன் - உலகப் பெரும் புலவன் - மக்களாட்சித் தத்துவம் உரைத்திட்ட மாமேதை - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பேசிய பகுத்தறிவுப் பகலவன் - 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றியான்!'

என்று ஆண்டவனுக்கே அறைகூவல் விடுத்திட்ட புரட்சிப் பொறி, திருவள்ளுவருக்குச் சென்னை மயிலாப்பூரில் 2-6-1966 அன்று சிலையொன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழினத்தில்- தமிழகத்தில்- பிறந்த போதிலும் தாரணிக்கே பொதுமறை வழங்கிய புதுமைச் சிற்பி திருவள்ளுவர். அவர் ஏற்றி வைத்திட்ட திருவிளக்கை - தேன் தமிழ்த் திருக்குறளைத் - திக்கெட்டும் பரப்பிடும் பணியையும் தன் ஒப்பற்றக் கடமையாய்க் கருதிச் செயல்பட்டு வந்துள்ளது தி.

மு. கழகம். மற்றக் கட்சிகளும், அமைப்புக்களும் சமயக் கவிஞர்களையும், சாதித் - தலைவர்களையுமே போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், திருவள்ளுவரின் சால்பு - தகைமை - தகுதி முதலானவற்றை இனங்கண்டு தெரிந்து அவரை ஏற்றிப் போற்றிட முதன் முதல் குரல் கொடுத்த பெருமையும் தன்மானத் திராவிட இயக்கங்களையே சாரும். வழிகாட்டிகளை மறந்திடாமல், அவர்தம் வழி நடந்திடும் பேரார்வத்துடன்தான், சட்டமன்றத்தில் நுழைந்ததும், வள்ளுவருக்குச் சிறப்புச் செய்யாதது ஏன் என்று வாதிடவும் முற்பட்டோம் காங்கிரஸ் ஆட்சியாளரிடம்.

சட்டமன்றத்தில் திருவள்ளுவர் படத்தினைத் திறந்து வைத்திட வேண்டும் என்று நானும், திருவள்ளுவர் நினைவாக அரசாங்கம் விடுமுறை நாள் விட வேண்டும் என்று புலவர் கோவிந்தனும், சென்னை மயிலாப்பூர் பகுதியில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்திட வேண்டும் என்று சகோதரர் அரங்கண்ணலும் அவ்வப்போது கோரிக்கைகளை முன் வைத்தோம். காங்கிரஸ் ஆட்சியாளர்களோ எங்கள் கோரிக்கைகளில் பொதிந்துள்ள நியாயஉணர்வினைப் பொருட்படுத்த மறுத்தனர்.

புறக்கணிக்கவும் துணிந்தனர். ஆனால் எங்கள் வற்புறுத்தல் வலுப்பெறவே, திரு. பக்தவத்சலனார் முதல்வராக இருந்த காலத்தில், நான் முன்னரே குறிப்பிட்டவாறு, திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது சட்ட மன்றத்தில். ஆனால் சிலை எழுப்பிட மட்டும் செயல்பட மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. எனவே, தி.மு. கழகத்தின் நிருவாகப் பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சியே அந்தச் செந்நாப் போதாரின் சிலை சமைத்திடும் சீரிய பணியினை மேற்கொண்டது.

அந்தச் சிலைதான் 2-6-66-இல் சென்னை மயிலாப்பூரில் திறந்து வைக்கப்பட்டதாகும். தத்துவ வித்தகராம் வள்ளுவருடைய சிலையினைத் தத்துவ ஆராய்ச்சியில் தாகங்கொண்ட அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களே திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 'தத்துவ ஞானிகளே நாட்டின் தலைமகன்களாகக் கோலோச்சிட வேண்டும்' என்னும் பேரறிஞன் பிளேட்டோவின் கனவை நினைவாக்கப் பிறந்தவர் போலத் தம்மை அறிவுக் கூர்மையால் உயர்த்திக் கொண்ட ஆற்றலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இரவீந்திரநாத் தாகூருக்கு 'டாக்டர்' என்னும் இலக்கியச் சிறப்புப் பட்டத்தினை வழங்கிட விழைந்த போது, தன்னுடைய மரபுகளையெல்லாம் தானே ஒதுக்கி வைத்துவிட்டுக் கவிஞரின் இருப்பிடத்திற்கே- 'சாந்தி நிகேத'னுக்கே சென்று-தன் சார்பில் பட்டம் அளித்திடத் தன், பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து அது அனுப்பியது டாக்டர் இராதா கிருஷ்ணனைத்தான். அத்தகைய அறிஞர், மேதைகளுக்கெல்லாம் மேதையான திருவள்ளுவர் சிலையினைத் திறந்திட முன் வந்தது என் போன்றவர்களெல்லாம் பழைய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்திடத்தக்க வகையிலே அமைந்திருந்தது.

அந்த விழாவிற்கு அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலனாரே தலைமை தாங்கிடவும், சென்னை மாநகராட்சித் தி.மு.க.வினர் பெருந்தன்மையோடு ஏற்பாடு செய்திருந்தனர். நானும் எதிர்க்கட்சித் தலைவர் நாவலரும், மற்றும் கழக முன்னணியினரும் அவ்விழாவிலே பார்வையாளராகக் கலந்து கொண்டோம். தமிழராக பிறந்திட்ட ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்திடத் தக்க வகையிலே அந்தச் சிலை திறப்பு விழா பெருஞ்சிறப்போடு நடந்து என்ன பயன்? தமிழ் நாட்டார் இதயம் எல்லாம் குமுறிக் கொந்தளித்திடும் வண்ணமே, தன்னுடைய வழக்கமான அலட்சியப் போக்கினைக் காட்டிற்று மத்திய அரசின் செய்திப் படத்துறை.

சிங்காரச் சென்னை மாநகரில் திருவள்ளுரின் சிலையை திறப்பதைத் தான் தலையாய நிகழ்ச்சியாக மேற்கொண்டு தில்லியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார் குடியரசுத் தலைவர் இராதா கிருஷ்ணன். ஆனால், மத்திய அரசு செய்திப் படத் துறையினரோ, அவர் கலந்து கொண்ட மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் படம் எடுத்துக் காட்டினர். வள்ளுவர் சிலை திறப்பு விழாவை மட்டும் வேண்டுமென்றே படம் பிடிக்காமல் விட்டு விட்டனர். அவர்களுடைய அந்த ஓரவஞ்சனைச் செயலுக்கு ஒரே காரணந்தான் அப்போது புலப்பட்டது.

'திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியினைச் செய்திப் படத்திலே சேர்த்து விட்டால், மற்ற மாநிலக்காரர்களும் அதனைப் பார்ப்பார்கள் பிறகு, எந்தச் சமயத்தையும் சார்ந்திடாமல் எந்தச் சாதியையும் ஏற்றிடாமல், பொதுமை நோக்கோடு புதுமைக் கருத்துக் கதிர்களைப் பரப்பிய வள்ளுவரைப் பற்றி-அவருக்குச் சிலை எழுப்பியதன் மூலம் தன் திறமையையும், பெருந்தன்மையையும் வெளிப்படுத்திய சென்னை மாநகராட்சியைப் பற்றி-அதன் நிர்வாகத்தினைக் கைப்பற்றி விட்ட தி.மு. கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி- இந்தியா முழுவதுமே அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடுமே!

அதற்கு இடந் தரலாமா? -என்கிற பொல்லாங்கான நினைப்பினால் தான் பொலிவோடு நிகழ்ந்திட்ட அந்தத் தமிழகச் சிறப்பு நிகழ்ச்சியினைத் செய்திப்படத் துறையினர் புறக்கணித்திடத் துணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், தங்களுடைய அலட்சியப் போக்கிற்கு வேறு என்ன காரணத்தைத் தான் அவர்கள் இயம்பிட இயலும்? இதைப்பற்றி முதல்வர் பக்தவத்சலனார், மத்திய அரசிடம் தமிழ் மக்களின் இதயக் குமுறலை வெளிப்படுத்திட வேண்டும் என்று 'முரசொலி'யில் நான் அப்போது தலையங்கமே தீட்டினேன்.

ஆனால் மத்திய செய்திப்பட துறையினர் திருந்திய அறிகுறியே தென்படவில்லை. தமிழக நிகழ்ச்சிகளை அலட்சியப் படுத்துவதையே தொடர்ந்து கடைப்பிடித்தனர். அந்த அவமதிப்பினைத் தாங்கிட முடியாததால்தான். பின்னால் தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தி.மு.கழகம் ஏற்றுக் கொண்டபோது, மாநிலத்திற்கென்று தனியாகச் செய்திப் படப்பிரிவு ஒன்றைத் தோற்றுவித்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவெடுத்தது. இந்திய பூபாகமே திகைப்புக் கடலிலே திணறிடும் வண்ணம்; 1966-ஜூன் திங்கள் முதல் வாரத்தில் ஒரு செய்தியினை வெளியிட்டார் அப்போதைய மத்திய நிதியமைச்சர் திரு சுசீந்திர சவுத்திரி.