நெஞ்சுக்கு நீதி
"எடுக்கவோ, கோக்கவோ?" · 32 / 391
"எடுக்கவோ, கோக்கவோ?" "ஐயா! இப்போதுதான் என் எழுத்துக்கு இவ்வளவு செல்வாக்கு. நான் எழுத ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகின்றன. என் முதல் புத்தகம் 'கிழவன் கனவு'. அதன் விலை மூன்றணா தான். முரசொலி துண்டு அறிக்கைகளை நாங்கள் அச்சியற்றி, இனாமாக வழங்கி கொள்கைகளையும் கூறி, அத்துடன் என்னை எழுத்தாளனாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் போன்று கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்தான் இன்று பல திறமை பெற்ற எழுத்தாளர்கள்.
நீர், திடீரென உச்சிக்கு வந்து விட வேண்டுமென்று ஆசைப்படுகிறீரே நியாயமா?" என்று என்னைச் சந்திக்கும் அவசர எழுத்தாளர்களிடம் சற்றுக் கடுமையாகக் கூட நான் பேசுவதுண்டு. நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னோக்கி அடியெடுத்து வைத்தேன். இப்போது எண்ணினாலும் எனக்கொரு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது; எழுத்தாளனாவதற்கு எத்தனை இன்னல்கள் ஏற்றிருக்கிறோம் என்று! அதுவும் சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடும் எழுத்தாளன்!
இன்னும் பயங்கரம் என்னவென்றால் நான் பணியாற்றிய திராவிடர் கழகத்திலுள்ள குறைபாடுகளையும் குறிப்பிட்டு எழுதும் எழுத்தாளன்! இதோ, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய முரசொலி துண்டுத்தாள்! சிதம்பரத்தில் 'வருணாசிரம மாநாடு' நடக்க இருந்தது. அதை வன்மையாகக் கண்டித்து வெளியிடப் பட்டது. 5-10-1944-ல் அச்சியற்றி வழங்கப்பட்ட முரசொலித் துண்டு அறிக்கை. அப்படியே தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். முரசொலி தோற்றம்: ஈ.வே.ரா.
ஆண்டு 67 முரசு; 2 - ஒலி: 7. 1944 புரட்டாசி 20-ம் நாள். எழுத்தாளன்: சேரன். செயலாளர்: தென்னன். வருணமா? மானமா? தில்லையிலே! ஆம்! தீட்சிதர் கோட்டையிலே! தீனதயாபரன் கான முழக்கத்துடன் காலைத் தூக்கிக் காளியிடம் நடனம் செய்த கலைப்பதியிலே புனிதர் மாநாடாம்! பூரி தட்சிணையாம்! புண்ணிய கூட்டமாம்! புல்லர்கள் உள்ளவரை நல்லது எது! தீண்டாமை ஒழிக' என வேண்டா வெறுப்பாகக் காங்கிரஸ் கூறிடும் வேளையிலே சமதர்ம சங்க நாதம் சனாதனிகளின் காதைத் துளைக்குமளவு சுயமரியாதைக்காரர்களால் ஒலிக்கப்படும் நேரத்தில், 'உயர்வென்று கூறினால் அது உண்மைத் தமிழர்கள் வாழ்வு' எனப் பண்பாடி அகம் பிடித்த வாழ்வை அழிக்க அரிமாக்கள் புறப்பட்ட காலையிலே வருணாசிரம மாநாடு கூட்டுகிற வக்கிரங்கள் பல உள்ளன நாட்டிலே!
வரப்போகும் கேட்டிலே கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலே உண்டு உருண்டு கிடக்கும் இந்த உயரிய கருத்தினர் கூடிப் பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரர் எனப் பிரித்துப் பிழைக்கும் வழி வகுத்தனர். நான் கூறுவதல்ல! நாடறிந்த உண்மை! சரித்திரம் சாற்றும் சான்றுகளுடன்! மதப் பாத்திரத்திலே ஊற்றிக் கொடுத்த சூத்திர சுராபானம் மறத் தமிழர் வாழ்விலே மயக்கம் தரும் பொருளாயிற்று. போதை தலைக்கேறிய திராவிடத் தோழன் விழித்தானின்று.
வீரத்தை விற்ற படலத்தைக் கண்டு வெட்கினான் துள்ளி. அதன் எதிரொலி சுயமரியாதை இயக்கம்! புது சகாப்தம் கண்ட தமிழன்! பெரியாரின் சகாப்தம் கண்ட தமிழன்! இத்தகைய தமிழன் வாழ்வில் மறுபடியும் வலை வீச்சா? என்று கேட்கத் துவங்கி விட்டான். பிள்ளை, முதலியார், ரெட்டியார். தேசிகர் போன்ற வால்களை ஒட்ட வைத்துக்கொள்வதே ஒய்யார வாழ்வின் உச்ச ஸ்தானம் எனக் கருதிடும் ஒரு சில முற்போக்கினர் உள்ள வரையில் நால்வகை வருணத்தைக் கண்டிக்க நமக்கும் சிறிது நாக் கூசுகிறது.
முட்டாள் என்று சொல்வது எனக்குப் பொருந்தும். அதுவே எனக்கு சர் பட்டம் எனக்கூறிடும் காட்டாள்களிடம் நமக்கு வேலையில்லைதான்! ஆனாலும், இரங்கும் தன்மை இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிற தல்லவா? இளித்தவாயர்களை உண்டு பண்ணினால்தான் களித்திருக்க வழி ஏற்படும் எனக் கண்டு மடிந்துபோன வருணாசிரம பிணத்தை மயக்கமென்று கூறித் தண்ணீர் தெளித்துக் கண்ணீர் பெருக்குகிறார்கள். அந்தக் காட்சிதான் அக்டோபர் 8, 9, 10 தேதிகளில் சிதம்பரத்தில் காட்டப்படப் போகிறது.
பிணத்திற்கு மணக்கோலமிட்டு, மக்களிடம் காசு பறிக்கும் இந்த முயற்சிக்குத் தில்லையில் குழி வெட்டப்படும். அழுக்கைப் போக்கிக் கொள்ள அனைவரும் திரண்டு செல்வீர்! பகைவரைக் குறை கூறிப் பல்லவி பாடிட மட்டும் நேரமில்லை இப்பொழுது! விடுதலை விருத்தமுடன் விரைந்து செல்வீர் தில்லைக்கு! பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச் சோதரர்கள் சிலர் கூடி வருணத்தை நிலை நாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத்தமிழா!
போராடு! வருணாசிரமம் வீழ்க! -இப்படித் துவங்கிய 'முரசொலிதான்' இன்று விடுதலைப் படை வீரர் ஏந்துகின்ற கருவிகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படித் எழுதத்துவங்கிய கருணாநிதிதான் நான்! நான் எழுத்தாளனான வரலாறு இளம் எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதனால்தான் இவ்வளவும் சொல்கிறேன். மேடைப் பேச்சுக்கு என்னைத் தயாராக்கிக் கொண்டது பள்ளிக்கூட சொற்போர் போட்டிகளின் முதல் பேச்சுப்பற்றி என்னால் எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.
முதன் முதலாக நான் மன்றத்தில் நின்று எழுப்பிய குரல் 'நட்பு' என்ற பொருள் பற்றித்தான்! அதில் பாரதத்தில் எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசினேன். கர்ணனும் துரியோதனனும் ஆருயிர் நண்பர்கள். ஒரு நாள் கர்ணனும் துரியன் மனைவியும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயம் துரியோதனன் அங்கு வருகிறான். துணைவன் வருவதைக் கண்ட துணைவி மரியாதை காட்டுவதற்காக ஆட்டத்தை விட்டு எழுகிறாள். துரியன் வருவதைக் கவனிக்காத் கர்ணன் அவள் ஆட்டத்திலிருந்து போய் விட எண்ணுகிறாளாக்கும் என்று கருதி, அவளது முத்தாரத்தை இழுக்கவே ஆரம் சிதறிக் கீழே கொட்டுகிறது.
எந்தக் களங்கமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே துரியோதனன் நண்பனைத் தட்டிக் கொடுத்து, "எடுக்கவோ கோக்கவோ?" என்கிறான். சிந்திய முத்துக்களை எடுத்துக் கோக்கட்டுமா எனக் கேட்கிறான். நண்பனின் பெருமனங் கண்டு கர்ணன் பூரித்துப் போகிறான். நண்பனுக்காகச் சோதரரைப் போர்க்களத்தில் சந்தித்து எதிர்த்து இறுதியில் உயிர் விடு கிறான். இந்த நிகழ்ச்சியை வில்லிப்புத்தூரார் பாரதத்திலிருந்து அழகாக எடுத்துச் சொல்லி மன்றத்தின் அமோக ஆதரவைப் பெற்றேன்.
அழகான தமிழில் தங்கு தடங்கலின்றிச் சொன்மாரி பொழிந்ததாக ஆசிரியர்கள் கூடப் பாராட்டினார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படித் தெரியும், நான் மூன்று நாள் இரவும் பகலும் அந்தப் பேச்சை எழுதி மனப்பாடம் செய்து வீட்டிலேயுள்ள தூண்களிடம் பேசிக் காட்டினேன் என்கிற ரகசியம்! இப்போதல்லவா புரிகிறது! கர்ணனிடமும் துரியனிடமும் 'நட்பு' என்ற சிறந்த பொருள் இருந்தது-ஆனால் பிறன் மனைவியின் கழுத்திலுள்ள ஆரத்தைப் பற்றியிழுத்ததால் கர்ணனிடம் இழுக்கு மிகுந்த ஒரு பண்பும் இருந்தது என்பது!
நட்பு பற்றி நான் உணர்ச்சியோடு பேசுவதற்கு ஊக்கம் தரும் வகையில் - உள்ளக்கிளர்ச்சி ஏற்படுத்தும் தன்மையில் - நெருங்கிய நுண்பர்கள் பலர் இருந்தார்கள் எனக்கு! இந்த நீள் வையத்தில் நான் பெற்ற பெருஞ்செல்வமே நண்பர்கள்தான்! கோடி கோடியாகக் குவிந்து கிடக்கும் பொன் நாணயங்கள் அல்ல செல்வம், தேடித் தேடி அலைந்தாலும் கிடைக்க முடியாத திரவியமே உற்ற நண்பர்கள்தான்! அந்த வகையில் நான் மிகப் பெரும் பாக்கியசாலி!
'நகுதற் பொருட்டன்று நட்டல்' என்ற குறளைக் கடைப்பிடித்து இடித்துரைத்த அறிவுரைகளும், 'உடுக்கையிழந்தவன் கைபோலாங்கே இடுக்கண் களையும்' நண்பர்களும் என் வாழ்க்கைக்குத் தக்க துணையாயினர். இன்று போல் அன்றும் நண்பர்கள் சூழவேயிருப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன். இவர்களுடைய தொடர்பால் இன்றைய அரசியல் விழிப்புக்கான 'துவஜாரோகணம்' நடைபெற்றது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் பெருமை பெற்ற நான், சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்திருக் கிறேன், 1939-ம் ஆண்டில்!
இடம் ஓர் ஓலைக் குடிசை. வளர்ந்த இடம் ஒரு பாழடைந்த ஆஞ்சநேயர் கோவில்! உறுப்பினராகச் சேர்வத்ற்குக் கட்டணம் காலணா! சேர்ந்த பிறகு வாரந்தோறும் சந்தா ஒரு பைசா! சங்கத்தின் குறிக்கோள் அனைத்தும் ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவைகளின் அடிப்படையில் அமைந்தவைதான். பீடி, சிகரெட்டை யாரும் தொடக்கூடாது. தீய வார்த்தைகளைத் தவறியும் பேசக் கூடாது. நன்கு படிக்க வேண்டும். இவை போன்ற போதனைகள். வாரந்தோறும் சிறப்புக் கூட்டங்கள்.
அதில் தெருவிலே உள்ள ஒரு பெரியவர் வந்து அறிவுரை வழங்குவார். கூட்டத்திற்கு மக்கள் வரவேண்டுமே! அதற்காகக் கூட்ட முடிவில் 'சாக்லெட் வழங்கப்படும்'. என்று அறிவிக்கப்படும் முன்னதாகவே! ஆரம்பத்திலேயே வழங்கி விட்டால் கூட்டத்திற்கு இருக்க மாட்டார்கள் அல்லவா! அதனால் முடிவில்தான் வழங்குவது. என்ன சிரிக்கிறீர்கள்? சாக்லெட்டைக் காட்டிக் கூட்டம் சேர்த்தீர்கள் என்றுதானே கேலி செய்கிறீர்கள்? பஜனை மடத்தில் தினந்தோறும் சுண்டல் கடலை விநியோகம் இல்லாவிட்டால் யாராவது அந்த மார்கழி மாதக் குளிரில் விடியற்காலையில் பனியில் நனைந்துகொண்டு பஜனை செய்ய முன் வருவார்களா என்று கேட்கிறேன்?
பெரியவர்கள், பக்தசிரோன்மணிகள் பாடே அப்படியென்றால் இளைஞர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? ஒரு முறை தம்பய்யா பிள்ளை என்றவொரு பிரமுகர் எங்கள் வாராந்திரச் சிறப்பு விழாவில் கலந்துகொண்டார். அவ்விழாவிற்கு வரவேற்புத் தட்டிகள் கூட அமைத்து ஆடம்பரமாகக் கொண்டாடினோம். அப்போதே பாருங்கள் அடுக்குத் தொடரை! "தலைமை தாங்கும் தம்பையாவே வருக, வருக!"
எங்கள் சங்கத்திற்குப் போட்டியாக 'இளைஞர் சங்கம்' என ஒன்று தோன்றியது. இரண்டு சங்கங்களும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளத் தொடங்கின. என் இணைபிரியா நண்பனாயிருந்து வாலிபப் பருவத்திலேயே சாவினால் கொள்ளை கொள்ளப்பட்ட தியாகராசன் தான் அந்தப் போட்டிச் சங்கத்தின் தலைவர். சிவப்பும் வெள்ளையும் கலந்த இரு வண்ணக் கொடி எங்கள் சங்கத்தின் கொடி. இளைஞர் சங்கமோ ஜனநாயகக் கட்சியின் கொடியான ஏர் கலப்பை உழவனைத் தன் கொடியாகக் கொண்டது!
இரு பிரிவுகளும் மோதிக்கொண்டு பலாத்கார நடவடிக்கைகள் வரையிலே ஆரம்பமாயின. ஒரு நாள் கிணற்றங்கரையிலே குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கல் என் தலையின்மீது விழுந்தது. சிறிய கல். காயம் விளைவிக்கவில்லை. அந்தக் கல்லில் ஒரு தாள் இணைத்துக் கட்டப் பட்டிருந்தது. எடுத்துப் படித்தேன். 'இளைஞர் சங்கத்துக்கும்-சிறுவர் சீர்திருத்தச் சங்கத்திற்கும் தேர்தல் நடத்தலாமா? இரு சங்கத் தலைவர்களில் யார் அதிக வோட்டு வாங்குகிறார்களோ அவர்கள் ஆணைக்கு மற்ற இளைஞர்கள் கட்டுப்படுவது என்று வைக்கலாமா?'
என அதில் கேட்கப்பட்டிருந்தது! அந்த அறை கூவலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 'வோட்டர் ஜாபிதா' தயாரிக்கப்பட்டு இரண்டு சங்கங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நாங்களே புதிய வோட்டர்களை உண்டாக்கினோம். இப்போது உள்ளதுபோல் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வோட்டர்கள் என்ற சட்டம் எங்களிடமில்லை! பதினெட்டு வயதும் அதற்கு உட்பட்டவர்களுமே வோட்டர்கள் என்று தீர்மானித்தோம். அதன்படி எங்கள் தொகுதியில் சுமார் முன்னூறு வோட்டர்கள் பதிவு செய்யப்பட்டார்கள்.
இரு சாராரும் வோட்டுச் சேகரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டோம். தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டேயிருந்தது. நானும் எதிர்த் தரப்பில் நண்பர் தியாகராசனும் போட்டியிட்டோம். தேர்தல் பிரசாரம் திண்ணைக்குத் திண்ணை, கடைக்குக் கடை மும்முரமாக நடைபெற்றது.
