உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அன்றைய தண்ணீர்த் தட்டுப்பாடு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அன்றைய தண்ணீர்த் தட்டுப்பாடு · 31 / 391

அன்றைய தண்ணீர்த் தட்டுப்பாடு தண்ணீர்ப் பஞ்சம் தமிழ்நாடெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருந்த நேரம் அது. தெருவோரங்களில் தீய்கின்ற வெயிலில்-குடி நீர்க் குழாய்களை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருக்கும் குடங்களின் அணிவகுப்புகள். சொட்டுத் தண்ணீர் கூடச் சொட்டிடாது, குழாய்களிலிருந்து! அதனால் எரிச்சல் உற்றிடும் ஏழைகள் அன்று ஆண்டவர்களைத் திட்டித் தீர்த்த வண்ணமே திரும்பிடுவர் தம் இல்லங்களுக்கு.

1966-மார்ச் முதல் வாரத்தில் சட்ட மன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டிருந்த வரவு-செலவுத் திட்டம் பற்றிய விவாதத்திலே கலந்து கொண்ட நான் தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் தவித்துப் புழுங்கிடும் நிலையினை எடுத்துரைத்தேன் விரிவாக; அந்த அவல நிலையினை அகற்றிட அரசாங்கம் என்ன நடவடிக்கைதான் எடுத்திருக்கிறது என்று அழுத்தமாகவே கேள்விக் கணைகளைத் தொடுத்தேன். "........18 ஆண்டுகளாக (காங்கிரசார்) ஆட்சியில் உணவுக்குப் பஞ்சம்!

விலைவாசி விஷம்போல் ஏறுகிறது! இதையெல்லாம் தாங்கிக் கொண்டலும் இந்த 'தர்மவான்கள்' ஆட்சியில், தாகத்திற்குத் தண்ணீராவது கிடைத்ததா என்றால் அதற்கும் பஞ்சம். "சென்னை நகருக்கு 200 மைல் தொலைவில் உள்ள காவிரியிலிருந்து குடிநீரை, தி.மு. கழகப் பொறுப்பில் உள்ள மாநகராட்சி மன்றம் கொண்டு வரவில்லை என்று (காங்கிரசார்) கூட்டம் போட்டுக் கேட்கிறார்களே - நான் பொறுப்புள்ள இடத்திலிருந்து பொறுப்பானவர்களை (அமைச்சர்களை)க் கேட்கிறேன்: 'ஏன் இதுவரை சென்னை நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரவில்லை?'

"சென்னை நகரில்தான் இப்படியென்றால் காவிரியும் கொள்ளிடமும் வலம் வரும் திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை? காங்கிரஸ் நகராட்சியில் உள்ள தஞ்சையிலும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவில்லையே? கோவை சிறுவாணித் திட்டம் நமது எல்லையிலிருந்து, இரண்டு பர்லாங் தொலைவில்தான் உள்ளது. அந்தத் திட்டத்தை ஒழுங்காகச் செயல்படுத்தத்-தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசாங்கம் தவறி விட்டது.

அதனால் இன்று கோவை மக்கள் வண்டிகளில் வரும் தண்ணீரை நகராட்சி உறுப்பினர்கள் வழங்கியுள்ள ரேஷன் கார்டு மூலம் பெற வேண்டிய நிலையுள்ளது. -இவ்வாறு எதிர்க் கட்சித் துணைத் தலைவர் என்கிற முறையிலே நான் அன்றைக்குத் தொடுத்திட்ட கேள்விகளைப் பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சராக -முதலமைச்சராகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட நிலையிலும் நான் மறந்திடவில்லை. குடிநீர்ச் சிக்கலுக்கு எப்படியாவது விடிவு காண மாட்டோமா என்கிற தாகத்தோடுதான் அந்தத் தாகம் தீர்க்கின்ற பணியிலே என்னை நானே வேகமாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

அந்த முறையில்தான் 1969-இல் நான் முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனே சென்னை மாநகரம் கொடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் தவித்திட்ட பொழுது ஒரே வாரத்திற்குள் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பம்புகள், துளைக்கிணறுகள் மூலை முடுக்குகளில் எல்லாம் இறக்கப்பட்டுக் குடிநீர் கிடைக்காத இடமே இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டது. அந்த விரைவான நடவடிக்கையைக் கண்டு சென்னை மக்கள் அடைந்திட்ட வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

'ஆனந்த விகடன்' போன்ற ஏடுகளும் அந்தத் திட்டத்தை அப்போது வெகுவாகப் பாராட்டின. சென்னைக்குக் காவிரி நீரைக் கொண்டு வரும் பொருட்டு, வீராணம் நீர்த் திட்டமும் வகுக்கப்பட்டது. அது விரைந்து செயலாக்கப்பட்டும் வருகிறது. கோவையை மறந்திடாமல்-சிறுவாணித் திட்டம் சீராக நிறைவேறிடக் கேரள அரசோடும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே குடிதண்ணீர்ப் பஞ்சம் தலை காட்டவே கூடாது என்பதற்காகக் 'குடிநீர் வாரியம்' ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கென்று கோடிக் கணக்கிலும் பணம் ஒதுக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூர்-மலேசியா போன்ற கீழை நாடுகளிலும் உள்ள தோழர்களுக்கு நான் அங்கெல்லாம் வருகை புரிந்திட வேண்டும் என்கிற வற்றாத ஆசை நெடு நாளாகவே உண்டு. எனக்கு அடிக்கடி அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள 'மணி மலர் சங்கம்' என்னும் அமைப்பினர் நான் அங்கே வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். எனக்கும் அந்த அன்பு நெஞ்சங்களை நேரிலே கண்டு அளவளா விடும் ஆசை இல்லையா என்ன?

எனவே, அவர்களுடைய அழைப்பினை ஏற்றுக் கொண்டேன். 1966 மார்ச் திங்களில் அங்கு செல்வதற்கான எல்லா முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. மலேசியா அரசும் நான் அந்த நாட்டுக்கு வரலாம் என்பதற்கு அனுமதி வழங்கி விட்டது. இந்த வகையில் இலங்கை அரசை அது பின்பற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது! ஆனால் இந்திய அரசுக்கோ என்னை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திட விருப்பமே இல்லை. 'இப்போது மலேசியா செல்ல அனுமதி இல்லை' என்று அறிவித்து விட்டது.

என்னைப் பொறுத்த மட்டிலும், காங்கிரஸ் அரசாங்கம், அன்று கடைப்பிடித்த கொள்கைகளை-விதிக்க முற்பட்ட தடைகளைக்-காரணம் இல்லாமல் அடைந்த கலக்கத்தை-எண்ணி எண்ணிச் சிரிப்புத்தான் வந்தது! தீரம் மிகுந்த சீக்கிய மக்களுக்கும் தங்களுடைய பஞ்சாபி மொழி புறக்கணிக்கப்படுகிறதே என்கிற மனக்குறை பன்னெடுங் காலமாகவே உண்டு. இந்தி மொழி பேசிடுவோரின் ஏகாதிபத்திய வெறிக்கு எதற்காக நாம் இரையாகிட வேண்டும் என்கிற 'உரிமை உணர்வு' நெருப்பாகவே கனன்ற வண்ணம் இருந்தது அவர்கள் நெஞ்சத்தில்.

அதனுடைய விளைவுதான் 'பஞ்சாபி சுபா' என்னும் அவர்களுடைய தனி மாநிலக் கோரிக்கை. பஞ்சாபி மக்கள் நலனைப் பாதுகாக்கத் தோற்றுவிக்கப்பட்ட 'அகாலி தளத்' தின் தலைவரான மாஸ்டர் தாராசிங் அவர்களும், அவருடைய சீடரான சாந்த் பதே சிங் அவர்களும் எவ்வளவோ எடுத்துரைத்தும் மத்திய அரசு மதித்திடவில்லை, மக்களின் கருத்தை. இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாம் மொழிவழியாகத் திருத்தியமைக்கப்பட்ட போதும் கூடப் பஞ்சாபி மொழியினரின் கோரிக்கைக்குக் கொஞ்சம் கூடக் காது கொடுத்திடவில்லை காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.

அமைதி வழியிலே சென்று, அறநெறியிலே நின்று-எந்தக் கோரிக்கையை எழுப்பினாலும் அதனை அலட்சியப்படுத்தி அடக்கு முறைகளை ஏவி விடுவதுதான் காங்கிரசாருக்கு எப்போதுமே வாடிக்கை. அதுவும் இந்தி மொழிக்காரர்களுக்குத் திருப்திதரும் வகையில் நடப்பதைத்தானே தங்கள் இனிக்கும் லட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ளனர் டில்லியில் உள்ளோர்! எனவே பஞ்சாபி மொழிக்காரர்களின் நெஞ்சக் குமுறலைப் பற்றி அவர்கள் பாராமுகமாய் இருந்ததில் வியப்பென்ன இருக்கிறது!

எனினும் மாஸ்டர் தாராசிங்கும் சாந்த் பதே சிங்கும் எத்தனை காலத்திற்குத்தான் பொறுமைக் கூட்டுக்குள்ளே புழுங்கிச் சாவது என்று ஆர்த்தெழுந்தனர். முதலில் மாஸ்டர் தாராசிங் உண்ணா நோன்பை மேற்கொண்டு அறப்போரைத் தொடங்கினார். தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மொழி உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் ஓர் உடன்பாடு காண முன் வந்தது மத்திய அரசு. அதனுடைய வாக்குறுதிகளை நம்பிப் பண்டித நேரு அவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தம்முடைய கிளர்ச்சிகளை நிறுத்திக் கொண்டார் தாராசிங்.

ஆனால் அந்த உடன்பாடு நியாயமான முறையில் நிறைவேற்றப்படவில்லை. நேரு மறைந்த பின்னர் அதைப்பற்றிக் கவலைப்படுவோரும் யாரும் இல்லை. அதனால் உள்ளம் உடைந்திட்ட சாந்த் பதே சிங் 1966 மார்ச் திங்களில் இறக்கும் வரையில் உண்ணா நோன்பு மேற்கொள்ளப் போவதாகவும், குறிப்பிட்ட நாளைக்குள் 'பஞ்சாபி சுபா' அமைக்கப்படா விட்டால் தீக்குளித்து உயிர் துறக்கப் போவதாகவும் சூளுரைத்தார். அவர்தம் முடிவைக் கேட்டு நாடே அதிர்ச்சியுற்றது.

"எந்த நோக்கத்திற்காக இங்கே கழகத்தவர் மொழிப் போரிலே ஈடுபட்டுள்ளோமோ அதே நோக்கத்துக்காகத்தானே-இந்தி ஆதிக்கத்திலிருந்து விடுபடத்தானே- தனி மாநிலம் கோரி சாந்த் பதே சிங் தம் இன்னுயிரை ஈந்திடவும் முன் வந்துவிட்டார்! அந்த உத்தமர் உயிர் பிழைத்திட வேண்டுமே என்று என் போன்றவர்கள் மிகவும் கவலை கொண்டோம். அவர்தம் உறுதிப்பாடு-உள்ளத்திண்மை-காங்கிரசாரின் அலட்சியப் போக்கினையும் அசைத்திடத்தான் செய்து விட்டன.

இறுதியில் தங்கள் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரும்படிதான் ஆயிற்று காங்கிரஸ் ஆட்சியாளரின் நிலைமை. 'பஞ்சாபி சுபா' தனி மாநிலம் அமைத்திடத் தலைமை அமைச்சரே வாக்குறுதி வழங்கி, வேண்டுகோள் விடுத்த பின்னரே சாந்த் பதே சிங்கும் தன் உயிர்த்தியாக முயற்சியைக் கைவிட்டார். இந்த விவேகமான முடிவை முன்பே விரைந்து அறிவித்திருந்தால் எத்துணை நல்லபெயர் ஏற்பட்டிருக்கும் மத்திய அரசுக்கு என்று என்னால் அப்போது எண்ணாமல் இருக்க முடியவில்லை.

தோன்றிய கால முதல் தூண்டா மணி விளக்காய்த் தொன்மைச் சிறப்பெல்லாம் சுடர்வீசி நின்றாலும்-'கன்னி' இளமையிலும் கலையாத தலை மகளாம் அன்னைத் தமிழுக்கு அகிலமெல்லாம் புகழ் உண்டு; இன்றல்ல பன்னெடுங்காலந் தொட்டே... அந்தப் புகழ் மணத்தினை இக்காலப் போக்கிற்கு ஏற்ப மாநாட்டு வடிவிலே மேலும் பரப்பிட அரிய முயற்சியொன்றினை மேற்கொண்டனர் அயல்நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" -என்னும் பாரதியின் கனவும் நனவாகிடும் வண்ணம் கடமையாற்றிட முற்பட்ட குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.

அவர்தம் பேரார்வத்தாலும், மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் வாழும் செந்தமிழ்ச் செம்மல்களின் தீவிரமான உழைப்பாலும்- முதலாவது உலகத் தமிழ்க் கருத்தரங்க ஆராய்ச்சி மாநாடு மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் திங்களில் கூட்டப் பெற்றது. அப்போது மலேசியாவின் தலைமை அமைச்சராக இருந்த துங்கு அப்துல் ரகுமானே மாநாட்டினைத் திறந்து வைத்தார். அப்போது அவர் தமிழின் உயர் தனிச் சிறப்பினை வியந்து உரைத்ததாகக் கூறப்படும் சில கருத்துக்கள் எப்போதுமே நம் உள்ளத்தைப் புல்லரிக்கச் செய்வனவாகும்.

உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளிலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் வாழ்கிறார்கள் என்றாலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மலாய் தீபகற்பத்தில்தான். தமிழகத்திலிருந்து சென்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறியிருக்கிறார்கள். எனவே மலேசியாப் பள்ளிகளிலும், பல்கலைக் கழகத்திலும் தமிழ் பாட- மொழியாகவே பயிற்றுவிக்கப் படுகிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டியான திருக்குறள் மலாய் மொழியிலும் சீன மொழியிலும் மொழி பெயர்க்கப் படுவதாகவும் துங்கு அப்துல் ரகுமான் அந்த மாநாட்டிலே அறிவித்திருந்தார்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்!' என்னும் அழகிய தமிழ் வரியில் பொதிந்துள்ள உலகந்தழுவிய ஒப்புரவு உணர்ச்சியினையும் அவர் அப்போது உவகை வெள்ளத்தில் மிதந்து பாராட்டியிருக்கிறார். அந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா முதலான மொத்தம் 37 நாடுகளிலிருந்து இருநூறு தமிழ் அறிஞர்கள் சென்றார்கள். தமிழ்நாட்டிலிருந்து அன்றைய முதல்வர் திரு பக்தவத்சலனார் தலைமையில் குழு ஒன்று சென்றது.

மாநாட்டிலே கலந்து கொள்ள எதிர்க் கட்சித் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அதில் இடம் பெற்றிருந்தார். மலேசியா அமைச்சர்கள் சம்பந்தன், மாணிக்கவாசகம் ஆகியோரின் ஆதரவோடு- பழைய 'பொன்னி' ஏட்டின் ஆசிரியரான முருகு சுப்பிரமணியம் போன்றவர்களின் இடையறாத முயற்சியோடு- ஏற்றமும் எழிலும் பூத்துக் குலுங்கிட நடைபெற்ற அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் இங்கே தமிழகத்திலே இருந்த என் போன்றவர்களுக்கெல்லாம் பெருமிதத்தைப்-பெருமகிழ்ச்சியையே அளித்தன.

அவ்வாறு உலகத் தமிழ் மாநாட்டினை முதலில் நடத்திய பெருமையை மலேசியா நண்பர்கள் தட்டிச் சென்றுவிட்டாலும் இரண்டாவது மாநாட்டினைத் தமிழகத்திலேயே நடத்துவதற்கான அழைப்பினை விடுத்து விட்டு வந்தார் திரு பக்தவத்சலம். ஆனால் அந்த மாநாட்டினைக் கோலாகலமாக- வரலாற்றுச் சிறப்புமிக்கதாய்- வையக அறிஞரெல்லாம் வாழ்த்திடும் வண்ணமாய்- நடத்திக் காட்டும் அரிய வாய்ப்பு, செந்தமிழுக்காகச் சிறைக்கு மட்டுமல்ல- தீக்குளிக்கவும் அஞ்சிடாத தியாகத் திருவிளக்குகளைக் கொண்டுள்ள தமிழகத்தின் தி.மு.

கழக அரசுக்கே பின்னர் கிட்டியது.