நெஞ்சுக்கு நீதி
பிராவ்தாவுக்கு என் பேட்டி · 30 / 391
பிராவ்தாவுக்கு என் பேட்டி 'பி ராவ்தா' என்றதுமே அது உலகப் புகழ் பெற்ற ஏடுகளில் ஒன்று என்பதனை நாளேடுகள் படிப்பதில் நாட்டமுடையோர் அனைவரும் அறிந்திடுவர். சோவியத் ரஷ்ய அரசாங்கத்தின் அதிகார பூர்வமான ஏடு மட்டுமல்ல, அதிகம் விற்பனையாகின்றன ஏடும் ஆகும் 'பிராவ்தா'. அதனுடைய தலைமை ஆசிரியர் குழுவினைச் சார்ந்தவர்களான தோழர் ஓலக்-பி-ஸ்கால்கின், தோழர் அய்யுரி கோல்ட்பெர் ஆகிய இருவரும் 16-2-1966 அன்று மாலை சென்னை, கோபாலபுரத்தில் உள்ள என் இல்லத்தில் என்னைப் பேட்டி காண வந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் சில சுவையான வினாக்களைக் கொடுத்தனர். நானும் அவர்களுக்குத் தகுந்த முறையில் விடையளித்தேன். அந்த வினாக்களும் விடைகளும் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே -நினைவுகூரத் தக்கவையே. அன்றிருந்த நாட்டின் நிலவரங்கள் - எதிர்க்கட்சி நிலையிலே கழகம் மேற்கொண்ட இலட்சியப் பயணங்கள் - அவற்றின் காரணமாகக் கழகத்தவர் அனுபவித்த 'காராக்கிருகக்' கொடுமைகள் - முதலான பல்வேறு நிலைமைகளையும் நான் அந்த சோவியத் பத்திரிகை ஆசிரியர்களிடம் ஓரளவு எடுத்துக் காட்டிட முயன்றிட்டேன்.
அந்த வினா-விடைகளில் ஒரு சில வருமாறு: கேள்வி: தி. மு. கழகம் இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக இருப்பதாக அறிகிறோம். கழக வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படைக் காரணங்கள் என்ன? நான்: 18-ஆண்டுக் காலமாகக் காங்கிரசுக் கட்சியே ஆட்சி நடத்திய போதிலும் மக்களின் அடிப்படையான இன்றியமையாத தேவைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. மக்களின் இன்னல்கள் குறைவதற்குப் பதில் பெருகியே உள்ளன. சமதர்மத்தை இலட்சியமாகக் கொண்ட போதிலும் அது செயலளவில் அமுல் நடத்தப்படாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகிக் கொண்டே போகின்றன.
பாங்குகள் உட்படப் பெருந் தொழில்களை-ஆலைகளைத் தேசிய மயமாக்குவதற்குப் பதிலாகப் பெரும்லாபம் தரக்கூடிய அந்தத் தொழில்களைத் தனியார் துறைக்கே விட்டிருப்பதால் பொருளாதாரத் துறையில் ஏற்றத் தாழ்வு குறைவதற்குப் பதிலாகப் பெருகியுள்ளது. மொழிக் கொள்கையில், இந்தி பேசாத பகுதி மக்களுக்குக்- குறிப்பாகத் தமிழ் நாட்டுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதைச் சாதாரண மக்கள் முதல் மூதறிஞர்கள் வரை எடுத்துச் சொல்லியும் இந்த அநீதியைப் போக்க (காங்கிர ஸ்) ஆட்சி மறுக்கிறது.
(1) சொல்லளவில் உள்ள சமதர்மத் திட்டத்தைச் செயல் படுத்தாதது. (2) பொருளாதாரம், வர்த்தகம், தொழில் அமைப்பு ஆகிய துறைகளில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து மத்திய ஆட்சி ஓரவஞ்சனையாக நடப்பது. (3) மொழிக் கொள்கை. -ஆகிய காரணங்களினால் காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தி. மு. கழகத்திடம் மக்கள் ஆதரவு காட்டுவதற்கு இவைகளும் காரணங்கள் ஆகும். கேள்வி : சோஷலிசக் கொள்கையில் தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் (பெரியவர் மணலி அவர்கள் புதிய கட்சி தோற்றுவிப்பதற்கு முன்னரே உள்ள வலதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியைக் கருத்தில் கொண்டே இது கேட்கப்பட்டது)-உங்கள் தி.மு.
கழகத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? நான்: தமிழ் நாட்டில் நாங்கள் தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று முன்பொரு முறை எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாநில மாநாட்டில் கூறியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களைப் பொறுத்த வரை மக்களின் அடிப்படை உரிமைகளில் அரசினரின் தலையீடு குறைவாக இருக்கும். இதுதான் கம்யூனிஸ்டுக் கொள்கைக்கும் எங்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமை.
கேள்வி: தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் குறைகளை எப்படிப் போக்குவீர்கள்? நான்: நிச்சயமாக ஏற்றத் தாழ்வுகளை நீக்கிச் சமதர்ம ஆட்சி மலரச் செய்வோம். சோஷலிசத்தைச் செயல் முறையில் காட்டுவோம். மத்திய அரசில் குவிந்திருக்கின்ற அதிகாரங்களைப் பரவலாக்கி, மாநில ஆட்சிக்குரிய உரிமைகளைப் பெற்று, தொழில் வளர்ச்சித் துறையில் காட்டப்படும் பாரபட்சப் போக்கினை நீக்கப் பாடுபடுவோம். மொழிக் கொள்கையைப் பொறுத்தவரையில் 'தேசிய மொழி'கள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகள் ஆக வேண்டும் என்பது தி.
மு. கழகத்தின் கொள்கை. வளமற்ற- பண்படாத-இந்தி மொழி ஒன்றே மத்திய ஆட்சி மொழி என்பதைத் தி. மு. கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், மக்களும் எதிர்க்கின்றனர். இன்று வெறும் கிளர்ச்சியாக - மாநில மக்கள் போராட்டமாகவுள்ள இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுக்கும்-மத்திய அரசுக்குமிடையே நடைபெறும் போராட்டமாக- 'ஆட்சி மட்ட அளவு'ப் போராட்டமாக - இருக்கும். கேள்வி: நாட்டை ஒன்றுபடுத்த இந்திமொழி தேவை என்று கருதப்படுகிறதா?
நான்: அப்படிக் கருதினால் அது தவறு. இந்தி மொழி மூலம் தான் நாட்டை ஒன்றுபடுத்த முடியும் என்று சொல்வது உண்மையான வாதம் அல்ல! விடுதலைப் போராட்டத்திற்கு மொழிப் பிரச்சினை குறுக்கே நிற்க வில்லை. இந்தி மொழி மூலம் சுதந்திர போராட்டம் நடைபெறவில்லை. மாறாக ஆங்கிலமே அதற்குப் பயன்பட்டது. கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் இறுதி இலட்சியம் என்ன? நான்: சமுதாயத் துறையில் சமத்துவம் - பகுத்தறிவு; பொருளாதாரத் துறையில் சமதர்மம்; அரசியலில் ஜனநாயகம்.
கேள்வி: உங்களுடைய இந்த இறுதி இலட்சியத்தைப் பாராளுமன்ற ஜனநாயக முறை மூலமே அடையத்தான் விரும்புகிறீர்களா? அல்லது வேறு வழி முறைகளைக் கையாளுவீர்களா? நான்: மக்களுடைய வாக்குகளைப் பெறும் பாராளுமன்ற ஜனநாயக முறையையே பெரிதும் விரும்புகிறோம் - கடைப்பிடிக்கிறோம் என்றாலும் அதையே முழுக்கவும் நம்பியிராமல் இடையிடையே மக்கள் குரலை அரசு அறியச் செய்ய, கிளர்ச்சிகளும் போராட்டங்களும் அவசியம் என்று கருதி அவற்றிலும் ஈடுபடுகிறோம்.
கேள்வி: குறிப்பாக அப்படி நடைபெற்ற போராட்டங்கள்? நான்: இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் விலைவாசி உயர்வை எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறை சென்றிருக்கிறோம். மொழிக் கிளர்ச்சியில் பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியிருக்கிறோம். இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு அத்தியாயத்தைப் பொது இடங்களில் கொளுத்தி ஆண்டுக்கணக்கில் கழகத்தினர் சிறைச்சாலை ஏகியிருக்கின்றனர். கேள்வி : தி.
மு. கழகத்தவராகிய நீங்கள் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று சொல்லித் தனி நாடு கேட்டீர்களா? நான் : திராவிட நாடு கேட்டது உண்மை; அது இப்போது கைவிடப்பட்டுவிட்டது. கேள்வி 1 இந்திய - சோவியத் நல்லுறவில் உங்களுக்கு நாட்டம் உண்டா? நான் : உறவு கொள்வதை யார்தான் வெறுப்பார்கள்? என் மகன் ஒருவனுக்குக்கூட 'ஸ்டாலின்' என்று தான் பெயர்.
அந்தப் பேட்டியின் போது 1966-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்த நிலவரப்படி, கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை-கழகக் கிளைகளின் எண்ணிகை - கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்கள்- ஆகியவை பற்றிய தகவல்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர் 'பிராவ்தா' ஏட்டினர். சென்னையில் கூடிய கழகப் பொதுக் குழு எடுத்த முடிவிற்கிணங்க 1966 பிப்ரவரி 20 முதல் 27 வரை 'கழகக் கொடி வாரம்' கொண்டாடப்பட்டது கோலாகலமாக. தேர்தல் நிதிக்குப் பணத்தைத் திரட்டவும் அதன் மூலம் தி.
மு. கழகத்திடம் எண்ணற்ற ஏழை மக்களுக்குள்ள ஈடுபாட்டைக் காட்டிடவும் வளர்த்திடவுமே அவ்வாறு கொடி வாரம் கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டது. தேர்தல் சின்னமாம் உதயசூரியனும் அறிஞர் அண்ணாவின் உருவமும் பதிக்கப்பட்ட நான்கணா, ஒரு ரூபாய் விலையுள்ள கொடிவில்லைகள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டன. அவற்றின் விற்பனையைத் துவக்கிட -அதன் மூலம் மக்களுக்கு அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஊட்டிட - கழக முன்னணித் தோழர்கள் தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்றனர்.
அந்தக் கொடி வாரத்தின் போது நானும் நெல்லை மதுரை, கோவை, பெருந்துறை, இடைப்பாடி முதலான பல இடங்களில் கொடி விற்பனையில் ஈடுபட்டேன்.
