உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பிச்சைக்காரர் ஒழிப்பு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பிச்சைக்காரர் ஒழிப்பு · 29 / 391

பிச்சைக்காரர் ஒழிப்பு நா ன் எழுதிய 'பூமாலை', என்னும் கதை திரைப்படமாக எடுக்கப் பெற்றது. 'மேகலா' பட நிறுவனத்தின் சார்பில் உருவான அதற்கு நானே திரைக்கதை அமைத்து, உரையாடலும் தீட்டியிருந்தேன். 1965-அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழகம் எங்கும் 'பூமாலை' திரையிடப்பட்டது. அதனுடைய துவக்க விழாக்காட்சி கோல்டன் படப்பிடிப்பு நிலையத்தில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் தம் குடும்பத்தினருடன் வருகை புரிந்து சிறப்பித்தார்.

மற்றக் கழக முன்னணியினரும் வந்திருந்தனர். தமிழகத்தில் எத்தனையோ இயக்கங்கள்-கட்சிகள்-தோன்றிய போதிலும் பேச்சுக் கலைக்குப் பேரெழிலைப்-பெரும் வரவேற்பினைப் பெற்றுத் தந்திட்ட பெருமை தி. மு. கழகத்திற்கே உண்டு. கழகத்தைச் சார்ந்தவர் பேச வருகிறார் என்றால் கடலெனத் திரண்டு விடுவர் மக்கள். கல்லூரிகளில், பள்ளிகளில் கல்வி கற்கின்ற மாணவ மணிகளுக்கும் சுவையான சொற்பொழிவினைக் கேட்கும் ஆர்வம் ததும்பி வழியும்.

தங்கள் இலக்கிய மன்றங்களுக்கு எங்களை அழைத்திட வேண்டும் என வற்புறுத்துவர். ஆனால், அந்த நாட்களில் கல்லூரி முதல்வர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் எங்களை அழைப்பதென்றாலே எங்கே 'கட்சி அரசியல்' பேசிவிடுவோமோ என்கிற கலக்கம். 'கட்சி அரசியலுக்கு' அப்பாற்பட்டும் கொடுக்கப்பட்ட தலைப்பினை ஒட்டியே இலக்கியச் சொற்பொழிவினை நிகழ்த்திடவும் கழகத்தவரால் இயலும் என்பதனையும் எத்தனையோ தடவைகள் மெய்ப்பித்திருக்கிறோம்.

அவ்வாறு இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றிடும் வாய்ப்புகள் 1965-நவம்பர் திங்களில் எனக்கு அடுத்தடுத்துக் கிட்டின. சென்னை-கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் விழாவில் கலந்து கொண்டு அவர்தம் சிறப்பியல்புகளை-சீர்திருத்த எண்ணங்களை- இந்தியையும்-சம்ஸ்கிருதத்தையும் வடநாடுவரை சென்று அவர் பயின்றிருந்தபோதிலும் செந்தமிழே பிறமொழிகளை விடத் தேனென இனிப்பது எனக் கூறிய அவருடைய தெளிவினைப்-பல்வேறு சான்றுகளுடன் பாராட்டிப் பேசினேன்.

சென்னை விக்டோரியா மாணவர் விடுதி தமிழ் மன்றத்தினர் நடத்திய பாரதிதாசன் விழாவிலும் பங்கு கொண்டு உரையாற்றினேன். அப்போது- "...பாரதிதாசன் தாழம்பூவைப் போன்றவர். தூரத்திலிருந்து மணத்தை அனுபவிக்கலாம்; பக்கத்தில் சென்று தடவிப்பார்த்தால் முள்தான் கையில் ஏறும். மணம் என்று சொன்னது அவரது கவிதைகளை முள் என்று சொன்னது தனிப்பட்ட பாரதிதாசனின் குணங்களை. (எனினும்) அவர் கவிதைகளில் உவமை உண்டு; உண்மை உண்டு; அத்தனையும் 'உண்டு' (அருந்தி) ஊமை பேசுவான்; கூனன் நிமிர்வான்; குருடன் விழி பெறுவான்!"

-என்று குறிப்பிட்டேன். அடுத்து சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவையில், 'குறளோவியம்' என்னும் தலைப்பில் உரையாற்றினேன். அப்போது- "சொல் வணக்கம் ஒன்னார்கள் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்" -என்னும் குறட்பாவை விளக்கி, வில்லின் வணக்கமும் விரோதியின் வணக்கமும் ஒன்றே என்பதை எடுத்துக் காட்டினேன். அவ்வாறு தொடர்ந்தாற் போல் ஒரே திங்களில் நான் நிகழ்த்திய இலக்கியச் சொற்பொழிவுகளில், திருமதி, முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்கள் சென்னையில் தோற்றுவித்து நடத்திய 'அவ்வையகம்' விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றிய சொற்பொழிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அங்கே நான் சென்ற போது, அந்த நிறுவனத்தின் அமைப்பாளரான மூதாட்டி முத்துலெட்சுமி ரெட்டி முதலில் என்னை 'வந்தனம்' என்று வரவேற்றார். பிறகு, "ஓ! இது 'வணக்கம்'-என்று கூறும் காலமல்லவா? இவ்விதம் தமிழ் வளர்வது தேவைதான்" என்றும் கூறினார்.

அங்கு குழந்தைகளைச் சந்தித்திட்ட போதுகூட முதலில் அவர்கள் 'நமஸ்தே'! என்றார்கள். அவர்களை விடக் சற்று வளர்ந்த சிறுமிகள் பின்னர் 'வணக்கம்'! என்றார்கள். இந்த சொற்களை நெஞ்சிலே பதிய வைத்துக் கொண்ட நான், என் சொற்பொழிவுகளிலும் அவற்றைக் குறிப்பிட்டேன். "...'வணக்கம்' என்பது வளர்ந்துள்ள நிலையில் இப்போது இருக்கிறது. 'நமஸ்தே' குழந்தைகள் நிலையில் அதாவது அறிவுவளர வேண்டியதைக் காட்டும் நிலையில் இருக்கிறது" என்று கூறினேன்.

அதே விழாவில் அவ்வையாரின் ஒரு பாட்டைப் பற்றியும் இவ்வாறு குறிப்பிட்டேன். இட்டார் பெரியார்; இடாதார் இழிகுலத்தார் என்று கூறி உலகில் இரண்டு சாதி இருப்பதாக அவ்வையார் வகுத்துக் காட்டியுள்ளார். இது பற்றிப் புதுமைப்பித்தன் கூறும் போது, இந்த இரண்டு சாதியோடு மூன்றாவது சாதியும் இருக்கிறது. பிச்சை தருபவர் ஒரு சாதி: பிச்சை தர மறுப்பவர்கள் ஒரு சாதி; இன்னொரு சாதி கூட உண்டு; அது பிச்சை எடுக்கும் சாதி' என்று அழகாகச் சொன்னார்."

தமிழகத்தில் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தன் வேடிக்கையாக அல்ல: வேதனையோடு குறிப்பிட்ட அந்த 'மூன்றாவது சாதி' பற்றி நான் அந்த அவ்வையக விழாவிலே எடுத்துரைத்தது அந்த மூன்றாவது பிச்சைக்கார சாதி வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்கிற என்னுடைய எண்ணத்தையும் எதிரொலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நோக்கோடுதான் பின்னால் என் பிறந்த நாள் ஒன்றிலேயே 'பிச்சைக்காரர் மறுவாழ்வுத்' திட்டத்தினைத் தொடங்கி அதற்கு நிதி, திரட்டுவதிலும் ஈடுபட்டேன். 'குடந்தை' என்றதுமே கொள்கைக் குன்றாம் கே.

கே. நீலமேகம் அவர்களுடைய நினைவே நம் நெஞ்சத்திலே மின்னும். நீதிக் கட்சிக் காலந்தொட்டுப் பொது வாழ்விலே ஈடுபட்டுப் பகுத்தறிவுக் கதிர்களைப் பரப்பிடுவதில், முன்னணியில் நின்றிட்ட அந்த முதியவர் 17-12-1965 அன்று விடியற்காலையில் இயற்கை எய்தி விட்டார். நீண்ட காலமாகத் திராவிடர் கழக நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராக இருந்து பணியாற்றினார். வயதிலே முதியவராய் இருந்த போதிலும், இளந் தொண்டர்களை மதித்து அவர்களுக்கு எழுச்சியூட்டி அவர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் உருவெடுத்திட உறுதுணையாய் ஊன்றுகோலாய்ச் செயலாற்றினார்.

தஞ்சை மாவட்டத்திலே கழக வளர்ச்சிக்குத் தளவரிசை போட்ட பெருமை அவரையே சாரும். திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகப் பிரிந்திட்ட வேளையில் அண்ணாவின் அடிச்சுவட்டிலேயே தம்முடைய அரசியல் பயணத்தையும் அவர் தொடர்ந்தார், புதிய இயக்கத்தில் பெரும்பாலும் எல்லாருமே அப்போது இளைஞர்கள்; அண்ணாவை விட வயதில் குறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் குடந்தைப் பெரியார் கே. கே. நீலமேகமும், சேலத்துப் பெரியார் ஜி.பி.

சோமசுந்தரம் அவர்களுமே வயதிலே மூத்தவர்கள். அவ்வாறு, அண்ணா தமக்கு இளையவராக இருந்த போதிலும் அவர்களிருவருமே அண்ணாவை 'அண்ணா' என்றே அழைத்தனர். அவருடைய தலைமையை மதித்தனர். தி.மு.கழகத்தின் துவக்கக் கூட்டம் சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற போது மழை வந்து விட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. அப்போது கே. கே. நீலமேகம் கண்ணீர் மழையே பொழிந்து கேட்போரின் நெஞ்சம் நெக்குருகிடப் பேசினார். அவருடைய உருக்கமான உரையினைக் கேட்டுக் கொண்டே சென்றவர்கள் உள்ளம் மாறினர்.

மழையில் நனைந்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் வந்தமர்ந்து கூட்டத்தைச் சிறப்பித்தனர். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மத்திய அமைச்சரவையில் துறை ஏதும் ஒதுக்கப்படாத அமைச்சராக (Minister with out portfolio) இருந்த சமயம் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தார். அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுகின்ற அறப் போருக்கு திட்டமிட்ட பொழுது நானும் கே.கே நீலமேகமும் நெருங்கி விவாதித்திட வேண்டிய சந்தர்ப்பங்கள் பல நேர்ந்தன.

தி.மு. கழகத்தின் தொடக்க காலத்தில் அதன் பொருளாளராகவும் கே.கே. என். இருந்திருக்கிறார். அந்தச் சுயமரியாதைத் தூண் சாய்ந்தது என்று அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அன்றே குடந்தைக்கு விரைந்தேன். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் அந்நாடு இந்தியாவிடம் காட்டி வந்துள்ள பங்காளிக் காய்ச்சல்-பகைமைப் புகைச்சல் - படையெடுப்பு ஊடுருவல் ஆகியவை பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த இரண்டு ஆசிய நாடுகளுமே இப்படி வெறுப்பு மலையிலே அமர்ந்து கொண்டு எப்போதுமே எரிச்சலை உமிழ்ந்த வண்ணம் இருப்பது, அவற்றின் எதிர்காலமே ஒளி வாழ்வைப்-பொருளாதார முன்னேற்றத்தைப் - பொசுக்கி விடுமே என்ற கவலை அடைந்திட்ட நாடுகளில் சோவியத் ரஷ்யாவும் ஒன்று.

அதனுடைய தலைநகராகிய மாஸ்கோ ஐரோப்பா கண்டத்திலே அமைந்திட நேர்ந்திட்ட போதிலும், அதன் பெரும்பாலான பகுதிகள் ஆசியா கண்டத்திலேயே பரந்து கிடக்கின்றன. எனவே சோவியத் தலைவர்களிடம் 'ஆசிய உணர்வு'ம் மேலோங்கி நிற்பதிலே ஆச்சரியம் எதுவும் இல்லை தான். அந்த உணர்வின் உந்தலினாலேயே, ஆசிய நாடுகளான இந்தியா- பாகிஸ்தான் இரண்டையும் இணைத்து வைத்திடும் பெரும்பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டது போலும் சோவியத் ரஷ்யா!

அதற்காக அது தேர்ந்தெடுத்த இடமும் ஆசியப் பகுதியில் உள்ள தாஷ்கண்ட் நகரமே! சோவியத் ஒன்றியத்தில் வற்றாத வளங்கொழிக்கும் மாநிலம் உஸ்பெகிஸ்தான். அதன் தலைநகரந்தான் தாஷ்கண்ட். பசுஞ்சோலைகள், பழத் தோட்டங்கள் புடைசூழ்ந்திட அமைதி வழிந்திடும் நகரினை இந்தியா-பாகிஸ்தான் அமைதி மாநாட்டுக்குத் தேர்ந்தெடுத்ததும் ஒரு வகையில் பொருத்தமானதே! 1966 ஜனவரித் திங்கள் முதல் வாரத்தில் நடைபெற்ற அந்தத் தாஷ்கண்ட் மாநாட்டுக்கு இந்தியாவின் சார்பில் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி சென்றார்; பாகிஸ்தான் சார்பில் அதன் அதிபர் அயூப்கான் போனார்.

இவ்விருவருக்கும் நடுநாயகமாக- இணைப்புப் பாலமாக- அமர்ந்து, கருத்துப் பரிமாற்றங்கள் கசப்பின்றிக் கனிவோடு நடந்திட அயராது பாடுபட்டார் சோவியத் ரஷ்யாவின் தலைமை அமைச்சரான கோசிஜின். ஒரு வாரத்துக்கு மேல் பேச்சு வார்த்தைகள் நீடித்தன; இறுதியில் உடன்பாடொன்றும் கையெழுத்தாயிற்று. இந்தியத் துணைக் கண்டப் பகுதியில் அமைதிப் பூங்காற்று அழகுடன் உலா வந்திட அந்த ஒப்பந்தம் ஓரளவேனும் உதவிடப் போகின்றது என்று எல்லாருமே ஆறுதல் அடைந்திட வேண்டிய நேரத்தில் இந்தியாவை மட்டுமின்றி உலகையே இடியெனத் தாக்கிற்று அந்த இறப்புச் செய்தி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தாஷ்கண்ட் உடன்பாட்டிலே கையெழுத்திட்டு விட்டுத் தம் விடுதிக்குத் திரும்பிய சில மணி நேரத்திற் கெல்லாம் நள்ளிரவில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் மாமனிதர் லால்பகதூர் சாஸ்திரி. எளிமைக்கும், அதே சமயம் இதயத் துணிவுக்கும் பெயர் பெற்ற லால்பகதூர், திடீர் என்று இறந்தார் என அறிந்ததும்- திடுக்கிடாத நெஞ்சங்கள் இல்லை; கண்ணீர் வடித்திடாத கண்களும் இல்லை! அவருடைய உடல் தாஷ்கண்டிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டது.

அவ்வாறு அங்கே விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னர், பீரங்கி வண்டியிலிருந்து சாஸ்திரியின் சவப் பெட்டியினைத் தங்கள் தோளிலே தூக்கிச் சுமந்தவர்கள் சோவியத் தலைமையமைச்சர் கோசிஜின், இந்திய அமைச்சர்களான ஒய். பி. சவான், சுவரண் சிங்- ஆகியோர் மட்டுமல்லர்; இந்தியாவை எதிரியாகவே கருதிப் பழக்கப்பட்டுவிட்ட அயூப்கானும் தம் கண் கலங்கிட இந்தியத் தலைமையமைச்சரின் சவப் பெட்டியைத் தம் கனமான தோளிலே சுமந்து வந்தார்.

இந்தச் செய்தியினை அறிந்தபோது 'இறுகிவிட்ட இரும்பு நெஞ்சங்களையும் இளக வைத்திடும் ஆற்றல்- அங்கே ஆணவம் என்னும் இருளகற்றி அன்பை ஒளிரவிடும் வல்லமை-இறப்பு ஒன்றுக்குத்தான் உண்டு போலும்'- என்றே எண்ணிக் கொண்டேன் நான். சாஸ்திரி அவர்களின் இழப்பு குறித்து அடியிற்கண்டவாறு ஓர் இரங்கற்செய்தியையும் அப்போது நான் வெளியிட்டேன் : "சற்று ஆறுதல் அளிக்கத் தக்க சமாதானச் செய்தியை உலகிற்கு வழங்கிய ஒளி நகராம் தாஷ்கண்ட், அடுத்த சில மணி நேரங்களில் இப்படி ஓர் அதிர்ச்சியையும் தந்து உலகை இருளில் ஆழ்த்துமென்று எதிர்பார்க்கவே இல்லை.

"நேர்மை, உறுதி, துணிவு, தன்னல மறுப்பு. ஓயாத உழைப்பு- இவைகளால் புகழ் மகுடம் சூட்டிக்கொண்ட லால்பகதூர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். "களத்தில் கடமையாற்றும் ஒரு போர் வீரனின் உயிர் போலவே அவர் உயிரும் பிரிந்துவிட்டது. "மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சம்பவத்தோடு தம்முடைய மரணத்தையும் பிணைத்துக் கொண்ட அந்த மறக்க முடியாத தலைவருக்கு இறுதி வணக்கத்தைக் கண் கலங்கத் தெரிவித்துக் கொள்கிறேன்."

பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இயற்கை எய்தியதும் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாயிற்று, இந்திய அரசியலில். நேருவின் இடத்தினை நிரப்பிட எந்தத் தலைவர் வந்திடப் போகிறாரோ என்கிற அச்சம் எல்லாருடைய நெஞ்சையும் நெருடியது. அந்த நேரத்தில் மொரார்ஜி தேசாயின் பலத்த எதிர்ப்பையும் முறியடித்து தலைமையமைச்சர் ஆனார் லால்பகதூர் சாஸ்திரி. நெஞ்சுறுதியால் மட்டுமின்றி நேர்மையாலும்- எதிர்க்கட்சிகளின், பலக் குறைவையே தமக்குப் பலமாக்கிக்கொள்ள முயலாத பண்பாட்- டாலும்- நாட்டிலே நெருக்கடி நிலைகள் தோன்றிடும்பொழுது அவர்களுடைய பக்குவமான அறிவுரைகளையும் கலந்துரையாடிப் பெற்றிடும் ஜனநாயக முதிர்ச்சியாலும் தம்மை ஒரு தகுதி மிகுந்த பிரதமராகக் குறுகிய காலத்திலேயே உருவாக்கிக் கொண்டவர் லால்பகதூர் சாஸ்திரி.

அவருடைய திடீர் மரணமோ முன்னைவிடத் திகைப்பூட்டும் பதற்ற நிலையையே தோற்றுவித்தது அரசியல் அரங்கில். இப்போதும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கிடவில்லை மொரார்ஜி தேசாய்; முன்னைவிடக் கட்சியளவில் அவர்தம் செல்வாக்குக் கூடியிருப்பதாகவே கூறப்பட்டது. எனினும் திருமதி இந்திரா காந்தியே வெற்றி பெற்றார். பிரதமர் பதவிக்காக நடைபெற்ற அந்த ஆண்டுத் தேர்தல்களிலும் மொரார்ஜி தேசாய் தோல்வியைத் தழுவிடும் சூழ்நிலைகளை உண்டாக்கியவர் காமராசரே என்னும் கருத்தும் அப்போது நிலவியது!

இந்திய ஜனநாயகம் ஏற்றுக் கொண்டுள்ள 'கட்சி - அரசியல்' மரபினையொட்டியே காங்கிரஸ்கட்சியைச் சார்ந்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்திராகாந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது உண்மை; எனினும், மற்ற மாநிலங்களில் உள்ள அவரது கட்சிக்காரர்களே அன்றைக்கு வெளிப்படுத்திய ஒரு குமுறல் வரலாற்றையும் நான் இங்கே மறைத்திட விரும்பவில்லை. 'உத்தரப் பிரதேச மாநிலமே பிரதமர் பதவியைக் குத்தகை எடுத்துக் கொள்வதா?'

-என்பதே அந்தக் குமுறல்.