நெஞ்சுக்கு நீதி
பாகிஸ்தான் உதயம் எப்படி? · 28 / 391
பாகிஸ்தான் உதயம் எப்படி? செப்டம்பர் திங்கள் தொடங்கிய பொழுதே இந்தியா மீது படையெடுப்பை நடத்திற்று பாகிஸ்தான். காஷ்மீரில் உள்ள சாம்ப் பகுதியில் தான் முதன் முதலாகத் தன் ஊடுருவலை-உக்கிரமான தாக்குதலைத் தொடங்கிற்று அது. அமெரிக்க டாங்கிகள் போன்ற பலமான படைக்கருவிகளுடன் திடீரென்று எல்லைக் கோட்டைத் தாண்டி அதன் துருப்புகள் இந்தியாவுக்குள் நுழைந்திடக் கூடுமென்று எவருமே எதிர் பார்த்திடவில்லை! எனவே, அதிர்ச்சியினை அளித்திட்டது அதனுடைய ஆக்கிரமிப்புச் செயல்; இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, அமைதியை விழைந்திடும் எல்லா நாடுகளுக்குமே!
காஷ்மீரம் என்னும் கனி, தன் கைக்குக் கிட்டிடவில்லையே என்கிற ஏக்கம்- ஏமாற்றம்- என்றைக்குமே பாகிஸ்தான் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் போலும்!அதனால்தான் சந்தர்ப்பம் சரியாக இருப்பதாகத் தான் கருதுகின்ற பொழுதெல்லாம் அது தாக்குதலைத் தொடங்கி விடுகிறது இந்தியா மீது. இந்தப் பரந்த துணைக் கண்டத்தில் இப்படிப் பகைமைக் கனல் அவ்வப்போது பற்றிக் கொண்டு எரிவது மிக மிக வருந்துதற்குரியதே. இத்தகைய நீடித்த புகைச்சலுக்கு- போர் மூட்டத்திற்குப் பொறுப்பாளிகள் யார்?
அன்று வெள்ளையரை வெளியேற்றிட விடுதலை இயக்கத்திலே தீவிரப் பங்கு கொண்டு காங்கிரசுக்காரராகவே கடுமையாக உழைத்திட்ட முகமதலி ஜின்னா அவர்களைத் தனி நாடு கேட்கும் அளவுக்கு விரக்தியின் விளிம்புக்கே விரட்டியடித்த 'விவேகிகள்' தான்! பாகிஸ்தான் தோற்றமே ஒரு விந்தையான அரசியல் சம்பவமே! எடுத்த எடுப்பிலேயே அப்படி ஒரு தனிநாடு வேண்டும் என்று ஜின்னா அவர்கள் கோரிக்கை எழுப்பிடவல்லை. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களிலும் அவர்கள் புறக்கணிப்புக்கு இலக்காகி விடக் கூடாதே என்பது தான் அவர் தம் கவலையாக இருந்தது; அதுவே குறிக்கோளாக மாறியது.
அதற்காகக் கூட்டாட்சித் தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தந்த மாநிலமும் சுயாட்சி அமைப்பாக (Autonomous body) இயங்கிட வேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தி வந்தார். 1929 மார்ச்சிலே அவர் உருவாக்கிய ஒரு தீர்மானத்தில் காணப்படும் அடியிற்கண்ட இரண்டு பிரிவுகள் அவர்தம் உள்ளக்கிடக்கையினை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன; (1) மாநிலங்களுக்கு எஞ்சிய அதிகாரங்கள் உள்ள கூட்டாட்சி முறையில் தான் வருங்கால அரசிலமைப்பு வடிவம் அமைந்திட வேண்டும்.
(2) ஒரே சீரான அளவிலான மாநில சுயாட்சி எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜின்னா அவர்களின் இந்தக் கருத்து கசப்பையே அளித்தது காங்கிரசுக் தலைவர்களுக்கு. எனவே ஏற்றுக் கொள்ள மறுத்தனர் அவருடைய கோரிக்கையை. முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்தையே தம்முடைய மூச்சாக- அவர்களுக்கென்று தனி நாடு கேட்பதையே முக்கிய தமது இலட்சியமாக-அவர் உழைத்திட முற்பட்டதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடைப்பிடித்திட்ட சில கொள்கைகளும் காரணம் என்று தெரிகிறது.
தம் உள்ளத்தை முள்ளென உறுத்திய அந்தக் கொள்கைகளைப் பற்றி 1937-இல் நடைபெற்ற லக்னோ- முஸ்லிம்லீக் மாநாட்டிலும் இவ்வாறு தலைமையுரையில் குறிப்பிட்டிருக்கிறார்: "இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவதற்குத் தற்போதைய காங்கிரஸ் தலைமையே- குறிப்பாகக் கடந்த பத்தாண்டுக் காலமாகப்- பொறுப்புடையதாகும். இந்தி தான் இந்தியா முழுமைக்கும் தேசிய மொழியாக இருக்க வேண்டும்; 'வந்தேமாதரம்' பாடல் தான் எல்லார் மீதும் திணிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கொடியைத்தான் எல்லாரும் மதிக்க வேண்டும்; அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். (இவையே காங்கிரசார் கொள்கைகள்!)" மாநில சுயாட்சித் தத்துவம் மறுக்கப்பட்டது- இந்தி- தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது- முதலானவையே ஜின்னாவுக்கு ஆத்திர மூட்டின - இந்திய ஒருமைப்பாட்டுக்கும் அந்த நாளில் வெடி வைத்தன - என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. நேரு அவர்களும் மத்திய அரசு 'ஆண்டை'யாகவும், மாநில அரசு 'அடிமை'யாகவும் அமைந்திடாமல் - இரு அரசுகளும் ஏரிலே பூட்டப்பட்ட இரட்டைக் காளையாக இந்தியாவை இயக்கிச் செல்ல வேண்டுமானால் அதற்கு மாநிலங்களுக்கு சுயாட்சி (Autonomy) தருவது இன்றியமையாததே என்பதனை இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தார்.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி 1945-ஆம் ஆண்டு இந்திய மக்கள் முன் வைத்த தேர்தல் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. "இந்தியக் கூட்டாட்சி என்பது, அதன் பல்வேறு பகுதிகள் விரும்பி இணையும் ஒன்றியமாக இருக்க வேண்டும். பகுதிகளுக்கு (அதாவது மாநிலங்களுக்கு) அதிகபட்ச சுதந்திரம் அளிப்பதற்காக எல்லாருக்கும் பொதுவான, முக்கிய அதிகாரங்கள் கொண்ட குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட்டாட்சி (மத்திய) அரசுக்கும் தேவைப்படும் பகுதிகள் (அதாவது மாநிலங்கள்) விரும்பினால் ஏற்கும் பொதுவான அதிகாரம் கொண்ட பொதுப்பட்டியலும் இருக்கலாம்."
இந்த அடிப்படையிலேயே நேரு அவர்கள் 1947 - ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்த தீர்மானத்திலும் மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்படும் அதிகாரங்களைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் சுயாட்சி உள்ள மாநிலங்களுக்கே உண்டு என்பது வலியுறுத்தப்பட்டது. அத்தீர்மானத்தின் பகுதியாவது: "இப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள நிலப் பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களில் உள்ள நிலப் பகுதிகளும் வேறு வெளியில் உள்ள பகுதிகளில் இணைந்து சுதந்திர இந்தியாவாக விளங்கும்.
அரசியல் நிர்ணயசபை தீர்மானிக்கிறபடியான எல்லைகளைக் கொண்டோ அல்லது இப்பொழுதுள்ள எல்லைகளுடனோ அவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தனித்த சுயாட்சியுள்ள பகுதிகளாகச் செயல்படும். எஞ்சிய அதிகாரங்களும் அப்பகுதிக்கே அளிக்கப்படும்." இவ்வாறு இந்தத் தீர்மானம் கூறியது. பண்டித நேரு அவர்களும் காங்கிரஸ் கமிட்டியும் ஏற்றுக் கொண்ட கருத்துக்கும் மாறாக திடீரென மாநில சுயாட்சிக் கோரிக்கை தூக்கியெறியப்பட்டதன் வாயிலாக ஜின்னாவின் பிரிவினை முழக்கம் பலப்பட்டு அதன் காரணமாகப் பாகிஸ்தான் தோன்றியது.
பாகிஸ்தான் உதயம் பற்றி அபுல்கலாம் ஆசாத் அவர்கள் நூலிலிருந்து நமக்குக் கிடைத்திடும் வரலாற்றுப் படக் காட்சி - படிப்பினை - இதுதான். தாம் ஒரு இஸ்லாமியத் தலைவராகச் செல்வாக்குப் பெற்றிருந்தும்கூட இந்தியா துண்டாடப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கே ஏகிடாமல் நேருவின் நெருங்கிய நண்பராகவே தொடர்ந்து வாழ்ந்து இந்திய அமைச்சராகவும் ஏற்றம் பெற்றிருந்தவரே அபுல் கலாம் ஆசாத். அவருக்குப் பாகிஸ்தான் பிரிந்து சென்றது அறவே பிடிக்கவில்லைதான்.
எனினும் அப்படியொரு தனிநாடு முகிழ்த்தமைக்கு மாநில சுயாட்சிக் க் கொள்கை மறுக்கப்பட்டதே காரணம் என்பதையும் மறைத்திடவில்லை அந்த மாமேதை. இதிலே வேடிக்கை என்னவென்றால் எந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பாகிஸ்தான் உருவெடுத்ததோ, அதே கோரிக்கையை அதே பாகிஸ்தானியத் தலைவர்கள் நிராகரித்ததால்தான் பின்னர் 'பங்களா தேஷ்' என்னும் புதிய நாடும் உதயமாயிற்று! இவ்வாறு, 'அன்றையக் காங்கிரஸ் தலைவர்கள் சற்றுத் தொலை \நோக்கோடு நடந்திருந்தால் பிரிவினை உணர்வே தலையெடுத்திருக்காதே - பாகிஸ்தான் பிரிந்து போயிருக்காதே-அதன் விளைவாகப் பகைமை நெருப்பும் அவ்வப்பொழுது பற்றிக் கொண்டு எரியாதே!'
- என்றெல்லாம் என்னைப் போன்றவர்கள் எண்ணினாலும் 1965- செப்டம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்ததை நானோ மற்றக் கழகத் தோழர்களோ கண்டிக்கத் தவறிடவில்லை. சில நாட்களுக்கு முன்னர்தான் நம்மைச் சிறைக் கோட்டத்திலே தள்ளிக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சித்திரவதை செய்தார்கள் என்கிற சிந்தனைகளுக்கெல்லாம் இடம் தந்திடாமல் - மத்திய - மாநில அரசுகள் எடுத்திட்ட போர் நடவடிக்கைகளுக்கெல்லாம் முழு ஒத்துழைப்பு நல்கிட முனைந்து பாடுபட்டோம் நாங்கள்.
எதிரிப் படைகளை முறியடித்து முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியப் படை வீரர்களுக்கும், பின்பலமாக இந்தியா முழுமையும் ஒரே அணியில் - ஒருமித்த குரலில் - திரண்டு நிற்கிறது என்பதனை எடுத்துக்காட்டிடும் வகையிலும், பொது மக்களுக்கு எழுச்சியூட்டும் விதத்திலும் கழகத்தின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. போர்நிதியும் கொடுக்கப்பட்டது. 22-9-65- இரவு சென்னை வானொலி நிலையத்திலிருந்து 'நெருக்கடி நிலையில் மக்கள் கடமை' என்பது குறித்து நானும் உரையாற்றினேன், இந்தியா வென்றிட எல்லாத் தரப்பினரின் ஆதரவையும் வேண்டி.
அந்தப் போரில் இறுதி வெற்றி இந்தியாவுக்கே கிட்டிற்று; பாகிஸ்தான் படுதோல்வி கண்டது. பலத்த சேதங்களுக்கும் அது இலக்காயிற்று. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டாங்கிகள் போன்ற சக்தி வாய்ந்த படைக் கருவிகளையெல்லாம் பயன்படுத்தியும்கூட- செஞ்சீனத்தின் மறைமுகமான ஆதரவு பெரும் அளவில் இருந்துங்கூட-பாகிஸ்தான் ஈடு கொடுக்க முடியவில்லை இந்தியப் படைகளிடம். நம்முடைய வீரமறவர்கள் புதிய புறநானூறு படைத்துக் காட்டினர், புவியே வியந்திடும் அளவுக்கு.
இந்தியா அவ்வாறு வெற்றிக் கனியினைக் கொய்ததில் அப்போதைய தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் தீரம் மிகுந்த தலைமைக்கும் - விரைந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் - பெரும் பங்கு உண்டு என்பதையும் குறிப்பிடவே வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எத்துணைதான் ஒத்துழைப்பு நல்கியும் கூட, இந்தித் திணிப்பினை எதிர்ப்போர் மீது பாதுகாப்புச் சட்டத்தினைப் பாய விடுவதற்கு மட்டும் பக்தவத்சலனார் அரசு மறந்திடவே இல்லை.
அதனால்தான், 1965 அக்டோபர் திங்களில் திரு சி.பா. ஆதித்தனார் கைது செய்யப்பட்டார், பாதுகாப்புச் சட்டப்படி. குறைந்த கல்வி அறிவு கொண்டவர்களும், நாட்டு நடப்பினை அறிந்திடும் வகையில் நாளிதழ்களை நடத்தி நிறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகுமாறு செய்து, தமிழ்ப் பத்திரிகை உலகிலேயே பெரும் புரட்சி செய்த பெருமைக்குரியவர் ஆதித்தனார். அவர் கைதான செய்தி அறிந்ததும் இந்தி ஏகாதிபத்தியத்தின் கோர வெறியினால் அவரைப் போன்ற முதியவர்களும் வதைபட வேண்டியுள்ளதே என்று நான் வருந்தினேன்.
சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக அயராது பணியாற்றிக்கொண்டிருந்த 'குத்தூசி' குருசாமி அவர்கள் 1965 அக்டோபர் திங்களில் திடீரென்று இயற்கை எய்திவிட்டார். மாரடைப்பு வடிவில்தான் மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கருகிலுள்ள குருவிக்கரம்பை என்னும் சிற்றூரில் ஒரு 'வைதிகக்' குடும்பத்திலே பிறந்திட்ட போதிலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எப்படி அவர் பத்தாம் பசலிக் கொள்கைக்கு 'வைரி' ஆனார் - பகுத்தறிவு வாதங்கள் மின்னிடும் 'வைரம்' ஆனார் என்பதே வியப்புக்குரியதாகும்.
அதற்குக் காரணம், பெரியாரின் கொள்கைகளுக்குள்ள பேராற்றலே! வாய் வீரம் பேசிடுவோர் அனைவரும் செயல் வீரராய் வாழ்ந்திடுவதில்லை. நெருக்கடி நேரங்கள் வந்திடும்பொழுது பலரும் வழுக்கிக் கொண்டு ஓடிவிடுவர். அத்தகையோர் அல்லர் 'குத்தூசி' குருசாமி. பட்டதாரியான அவர், இன்னொரு பட்டதாரி ஆசிரியையான குஞ்சிதம் அம்மையாரைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கலப்பு மணமே புரிந்துகொண்டார். அந்தப் 'புரட்சித் திருமணம்' சாதிச் சழக்குகளுக்குச் - சனாதனச் சடங்கு முறைகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகவே அன்று பெருமிதத்தோடு பேசப்பட்டது.
பிற்காலத்தில் சீர்திருத்தத் திருமணங்கள் - கலப்பு மணங்கள் பெருமளவு நிகழ்வதற்கு அது முன்னோடியாக விளங்கிற்று என்றாலும் மிகையில்லை. திருமணத்திலே புரட்சி புரிந்திட்ட 'குத்தூசியார்' - தம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் புரட்சி செய்யத் தவறிடவில்லை. சமதர்மக் கொள்கைகளின் முதல் தாயகமாய்த் தலையெடுத்த ரஷ்ய நாட்டைப்போலவே இந்த நாடும் தழைத்திட வேண்டும் என்கிற வேட்கையை வெளிப்படுத்துகின்றவராய்த் தம் பெண் குழந்தைக்கு 'ரஷ்யா' என்ற பெயரிட்டார்.
பழமைக்கு மண்டியிட மறுத்துப் புதுமைச் சிந்தனைகளைப் பரப்பிடப் புறப்பட்ட புத்தரிடம் தமக்குள்ள ஈடுபாட்டினை எடுத்துக் காட்டும் வகையில் தம்முடைய ஆண் பிள்ளைக்குக் 'கவுதமன்' என்றும் பெயர் சூட்டினார். நகைச்சுவையை ஒரு கைவந்த கலையாகவே அவர் எழுத்திலே காட்டினார். வெறும் பொழுதுபோக்குக்காகவே வேறு சிலர் நகைச்சுவையைக் கையாண்ட வேளையில், சிந்தனையைக் கிளறிவிடும் சீரிய நோக்கோடு கசப்பு மருந்துக்கு மேலே தடவப்படும் இனிப்புச் சுவையாகவே அதனை அவர் பயன்படுத்தினார்.
'விடுதலை,' ஏட்டின் ஆசிரியராக விளங்கிய அவர் 'பல சரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் 'குத்தூசி' என்னும் புனை பெயரில் இந்தச் சமுதாயத்தின் அழுகல்களை - அலங்கோலங்களைக் குத்திக்குத்திக் காட்டிய எழுத்தோவியங்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. 'விடுதலை'க்கு மட்டுமின்றி முன்னதாகப்'புதுமை முரசு', 'ரிவோல்ட்' (ஆங்கில ஏடு) ஆகியவற்றுக்கும், இறுதிக் காலத்தில் 'குத்தூசி' இதழுக்கும் ஆசிரியராக அமர்ந்து அரும்பணியாற்றியவர் குருசாமி.
பெரியார் பாசறையிலே பெரும் படைக்கலனாய் நிமிர்ந்து நின்று, தன்மானக் கருத்துக்களைத் தவழ விட்டுப் பெருமை தேடிக் கொண்ட அந்தச் சுயமரியாதைச் சுடர் திடீரென்று அணைந்துவிட்டமை, எனக்குச் சொல்லொணாத துயரினையே தந்தது. அவர் தம் இல்லம் சென்று என் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். வெளியுலகைப் பொறுத்தவரை திகைப்பூட்டும் செய்திகள் பலவற்றை இந்தோனேஷியா அப்போது தந்துகொண்டிருந்தது. அங்கே 'ராட்சகர்' என்று போற்றப்பட்ட டாக்டர் சுகர்ணோவுக்கு எதிராக ராணுவமே கிளர்ந்தெழுந்து விட்டது.
தம்முடைய 'போகர்' அரண்மனைக் காவற்படைத் தலைவர் உதாங் மூலம் அந்த ராணுவப் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிந்திடத்தான் முயன்று பார்த்தார் சுகர்ணோ. ஆனால் முடியவில்லை. அந்நியக் காலனி ஆதிக்கத்தினை அறுத்தெறிந்து இந்தோனேஷியாவுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்த வித்தகர்தான் டாக்டர் சுகர்ணோ. அதனால்தான் அந்நாட்டு மக்கள் அவரைத் தங்கள் வழிகாட்டியாக-ஏன், தெய்வமாகவே-வழிபட்டார்கள்; வாழ்த்தினார்கள். விடுதலையை வாங்கி கொடுத்து விட்டதாலேயே எந்தக் கெடுதலையும் எத்துணைப் பெரிய மனிதராக-கட்சியாக- இருந்தாலும் இறுமாப்போடு செய்திடத் துணியலாமா?
சுகர்ணோ இத்தகைய துணிச்சலைப் பெற்றார்; மக்களின் கருத்தைத் தூசென மதித்தார். அங்குள்ள பொதுவுடைமைக் கட்சியினர் போட்ட சுருக்கிலே மாட்டிக்கொண்டார். குறிப்பாக ஏ. என். அய்டிட் என்னும் கம்யூனிஸ்டு தலைவர் ஆட்டுவித்தபடியெல்லாம் அவர் ஆடத் தொடங்கினார். நாளடைவில் ஜனநாயகமே அவருக்கு எட்டிக்காயாய்க் கசந்தது; 'செஞ்சீனமே' கலங்கரை விளக்கமாகக் காட்சியளித்தது. அதனால்தான், இந்தோனேஷியா விடுதலைக்குப் போராடிய காலத்திலே உலக அரங்கிலே அதற்கொரு செல்வாக்கினை உருவாக்கிடும் பொருட்டு, இந்தியத் தலைவர் ஜவாகர்லால் நேரு ஆசிய மாநாடு ஒன்றினைக் கூட்டி ஆதரவு அளித்திட்டதையும், நேருவோடு தாம் கொண்டிருந்த நெருக்கமான தோழமையையும் கூட அறவே மறந்து விட்டுச் செஞ்சீனத்தைத் திருப்திப்படுத்திட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகப் பாகிஸ்தான் நம் நாட்டின்மீது படையெடுத்த வேளையில் இந்தியாவையே பகைத்துக்கொள்ளும் அளவ
ுக்கு தம் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டார் சுகர்ணோ. இந்தியாவைப் போன்ற, இந்தோனேஷிய நாட்டினரும் பெரும்பாலும் மக்களாட்சி நெறிமுறைக்கே மதிப்பளித்துப் பழகியவர்கள். எனவே, தங்களுடைய தலைவர் அங்குள்ள பொதுவுடைமைக் கட்சியினரோடு புதிய மோகம் கொண்டுவிட்டதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. அவர்களின் கருத்தினைப் பிரதிபலித்திடும் வகையில்தான் கடுமையாகக் கிளர்ந்தெழுந்து விட்டது ராணுவப் புரட்சி.
சுகர்ணோவின் அதிகாரக் குவிப்புகளையும் அது கட்டுப்படுத்த முற்பட்டது. ஒரு நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீர மறவர் என்கிற அளவில் டாக்டர் சுகர்ணோவிடம் எனக்கு எப்போதுமே பெருமதிப்பு உண்டு. ஆனால், தம்முடைய தலைவர் இப்படிக் கம்யூனிஸ்டுகளின் கைப்பாவை ஆகிவிட்டாரே என்று இந்தோனேஷிய மக்கள் இதயங் குமுறிடும் அளவுக்கு இவர் திசை மாறியிருக்கக் கூடாது என்றும் நான் அப்போது எண்ணியது உண்டு. இதனால் கம்யூனிசமே கறை படிந்ததாக நான் கருதுவதாகப் பொருள் இல்லை.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!' -என்கிற எங்களுடைய இனிய முழக்கமே பொதுவுடைமைத் தத்துவத்துக்கு நாங்கள் அளித்துள்ள புதிய விளக்கந்தான். அத்துடன் தம்முடைய தத்துவம் தழைத்திடக் கார்ல்மார்க்ஸ் வகுத்திட்ட வழி முறைகளிலே எனக்கு ஒரு சில கருத்து மாறுபாடு இருந்தபோதிலும், ஏழைகளை வாழவைக்க எண்ணிய அவர்தம் இலட்சியக் கருவிடமும், அதனை உரமிட்டு வளர்த்தே முதலாளித்துவ நாடுகளுக்கு அறைகூவல் விடுத்திடும் வகையில் சோவியத் நாட்டினை முன்னேற்றி விட்டாரே என்று ஸ்டாலினிடமும்-எனக்கு அளவற்ற ஈடுபாடு உண்டு.
அதன் காரணமாகவே என்னுடைய பிள்ளைகளில் ஒருவனுக்கு 'ஸ்டாலின்' என்றே பெயர் சூட்டியும் உள்ளேன். ஒரு தத்துவத்தை மதிப்பது என்பது வேறு; அந்தத் தத்துவத்தின் செயல் முறையிலிருந்து-செயல்படுத்துகிறவர்களிடமிருந்து-மாறுபாடு கொள்வது என்பது வேறு. அந்தந்த மண் வளத்திற்கு ஏற்பவே பொதுவுடைமைப் பூங்கா மலர்ந்திட வேண்டும். இந்தப் பின்னணியில்தான், டாக்டர் சுகர்ணோ வீழ்ச்சிப் பாதாளம் நோக்கி விரைந்து சரிந்திட்ட வேளையில்,'அங்குள்ள கம்யூனிஸ்டுத் தலைவர்களிடம் இன்னும் சற்று நிதானமாகவே அவர் நேசக் கரம் நீட்டியிருக்கலாமே!'-என்று நான் நினைத்தேன்.
