உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அந்தோ! போளூரார்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அந்தோ! போளூரார்! · 27 / 391

அந்தோ! போளூரார்! பாளைச் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின் நான் கலந்துகொண்ட பாராட்டுக் கூட்டங்களில் கோவைக் கூட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கழகக் கண்மணிகள் பலர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றியதன் விளைவாக அங்கே சிதம்பரனார் பூங்காத் திடலே திரைகடலாய்க் காட்சியளித்தது; இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில், தேர்தல் நிதிபற்றிய முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை நான் விடுத்தேன்.

அடுத்த, 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதியான அண்ணாவின் பிறந்த நாளன்று பத்து லட்சம் ரூபாயைத் தேர்தல் நிதியாக அவரிடம் தந்திடும் பொருட்டு அந்த ஆண்டு (1965) செப்டம்பர் முதல் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களில் உண்டியல் வைத்து தினந்தோறும் தங்களால் இயன்ற காசுகளை அதில் போட்டு அந்த உண்டியல்களைத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என்னைப் பொறுத்தமட்டில் அதே 1965 செப்டம்பர் ஒன்றாந்தேதி முதல் என்னைக் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது அளித்தால்தான் நான் அவற்றில் கலந்துகொள்வேன் என்பதையும் குறிப்பிட்டேன்.

என் வேண்டுகோள் வீணாகி விடவில்லை. துளித் துளியாகத் தேனைத் திரட்டிடும் தும்பிகளாகவே ஆர்வத்துடன் கடமையாற்றினர் கழகத் தோழர்கள். நானும் கண்டிப்புடனேயே செயல்பட்டேன், கூட்டங்களுக்குப் பணம் வாங்குவதில். இதனால் நிறையக் குவிந்த வண்ணமிருந்தது தேர்தல் நிதி. அதிர்ச்சி அளித்திடும் சம்பவம் ஒன்று 1965 ஆகஸ்டு இறுதியில் நிகழ்ந்தேறிவிட்டது. கழகத்தின் நாடி நரம்புகளில் ஒருவராய் ஓடியாடி உழைத்திட்ட செயல்வீரர்- தீரமறவர்- போளூர் சுப்பிரமணியம் அவர்கள் கார் விபத்தில் சிக்குண்டு படுகாயமுற்றுக் கண்களை மூடிவிட்டார் திடீரென்று.

அவரும் ப உ. சண்முகம் முதலான தோழர்களும் காரில் சென்றிருக்கின்றனர் சென்னையை விட்டு. எதிரே வந்த பயணியர் பஸ் ஒன்று மோதியதால் காட்டுப்பாக்கம் அருகே அந்த விபத்து நிகழ்ந்து விட்டது. உடனே படுகாயமுற்ற தோழர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கே தான் தம்முடைய குடும்பத்தையும் கழகத்தையும் துயர வெள்ளத்திலே தள்ளி விட்டுவிட்டு அந்தச் சுய மரியாதைச் சுடர் அணைந்து விட்டது!

நீதிக் கட்சிக் காலந்தொட்டே பொதுத் தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் சுப்பிரமணியம். திராவிடர் கழகமும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் வட ஆற்காடு மாவட்டத்தில் வேர்விட-விழுதுவிட-தலையாய பொறுப்புக்களையெல்லாம் ஏற்றுத் தளராமல் பணியாற்றிய அவர் பலமுறை சிறைக்குச் சென்று தியாகத் தழும்புகளையும் அவர் ஏற்றிட்ட தீரச்செம்மல். கொள்கைப் பிரச்சாரத்திற்காக அண்ணா தீட்டிய 'சந்திரோதயம்' நாடகத்திலும் போளூரார் நடித்திருக்கிறார்.

அவரைப் பற்றி வேடிக்கையான நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. அண்ணா எழுதிய சமுதாயக் கொடுமைகளைச் சித்திரிக்கும் நாடகமாகிய 'சந்திரோதயத்'தில் துரைராஜ் என்னும் பாத்திரத்தை அண்ணா ஏற்பார். துரைராஜ் ஒரு கட்டத்தில் ஜமீன்தாராக நடிக்கும் போது - அண்ணாவுக்கு வேலைக்காரனாக வேடம் புனைந்து நடித்தவர் போளூரார். ஒருமுறை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காட்சி முடிந்து திரைக்குப் பின்னால் சென்றவர் அடுத்த காட்சியைப் பற்றி நினைவில்லாமலே தம்முடைய வேடத்தைக் கலைக்க முற்பட்டு விட்டார்.

மறு காட்சி தொடங்கியதும் 'ஜமீன்தார்' அண்ணா தம் பணியாளை அழைத்தார். போளூராரும் அவசரம் அவசரமாக ஓடினார் மேடைக்கு. அவரைப் பார்த்ததுமே அண்ணா அதிர்ச்சி அடைந்து விட்டார். ஏனெனில் போளூரார் முகத்தில் மீசை இல்லை! முந்தின காட்சிகளில் இருந்த ஒட்டு மீசை திடீரென்று அழிந்து விட்டதை ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டால் என்ன ஆவது? அது நகைப்பொலிக்கு இடம் கொடுத்து விடாதா? கவலையளித்திட்ட அந்த நிலைமையை உடனே களிப்புக்குரிய காட்சியாகத் தாமே மாற்றி விட்டார் அண்ணா.

தம்முடைய இதழ்க்கடையிலே முறுவல் இழைந்தோடப் போளூராரையே இமைக்காமல் நோக்கினார் அவர். "ஏண்டா மண்டு, எங்கே மீசையைக் காணோம்? அதுக்குள்ளேயே 'ஷேவ்' பண்ணிக் கொண்டாயா?"-அண்ணாவின் இந்த திடீர் உரையாடலைக் கேட்டதும் 'குபீர்' என்று சிரிப்பு வெடித்தது ரசிகர்களிடமிருந்து!

அந்த ஆரவார அலைகளிலேயே மீசையைப் பற்றிய போளூராரின் மறதி மறைந்து விட்டது. கழகத்தைக் கட்டி காத்திட-அதனுடைய லட்சியக் கதிர்கள் பாமர மக்களிடமும் எழுச்சியினை ஊட்டிட-கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற பணிகளை ஆற்றியவர் போளூர் சுப்பிரமணியம். அவர் கார் விபத்தில் மடிந்திட்ட செய்தி காதுக்கு எட்டியதும் என் கண்கள் குளமாயின. மறைந்த மாவீரர்களை மறந்திடாமல் அவர்தம் குடும்பத்தினருக்கு ஏதேனும் இயன்றதைச் செய்து விட வேண்டும் என்பதை ஒரு கடமையாகவே கருதிப் பணியாற்றி வந்திருக்கிறது கழகம்.

அந்த முறையில் போளூர் சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போளூரார் குடும்பத்திற்கு மட்டும் தான் என்று இல்லை. இன்னும் எத்தனையோ தியாகத் திருவிளக்குகளின் குடும்பங்களுக்கும் தன்னாலியன்றதைச் செய்திருக்கிறது கழகம்; செய்து கொண்டும் வருகிறது. எடுத்துக்காட்டாக, முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி வழக்கறிஞர் இரெ. இளம்வழுதி, கோவை கோபால், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர்.

நடிகர். ஓ. ஏ. கே. தேவர். -இவர்தம் குடும்பங்களின் துயர் துடைத்திட-பெயர் நிலைத்திட- ஆவன புரிந்திருப்பதையும் கூறலாம். இதிலே நான் மகிழத்தக்கது என்னவெனில், நான் கழகத் தலைவனாகப் பொறுப்பில் உள்ள காலத்தில் இந்தக் கொள்கை மறவர்களுடைய குடும்பங்களுக்கு உதவிடும் வாய்ப்புக் கிட்டியதே என்பதுதான்.