உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பாராட்டுக் கோட்டை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பாராட்டுக் கோட்டை · 26 / 391

பாராட்டுக் கோட்டை பா ளையங்கோட்டைச் சிறையிலிருந்து வெளி வந்த என்னைப் பாராட்டுக் கோட்டைமீது அமர்த்திக் களித்திடும் ஆர்வம் ததும்பிற்றுக் கழக நண்பர்களிடம். மாநாடுகளுக்கு நிகரான கூட்டங்களை மாநிலம் எங்கணும் ஆங்காங்கே ஏற்பாடு செய்தார்கள் அவர்கள். இயக்கத்தின் இலட்சிய கீதங்களை இசைத்திடவும்- எதிர் முகாம்களில் இருப்போரின் எதேச்சாதிகாரப் போக்கினை இடித்துரைக்கவும்- அந்தக் கூட்டங்களை ஒரு வாய்ப்பாகக் சுருதியே அவற்றிலே கலந்து கொண்டேன், தோழர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு.

சென்னை நுங்கம்பாக்கம், ஏரித் திடலில்தான் முதல் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதிலே கலந்து கொண்ட அண்ணா அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்: ...' கரும்பைக் கத்தியால் வெட்டாமல் கடித்துச் சாப்பிடும்போது சுவையுள்ள சாறு வரும்; அதோடு கரும்பு குத்துவதால் ஈறில் பட்டு இரத்தமும் வரும். இரத்தத்தைப் பார்த்ததும், 'ஜயோ, ரத்தம்!, என்று பயப்பட்டாலும், கரும்பின் சுவையுள்ள சாற்றைச் சுவைக்கும் போது அது தெரிவதில்லை.

அதுபோல், தம்பி கருணாநிதியைச் சிறைச்சாலையில் அடைத்தபோது, கரும்பைத் தின்றபோது வந்த ரத்தத்தைக் கண்டு, 'ஆ! ரத்தம்!' என்று கூறியது போல, 'தம்பியை அடைத்து விட்டார்களே!' என்று எண்ணினேன். ஆனால் கரும்பின் சுவையை அனுபவித்தது போல், பாதுகாப்புச் சட்டத்தைத்தானே போட்டாய்; வேறு எந்தச் சட்டமும் பலிக்கவில்லை என்று கண்டு கொண்டாயா? சபாஷ்!'

என்று ஆட்சியாளர்களைக் கேட்கும் மகிழ்ச்சி உணர்வுதான் வந்தது. அண்ணாவின் இந்த உவமை நயம் கன்னல் சாறாகவே எனக்கு இனிப்பினை வழங்கிற்று. நன்றியுரை ஆற்றிய நான். ... மறைந்த மாவீரர் பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையைப் பெரியாரின் தாளுக்கிட்டார். இன்றும் என் கழுத்தில் விழுந்த மாலைகள் அனைத்தையும் என் அண்ணனின் காலுக்குப் போடப்பட்ட மாலைகள் என்றுதான் நான் கருதுகிறேன்" -என்று கூறினேன். வேலூர் நகராட்சியும் எனக்குப் பாராட்டு வழங்கிச் சிறப்பித்தது.

நெல்லை மாநகர் தந்த வரவேற்போ எனக்கு எல்லையற்ற புல்லரிப்பையே தந்தது. எந்தப் பாளையங்கோட்டைச் சிறையிலே நான் பாதுகாப்புச் சட்டத்தால் சிறகொடிந்த பறவையாக முடக்கப்பட்டுக் கிடந்தேனோ அதே பாளையங்கோட்டை வீதிகளிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புடைசூழ்ந்து நின்றிட பவனி வந்திட்டபோது இரண்டு மாதச் சிறை வாழ்வுக்கே இத்தனை அன்புப் பரிசா என்று என்னால் எண்ணாமல் இருந்திட முடியவில்லை. பெங்களூர் நண்பர்களின் அன்பு வெள்ளமோ பொருள்களின் உருவத்திலேயும் பொங்கி வழிந்தது.

கர்நாடக மாநிலத் தோழர்களின் அன்புக் கட்டளைக்கேற்ப 1-6-65-இல் நான் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். புகை வண்டி நிலையத்திலேயே திரளாக வந்திருந்து வரவேற்பளித்தனர் கொள்கை மறவர்கள். அன்று மாலை 5-30 மணியளவில் மைக்கோ தொழிற்சாலை ஊழியர்கள் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எனக்குத் தேநீர் விருந்தளித்தனர். இரவு ஏழு மணி அளவில் சிவாஜி நகரில் கர்நாடக மாநிலத் தி. மு. க. அமைப்பாளர் நண்பர் திராவிடமணி எம். சி.

தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு சோழன் எம். சி. முதலான தோழர்கள் பாராட்டு மழை பெய்து என்னைத் திணறிடச் செய்தார்கள். 62 நாட்கள் பாளையங்கோட்டைச் சிறையிலே பக்தவத்சலனார் திருவருளால் நான் பாதுகாப்புக் கைதியாக இருந்ததை எடுத்துக் காட்டிடும் வகையில் அந்தக் கூட்டத்தில் 62 பொருள்களைப் பரிசாக அளித்தார்கள் தங்கள் அன்பின் சின்னங்களாக. அவற்றைப் பெற்றுக்கொண்ட நான் குறிப்பிட்டேன்: "...இந்தப் பரிசுகளைப் பார்க்கும்போது, 'மீண்டும் நீங்கள் சிறை செல்ல வேண்டும்; அதற்கு உபயோகமாக இந்தப் பொருள்களைக் கொடுத்திருக்கிறோம்'-என்பதற்கு அறிகுறியாகத்தான் இவைகளைத் தந்திருக்கின் றீர்களோ என எண்ணுகிறேன்.

"சிறைக்கு ஏற்ற - சிறையிலே அனுமதிக்கக்கூடிய பொருள்களான பெட்டி, படுக்கை, தண்ணீர் வைக்க கூஜா ஆகியவற்றைத்தான் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். "தி. மு. கழகத்தில் தலைவர்களும் தொண்டர்களும் 'மீண்டும். எப்போது சிறைக்குப் போகலாம்?' என்ற எண்ணத்திலேயே சிறையி லிருந்துவெளி வருகிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் சிறைக் அனுப்பப்படுவார்கள்'- என்கிற நிலையில்தான் தி. மு.கழகத் தோழர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்து அன்பு உள்ளங்களின் அருமையான பரிசுப் பொருள்கள், தனிமைச் சிறையிலே உண்டான மனப்புண்ணுக்குத் தடவிய மருந்தாகவே தோன்றின; விருந்தாகவே மகிழ்வூட்டின. கூடத்திலே எரிந்திட வேண்டிய குத்துவிளக்கைக் கூடையைப் போட்டு மூடிடலாமா? மேடையிலே இன்னிசை எழுப்பிடும் வீணையை மீட்டாமலே பரண்மேல் போட்டுத் தூசுகள் மூடும்படிச் செய்திடலாமா? சிந்தனைக் கதிர் பரப்பும் இலட்சிய மறவர்களைச் சிறையினுள் தள்ளி வைப்பதும் அத்தகைய கொடுமைதான்!

அதுவும், தாய்மொழியைக் காத்திட, தாயகத்தைப் பேணிட தங்கள் இன்னுயிரையும் தந்திடத் தயங்காத தி. மு. கழகக் கொள்கைத் தங்கங்கள் காரணம் கூறப்படாமலே காராக்கிரகத்தில் அடைக்கப் பட்டது கொடுமையின் கொடுமுடிக்கே சென்றுவிட்ட ஜனநாயகக் கொலையே ஆகும். எனவே, கழகத் தோழர்களுக்கு எவ்வாறேனும் விடுதலை வாங்கித்தந்திட முடியாதா என ஏங்கித் தவித்திட்ட நான், முதலமைச்சரையே அப்போது நேரில் சந்தித்திட நினைத்தேன். அதற்காக 1965.ஜூன் 9-இல் அவர்தம் இல்லத்திற்கு ஏகினேன்.

காலை சுமார் பத்து மணி இருக்கும். என்னை கண்டதும் புன்னகை சிந்தி வரவேற்றார் திரு பக்தவத்சலனார். அரை மணிநேரம் அவருடன் உரையாடினேன். அப்போது- "பாதுகாப்புச் சட்டப்படிக் காவலில் வைக்கப்பட்டுள்ள கழகத் தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய தொண்டு பொதுமக்களுக்கு இன்றியமையாததாகும்... கழகத் தோழர்கள் சமூக விரோதிகள் அல்லர்; எனவே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்" -என்றெல்லாம் எடுத்துரைத்தேன்.

முதல்வர் பக்தவத்சலனாரோ, "இதுபற்றிக் கவனிக்கிறேன்" என்று சுருக்கமாகச் சொன்னார். ஆனால் அவரது புன்னகை மட்டும் பெரிதாக இருந்தது. சென்னை 47-ஆவது வட்டம் ஓட்டேரியில் உள்ள சிங்காரவேலர் மன்றத்தினர் பத்தாவது ஆண்டு விழாவையும் எனக்குப் பாராட்டு விழாவையும் 1965-ஜூன் 24-இல் ஒருசேரக் கொண்டாடினர். தந்தை பெரியார் அவர்கள் தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்த காலத்தில்-பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிட முற்பட்ட நேரத்தில்- படிப்பறிவாளர்களாகத் திகழ்ந்தவர்களே பெரியாரின் பாதையைக் கண்டு பயந்தனர்.

அதில் நடைபோடுவதை நினைத்தாலே நடுங்கினர். அவ்வாறு கல்வி கற்றவர்களே மூளைக்கு வேலை கொடுக்க மறந்து முடமாகிக் கிடந்திட்ட வேளையில்- முகிலைக் கிழித்தெழுந்த முழு மதியாக - நம்பிக்கை இருளை விரட்டிடும் ஒளிப் பிழம்பாகத் தந்தை பெரியார் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் மா. சிங்காரவேலர் அவர்களே! உறுப்புகள் உடைந்துவிட்ட சமுதாய யந்திரத்தைச் செப்பனிட்டுச் சீராக்க வந்த ஒப்பற்ற சிந்தனைச் சிற்பி அவர்.

பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய நூல்களை அந்தக் காலத்திலேயே அவர் இயற்றினார். அந்த நூல்களை மாணவப் பருவத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது அந்த நூல்களால் உற்சாகம் பெற்றேன். உண்மை ஒளி கிடைக்கப் பெற்றேன். சுயமரியாதை இயக்கத் துவக்க காலத்தில் சிங்காரவேலரின் சீர்திருத்தக் கருத்துக்கள் பெரியாரின் பாசறைக்குப் படைக் கருவிகளாகவே பயன்பட்டன. அவருடைய நினைவாக இயங்கும் மன்றத்தின் ஆண்டு விழாவிலே கலந்துகொண்ட நான், அவர்தம் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதில் பெருமிதமே அடைந்தேன்.